Published:Updated:

கடற்கரைகளும் காடுகளுமே என் வாழ்க்கைத்துணை! - தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி

தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி

இயற்கை... இனிமை...

பெண்கள் அதிக அளவில் தடம் பதிக்காத கடற்சார் சூழலியல் துறையில் இந்திய தரச் சபையின் ஒப்புதல் பெற்ற சூழலியல் மற்றும் பல்லுயிர் நிபுணர், கவிதைத் தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டவர், குஜராத்தில் அன்றைய முதல்வர் மோடியுடன் பணியாற்றியவர், தமிழ்நாட்டின் ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு முனைவர் பட்ட ஆய்வுகளைத் திறனாய்வு செய்து சிபாரிசு அறிக்கை அளிக்கும் புற மாநில ஆய்வாளர் என்று தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லியின் ‘வாவ்’ பட்டியல் நீள்கிறது!

இப்போது ஆசிய வளர்ச்சி வங்கியின் கடலோரப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் கடற்சார் சூழலியல் நிபுணராகப் பணியாற்றி வருகிறார் இவர். கர்நாடகக் கடலோரத்தில் மணல்மேடுகள் பாதுகாப்பு மற்றும் மீள் உருவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லியிடம் உரையாடினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி
தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி

“கன்னியாகுமரி அருகிலுள்ள கரும்பாட்டூர் சொந்த ஊர். அம்மா கமலாபேபி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கு மேலாளராகவும் அப்பா ஸ்டான்லி சுபமணி உடற்கல்வி ஆசிரியராகவும் பணிபுரிஞ்சாங்க. இப்ப ரெண்டு பேரும் உடலளவில் என்கூட இல்லை. எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை. ரெண்டு பேரும் வாழ்க்கையில நல்லபடியா செட்டிலாகிட்டாங்க. நான் ஒரு நாள் டாக்டர் ஆகிவிடுவேன்னு என் பெற்றோர், உறவுகள் எல்லாரும் நம்பினாங்க. ஆனால், படிப்பில் சரியா கவனம் செலுத்தாததன் காரணமாக மதிப்பெண் குறைந்துவிட்டது. அப்போதுதான் சூழலியல்மீது, என் பார்வை திரும்பியது. தூத்துக்குடியில் என் சுற்றுச்சூழல் படிப்பை மேற்கொள்ள தொடங்கினேன். பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளில் எம்.பில் ஆய்வும், முத்துப்பேட்டை சதுப்புநிலக் காடுகளில் பிஹெச்.டி ஆய்வும் செய்தேன். அதன்பிறகு, சதுப்புநிலக் காடுகள் புனரமைப்பு, விரிவாக்கம் எனக் கடலோரப் பாதுகாப்பு சம்பந்தமாகப் பணிபுரிந்தேன். யுனைடெட் நேஷனின் ஃபுட் அண்டு அக்ரிகல்சர் ஆர்கனைசேஷனில் கடலோரக் காடுகள், கடல் உணவுகள் சம்பந்தமாக 17 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன்” என்கிறவர், குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது அங்கு பணிபுரிந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``முதல்வராக மோடி பணி யாற்றும்போது ஒரு திட்டத்தை நிறைவேற்றும் முன் அனைத்துத் துறை அதிகாரிகளையும் அழைத்து அந்தத் திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்தும் மாற்று வழிகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார். அதனால்தான் குஜராத்தில் இப்போதுகூட தண்ணீர் பிரச்னையோ, பவர்கட் பிரச்னையோ கிடையாது” என்கிறவருக்கு, கடற்கரைகளில் கற்கள் கொட்டி இயற்கையை அழிக்கிறார்கள் என்கிற கோபம் அதிகமிருக்கிறது.

தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி
தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி

``கடலலை கரைக்கு எவ்வளவு தொலைவு வரை வர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது இயற்கையே. நீங்கள் ஒருபுறம் அதன்போக்கைத் தடுத்தால், அது மறுவழி தேடும். கேரளாவில் கடற்கரைகளில் கற்களைப் போட்டு நாசமாக்கி விட்டார்கள். புதுச்சேரியிலும் கற்களைக் கொட்டிவிட்டார்கள். கன்னியாகுமரியில் மலைகளை உடைத்து கடற்கரையில் கொட்டி, நமக்கு மழை இல்லாமல்போக வழி செய்திருக் கிறார்கள்.

கடற்கரையில் பாறாங்கற்களை அடுக்குவதற்குப் பதில் இயற்கையாகவே கடற்கரையில் அமைந்துள்ள மணல் மேடுகளை அழியாமல் பாதுகாப்பதன் மூலம் கடல் அரிப்பைத் தடுக்கலாம். ஏற்கெனவே அழிக்கப்பட்ட, அரிக்கப்பட்ட மணல் மேடுகளை நாங்கள் புனரமைத்து வருகிறோம். அவற்றை மீண்டும் காற்று கலைத்துவிடாமல் இருக்க, கடற்கரைப் பகுதிகளில் வளரும் கொடி வகை தாவரங்களை மணல்மீது வளர விடுகிறோம்'' என்கிறவர், இப்போது கர்நாடக மாநில மணல்மேடுகள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பில் ஈடுபட்டுவருகிறார்.

``கடற்கரை மணல்திட்டுகள் ஸ்பாஞ்ச் போன்று மழைநீரை உறிஞ்சி, சேமித்து வைத்துக்கொள்ளும். கரைப் பகுதியில் இருந்து கடலுக்குச் செல்லும் நன்னீரையும் இந்த மணல்திட்டுகள் ஈர்த்து வைத்துக்கொள்ளும். கடல்நீர் நிலத்தடியில் புகாமல் நன்னீர் ஊற்றுகளைத் தேக்கிவைக்கும் இயற்கை அரண்தான் மணல் திட்டுகள். நாம் மணல்திட்டுகளைப் பாதுகாக்காமல் அழித்துவிட்டதால் தான் தமிழகத்தின் சீர்காழி போன்ற பகுதிகளில் கடல்நீர் நிலத்தடியில் புகுந்துவிட்டது. மணல்திட்டுகளில் மரம் நடுவதும் அதன் தன்மையை பாதிக்கும். மணல்மேடுகளில் மரம் நடும்போது அடிப்பகுதியில் உள்ள தண்ணீரை உறிஞ்சியெடுத்து வெற்றிடமாக்கிவிடும். கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாக மாறுவதற்கு இலவச மின்சாரம் மற்றும் போர் வெல்கள் மூலம் பொறுப்பற்ற முறையில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதும் ஒரு காரணம். நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றும்போது பூமிக்கு அடியில் வெற்றிடம் ஏற்படும். அந்த வெற்றிடத்தில் எப்போதும் ஓர் அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும். அது, கடல் நீரை ஈர்ப்பதால், குடிநீர்க் கிணறுகளும் உப்புத்தன்மை அடைந்துவிடுகின்றன. இதைத் தடுக்க மணல் திட்டுகளைப் பாதுகாக்க வேண்டும்'' என்கிறவர், எழுத்துலகிலும் கால் பதித்திருக்கிறார். `ஆண் உலகம் - உடல் மனம் ஆரோக்கியம்' என்ற மொழிபெயர்ப்பு நூலையும், 'சலியாத தீண்டல்கள்' என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

``எனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் மாப்பிள்ளைகளின் பட்டியலோடு என் அம்மா காத்திருப்பார். ஆனால், நான் பார்த்த மாப்பிள்ளைகளில் ஒருவர்கூட நியாயமாகவோ, பண்பாகவோ நடந்துகொள்ளவில்லை. இதற்கு மேல் எனக்குத் திருமணம் செட் ஆகாது. கடற்கரையும் சதுப்புநிலக் காடுகளும்தான் என் துணை.

நான் எந்தச் சூழ்நிலையிலும் மனச்சோர்வுக்கு இடம் தரமாட்டேன். கைவிட்டுப்போன விஷயத்துக்காக மனம் வருந்த மாட்டேன். அதேபோல், இரண்டு வருஷத்துக்கு மேல் ஓர் இடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருப்பது எனக்குச் சலிப்பை உண்டாக்கிவிடும். அதனால்தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, `எக்கோ பேலன்ஸ் கன்சல்டன்ஸி’ தொடங்கியுள்ளேன். இரண்டு ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பரோடாவில் பூங்கா அமைத்தல் போன்ற பணிகளில் தன்னார்வலராக ஈடுபடுகிறேன்.

இன்று பெண் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவுதான். இந்தத் துறையில் பணியாற்ற பெண்கள் அதிக அளவில் முன்வர வேண்டும் என்பதே என் விருப்பம். `பார்க்கும் கண்கள் பணிய வேண்டும்; பாவை உலகு மதிக்க வேண்டும்' என்பதே என் லட்சியம், நாளைய கனவு'' என்று உற்சாகமாகச் சொல்கிறார் தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி!