இது திருமண சீசன். முன்பு ஊர் முழுவதும் மாவிலைத் தோரணங்களும், வாழைமரம் கட்டிய வீடுகளையும் பார்த்து திருமண சீசன் என்று தெரிந்துகொள்வதை போல இப்போது பேஸ்புக் ஸ்டோரி, இன்ஸ்டாகிராம் ரீல், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் திருமண சீசனை அறிவிக்கின்றன.
ஏற்பாட்டுத் திருமணங்கள், காதல் திருமணங்கள், சடங்குகளுடன் கூடிய காதல் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்கள், தமிழ் வழித் திருமணங்கள் என சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த வாரத்தில் வெவ்வேறு விதமான திருமண காணொலிகள் நிரம்பிக் கிடக்கின்றன. அலங்காரங்கள், அன்பு, காதல் நிறைந்த சிரித்த முகங்கள் மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன.
அதே சமயம் சில திருமணங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கின்றன. தமிழர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாததும் ஆகப்பெரும் நிகழ்வும் திருமணம். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்தே அதன் திருமணம் தொடர்பான பேச்சுக்கள் ஏதோ ஒருவகையில் தொடங்கிவிடும். தமிழர்களின் வாழ்வில் மிக எளிமையாக இருந்த திருமண சடங்குகள் எங்கு எப்போது ஆடம்பரமாக மாறியது என்பதற்கு பல்வேறு கதைகள் உள்ளன. கிட்டத்தட்ட 80-கள் வரையில் வீட்டிலும், கோயில்களிலும் எளிமையாக நடந்து கொண்டிருந்த திருமணங்கள் 90-களில் உணவகங்கள், மற்றும் மண்டபங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்துவதில் ஆடம்பரம் ஆகத் தொடங்கியது.

வெளியூர்களில் வேலைக்குச் செல்பவர்கள், தங்கள் சொந்த ஊரில் திருமணம் செய்து கொண்டு பின் வேலை பார்க்கும் ஊரில் நண்பர்களுக்காக ’வாழ்க்கை துணை அறிமுக நிகழ்வாக’ திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் 2000-த்துக்குப்பிறகு சிறு நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை தேவையே இல்லாவிட்டாலும்கூட இது கட்டாய திருமண சடங்காகவே மாறிவிட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கான பிரத்யேக மேடை அலங்காரம், உடைகள், போட்டோ ஷூட் என்று திருமணத்திற்கான செலவுகள் இரட்டிப்பாகத் தொடங்கின.
பெண்ணுக்கு கட்டாய வரதட்சணை கேட்டு வாங்கும் பழக்கமும் கொடுக்கும் வழக்கமும் இருந்து வந்தது. முன்பு பெண் பிள்ளைகள் பிறந்துவிட்டால் வரதட்சணை கொடுக்க வேண்டுமென்று கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிடுவார்கள். வரதட்சணை காரணமாக வயது வித்தியாசம் அதிகம் இருப்போருக்கு திருமணம் செய்து வைப்பது, ஒருவரே இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது என்பதையெல்லாம் மாற்ற ஒருவர் ஒரே சமயத்தில் இரண்டு பேருடன் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்று திருமண சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டன. ஆனால் அதன் பின்பு திருமணத்தில் வரதட்சணை பிரச்னை அதிகமானது.
சீர், அன்பு மற்றும் கௌரவத்திற்காக செய்வது என்றெல்லாம் பூசி மொழுகினாலும் இன்றும் வரதட்சணை கேட்பது, கொடுப்பது எல்லாம் நடுத்தர வர்க்கத்தினரிடம் பரவலாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.
வரதட்சனை பிரச்னைகள் இன்னமும் அப்படியே இருக்க, தற்போது 'Concept Wedding' எனப்படும் ஆடம்பர திருமணங்கள் பெற்றோர்களுக்கு மேலும் செலவுகளைக் கூட்டுவதாக இருக்கிறது. உறவுகள் ஒன்றுகூடி வாழ்த்த திருமணங்கள் நடத்தப்பட்ட நிலை மாறி இன்று திருமணம் என்பது முழுக்க பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் காட்சிப்படுத்தும் நிகழ்வாக மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.

10-15 வருடங்கள் முன்பு திரைப்பட நடிகர்கள், மற்றும் பிரபலங்களிடையே 'Concept Wedding' முறை பிரபலமானது. தனித் தீவுகளில் திருமணம், விமானத்தில் நடுவானில் திருமணம் செய்து கொள்வது, நடுக்கடலில் திருமணம் என்ற திருமணத்தை வித்தியாசமாக உலகம் வியந்து பார்க்க வேண்டும் என்று செய்து கொண்டார்கள். நடிகை ஜோதிகா திருமணம் நடந்தபோது அவரை பார்த்து அதேபோல் சேலை, நகை, திருமண மாலை வேண்டும் என பல பெண்கள் செய்தார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் வாழ்நாள் முழுக்க சேமித்த பணத்தை செலவு செய்து அல்லது கடன் வாங்கியாவது இத்தகைய விஷயங்களை நடத்த வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது.
”சிம்பிளா ரிசப்ஷன் மட்டும் போதும்” என்பதற்கே இன்று குறைந்தது ஒருவரது 4-5 வருட சேமிப்பு தேவையாக இருக்கிறது. ஒரு திருமணத்தில் பெண்ணுக்கான நகை, உடை அலங்காரம் அதிக செலவுகளை எடுத்துக்கொள்ளும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. சாதாரணமாக 25,000 மாத வருமானம் இருக்கும் ஒரு குடும்பத்தினர் 30 ஆயிரம் ரூபாய்க்கு பட்டுப்புடவை வாங்கும் ஆடம்பர பழக்கத்துக்கு மாறி இருக்கிறார்கள். முப்பதாயிரம் ரூபாய் புடவையை அந்த பெண் வாழ்நாள் முழுவதுமாகச் சேர்த்து 5 முறைகூட உடுத்த மாட்டாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வசதிக்கு மீறி ஆடம்பரமாக திருமணச் செலவு செய்வது எந்தவித பின்புலமும் இல்லாமல் மாத வருமானத்தை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு கடன் சுமையையும், மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

திருமணத்துக்கு இவ்வளவு ஆடம்பரம் ஏன் என்ற கேள்விக்கு பலரும் சொல்லும் பதில், “வாழ்வில் ஒருமுறைதானே திருமணம் நடக்கிறது... அதை பெரிதாக கொண்டாட வேண்டும்” என்பதுதான். வாழ்க்கைத்துணையுடன் 50, 60 ஆண்டு காலம் இணக்கமாக குடும்பம் செய்வோம் என்கிற நம்பிக்கை பாராட்டுதலுக்குரியது. ஆனால் மறைமுகமாக திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நிகழ வேண்டும் என்பதையும் அதில் போதிக்கிறார்கள். விவாகரத்து செய்தவர்கள், வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் பெரும்பாலும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் போது அதிகமாக யாரையும் அழைக்காமல் மிக எளிமையாக செய்து கொள்வதை பார்க்கலாம். காரணம் இரண்டாம் திருமணத்தை சமூகம் இன்னமும் முழு மனதுடன் ஆதரிப்பதில்லை.
அதற்கு உதாரணமாக சமீபத்தில் தன் மகன் தாலி எடுத்துக் கொடுக்க இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் திருமண காணொலியின் பின்னூட்டங்களைச் சொல்லலாம். ”இரண்டாம் திருமணம் செய்துகொள்வது தவறு”, ”மகன் இருப்பதால் அவனுக்காக மட்டுமே வாழ்ந்திருக்க வேண்டும்”, “பேராசிரியையே இதை செய்வது மாணவர்களுக்குத் தவறான உதாரணம்” என்பதெல்லாம் ஓரளவு நாகரீகமாக (?!) அங்கே பதியப்பட்டிருந்த கமென்ட்டுகள்.

தங்களுக்கு எந்த மாதிரி கணவன் வேண்டும், தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று ஒரு தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கேட்கப்பட்ட போது பெண்கள் சொன்ன பதில்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும், சுயமரியாதையுடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்றெல்லாம் ஒருபுறம் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொருபுறம் இளம் பெண்கள் தங்களைத் திருமணம் செய்து கொள்ள வருபவர்கள் ஹெலிகாப்டரில் வரவேண்டும், தீவில் திருமணம் நடக்கவேண்டும், கான்செப்ட் வெட்டிங் வேண்டும் என்றெல்லாம் திருமணத்தை வாழ்வில் மிகப்பெரிய நிகழ்வாக எண்ணி கனவு காண்கிறார்கள்.
ஒரு பக்கம் 30 வயதுக்கு மேல் இருக்கும் பெண்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கணவனிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருக்க, 30 வயதுக்கும் கீழே இருக்கும் பெண்கள் திருமணமானதும் தங்களுடைய திருமணம் மற்றும் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையை சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்துவதே முழுநேர வேலையாகி மற்றொருவரை சார்ந்திருப்பவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். #Dependent.

பெண்களை ஆண்களுக்கு சமமானவர்களாக, சுய வருமானம் உடையவர்களாக்க வேண்டும் என்கிற முயற்சியில் பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை, அரசு வேலையில் இட ஒதுக்கீடு என பெண்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கி வருகிறது அரசு. ஆனால் படித்து, வேலை கிடைத்து அதன் அருமை தெரியாமல் அவற்றை விட்டுவிட்டு வீட்டில் ஆண்களின் வருமானத்தை சார்ந்திருக்கும் வாழ்க்கை முறைக்கு பெண்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பெண் மருத்துவம் படிக்க பள்ளி வயதில் இருந்து ஆசைப்படுகிறாள். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்கிறாள். வசதி இருந்தும் மருத்துவம் மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் இன்ஜினீயரிங் படித்துவிட்டு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் சிறிது நாள்கள் வேலை செய்துவிட்டு திருமணம் செய்துகொள் என்றும் மருத்துவத்திற்கு செலவாகும் பணத்தில் வாழ்க்கையை அனுபவி என்றும் பெற்றோர் தன் மகளை கன்வின்ஸ் செய்கின்றனர். மருத்துவராகும் குறிக்கோளுடன் கடின உழைப்பையும் செலுத்திய அந்தப் பெண் இப்போது திருமணம் செய்துகொண்டு ‘Dad’s Little Princess’ ஆக சமூக வலைதளங்களில் வலம் வருகிறார். ஆனால் எப்போதும் பேசினாலும் தன்னுடைய மருத்துவராகும் கனவைத் தொலைத்தது குறித்து ஏக்கமிருக்கிறது அவளிடம். தான் அந்த வயதில் உறுதியாக முடிவெடுக்காமல் பெற்றோரின் பேச்சைக் கேட்டது முட்டாள்தனம் என்று புலம்புகிறார்.

பெண்கள் அதிக அளவில் கல்வி, வேலை, சுயதொழில் என இன்றைய நிலைக்கு வர பல தலைமுறை பெண்களின் போராட்டங்களும், தியாகங்களும் முக்கிய காரணங்கள். இன்றைய தலைமுறை பெண்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதாக நினைத்துக்கொண்டு சமையல், வீட்டுவேலை, சமூக வலைதள புரட்சி என வீட்டுக்குள் அடைபட்டு கிடக்கும் வாழ்க்கைமுறைக்கு சுருங்கி விடுகின்றனர். திருமணத்துக்குப் பிறகு வீட்டில் இருந்து சமைக்க மருத்துவம் வேண்டாம், பொறியியல் படிப்பு போதும் என்பதுபோல் இனி கல்லூரி படிப்பு வேண்டாம், பள்ளி படிப்பே போதும் எனும் பழைய முறைக்கு திரும்ப அறிவுறுத்தப்படலாம்.
நகை உடை அலங்காரங்களில் மூழ்கி கிடக்கும்போது அவை பெண்களை அடிமைப்படுத்தும் என்று பெண்ணியவாதிகள் கூறுகிறார்கள். ”இந்த வாழ்க்கை மிக சிறியது, இதில் இவ்வளவு கறாரான தத்துவங்கள் தேவையில்லை. நமக்கு பிடித்தவற்றை எல்லாம் செய்து பார்த்து, இந்த நிமிடம் மகிழ்ச்சியாக இருப்பதும் அவற்றை சமூக வலைதளங்களில் பதிவுசெய்து வைப்பதுமே முக்கியம்” என்பது இளம் தலைமுறையினரின் வாதமாக இருக்கின்றது. இளைய தலைமுறையின் இத்தகைய செயல்பாடுகளை பழகிக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.

ஏற்பாட்டுத் திருமணங்களோ, காதல் திருமணங்களோ திருமணத்துக்கு முன்பு பேசிப் பழகி, புரிந்துகொள்ள வேண்டிய காலகட்டத்தில் கவனம் முழுவதும் சமூக வலைதளங்களில் தங்கள் அன்பை காட்சிப்படுத்துவதிலேயே நேரம் கழிந்துவிடுகிறது. பார்த்த இரண்டாவது நிமிடமே ’திருமணம் செய்து கொள்ளலாமா’ என்று கேட்கும் ‘வேட்டையாடு விளையா’டு ஸ்டைல் காதலில் ஒரு மேஜிக் இருக்கிறதுதான். ஆனால் அந்த மேஜிக்கைகூட முழுவதுமாக அனுபவிக்காமல், சமூக வலைதளங்களுக்கு ஓடிவரும் அவசரம் அதே வேகத்தில் பிரிவில் போய் முடிகிறது.
திரைப்பட நாயகன், நாயகிகளை போல அலங்காரம் செய்து கொள்வது, பாடலுக்கு நடனம் ஆடுவதும் இன்றைய திருமணங்களில் அதிகம் நடக்கிறது. பெண் என்றால் யாரையும் நிமிர்ந்து பாராமல் தலைகுனிந்து மேடையேற வேண்டும் என்றிருந்த சம்பிரதாயங்களை உடைக்கும் பெண்கள், திருமண மேடைக்கு தனது நண்பர்களுடன் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடிக்கொண்டு வருவது தற்போது மிக சகஜமாக நடக்கிறது. இந்த மாற்றங்கள் காண்பதற்கு அழகாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் பாடுவதிலும் நடனமாடுவதிலும் இருக்கும் மகிழ்ச்சியை விட இன்றைய தலைமுறையினருக்கு இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூபில் ஸ்டோரி ஆக்குவதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. தங்கள் வாழ்க்கையையே கண்டன்ட் ஆக்கி யூடியூபில் விற்றுக் கொண்டிருக்கும் தலைமுறை உருவாகி இருக்கிறது.

திருமணத்துக்கு இவ்வளவு ஆடம்பரங்கள் தேவையா என்கிற கேள்வி பொதுவெளியில் வைக்கப்படும்போது, அவரவர் வருமானத்தில் அவரவர் விருப்பப்படி செலவு செய்வதில் என்ன தவறு என்கிற எதிர் கேள்வியும் உடனே எழுகிறது. அது சரிதான். திருமணம் மட்டுமல்ல தனது வாழ்க்கையை யாருடன், எப்படி அமைத்துக்கொள்வது என்பதும் ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரம்.
உடை, உணவு, காதலை காட்சிப்படுத்திக்கொள்வது, பிடிக்காதபோது பிரிந்து செல்வது எல்லாமே தனிப்பட்ட விஷயம் என்று ஒரு சாராரும், சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்தோ, தெரியாமலோ இன்னொருவரை இன்ஃப்ளுயன்ஸ் செய்கிறோம், அதனால் சிறிதேனும் பொறுப்புணர்வு இருக்கவேண்டும் என்று ஒரு தரப்பும், சமூகம், குடும்ப அமைப்பு, திருமணம், காதல் இவற்றுக்கெல்லாம் சில சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளும் இருக்கிறது, அவற்றை மீறும்போது சமூகம் கேள்வி கேட்கும் என்று இன்னொரு சாராரும் தொடர்ந்து வாக்குவாதங்கள் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
ஊடகங்களில் பாசிட்டிவாக ட்ரெண்டிங் ஆகும் விஷயங்களைப் பலரும் உடனடியாக பின்பற்றும் சூழல் இன்று இருக்கிறது. அதுவே வரலாறாகவும் நிலைபெறுகிறது.

முன்பு ஏற்பாட்டு திருமணங்களில் கணவன், மனைவி இருவருக்கும் கூட்டுக் குடும்பங்களில் இருந்து தனிமை தேவையென தேனிலவுக்கு அனுப்பி வைப்பார்கள். அதுவும் ஓரளவுக்கு வசதியுள்ள உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது. கிட்டத்தட்ட 2000த்திற்கு பிறகு திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செய்பவர்களாக இருந்தாலும் தேனிலவு செல்வது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. தேனிலவு செல்வது தவறில்லை. ஆனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், தேனிலவும் உருவாக்கப்பட்ட காரணமும், தேவையும் மறைந்து இன்று கட்டாய திருமண சடங்காக பல லட்சங்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை பெரும்பாலும் கடன் வாங்கி செய்பவர்களே அதிகம். அதிலும் EMI கட்டி முடிவதற்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சண்டையிட்டு விவாகரத்து வரை செல்பவர்களும் பெருகி வருகின்றனர்.
வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் ரசித்து அனுபவிக்க வேண்டும் எனச் சொல்லும் இன்றைய தலைமுறை அவசரம் மற்றும் ஆடம்பரத்தால் திருமண வாழ்க்கையை பெரும் சிக்கலாக்கிக் கொள்வது கவலையளிக்கிறது!