Published:Updated:

வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்துபோக வேண்டும்! - ரெப்கோ வங்கியின் மேலாண் இயக்குநர்

 இஸபெல்லா
பிரீமியம் ஸ்டோரி
News
இஸபெல்லா

உழைப்பே உயர்வு...

“படிப்புதான் எல்லாம். அதுதான் இந்த ஆணாதிக்க சமூகத்தில் உனக்கான இடத்தைப் பெற்றுத் தரும் என்று அப்பா அடிக்கடி சொல்வார். அதை உணர்ந்து படிப்பிலும் வேலையிலும் நான் காட்டிய ஈடுபாடுதான் இன்றைக்கு என்னை இந்த இடத்தில் அமர வைத்து, ‘சிறந்த பெண் தலைவர்’ என்ற விருதையும் பெற்றுத் தந்திருக்கிறது” - உழைப்பின் மேன்மையை முன்னிறுத்திப் பேசுகிறார் ரெப்கோ வங்கியின் மேலாண்மை இயக்குநர் எனும் தலைமைப் பதவியில் அமர்ந்திருக்கும் இஸபெல்லா.

சாதராண வங்கி அதிகாரியாகத் தன் வாழ்க்கை யைத் தொடங்கிய இஸபெல்லா, இன்று 108 கிளைகளைக் கொண்ட ரெப்கோ வங்கிக்கு மேலாண்மை இயக்குநர். ஜனவரி மாதம் நடந்த தேசிய கூட்டுறவு வங்கிகளுக்கான உச்சி மாநாட்டில் ‘ஆண்டின் சிறந்த பெண் தலைவர்’ விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சென்னை தி.நகரில் உள்ள ரெப்கோ வங்கியின் தலைமை அலுவலகத்தில் இஸபெல்லாவைச் சந்தித்தோம்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எனப் பல்வேறு தலைவர்களுடன் இஸபெல்லா நிற்கும் புகைப்படங்கள் அவரது அறையை நிறைத்திருக்கின்றன. “பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்வுக்காக 1969-ம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்ட வங்கி இது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா அரசுகளும் பங்குதாரர்களாக இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் பங்குத் தொகையை வழங்குவதற்கு அந்தந்த மாநில அரசின் முதல்வர்களையும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்தாக வேண்டும். அந்தத் தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை” - விளக்கம் சொல்லி பேசத் தொடங்கினார்...

“என் சொந்த ஊர் நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம். அப்பா பொருளாதாரப் பேராசிரியர், அம்மா வணிகவியல் ஆசிரியை. இரண்டு தங்கைகள், ஒரு தம்பி என என்னுடன் பிறந்த வர்கள் மூன்று பேர். பன்னிரண்டாம் வகுப்பில் பொருளியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம், சேலம் சாரதா கல்லூரியில் பி.காம் கோல்டு மெடல் எனப் படிப்பில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டே இருந்தேன். வங்கிப் பணி மீது எனக்கிருந்த ஆர்வத்தால் அழகப்பா பல்கலைக்கழகத்தில் MBM (Master of Bank Management) சேர்ந்தேன். அங்கும் நான்தான் யுனிவர்சிட்டி டாப்பர்” - கல்வியைப் பற்றிச் சொல்லும்போதே அவர் குரலில் உற்சாகம் பொங்குகிறது.

 வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்துபோக வேண்டும்!  - ரெப்கோ வங்கியின் மேலாண் இயக்குநர்

“படிப்பு முடிந்ததும் கரூர் வைஸ்யா வங்கியில் வங்கி அதிகாரியாக எனது பணியைத் தொடங்கினேன். திருமணம் ஆனது. என் கணவர் மோகன்லால், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர். கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் ‘நான் பெருசா... நீ பெருசா’ என்ற ஈகோ வெடிக்கும். ஆனால், என் கணவர் அப்படி இல்லை. நான் அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல வேண்டுமென நினைத்தார். `கரூர் வைஸ்யா வங்கி தனியார் வங்கி... அரசு வங்கிக்கு முயற்சி செய்' என்று ரெப்கோ வங்கி பணிக்கு விண்ணப்பிக்கச் சொன்னதே அவர்தான். ரெப்கோ வங்கியில் மேனேஜராக அடியெடுத்து வைத்த நான் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு பதவிகளில் பணியாற்றியிருக்கிறேன்.

23 வருடங்கள் அனுபவம். ஆனாலும், மேலாண்மை இயக்குநர் பதவி அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அதற்கு இந்திய அளவில் தேர்வெழுத வேண்டும். தடைகளைக் கடந்து தேர்வில் வென்றுதான் நான் இந்த இடத்தில் வந்து அமர்ந்தேன். அதற்கு காரணம் தொடர்ந்து என்னை நான் அப்டேட் செய்துகொண்டே இருந்ததுதான். வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்பத்தையும் வேலையையும் சரியாக பேலன்ஸ் செய்ய வேண்டும். இல்லையெனில், ஏதாவ தொன்றில் சிக்கலாகிவிடும். அப்படியான சிக்கல் ஏற்படாமல் சாதித்ததற்கு என் கணவரும் முக்கிய காரணம்.

எனக்கு ஒரே மகன்தான். வேலை இருக்கும் நேரத்தில் மகனை என் கணவர் பார்த்துக் கொள்வார். வீட்டு வேலைகளையும் பகிர்ந்து கொள்வார். தேசிய கூட்டுறவு வங்கிகளில் ‘ஆண்டின் சிறந்த தலைவர்’ என்ற விருது எனக்குக் கிடைத்ததைப் பார்க்க என் கணவர் என்னுடன் இல்லை” - சட்டென இஸபெல்லாவின் குரல் உடைந்து கண்கள் கசிகின்றன.

“சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். அவர் என்னுடன் இல்லை என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனால், இதையெல்லாம் வாழ்க்கையில் சந்தித்துதான் ஆக வேண்டும். கடந்துதான் போக வேண்டும். 108 வங்கிக் கிளைகள், 92 மைக்ரோ ஃபைனான்ஸ் கிளைகளின் வளர்ச்சிக்கு நான்தான் பொறுப்பு. இன்னும் திறம்பட நிர்வகிக்க வேண்டும். எனக்கு வழங்கப் பட்ட பொறுப்புகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்பதை மனதில் ஏந்தி வேறு எதையும் சிந்திக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் முடிக்கும்போது அவரையும் அறியாமல் கண்ணீர் விழுகிறது அவரது மேஜையில்.