Published:Updated:

``மறுமணத்துக்கு முதல்ல அனுமதி கேட்டதே என் பையன்கிட்டதான்!" - மறுமணம் குறித்து சுபாஷினி

`` `நீ ஆதி அங்கிளையே கல்யாணம் பண்ணிக்கோம்மா, அந்த அங்கிள் சூப்பர், எனக்குலாம் ரொம்பப் பிடிச்சிருக்கு. அம்மாவோட ஹஸ்பண்ட்னா அப்போ அவர் எனக்கு அப்பாதானே?!'னு தர்ஷன் சொன்னப்போ..."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``மறுமணம்னு வீட்டுல பேச்சு எடுக்கும்போதெல்லாமே எதாவது காரணம் சொல்லி தவிர்த்துடுவேன். அது எல்லாம் ஆதியை பார்க்குறதுக்கு முன்னாடிதான். ஆதியைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு எனக்குத் தோணுனப்போ, நான் அவரை முதல்ல அறிமுகப்படுத்துனது என் பையன் தர்ஷனுக்குத்தான். `ஆதியை பிடிச்சுருக்கு, ஆனா பிடிக்கலை'ன்னு சொன்னான். `சரி பழகிப் பாரு'ன்னு சொன்னேன். கொஞ்ச நாள்லேயே, `உனக்கு இவர் சரிவருவாருன்னு தோணுதும்மா. உன் கல்யாணம்மா... இதெல்லாமா என்கிட்ட கேட்கணும்'னு சொன்னான். எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. எங்களோட ரெண்டு வருஷ காதல் இப்போ கல்யாணத்துல முடிஞ்சிருக்கு''' - மகிழ்வும் நெகிழ்வுமாகப் பேச தொடங்கினார் சுபாஷினி.

தன் 10 வயது மகனிடம் சம்மதம் கேட்டு சுபாஷினி செய்துகொண்ட மறுமணம், சாதி தாண்டிய திருமணம் என இணைந்திருக்கின்றனர் பாபநாசத்தை சேர்ந்த சுபாஷினியும், மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்த ஆதீஸ்வரனும். திருமங்கலத்தில் நடந்த திருமணத்தில் மாலையும் கழுத்துமாக நின்றவர்களிடம் பேசினோம்.

நட்பு காதலாக மாறி, காதல் கல்யாணத்தில் முடிந்திருக்கும் பயணத்தை பகிர்ந்தார் ஆதீஸ்வரன்.

ஆதி - சுபாஷினி
ஆதி - சுபாஷினி
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை காதல் திருமணம் வெல்லுமிடம் இதுதான்! #AllAboutLove - 22

``ரெண்டு நண்பர்கள் பேசிக்க என்ன இருக்கப்போகுது? சினிமாவும் புத்தகமும் தானே? அப்படி ரெண்டு பேருக்குள்ளயுமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம், இயக்குநர் ராமின் `தரமணி'. அது எங்களை கல்யாணம் வரை கொண்டு போய் சேர்க்கும்னு அப்போ எங்களுக்குத் தெரியல. `தரமணி' படத்தை பத்தி சுபா பேச, நான் பேச... ஒரு முழு இரவை தாண்டிய உரையாடல் அது. பேசி முடிச்சுட்டு, `வீட்டுல பொண்ணு பார்க்கிறாங்க, என்ன பண்ண?'னு கேட்டேன். `நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ'ன்னு சொன்னாங்க. `எனக்குத் தெரிஞ்ச நல்ல பொண்ணு நீதான், நீயே கல்யாணம் பண்ணிக்கோ'ன்னு சொன்னேன். படார்னு போனை வெச்சுட்டாங்க'' என்றார் ஆதீஸ்வரன்.

``அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு நான் சொல்றேன்'' என்ற சுபாஷினி தொடர்ந்தார். ``நான் கோபத்துல எல்லாம் போனை வைக்கல, கொஞ்சம் வேலை வந்துடுச்சுனு போனை வச்சுட்டுப் போயிட்டேன். ஆனா நான் கோபத்துல இருந்துருக்கேன்னு நினைச்சுட்டார் மாப்ள சார். இவரு அடிப்படையில் ஒரு ஆர்டிஸ்ட். நிறைய டிராவல் வேற பண்ணுவார். நான் கோபப்பட்டுட்டேன்னு நினைச்சு போன சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு வட இந்தியா ட்ரிப் போயிட்டாரு. பத்து நாளா பேசவே இல்ல. அப்போதான் நான் இவரோட இன்மையை உணர்ந்தேன். அந்த உணர்வும், தேடலும்தானே காதலா இருக்க முடியும்? அப்புறம் வீட்டுல பேசுனோம். சாதியின் பெயர்ல கொஞ்சம் எதிர்ப்புக் கிளம்புச்சு. இறுதியா ஏத்துக்கிட்டாங்க.''

ஆதி - சுபாஷினி
ஆதி - சுபாஷினி

``உங்க திருமணம் சோஷியல் மீடியாவில் கவனம் பெற, மணக்கோலத்தில் இருக்கும் தன் அம்மாவை வாழ்த்தின உங்க பையன் தர்ஷன்தான் காரணம் இல்லையா?!''

``ஆமா... தர்ஷன்தான் எங்க கல்யாணத்துக்குத் தாலி எடுத்துக் கொடுத்தான். தர்ஷன்கிட்ட ஆரம்பத்துல ஆதி, நல்லா வரையுற ஒரு ஆர்டிஸ்ட்டாதான் அறிமுகம் ஆனார். தர்ஷனுக்கும் வரையுறதுல ரொம்பவே இஷ்டம். இப்போ ஆதிகிட்டதான் பிரஷ் பெயின்டிங் கத்துக்கிறான். என்னை விட ஆதி - தர்ஷன் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு. அது எனக்கு ரொம்ப நிறைவா இருக்கு.

கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சப்போ, `அம்மாவுக்கு நடந்த மாதிரி இங்க நிறைய அம்மாக்களுக்கும் நடந்திருக்கு, நடக்குது. குழந்தையோட தனியா சிங்கிள் மதரா நிப்பாங்க. அவங்கள்ல பலர் அப்படியே இருந்துடுவாங்க. சிலர், இன்னொரு கல்யாணம் பண்ணிப்பாங்க. அம்மாவும், நீயும் நானுமா மட்டுமே இருந்திடுவோம்னுதான் நினைச்சிருந்தேன்... ஆதி அங்கிளை பார்க்குற வரை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போ நீ, நான், ஆதி அங்கிள்னு மூணு பேருமா இருக்கலாம்னு தோணுது' சொன்னதும், `நீ ஆதி அங்கிளையே கல்யாணம் பண்ணிக்கோம்மா, அந்த அங்கிள் சூப்பர், எனக்குலாம் ரொம்பப் பிடிச்சிருக்கு. அம்மாவோட ஹஸ்பண்ட்னா அப்போ அவர் எனக்கு அப்பாதானே?!'னு தர்ஷன் சொன்னப்போ, இந்தச் சூழலை இவ்வளவு இலகுவா தர்ஷன் என்னை கடக்க வெச்சது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா, நெகிழ்ச்சியா இருந்தது.

இதுபோன்ற மறுமணங்கள் நிறைய நடக்கும்போது, அது சமூகப் பார்வைக்கு வரும்போது, இனி என்னை மாதிரி அம்மாக்களும், தர்ஷன் மாதிரி பிள்ளைங்களும் அவங்களோட வீட்டுல மறுமணம் முடிவை எடுக்கும்போது, அந்தச் சூழலின் இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமா தளரும்னு நம்புறோம்.

ரெண்டு பேரு வீட்டு சம்மதத்தோட நடந்த கல்யாணம். வீட்டுல உள்ளவங்க சந்தோஷத்துக்காக கோயில்ல தாலி கட்டிட்டு, எங்களோட சந்தோஷத்துக்காக பெரியார் சிலை முன்னாடி மாலை போட்டுக்கிட்டோம்.

ஆதி - சுபாஷினி
ஆதி - சுபாஷினி
இந்த மூணுல உங்க காதல் எந்த வகை?! - #AllAboutLove - 2

திருமணத்தை நண்பர்கள் விழாவா நடத்த விரும்பினோம். அதனால, தாய்மாமன் முறை, மைத்துனர் முறைக்கு எல்லாம் நண்பர்களை நிப்பாட்டினோம்'' என்றவர்... `` `வானில் தெரியும் நிலவைப் பார், ஏரியில் தென்படும் ஒன்றையல்ல'னு ரூமியோட கவிதை ஒண்ணு இருக்கு. ரெண்டு பேருக்கும் அலைவரிசை ஒண்ணா இருக்கு என்றாலும், சண்டைகளும் சமாதானங்களும் நடந்துட்டேதான் இருக்கு. என்னை நானாகவும், அவரை அவராகவும் பயணிக்கவைக்க பரஸ்பரம் ஒப்புக்கொடுத்துதான் இந்தப் பயணத்தை தொடங்கியிருக்கோம். அது இறுதிவரை தொடரும்!" என்றார்.

வாழ்த்துகள் மணமக்களுக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு