Published:Updated:

`14 மணிநேர வேலை, ரூ.400 கிடைக்கும்; அதுவும் போச்சு’ - வீட்டுவேலை செய்யும் பெண்களின் கண்ணீர்க்கதை!

வீட்டு வேலை செய்யும் பெண்
வீட்டு வேலை செய்யும் பெண்

"முன்னாடியெல்லாம் வீட்டில் வேலை பார்க்கிறவங்களை வீட்டில் ஒருத்தராகப் பார்க்க மாட்டாங்க. இப்போதான் அந்த மனநிலை மாறியிருக்கு. ஆனால் இப்போ இந்தக் கொரோனா வந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துட்டோம்."

கொரோனா ஊரடங்கினால் பொருளாதார வீழ்ச்சி, உற்பத்தி பாதிப்புகள், நிறுவனங்களில் வேலையிழப்பு எனப் பெரிய அளவிலான பிரச்னைகளைப் பேசிக்கொண்டிருக்கிறோம். இவை ஒருபுறம் இருக்க, அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்குச் சிரமப்படுபவர்களின் நிலையை உடனடியாகச் சரிசெய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. இல்லையெனில் பசியின் கோரத்தாண்டவத்திற்கு நாம் கோடிக்கணக்கான மக்களை இழக்க வேண்டியிருக்கும் என்பதே உண்மை. சூழலைச் சரிசெய்ய அரசு பல திட்டங்களை அறிவிக்கின்ற போதிலும், அவற்றின் மூலம் அடித்தட்டு மக்களின் பிரச்னை தீருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மக்கள்
மக்கள்

தொழில் முனைவோரின் நிலையைச் சரிசெய்தால்தான் நாட்டின் பொருளாதார நிலை சரியாகும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான் என்றாலும், பசிக்கு உயிரைப் பணயம் வைத்துக்கொண்டிருப்பவர்களை காக்கும் தார்மிகப் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் இவர்களின் எதிர்காலம் என்ன? கொரோனா பயம் குறையும் வரை எதிர்காலம் என்ற ஒன்று இருக்குமா என்பதெல்லாம் சந்தேகத்திற்குரிய ஒன்றுதான்.

ஆரம்பகாலங்களில் வீட்டு வேலைகள் செய்ய ஆட்கள் வைத்துக்கொள்வது என்பது பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. திரைத் துறையினர், அரசியல்வாதிகள் என வளம்மிக்கோர் வீடுகளில்தான் வீட்டு வேலைக்கு ஆட்கள் நியமிப்பது பழக்கமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பெரும்பாலான வீடுகளில் வீட்டு வேலைகள் செய்ய வேலைக்கு அமர்த்த ஆரம்பித்தார்கள். வீடுகளில் வேலை என்பதைத்தாண்டி பேச்சுலர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுப்பது, வீடுகளைச் சுத்தம் செய்து கொடுப்பதிலும் ஏராளமான பெண்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தார்கள். சென்னை, அண்ணா நகரில் சிவில் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகம். அங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானவர்கள் நண்பர்களுடன் வீடு எடுத்துத் தங்கி வசித்து வருகிறார்கள். அதனால் சென்னை அண்ணா நகரில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக வீட்டில் பணியாட்கள் நியமிக்கத் தடைவிதிக்கப்பட்டதால் அந்தப்பெண்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.

பெண்கள்
பெண்கள்
சிலம்பரசன்

"நான் என்ன படிச்சா இருக்கேன். இந்த வேலையில்லைனா இன்னொரு வேலைக்குப் போகலாம்னு முடிவு எடுக்க. எனக்குத் தெரிஞ்சது பாத்திரம் கழுவுகிறது, வீடு கூட்டுறது, சமைக்கிறது தான்..." என்று பேச ஆரம்பிக்கிறார் தேன்மொழி. சென்னையில் 15 வருடமாக வீட்டு வேலை செய்துவந்த இவர், கொரோனாவால் வேலைவாய்ப்பை இழந்து தன் சொந்த ஊரான விழுப்புரத்திற்குச் சென்றுள்ளார்.

"எங்க வீட்டுக்காரர் இறந்து 16 வருஷம் ஆச்சும்மா. ஒரு மவன் இருக்கான். சென்னைக்குப் போனா பொழைச்சுக்கலாம்னு ஊருக்காரங்க சொன்னதால், கைப்புள்ளைய அம்மாகிட்ட விட்டுட்டு, நூறு ரூபாய் காசோட சென்னைக்கு வந்துட்டேன். ஆரம்பத்தில் சித்தாள் வேலைக்குப் போயிட்டு இருந்தேன். பழக்கமில்லாத வேலைங்கிறதால் ரொம்ப கஷ்டமாக இருந்துச்சு.

அதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சவங்க மூலமா வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். வீட்டு வேலைக்குப் போறவங்க சுத்த பத்தமா இருந்து, திருட்டுப் பழக்கம் இல்லாமல் இருந்தாலே நிறைய இடத்துல வேலை கிடைக்கும். தினமும் காலையில் டீக்கடையில் 3 மணிநேரம் வேலை பார்ப்பேன். அதுக்கு அப்புறம் ஒரு வீட்டில் வீடு, வாசல் பெருக்கிறது, பாத்திரம் கழுவுறதுனு ரெண்டு மணிநேர வேலையிருக்கும். அதுக்கு அப்புறம் ரெண்டு ஹாஸ்டலில் வேலை... திரும்பி சாயங்காலம் வீட்டுவேலைனு ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலை பார்த்தாதான் ஒரு நாளைக்கு 400 ரூபாய் சம்பாதிக்க முடியும். என் புள்ளைய படிக்க வைக்கணுங்கிற வைராக்கியத்தில் எனக்கு எந்த வலியும் இது வர தெரிஞ்சது இல்ல. 16 வருஷம் இப்படியே கழிஞ்சுபோச்சு. இந்தக் கொரோனா வெளிநாட்டில் பரவ ஆரம்பிச்சதா சொன்னப்போ இங்கெல்லாம் வராதுனு சொன்னாங்க. ஆனா, இப்போ அடுத்த தெருவுல இருக்குறவங்களுக்குக் கூட கொரோனா இருக்கிறதா சொல்லுறாங்க.

தேன் மொழி
தேன் மொழி

கொரோனா பரவ ஆரம்பிச்சப்போகூட வேலைக்குப் போயிட்டுதான் இருந்தேன். ஆனா நிறைய இடத்துல வேலைக்குப் போறதால ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வேலைக்கு வரவேணாம்னு சொல்லிட்டாங்க. ஒரு மாசம் சமாளிச்சுப்பார்த்தேன். கையில இருக்க காசு காலியாக ஆரம்பிச்சுது. அதான் சொந்த ஊருக்கே வந்துட்டேன். உட்கார்ந்து சாப்பிட சேமிப்புனு எதுவும் கிடையாது. ஊருலயும் எதுவும் வேலையில்ல. ஒரு நாளைக்கு ரெண்டு நேரச் சாப்பாடு சாப்பிட்டு வாழ்ந்துட்டு இருக்கோம். ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று சொல்லும்போதே கண்ணீர் பெருக்கெடுக்கிறது தேன்மொழி அக்காவிற்கு.

சில நிமிடங்கள் அமைதிக்குப்பின் மீண்டும் தொடர்ந்தவர், "ஏற்கெனவே வேலை செஞ்ச இடங்களில் ரெண்டு நாளைக்கு ஒரு முறை போன் பண்ணி எப்போ வேலைக்கு வரட்டும்னு கேட்டுட்டுதான் இருக்கேன். கொரோனா முடியட்டும்னு சொல்லிட்டாங்க. இதுக்கு எப்போ விடிவு காலம் பொறக்கும்னு தெரியல. ரேஷன்ல கொடுக்குற பொருள்கள் போதுமானதாக இல்ல. கடன் கேட்டா கூட யாரும் தரமாட்றாங்க. நிலைமை சீக்கிரம் சரியாகணும் தாயி" என விடைபெறும் தேன்மொழி அக்காவைத் தொடர்ந்து பத்து வருடங்களாக வீடுகளில் சமையல் வேலைசெய்து வரும் சீதா அக்காவிடம் பேசினோம்.

’’ரெண்டு வீட்டில வேலை செய்துட்டு இருந்தேன்ம்மா. மாசம் எட்டாயிரம் ரூபாய் கிடைக்கும். கொரோனா பரவ ஆரம்பிச்சதுமே படிக்கிறதுக்காக இங்க தங்கியிருந்த பசங்க கிளம்பி ஊருக்குப் போயிருச்சுங்க. அதனால் வேலையில்ல. இன்னொரு வீட்டில் என் மூலமா அவங்களுக்குக் கொரோனா வந்துரும்னு வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. எங்க வூட்டுக்காரரு கொத்தனார் வேலை பார்த்துட்டு இருந்தாரு. இப்ப அவருக்கும் வேலையில்லைங்கிறதால் குடும்பத்தைச் சமாளிக்கவே சிரமமாக இருக்கு.

Vikatan

ரெண்டு பிள்ளைகளை வெச்சுக்கிட்டு வாடகை கொடுக்கவும் வழியில்லாமல், சாப்பாட்டுக்கும் காசில்லாமல் உட்கார்ந்து இருக்கோம். எத்தினி மாசத்துக்கு வாடகையைத் தள்ளிப் போட முடியும்? எப்போனாலும் நாங்கதான அந்தக் காசை மொத்தமாக கொடுக்கணும்... அப்போ அவ்வளவு பெரிய தொகைக்கு எங்க போறதும்மா... படிச்சுருந்தா சமையல் தவிர வேற வேலைக்குப் போகலாம். படிப்பும் இல்லாததால் வீட்டில் முடங்கி இருக்கோம். விலைவாசி எல்லாம் கூடிப்போச்சு... அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் எத்தனை நாளைக்கு வரும். உண்மையைச் சொல்லணும்னா கையில் அம்பது ரூபா கூட இல்ல. ஆனாலும் நிலைமை சரியாகிரும்னு காத்துட்டு இருக்கோம். கொரோனா ஊரடங்கு முடிஞ்சாகூட மக்கள் மனசுக்குள்ள இருக்க பயம் போனாதான் எங்களுக்கு வேலை கிடைக்கும். அந்த நாள் சீக்கிரம் வரட்டும்" என விடைபெறுகிறார் சீதா அக்கா.

அவரைத் தொடர்ந்து 18 வருடங்களாக வீட்டு வேலை செய்து வரும் குளோரி அக்காவிடம் பேசினோம். "என்னத்தம்மா சொல்ல. 18 வருசமா வீட்டு வேலை செய்துட்டு இருக்கேன். ஒரு நாள் கூட உடம்பு சரியில்லைனு வீட்டில் இருந்தது இல்ல. 18 வருசம் கழிச்சு இப்போதான் மூணு மாசம் தொடர்ந்து வீட்டில் இருக்கிறேன். முன்னாடியெல்லாம் வீட்டில் வேலை பார்க்கிறவங்களை வீட்டில் ஒருத்தராகப் பார்க்க மாட்டாங்க. இப்போதான் அந்த மனநிலை மாறியிருக்கு. ஆனால் இப்போ இந்தக் கொரோனா வந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துட்டோம். மக்கள் இனி எங்களை தள்ளிவெச்சுதான் பார்ப்பாங்க.

வீட்டு வேலை செய்யும் பெண்
வீட்டு வேலை செய்யும் பெண்

உண்மையைச் சொல்லணும்னா கொரோனா எங்களோட வாழ்க்கையையே திருப்பிப் போட்டுட்டுப் போயிருச்சு. நாங்க காசு பணமெல்லாம் எடுக்க மாட்டோம்னு எங்களை நம்பி வீட்டுக்குள்ளவிட்டவங்க கூட, இப்போ கொரோனா பரவிரும்னு வீட்டுக்குள் விடமாட்றாங்க. நான் ஆறு வீட்டில் வேலை பார்த்துட்டு இருந்தேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வேலை இருக்கும்... மாசம் 20,000 ரூபாய்க்கு மேல கிடைக்கும். இந்த ஊரடங்கு அறிவிச்சதால் வருமானமே இல்லாம போயிருச்சு. வீட்டில் இருக்கிறதை வச்சு சமாளிச்சுட்டு இருக்கோம். படிக்கலைனாலும் மாசம் 15,000 ரூபாய் வீட்டுக்குக் கொடுத்தாதான் எங்க குடும்பத்துல எங்கள மதிச்சுட்டு இருந்தாங்க. இப்போ அந்த மரியாதையை இழந்துட்டோம். எங்களுக்குனு எந்த அடையாள அட்டையும் இல்லாததால் அரசுடைய உதவியும் கிடைக்காதுனு சொல்றாங்க. ஆனாலும் அரசாங்கத்தை நம்புகிறதைத் தவிர வேறவழியில்ல... உதவி பண்ணுங்க சாமீ" என கைகூப்பி விடைபெறுகிறார்.

அடுத்த கட்டுரைக்கு