Published:Updated:

புதிய பகுதி! - 1: ஆண்களைப் புரிந்துகொள்வோம்!

ஆண்களைப் புரிந்துகொள்வோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்களைப் புரிந்துகொள்வோம்!

#Lifestyle

புதிய பகுதி! - 1: ஆண்களைப் புரிந்துகொள்வோம்!

ண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? கற்பனைக்கே கசக்கிறதல்லவா! ஆனாலும், தன் விழியசைவைப் புரிந்துகொள்வது முதல் வேதனைகளைப் பகிர்ந்து கொள்வதுவரை ஆண் என்பவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓராயிரம் எதிர்பார்ப்புகள். `அவன், ஆயிரத்தில் ஒருவனாக இருக்க வேண்டும்' என்ற ஆசை பெண்களில் பலருக்கும் உண்டு. ஆனால், ஆயிரத்தில் ஒருவரால்கூட அப்படி இருக்க முடியாது என்பதே நிதர்சனம். அதுதான் இயல்பு. `பெண்மையைப் புரிந்துகொள்வதில்லை' என காலங் காலமாக ஆண் வர்க்கத்தின் மீது குற்றச்சாட்டை வைக்கும் பெண்கள், ஒருநாளும் ஆணை புரிந்துகொள்ள பிரயத்தனப்பட்டதாகத் தெரிய வில்லை. ‘அவன் அப்படித்தான்’ என்று ஆணின் இயல்புகளை சகித்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், புரிந்துகொள்ளலாம்தானே!

புதிய பகுதி! - 1: ஆண்களைப் புரிந்துகொள்வோம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆம், ஆணாக இருப்பதன் ஆனந்தத்தை மட்டுமன்றி, அவஸ்தை களையும் பேசப் போகிறது இந்தத் தொடர். அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்வதன் மூலமாக, பெண்மையையும் ஆண்கள் உலகம் புரிந்துகொள்வதற்கு நல்லதொரு தொடக்கமாகவும் இருக்கப்போகிறது இந்தத் தொடர்!

பிளே பாய்ஸ் Vs சாக்லேட் பாய்ஸ்

இந்த இரண்டு வகை ஆண்களையும் `நல்லவங்களா, கெட்டவங்களா’ என்று அலசி ஆராய்வதற்கு முன்னால், எந்த மாதிரியான ஆண்களை பிளே பாய்ஸ் என்றும் சாக்லேட் பாய்ஸ் என்றும் சொல்கிறோம் என்று தெரிந்து கொள்ளலாமா...

ஓர் ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் காதலில் இருப்பார். அவர்களுடன் செக்ஸுவல் உறவில்கூட இருப்பார். ஆனால், அவர்களில் யாரை யும் திருமணம் செய்துகொள்வது தொடர்பான எந்த வாக்குறுதியும் கொடுக்க மாட்டார். இவர்தான் பிளே பாய்.

பார்ப்பதற்கு அழகாக, பழகுவதற்கு இனிமையாக, சிரித்த முகமாக, இருக்கிற ஆண்தான் சாக்லேட் பாய்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்க வரையறை உருவாகாத உலகின் ஆரம்ப காலமது. தன்னுடன் கொண்ட உறவின் காரணமாக ஒரு பெண் கர்ப்பமானதும், இவளுடன் இனி உறவு வைத்துக்கொள்ள முடியாது என்று ஒதுக்கி வைத்துவிட்டு, மற்ற பெண்களுடன் பழக ஆரம்பித்தார்கள் ஆண்கள். இதனால் எல்லா ஆண்களும் எல்லாப் பெண்களிடமும் உறவு வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். இதுவோர் பக்கம் என்றால், இன்னோர் பக்கம் பல பெண்களும் உறவுக்காக ஒரு சில ஆண்களை மட்டும் திரும்பத் திரும்பத் தேடிச் செல்ல ஆரம்பித்தார்கள்.

அசோகன், ஷாலினி
அசோகன், ஷாலினி

இதுகுறித்து, Basson எனும் ஆராய்ச்சியாளர் சொல்லும் போது, ‘‘பெண்ணுக்கு உறவின் போது பயாலஜிக்கல் திருப்தி மட்டுமல்ல, எமோஷனல் திருப்தி யும் தேவை. ‘இவர் என்னை மரியாதையா நடத்துறார்’, ‘என்னைப் பாராட்டுறார்’, ‘எனக்கு சப்போர்ட்டிவ்வா இருக்கார்’ என்பது போன்ற விஷயங்களில் பெண்ணை எமோஷனலாகத் திருப்திப்படுத்துகிற ஆணை நோக்கியே பல பெண்களும் நகர்வார்கள். ஆணுக்கு உறவில் ஆர்கஸம் எனும் உச்சநிலை மட்டும் போதும். பெண்ணுக்கோ, தான் உறவுகொள்கிற ஆணின் நல்ல விஷயங்கள் பற்றிய நினைவுடன் உறவை அனுபவித்தால்தான், அதில் திருப்தியை எட்ட முடியும். இந்த எமோஷனல் திருப்தி யைக் கொடுத்த ஆண்களை நோக்கியே பல பெண்களும் நகர, மற்ற ஆண்கள் தங்களுக்கான பெண்கள் கிடைப்பதில் திண்டாட ஆரம்பித்தார்கள். பல பெண்களையும் தன்னை நோக்கி ஈர்த்த ஆண்களை, `பொம்பளை விஷயத்துல பயங்கரமான ஆளுடா அவன்’ என்று தங்கள் பயத்தின் குறியீடாக முத்திரை குத்த ஆரம்பித்தார்கள் மற்ற ஆண்கள். அப்படி முத்திரை குத்தப்பட்ட ஆண்கள்தான் பிளே பாய்ஸ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆரம்பத்தில் சராசரி ஆண் களுக்கு பிரச்னைக்குரியவர்களாக இருந்து வந்த இந்த பிளே பாய்ஸ், ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழக்கம் வந்த பிறகு, பெண்களுக்கும் பிரச்னைக்குரியவர்களாக மாறி னார்கள். இவர்களை நேசிக்கிற பெண்களுக்கே இவர்கள் பிளே பாய்ஸ் என்பது தெரியாமலே உறவில் விழ ஆரம்பித்தார்கள். தெரிந்த பிறகும் பல பெண்கள் இத்தகைய ஆணுக்காக உருகி, இவருக்குப் பிடித்த ஆடைகளை அணிந்து, பிடித்த சமையலைச் செய்துபோட்டு இவரைப் பராமரித்தால், இவர் மனம் மாறி நம்மை மட்டும் காதலிப்பார், திருமணமும் செய்துகொள்வார் என்று நம்ப ஆரம்பித்தார்கள்.

புதிய பகுதி! - 1: ஆண்களைப் புரிந்துகொள்வோம்!

ஒருவன் பிளே பாய் என்று தெரிந்தும் அவன்மீது காதலில் பல பெண்கள் விழுவதைக் கவனித்திருக்கிறீர்களா? இதன் பின்னணியில் இருக்கிற பெண்ணின் உளவியல் தெரியுமா? பல பெண்களால் நேசிக்கப்படுகிற ஓர் ஆணை நான் என் காதலால் வெற்றிகொள்ள வேண்டும் என்ற பெண்ணின் ஆழ்மன ஈகோதான் காரணம். அதனால்தான் இவன் ஒரு பெண்ணை ஏமாற்றியிருக்கிறான் என்பது தெரிந்தாலும் திரும்பத் திரும்ப ஓர் ஆணிடமே பல பெண்கள் விட்டில் பூச்சிகளாக விழுகிறார்கள்.

பிளே பாய்களைப் பொறுத்த வரைக்கும் ‘ஒரு பொண்ணு தன் மேல ஆசையா இருக்கா’ என்ற நினைப்பே அவர்களுடைய உடம்பில் சில ரசாயன மாற்றங் களை ஏற்படுத்தும். அந்த சந்தோஷத்தைத் தொடர்ந்து அனுபவிக்கும் போதைக்காகவே அவர்கள், ஒரே நேரத்தில் பல பெண்களின் உணர்வு களுடன் விளையாடுவார்கள். பெண்களின் மனங்களுடன் விளையாடுகிற இவர்களுடனான உறவு தேவையா என்பதைப் பெண்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

அடுத்து சாக்லேட் பாய். ஓர் ஆண் உருவ அளவில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி யிருப்பார்கள். அதனால், கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுக்குமே இவர்களைப் பிடிக்கும். தவிர, பெண்கள் இவர்களை ஆபத்தான நபர்களாகப் பார்ப்பதில்லை. அது ஓரளவுக்கு உண்மையும்கூட.

இவர்கள் திருமண விஷயத்தில் திடமான முடிவு எடுக்கத் தெரியாமல் சொதப்புவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதற்காக இவர்களும் பெண்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆண்கள் இல்லை என்று நினைத்துவிட வேண்டாம். பிளே பாய்ஸைவிட இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்!

உளவியல் கருத்துகளை வழங்கியவர்கள்:

டாக்டர் அசோகன், டாக்டர் ஷாலினி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாக்லேட் பாய்ஸுக்குள்ளேயும் பிளே பாய்ஸ் உண்டு!

- இயக்குநர் பாக்யராஜ்

``தன்னைப் பாராட்டி நாலு வார்த்தை சொல்ற ஆண்களை டக்குனு நல்லவங்கன்னு நம்பிடுறது பொம்பளைப் புள்ளைங்களோட பலவீனம். இதை பிளே பாய்ஸ் சரியா யூஸ் பண்ணிப்பாங்க.

கொஞ்சநாள் முன்னாடி டிக்டாக்ல பொம்பளைப் புள்ளைங்க சரோஜாதேவி மாதிரி, நயன்தாரா மாதிரி மேக்கப் போட்டு வீடியோ போட்டுட்டிருந்தாங்க. மொதல்ல பாராட்டறேன்னு மெசேஜ் பண்ண ஆரம்பிப்பானுங்க. இதுக்கு ரிப்ளை வந்துட்டா, அடுத்த மெசேஜ்ல `என்ன பண்ணிட்டிருக்கீங்க'ன்னு பேச்சைத் தொடர்வானுங்க. லைக் பட்டனை தட்டிட்டுப் போறவனைவிட `சிக்குமா'ன்னு தூண்டில்போடுற ஆம்பளைங்கதான் அதிகம். இவங்க சோஷியல் மீடியாவுல உலவுற பிளே பாய்ஸ்.

புதிய பகுதி! - 1: ஆண்களைப் புரிந்துகொள்வோம்!

பிளே பாய்ஸோட பலம், அவனுங்க தப்பே செஞ்சாலும் அதை வெளிப்படுத்துற விதம் ஸ்மார்ட்டா இருக்கும். உதாரணத்துக்கு, பஸ் டிரைவர் திடீர்னு பிரேக் போடுறார். ஹைஹீல்ஸ் போட்டுட்டு நின்னுக்கிட்டிருந்த ஒரு பொண்ணு, பின்னாடி நிக்கிற பையனோட காலை மிதிச்சிடுறா. அவனும் `ஆ...'ன்னு கத்திடுறான். பொண்ணு உடனே ஸாரி சொல்லிட்டு யதார்த்தமா `ரொம்ப வலிக்குதா'ன்னு கேட்கிறான்னு வெச்சுப்போம். பின்னாடி நிக்கிறவன் சாதாரண பையனா இருந்தா, `பரவாயில்லைங்க. தெரியாமதானே மிதிச்சீங்க'ன்னு சொல்லிட்டு விட்டுருவான். அந்த இடத்துல ஒரு பிளே பாய் நின்னுக்கிட்டிருக்கான்னு வெச்சுக்குவோம். பொண்ணு ஸாரி சொல்லிட்டு, வலிக்குதான்னா கேட்டவுடனே, அவன் குரலைக் குழைச்சுட்டு `ஏங்க கிஸ் பண்ணா வலிக்குமா'ன்னு கேட்பான். முதல் நிமிஷம் அந்தப் பொண்ணு புரியாம பார்ப்பா, அடுத்த நிமிஷம் அவளையறியாம லேசா சிரிச்சிடுவா. இப்படி பேச்சிலேயே அசத்திடுவானுங்க பிளே பாய்ஸ்.

`இளமை கோலம்'னு ஒரு படம். அதுக்கு கதை, திரைக்கதை நான் தான். ஒரு பிளேபாய் கேரக்டர், பொண்ணுங்களோட வாழ்க்கையில எந்தளவுக்கு விளையாடும்கிறதுக்கு அந்தப் படம் இந்தக் காலத்துக்கும் பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன். ராதிகா, சுமன், பிரதாப் போத்தன் நடிச்சிருப்பாங்க. கதைப்படி சுமன் பிளே பாய். ஃபிரெண்ட் பிரதாப் போத்தன்கிட்ட பந்தயம் கட்டி, ராதிகாவை தன்னை லவ் பண்ண வைப்பாரு. சுமனை நம்பி ராதிகா கேரக்டர் பதிவுத் திருமணம் வரைக்கும் வந்துடும். அப்போதான் பந்தயத்துக்காகத்தான் தன்னை சுமன் லவ் பண்ண விஷயமே ராதிகா கேரக்டருக்குத் தெரிய வரும். அப்புறம் ராதிகா கேரக்டர் சவால் விட்டு சுமனையே கல்யாணம் பண்ணிக்கிறது சினிமாவுக்கு ஓகே. ஆனா, நிஜ லைஃப்ல பொண்ணுங்க மனசொடிஞ்சு போயிடுவாங்க.

அப்புறம் சாக்லேட் பாய். பொண்ணுங்ககிட்ட கலகலப்பா இருப்பான். இந்த டைப் ஆண்களுக்கு கொஞ்சம் ஒழுக்கம் தொடர்பான பயம், பொண்ணுங்க விஷயத்துல `நமக்கெதுக்கு வம்பு'ங்கிற மனநிலை இருக்கும்கிறது என்னோட கருத்து. தவிர, இந்தக் கட்டுரையில சாக்லேட் பாய்ஸ் பத்தி டாக்டர்கள் சொல்லி யிருக்கிறது எனக்கும் சரியாவே படுது. கூடுதலா ஒரு விஷயம் மட்டும் பொம்பளைப் புள்ளைங்களுக்கு சொல்லிக்க விரும்புறேன். சாக்லேட் பாய் மாதிரி நடிக்கிற பிளே பாய்கிட்ட கவனமா இருந்துக்கோங்க.''