Published:Updated:

மேடம் ஷகிலா - 29: பெண்ணியம் பேசினால் ஏன் ஆண்கள் பதற்றமாகிறார்கள்… யார் பேசலாம், யார் பேசக்கூடாது?

Women's March | Feminism
News
Women's March | Feminism

“ஆண் எப்படியோ போறான்… நாம ராணி மாதிரி வாழணும்னா நாம சொந்தக் கால்ல நிக்கனும்” என்று பெரியார் பேசியிருப்பார். பெண்கள் மிக அடிமைப்பட்டு இருந்த காலமது. அதனால் பெரியார் எல்லாவற்றையும் சற்று உரக்கப் பேச வேண்டியிருந்தது.

Published:Updated:

மேடம் ஷகிலா - 29: பெண்ணியம் பேசினால் ஏன் ஆண்கள் பதற்றமாகிறார்கள்… யார் பேசலாம், யார் பேசக்கூடாது?

“ஆண் எப்படியோ போறான்… நாம ராணி மாதிரி வாழணும்னா நாம சொந்தக் கால்ல நிக்கனும்” என்று பெரியார் பேசியிருப்பார். பெண்கள் மிக அடிமைப்பட்டு இருந்த காலமது. அதனால் பெரியார் எல்லாவற்றையும் சற்று உரக்கப் பேச வேண்டியிருந்தது.

Women's March | Feminism
News
Women's March | Feminism
“நீ அதிகமா பெண்ணியம் பேசுற அதனால உன்கிட்ட பேச முடியாது” - “நீ ஒரு Feminist இல்ல, அதனாலதான் உன்கிட்ட பேச ஆரம்பிச்சேன்” இந்த இரு வேறு திசையில் இருக்கும் வசனங்களையும் சுற்றி இருப்பவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பெண்ணியம் என்பது அவரவர் பார்வையில் வசதிக்கு ஏற்ப மாறுவதன் விளைவு அது.

Feminism - பெண்ணியம் என்கிற வார்த்தை ஏன் பலருக்கும் பதற்றத்தைக் கொடுக்கிறது?

பெண்ணியம் என்பது அனைத்து பாலினருக்கும் சமமான உரிமை #GenderEquality. ஆண்களுக்கு ஏற்கெனவே தேவையான உரிமைகள் சமூகத்தில் கிடைத்திருக்கின்றன. இந்தியாவில் இன்னமும் ஆண் மைய சமூக அமைப்புதான் நடைமுறையில் உள்ளது. அதே உரிமைகள் பெண்கள் மற்றும் திருநர்களுக்கும் தேவை எனக் கொஞ்சம் உரக்கக் கேட்க வேண்டியிருக்கிறது. அப்படி உரக்கக் கேட்கும்போது, அது ஆண்களைவிட பெண்கள் உயர்வானவர்கள் என்று சொல்வதுபோல் புரிந்து கொள்ளப்படுகிறது.

ஆணாதிக்கம் என்ற சொல்லைப் போல் ’பெண்ணியம்’ என்றால் பெண் ஆதிக்கம் என்று பலரும் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். பள்ளி காலத்தில் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று தொடங்கிய எண்ணம் பலருக்கும் வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கோட்பாடுகளை பெரும்பான்மை மக்கள் பின்பற்றுவதை போல நாமும் செய்தால் மரியாதையும், பாதுகாப்பும் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

பெண்ணியம்
பெண்ணியம்

நம்மை இந்தச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பல விஷயங்களைச் செய்கிறார்கள். இந்த எண்ணம் பெண்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. அதற்கு காரணம் காலம்காலமாக பெண்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி அடக்கி வைத்து, திறமையை குறைத்து மதிப்பிட்டு வந்ததால் பெரும்பான்மையான பெண்களுக்கு சமூகம் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கின்றது.

அதேசமயம் யாருடைய அங்கீகாரத்திற்காகவும் தன் உரிமைகளையும், மகிழ்ச்சியையும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றிருக்கும் பெண்களும் இருக்கிறார்கள். மற்றொருவருடைய உரிமைகளை பறிக்காதவரை அவர்கள் அப்படி இருப்பதில் எந்த தவறும் இல்லை என்கிற புரிதல் சகமனிதர்களிடம் இல்லை. தனது உரிமைகள் பற்றி வெளிப்படையாக பேசும் பெண்களை சமூகம் ‘பெண்ணியவாதி’ என tag ஒட்டுகிறது.

பெண்ணியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் தங்களுக்கு பிடித்தமான உடை, வேலை, வாழ்க்கைமுறை என்று இருப்பார்கள். அவர்கள் ’சராசரி பெண்களில்’ இருந்து மாறுபட்டு, சமூகத்திலிருந்து விலகி இருப்பதாக தோற்றமளிக்கிறது அல்லது இந்த சமூகம் அவர்களை விலக்கி வைத்துப் பார்க்கிறது. ஒரு பெண், பெண்ணியவாதியாக இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் பெண்ணியவாதி என்கிற வார்த்தை பலருக்கும் பிரச்னையாக இருக்கிறது.

90-களில் வந்த பெரும்பாலான திரைப்படங்களில் வசதியான வீட்டு பெண்கள் குடும்பத்தை கவனிக்காமல் லேடிஸ் கிளப் சென்று ’ஜாலியாக’ இருப்பதுபோல் ஒரு காட்சி நிச்சயம் இருக்கும். 50 வயதிற்கு மேலிருக்கும் பெண்கள் தலைமுடியை வெட்டிக்கொள்வது, ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிவது, அதிக மேக்கப் போட்டுக்கொள்வது போன்ற விஷயங்களை தவறு என்பதுபோல் காட்டியிருப்பார்கள். பெண்கள் எந்த வயதிலும் அவர்களுக்கு பிடித்த உடை உடுத்துவதில் இருந்து லேடிஸ் கிளப் செல்வதுவரை எதுவுமே தவறு இல்லை. அது அவர்களது உரிமை. ஆனால் அப்படி நடந்துகொள்ளும் பெண்களை (போலி) பெண்ணியவாதிகள் என்று பலரும் கேலி செய்வதை பார்த்திருக்கலாம்.

Feminism
Feminism

அவற்றை கண்டு வளர்ந்த தலைமுறை தற்போது அரசியல் சார்ந்த மாதர் சங்கங்களுக்கும், பெண்கள் பொழுதுபோக்கும் கிளப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிப் பேசுகிறார்கள். இன்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த பிரச்னைகள் நடக்கும்போது அதற்கு எதிர்வினையாக சமூக வலைதளங்களில், ‘’இந்த மாதர் சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?’’ என்றுதான் முதலில் கேலி செய்கிறார்கள். அதாவது திரைப்படங்கள் உருவாக்கிய தவறான புரிதல்களை வைத்துக்கொண்டு மாதர் சங்கத்தை சேர்ந்த களப்போராளிகள் பேசும் பெண்ணியத்தை அணுகுகிறார்கள்.

திராவிடம், கம்யூனிசம், என்று முற்போக்கு சித்தாந்தங்களை பின்பற்றும் ஆண்களும்கூட பெண்ணியம் என்கிற வார்த்தையை கேட்டு ஏன் பதறுகிறார்கள்?

சாதி, மதம், வர்க்க ரீதியாக பிறர்மீது ஆதிக்கம் செலுத்த கூடியவர்களுக்கு அதில் ஒரு சொகுசு (Luxury) இருக்கிறது. ஒரு ஆண் தன்னுடைய சாதி, மதத்தினால் கிடைக்கும் சலுகைகள் மற்றும் வசதிகளை ஒதுக்கிவிட்டாலும் ஆண் என்பதால் கிடைக்கும் அதிகாரம், மரியாதை எல்லாமும் அப்படியேதான் இருக்கும். அதனால்தான் எவ்வளவு முற்போக்கு பேசினாலும் ’பெண்ணியம்’ என்று வரும்போது பெரும்பாலான ஆதிக்கசாதி ஆண்கள் பின்வாங்குகிறார்கள். அதற்கு பெண்ணியம் பற்றிய தவறான புரிதலும், தங்களுக்குக் கிடைத்திருக்கும் சொகுசை விட்டு வெளியே வரமுடியாததும் காரணம். பெண்ணியம் என்கிற வார்த்தையை கேட்டாலே ஆண்கள் எரிச்சலடைவதால் பெண்களில் பலரும் பெண்ணியம் பேசினால் கூட்டத்தை விட்டு தனித்து நிற்க வேண்டும் என அஞ்சுகிறார்கள்.

பல்லாண்டுகளாக உயர் சாதிக்காரர்கள் மற்றும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கல்வியறிவு பெற்று வந்த நிலையில் இட ஒதுக்கீட்டிற்கான போராட்டங்களின் பயனாக அந்த வாய்ப்பு எல்லோருக்கும் இன்று சமமாகி இருக்கிறது. தங்கள்மேல் செலுத்தப்படும் சாதிய ஆதிக்கத்திலிருந்து வெளிவந்து கிடைக்க வேண்டிய உரிமைகளை எடுத்துக்கொள்ள போராடும் ஆண்களுக்கு, அதேபோல் ஒரு பெண் தன்னுடைய உரிமைகளைப் பற்றி பேசும்போது அதை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறது.

ஆதிக்கசாதி மக்களே உயர் பதவிகளை வகிக்கும் இடங்களில், விளையாட்டு போட்டிகளில் மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் ஒருவர் நுழைந்து முன்னேறினால் கொண்டாடுகிறோம். அதேபோல் பெண்கள் பலதுறைகளில் நுழைந்து ஆண்களுக்கு இணையாக முன்னேறும்போதும் கொண்டாடப்பட வேண்டும். மாறாக அப்பெண்கள் காழ்ப்புணர்ச்சியையும், கட்டுக்கதைகளையும் எதிர்கொள்ள நேர்கிறது.

ஆப்பிரிக்காவில் பெண் கல்வி
ஆப்பிரிக்காவில் பெண் கல்வி

பெண்கள் பொதுவெளியில் புழங்க ஆரம்பிக்கும்போது தங்களுடைய இடத்தை பெண்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்று அவர்களை சுற்றி இருக்கும் ஆண்கள் பதற்றப்படுகிறார்கள். ஒரு பெண் முதன்முறையாக பேச ஆரம்பிக்கும்போதே அவளை அங்கேயே அடக்கி வைக்க வேண்டும் என்று ஆண்கள் மட்டுமல்லாமல் Male Patriarchyஐ ஆதரிக்கும் பெண்களும்கூட சொல்கிறார்கள். சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் ஒரு பெண் பேசவோ, எழுதவோ செய்யும்போது அவசரமாக அவளுக்கு பெண்ணியவாதி டேக் போட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். மேலும் அவர்களின் எழுத்து, பேச்சை புறக்கணிக்கவும் செய்கிறார்கள். பெண்ணியவாதி என்பது இங்கு தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

பெண்ணியம் பேசுவதால் குடும்ப அமைப்பு உடைந்துவிடும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. தன்னுடைய அடிப்படை தேவைகள் மற்றும் உரிமைகளை ஒரு பெண் கோருவதால் குடும்பம் உடையும் என்றால் அந்த குடும்பம் உடைந்து போகட்டும். ஏனெனில் மூச்சுவிடக்கூட சுதந்திரம் இல்லாத இடத்தில் வாழ முடியாது. அதேசமயம் பெண்ணியத்தின் பேரால் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கவும் முடியாது. மேற்கொண்டு படிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும், ஆசைப்பட்டதை செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது அதற்கு குடும்பத்தில் இருப்பவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றதும் உடனே குடும்பத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பொருளில்லை. முதலில் குடும்பத்தினுள் உரையாடலை தொடங்க வேண்டும்.

’இதெல்லாம் பெண்ணின் உரிமை என்று ஆணுக்கு தெரியாதா? ஏன் நாம் புதிதாக உரையாட வேண்டும்’ என்று தோன்றலாம். மனைவியோ காதலியோ உரிமைகளைப் பேசும்வரை ஒரு ஆணுக்கு பெரும்பாலும் பெண்கள் உரிமைகள் பற்றிய அக்கறை இருப்பதில்லை. இந்திய குடும்பங்களில் ஆண்கள் அவ்வாறு வளர்க்கப்படுவதில்லை. பாடத்திட்டங்களும், பள்ளிகளும் பெண்ணின் உரிமைகள் பற்றி கற்பிப்பதில்லை.

சிறுவயதிலிருந்து ஒரு ஆண் தனது சிந்தனைகளுக்கான உள்ளீடுகளை குடும்பம், சமூகம் மற்றும் திரைப்படங்களில் இருந்து எடுத்துக் கொள்கிறான். திரைப்படங்களில் பெண்களை சமமாக நடத்துவது அரிது. பெரும்பாலான திரைப்படங்கள் சுதந்திரமான பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து, பெண்கள் என்றால் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்பவைகளாகவே இருக்கின்றன. இதை பார்த்து வளர்ந்திருக்கும் 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு தன்னுடைய காதலி அல்லது மனைவி மாடர்னாக உடை அணியும்போது முதலில் அவள் குடும்பப்பெண் இல்லை என்கிற எண்ணம் தோன்றுகிறது. ஹோட்டலுக்கு சென்றாலும் கூட Homely Food கேட்கும் வகையறாவை சேர்ந்த நம் மக்களுக்கு தங்கள் வீட்டுப் பெண்கள் நிச்சயமாக ஹோம்லியாக இருத்தல் அவசியமாகிறது. இதை எதிர்க்கும் பெண்களுக்கு பெண்ணியவாதி பட்டம் கிடைக்கிறது.

Women's March
Women's March

ஆணுக்கு குடும்பப் பொறுப்புகள் மொத்தத்தையும் பெண்ணிடம் விட்டுவிடுவது அல்லது சமமாக பகிர்ந்து கொள்வதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. பெண்ணை குடும்பத்தை வழி நடத்துபவராக ஆணால் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. காரின் ஓட்டுனர் இருக்கையில் மனைவி உட்காருவதைகூட அனுமதிக்க இயலாமல் பெரும்பாலான ஆண்களுக்கு ஈகோ தடுக்கிறது. அதை அவர்கள் பெண்களுக்கு அறிவு இல்லை என்பதாக வெளிக்காட்டுகிறார்கள்.

இன்னொருபுறம் பெண்ணியம் என்கிற வார்த்தையை மிக மோசமாக புரிந்துகொள்ள காரணம் போலி பெண்ணியவாதிகள். ஆண்களைப்பற்றி மட்டமாக எழுதுவது, ஆணைவிட தான் உயர்வு என்று நினைத்துக்கொண்டு அபத்தமாக பேசுபவர்கள் போலி பெண்ணியவாதிகள் (#pseudofeminist) அப்படி யாரோ சிலர் பேசும் அபத்தங்களை வைத்துக்கொண்டு பெண்ணியத்தை தீமை என்று சொல்வது தவறு.

நகரத்தில் சுயவருமானத்தில் வாழும் ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு பிறகு எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது முதற்கொண்டு தனது வாழ்க்கை சார்ந்த முக்கிய முடிவுகளைதானே எடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் மதம், பண்பாட்டின்மீது நம்பிக்கை உள்ள அவளது கணவன் அவளை தாலி, மெட்டி அணிய வேண்டும் என கேட்டதை ஆணாதிக்கம் என்று சொல்லி விவாகரத்துவரை செல்கிறாள். நிச்சயமாக இது பெண்ணியம் இல்லை. ஒரே நாளில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு யாராலும் முற்போக்காக முடியாது. நம் நாட்டில் தாலி அணிய வேண்டாம் எனும் சுதந்திரத்தைவிட கல்வி கற்பதும், சுய வருமானம் ஈட்டுவதும்தான் பெண்ணிற்கு சுயமரியாதையை தக்க வைத்துக்கொள்ள உதவும்.

இதுபோன்ற விஷயங்களில் கருத்து சொல்லும் பெண்ணியவாதிகள் சிலர் குடும்ப அமைப்பு பெண்களை அடிமைப்படுத்துகிறது. அதனால் அது கூடாது என்கிறார்கள். பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் குடும்ப அமைப்பில் வாழ்பவர்கள் இதுபோன்ற விஷயங்களில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பது பற்றி அப்பெண்ணியவாதிகளிடம் தெளிவு இல்லை. எல்லோரும் குடும்பத்தை விட்டு வெளியேறி எங்கு செல்வது?

Women's March
Women's March
“ஆண் எப்படியோ போறான்… நாம ராணி மாதிரி வாழணும்னா நாம சொந்தக் கால்ல நிக்கனும்” என்று பெரியார் பேசியிருப்பார். பெண்கள் மிக அடிமைப்பட்டு இருந்த காலமது. அதனால் பெரியார் எல்லாவற்றையும் சற்று உரக்கப் பேச வேண்டியிருந்தது. அவர் மேடையில் பேசுவதை நாம் அப்படியே வீட்டுக்குள் பேச முடியாது. பேச வேண்டிய Content அதுதான். ஆனால் Format வேறு. அதேபோல் குடும்பத்திற்குள் இருந்துகொண்டு நாம் ஆண்களை ஒதுக்கிவிட்டு யோசிக்க முடியாது. ஆண்களையும் inclusive ஆக யோசித்தால் மட்டுமே குடும்பத்திற்குள் சமத்துவம் நிலவும்.

சாதி, மத ஆதிக்கத்தை நாம் எதிர்ப்பது போல ஆணாதிக்கத்தை எதிர்க்க முடியாது. சாதியில் மற்றவர்களைவிட உயர்வானவர்களாக தங்களை நினைத்துக்கொண்டு எல்லா உரிமைகளையும் அனுபவித்து வருபவர்களுக்கும் சேர்த்து சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஆண் ஆதிக்கத்தை எதிர்க்கும்போது உறவுகளை கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம். இரண்டுமே எதிர்க்கப்பட வேண்டும் என்றாலும்கூட இரண்டுக்குமான வழிமுறைகள் வேறு வேறு. இந்த புரிதல் இல்லாமல் அவசரப்பட்டு ஒரு பெண் குடும்பத்தில் இருந்து வெளியேறும்போது அது அவளை மட்டுமல்லாமல் அவளைச் சார்ந்தவர்களையும் குறிப்பாக குழந்தைகளையும் பாதிக்கிறது.

போலி பெண்ணியவாதிகளிடம் இருக்கும் பிரச்னை என்னவென்றால் ஒரு பெண் முற்போக்காக சிந்திக்க ஆரம்பித்த மறுநாளே பொட்டு வைத்து, தாலி அணிந்து எப்படி பெண்ணியம் பேசலாம் என்று கேட்கிறார்கள். இவை எல்லாமே அந்த பெண்களின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமை சார்ந்தது. தங்களது விருப்பப்படி சுதந்திரமாக இருப்பதுதானே சம உரிமை, சமத்துவம் மற்றும் பெண்ணியம்? அப்படியிருக்க இந்தக் குற்றச்சாட்டுகள் எங்கிருந்து வருகின்றன.

பெண்ணியம்
பெண்ணியம்

பெண்ணியம் மட்டுமல்ல வேறு எந்த சித்தாந்தமாக இருந்தாலும் அது ஒரு தொடர் கற்றல் முறை. நான்கு புத்தகங்களை படித்துவிட்டு பத்து பேஸ்புக் பதிவுகள் எழுதி விட்டால் யாரும் ஒரு பெண்ணியவாதியாக ஆகிவிட முடியாது. ஆனால் இந்த போலி பெண்ணியவாதிகள் பெண்ணியம் என்பதை சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் போலவும் அதை வழங்கும் அதிகாரமிக்க நிறுவனமாக தங்களை நினைத்துக்கொண்டும் செயல்படுகிறார்கள். அந்த கற்றலுக்கான காலத்தை இங்கு பெண்களேகூட இன்னொரு பெண்ணுக்கு தருவது இல்லை. பெண்ணியம் பேச ஆரம்பித்தாலும் நம்மீது எறியப்படும் முதல் கற்கள் போலி பெண்ணியவாதிகளிடம் இருந்து வருகிறது.

கடவுள் நம்பிக்கை இருக்கும் மாமியார் தன் மருமகள் மீது அதை திணிக்காமல் இருப்பது, மருமகளின் முடிவுகளில் தலையிடாமல் இருப்பது, அவளது சுயமரியாதையை மதிப்பது, வேறு சாதி/மத காதல் திருமணங்களை ஏற்றுக்கொள்வது போன்ற விஷயங்களை இயல்பாக புரிந்துகொண்டு நம் வீட்டு படிக்காத பெண்கள்கூட செய்கிறார்கள். இவர்களுக்கு பெரியார் பற்றியோ பெண்ணிய கோட்பாடுகள் பற்றியோ ஒன்றுமே தெரியாது. ஆனால் இவர்கள் மிகப்பெரிய பெண்ணியவாதிகள்.

போலி பெண்ணியவாதிகளின் அபத்த பேச்சுகளை வைத்துக்கொண்டு பெண்ணியம் என்றவுடன் அலறி பெண்களுக்கான சம உரிமைகளை மதிக்காமல் பெண் உரிமை பேசுபவர்களை கேலி செய்ய தேவையில்லை. பெண்களின் சுயமரியாதையை மதிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் பெண்ணியவாதிதான்!