Published:Updated:

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 2

ஆண்களைப் புரிந்துகொள்வோம்
பிரீமியம் ஸ்டோரி
ஆண்களைப் புரிந்துகொள்வோம்

#Lifestyle

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 2

#Lifestyle

Published:Updated:
ஆண்களைப் புரிந்துகொள்வோம்
பிரீமியம் ஸ்டோரி
ஆண்களைப் புரிந்துகொள்வோம்

`பிளே பாய்ஸ்' எப்படிப்பட்டவர்கள்... `சாக்லேட் பாய்ஸ்' எப்படிப்பட்டவர்கள்...இந்த இரண்டு குணாதிசய பாய்ஸிடமும் பெண்கள் எந்தளவுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' தொடரின் தொடக்கக் கட்டுரையாகக் கடந்த இதழில் பார்த்தோம்.

ஆண் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வழிவழியாக மரபணுவிலேயே கிட்டத்தட்ட பதிந்துவிட்டதுபோல பல விஷயங்களும் ஆண்களிடம் இப்படித்தான் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இயற்கையின் படைப்பில் ஆண் - பெண் ஈர்ப்பு என்பது இயல்புதானே... எல்லாவற்றிலும் கேள்வியை எழுப்புவது எந்த அளவுக்குச் சரி என்றும்கூட கேள்விகள் எழக்கூடும். ஆனால், அந்த ஈர்ப்பு இயல்பானதாக இல்லாமல் இருப்பதுதானே இன்றைய பிரச்னையே... பல்வேறு புறக்காரணங்களால் அழுத்தப்பட்டச் சூழலில், பெண்ணை நோக்கி வீசப்படும் இயல்புக்கு மாறான கணைகள்தானே சிக்கலே.

இந்த வரிசையில், பெண்களின் எரிச்சலுக்கு ஆளாகி நிற்கும் ஒரு விஷயம், ‘இவனுங்க... பொம்பளை முகத்தைப் பார்த்தே பேச மாட்டானுங்க.’

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 2

``ஆதியில் பாலூட்டும் உறுப்பாக மட்டுமே பார்க்கப்பட்ட பெண்ணின் மார்பு, பாலியல் உறுப்பாக மாற ஆரம்பித்தது... `நாகரிகம்' என்கிற பெயரில் மனித வர்க்கம் பயணப்படத் தொடங்கிய காலத்திலிருந்துதான். அதிலும் கடந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே பெண்ணைப் போகப் பொருளாக முன்வைத்து கவிதைகள், காவியங்கள், கலைக் கோயில்கள் என்றெல்லாம் தொடர்ந்து கட்டமைக்கப் பட்டே வருகின்றன. கடந்த நூற்றாண்டில் இதன் வீச்சு இன்னும் அதிகம். பெண்ணின் மார்பைக்கூட கமர்ஷியல் பொருளாக மாற்றி வைத்துள்ளது வியாபார உலகம். விதவிதமான உள்ளாடையில் ஆரம்பித்து அடல்ட்ஸ் ஒன்லி சினிமா வரை எல்லாமே இதனுடைய வெளிப்பாடுதான்.

`உன்னால் நான் ஈர்க்கப்படுகிறேன்’ என்பதைப் பெண்ணிடம் சொல்லாமல் சொல்வதற்கான வழியாகவும், பெண்ணின் மார்பகத்தைப் பார்க்கிறான் ஆண். பெண்ணிடம் விருப்பத்தைச் சொல்ல எத்தனையோ வழிகள் இருக்கும்போது, இப்படி குறுகுறு என்று உற்றுப்பார்ப்பது, உளவியல் சிக்கலே'’ என்கிறார் மனநல மருத்துவர் பார்கவ் ஸ்ரீவேலு.

``இயல்பான ஆண், கண்ணிமைக்கும் நேரம் தன்னையறியாமல் பார்த்துவிட்டுத் திரும்பி விடுவான். இதையே திரும்பத் திரும்பச் செய்கிறான் என்றாலோ, சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத் தொல்லை தந்தாலோ, `அவன் பாலியல் வன்முறைக்குக்கூட தயாராக இருப்பவன்' என்பதை உணர்ந்து உஷாராக வேண்டும். இதை நாங்கள் Breast Fetishism என்று சொல்வோம். பெண்களுடைய உள்ளாடைகளையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் திருடுவதுபோல உற்றுப் பார்ப்பதும் உளவியல் பிரச்னையே.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படிப்பட்டவர்களை அப்படியே சமூகத்தில் அனுமதித்துவிட முடியாது. `லேடீஸை அப்படிப் பார்க்கிறது தப்புன்னு தெரியுது. ஆனா, பார்க்காம இருக்க முடியல’ என்று உங்கள் குடும்பத்து ஆணோ, உங்கள் நண்பனோ மனம்திறந்து பேசினால், உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். ‘பிஹேவியர் டெக்னிக்ஸ்’, ‘மெடிட்டேஷன்’ என்று தீர்வுகள் இருக்கின்றன. அப்படி இல்லாமல், இப்படி உற்றுப் பார்ப்பதையே பழக்கமாக்கிக்கொண்டு திரிபவர்களை சட்டபூர்வமான வழிமுறைகளில் தண்டித்தே ஆக வேண்டும்’’ என்கிறார் பார்கவ் ஸ்ரீவேலு.

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 2

உளவியல் ஆலோசகர் சிந்து மேனகா வேறு கோணம் பகிர்கிறார்.

``இயல்பாக பார்ப்பவர்கள், தாங்கள் காதலில் விழும்போதுதான், விரும்புகிற பெண்ணின் மார்பகத்தைக் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். இரண்டாம் வகையினர், ஆபாச வீடியோக்களைப் பார்த்துப் பார்த்து, வக்கிரமாகவே மாறியிருக்கிறார்கள். வீடியோவில் பார்த்ததையெல்லாம் மனைவி தொடங்கி, பக்கத்து வீட்டுக் குழந்தைகள் வரைக்கும் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருப்பது இதுபோன்ற காரணங்களால் தான்.

பெண்களைப் பொறுத்தவரை ‘பெரிய மார்பகம்தான் அழகு’ என்ற எண்ணமும் தற்போது மாறத் தொடங்கியுள்ளது. மற்ற உறுப்புகள்போல மார்பகமும் ஓர் உறுப்பு என்கிற மனநிலைக்கு இக்கால பெண்கள் வந்துவிட்டார்கள். தாவணி, துப்பட்டா, லாங் சைஸ் நோட் புக் என ஒரு காலத்தில் மார்பகத்தை மறைத்துக்கொண்ட தலைமுறைப் பெண்கள்கூட குர்தி, வித் அவுட் ஷால் என்று இன்றைக்கு நம்பிக்கை நடை போடுகிறார்கள். ‘என் உடம்பு என் டிரஸ்’, `உன்னை மாதிரியே எனக்கும் காத்தோட்டம் வேணும்’, ‘உன் பார்வையை மாத்து’ என்று சமூக வலைதளங்களில் உரத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள், உற்றுப் பார்க்கிற ஆண்களை நோக்கி!’’

மார்பக ஈர்ப்பு பற்றி முற்றிலும் வேறொரு கோணத்தை வெளிப்படுத்தும் எழுத்தாளர் சரவணன் சந்திரன், ``பெண்களிடம் இயல்பாகப் பழக முடியாதது, பெண்ணுடல் பற்றிய அறிவியல்பூர்வமான அறிவு இல்லாதது இவையெல்லாம் சேர்ந்துதான், அன்றைய ஆண்களின் மனதில் மார்பக ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அதேநேரம், இன்றைக்கு ஆண்களிடம் அந்தப் பார்வை ரொம்பவே மாறியிருக்கிறது.

இந்தக்கால ஆண்/பெண் பிள்ளைகள்... ‘இவள் என் தோழி’, ‘இவன் என் தோழன்’ என்று கைகோத்து ஒன்றாக விகல்பமில்லாமல் நடக்க முடிகிறது. விளையாட முடிகிறது.

மற்றபடி பெண்ணுடல் மீது வக்கிரப் பார்வை வீசுவது தனி. அது படித்தவன், படிக்காதவன், பணக்காரன், ஏழை என்று எல்லா மட்டத்திலும் இருக்கிறது. அது எல்லா காலத்திலேயும் இருக்கும். அப்படிப்பட்ட ஆண்களை, மனமுதிர்ச்சியான ஆண்களுடன் சேர்த்துப் பேச முடியாது. பேசவும் கூடாது’’ என்கிறார்.

மனைவியை நோக்கி கை ஓங்குவது எந்த வகை மனநிலை?

- அடுத்த இதழில்...

அந்தப் பாராட்டை நான் பொக்கிஷமா நினைக்கிறேன்!

ஓவியர் ஜெயராஜ்

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 2

ஓவியம், சிற்பம் போன்றவற்றிலும் கூட பெண்களின் மார்பகத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதைப்பற்றி பேசும் ஓவியர் ஜெயராஜ், ‘‘வாசகர்களோட நேரடியா உரையாடற கூட்டங்கள்ல... ‘நீங்க கவர்ச்சியா படம் போடுறீங்க’ன்னு ஆண்களே என் மேல குற்றம்சாட்டின சம்பவங்களும் நடந்திருக்கு. அதேபோல, ‘நான் உங்க ஓவியங்களோட தீவிர விசிறி’ன்னு பெண்களே பாராட்டின சம்பவங்களும் நடந்திருக்கு. அதுல ஒரு ரசிகை சொன்ன வார்த்தையை இப்போ வரைக்கும் என்னால மறக்க முடியல. அவங்க ஓர் இளம்பெண். ரொம்ப அழகானவங்க. கல்யாணமானவங்களும்கூட. ‘உங்க ஓவியங்கள் மேல நான் பைத்தியமா இருக்கேங்க’ன்னு வெளிப்படையா பாராட்டினாங்க. ஏன்னா, அவங்க அதை ஓவியமா மட்டுமே பார்த்திருக்காங்க. ஒரு தடவை அவங்களோட பேசிட்டு இருக்கிறப்போ, ‘நீங்க என்கிட்ட பேசுறப்போ என் முகத்தையும் கண்களையும்தான் பார்க்கிறீங்க. உங்க ஓவியத்தைவிட உங்க கிட்ட பிடிச்ச விஷயம் இதுதான் சார்’னு சொன்னாங்க. அந்தப் பாராட்டை ரொம்ப பொக்கிஷமா நினைக்கிறேன்'' என்று நெகிழும் ஜெயராஜ்,

``எனக்குப் பிடிச்ச பெண் கடவுள் சரஸ்வதி. சரஸ்வதியை சிலையா வடிச்ச சிற்பி... வடிவா, அழகியலோடதான் செதுக்கியிருப்பான். ஆனா, அதெல்லாம் பலரோட கண்களுக்குத் தெரியாது. அவங்க கைல இருக்கிற வீணையும் ஏட்டுச்சுவடியும்தான் கண்ல படும்.

இப்படித்தான் பெண்களைப் பார்க்கணும். அப்படிப் பார்க்கிறதுதான் ஆண்களோட இயல்பா இருக்கணும்கிறதை அப்பாக்கள்தான் ஆண்பிள்ளைகளுக்குக் கற்றுத்தரணும்’’ என்றார் முத்தாய்ப்பாக.