Published:Updated:

மணவாழ்க்கையின் வெற்றி உங்கள் சாய்ஸ்... உங்கள் சாய்ஸ் மட்டுமே!

மணவாழ்க்கை
பிரீமியம் ஸ்டோரி
News
மணவாழ்க்கை

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்

ந்திய சமூகத்தில் கணவன் மனைவி காதல் என்பது, காலங்காலமாக ரகசிய காதல் போல மிகவும் அந்தரங்கமாக வைத்துக் கொள்ளப்படுகிறது. மிகவும் அரிதாகவே அவர்களின் காதலை நாம் உணர்ந்துகொள்ள முடியும். அதுவும் நமது முந்தைய தலைமுறை தம்பதியருக்கெல்லாம் காதல் என்ற ஒன்று இருக்குமா என்பதே சந்தேகம். அதைப் பொய் யாக்கும் விதமாக எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது.

மணவாழ்க்கையின் வெற்றி உங்கள் சாய்ஸ்... உங்கள் சாய்ஸ் மட்டுமே!

கடந்த மாதம் என் 80 வயது மாமனார் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா `நெகட்டிவ்' என்றே ரிசல்ட் வந்தது. அதனால், மருத்துவமனையில் அவரைக் கவனித்துக்கொள்ள என் மாமியார் அனுமதிக்கப்பட்டார். என் மாமனாருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் அவ்வப்போது ஆக்ஸிஜன் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர் ஒழுங்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் வீட்டுக்குப் போக வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார்.

நான் அவரிடம் பேசியபோது, “எனக்கு ஒன்றுமே இல்லை. சும்மா உடம்பில் குத்தி குத்தி ரத்தம் எடுக்குறாங்க” என்றார். அதற்கு நான், “வேண்டுமென்று யாரும் அவ்வாறு செய்ய மாட்டார்கள். உங்கள் நல்லதுக்காகத்தான் செய்கிறார்கள். எனவே, மருத்துவமனையிலேயே இருங்கள்” என்று சொன்னேன். அதன் பிறகும், அவர் வீட்டுக்குச் செல்வதிலேயே குறியாக இருந்தார்.ஒருநாள் காலை 5 மணிக்குத் தானாகவே படுக்கையிலிருந்து இறங்கி, அனைவரும் கத்த கத்த மருத்துவமனை கேட் வரை சென்றுவிட்டார். மாமியாரும் நர்ஸும் துரத்திச் சென்று பிடித்து மீண்டும் படுக்கையில் சேர்த்தனர்.

கொரோனா காலம் என்பதால் மருத்துவர் என் மாமியாரிடம், மாமனாரிடமிருந்து சற்று விலகி இருக்கும்படி கூறியிருந்தார். இருப்பினும் மாமனார் தன் மனைவியை அடிக்கடி அழைத்து கைகால் அழுத்திவிடச் சொல்வது... உணவை ஊட்டிவிடச் சொல்வது என்று ஆபத்தான வட்டத்துக்குள்ளேயே வைத்திருந்தார். ஆனால், என் மாமியார் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கணவருக்குச் சேவை செய்துகொண்டிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மணவாழ்க்கையின் வெற்றி உங்கள் சாய்ஸ்... உங்கள் சாய்ஸ் மட்டுமே!

ஒருநாள் நள்ளிரவு 3 மணிக்கு எனக்கு போன் செய்த என் மாமியார் கண்ணீருடன், “நான் என்னங்க பண்றது... வீட்டுக்குப் போறேன்னு பிடிவாதமா நிக்கிறாரு. நான் தள்ளிப்போய் நின்னா `ஏன் தொலைவாபோய் நிற்கிற... கிட்ட வா’ன்னு கூப்பிடுறாரு. இப்ப வீட்டுக்குப் போயே ஆகணும்னு சொல்றாரு. நான் 10 நாளா வீட்டுக்குப் போகல... அதையெல்லாம்கூட விடுங்க. இப்ப வீட்டுக்குப் போயே ஆகணும்னு சொல்றார்” என்று அழுதுவிட்டார்.

நான் அவரிடம், “நீங்கள் அவரிடம், `தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுத்துக்கொண்டிருந்தால்தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்லி விடுங்கள்” என்றேன்.

அதற்கு அவர், “அதை எப்படிங்க சொல்ல முடியும்? அவரு மனசு கஷ்டப்படுமே” என்றார். தொடர்ந்து நான் மிகவும் வற்புறுத்தியும், என் மாமியார் தன் கணவரிடம் அவ்வாறு சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டார். உடனே நான் சற்று கோபமாக, “அவர்தான் உங்களை இந்தப் பாடுபடுத்துறாரே... அவரு மனசு கஷ்டப்பட்டா கஷ்டப்படட்டும். அதைப் பற்றி நீங்க ஏன் கவலைப்படுறீங்க?” என்றேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சில விநாடிகள் மௌனத்துக்குப் பிறகு, என் மாமியார், “என்ன இருந்தாலும் தாலிகட்டினவர் ஆச்சேங்க” என்று சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. அதற்குப் பதில் சொல்ல முடியாமல் நான் மௌனமானேன்.

இரண்டு நாள்கள் கழித்து மாமனார் இறந்துவிட்டார். வீட்டுக்கு வந்த என் மாமியார் இறுதிக் காலத்தில் தன் கணவர் மருத்துவமனையில் தன்னைப் படுத்திய பாட்டை எல்லாம் விலாவாரியாகக் கூறியபோது, எப்படி இவ்வளவு பொறுமையாகப் பார்த்துக்கொண்டார் என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. “சாகறதுக்கு முன்னாடி அவருக்கு நினைவு தப்பிடுச்சு. டாக்டர் அவர்கிட்ட உங்க பேர் என்ன, ஊர் என்னன்னு எல்லாம் கேட்டாரு. அதுக்கு எல்லாம் தப்பு தப்பா பதில் சொன்னாரு. அப்புறம் டாக்டர் என்னை காமிச்சு இவங்க யாருன்னு தெரியுதான்னு கேட்டார். அதுக்கு அவர் ‘தெரியுமே... என் பொண்டாட்டி சுசீலா’ன்னு அதுக்கு மட்டும் கரெக்டா பதில் சொன்னார்” என்று சொன்னபோது மாமியார் கண்களில் தெரிந்த பிரகாசத்தையும் சந்தோஷத்தையும் காதலையும் என்னால் விவரித்து எழுதவே முடியவில்லை.

80 வயதில் தன் பெயரும் ஊரும் மறந்தாலும், மனைவியை மறக்காத என் மாமனாரின் காதலும், அதைக் கேட்டவுடன் அத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் மிகவும் சந்தோஷப்பட்ட என் மாமியாரின் காதலும் எனக்குப் புரிந்தது. தங்கள் ஐம்பதாண்டு மணவாழ்க்கையில் எவ்வளவோ ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையிலும், அவர்களுக்கிடையே இருந்த அந்தக் காதல் இறுதிவரையிலும் இருந்தது.

மணவாழ்க்கையின் வெற்றி உங்கள் சாய்ஸ்... உங்கள் சாய்ஸ் மட்டுமே!

நமக்கு முந்தைய தலைமுறை தம்பதிகள் இவ்வாறு இருப்பது சகஜம்தான். ஆனால், நமது புதிய நவீன தலைமுறை தம்பதிகளின் வாழ்க்கை முறையானது, முந்தைய தலைமுறை போல் கிடையாது. எனவே, புதிய தலைமுறை தம்பதிகளின் திருமண பந்தம் 50 ஆண்டுகளுக்கு மேல் மகிழ்ச்சியாக நீடிக்க வேண்டுமென்றால் அதற்கு ஆதாரமாகச் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.

நீண்டகால மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்குத் தேவைப்படும் மிக மிக அடிப்படையான விஷயம் காதல். ஆனால், காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்கூட சில மாதங்களிலேயே தங்கள் காதலை விட்டுவிட்டு, வெறும் கணவன் மனைவி ஆகிவிடுகின்றனர். அதுவும் இன்று பொருளாதார வெற்றியே வாழ்க்கை வெற்றி என்று கற்பிக்கப்பட்டிருக்கும் இந்திய சமூகத்தில் இருவரும் பொருளைத் தேடி ஓடி ஓடி இடையில் ஏதோ ஓர் இடத்தில் தங்கள் காதலைத் தொலைத்து விடுகின்றனர். அப்படியென்றால் பொருள் தேட செல்லக் கூடாதா? தாராளமாகச் செல்லுங்கள். ஆனால், அதற்கிடையில் உங்கள் காதலை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

திருமணமாகி நாள்கள் செல்லச் செல்ல... மனைவி கணவனுடன் மேலும் மேலும் மனதளவில் நெருங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கணவன் தன் மீதான காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பல ஆண்கள் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதில்லை. கணவர்களிடம் கேட்டால், உள்ளுக்குள் டன் டன்னாகக் காதல் உள்ளது என்கிறார்கள். ஆனால், அதனால் ஐந்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் காதலுடன் உள்ளீர்கள் என்பதை அவ்வப்போது உங்கள் செயல்களால் வெளிப் படுத்திக்கொண்டே இருங்கள். இதற்காக நிறைய செலவு செய்ய வேண்டும். சினிமாக்களில் காண்பது போல நள்ளிரவில் ஆடம்பரமான பரிசுகளை சர்ப்ரைஸாகக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை.

திடீரென்று உணவு இடைவேளையில் உங்கள் மனைவிக்கு அல்லது கணவனுக்கு `ஐ லவ் யூ' என்று சிறிய மெசேஜ் அனுப்புங்கள். திடீரென்று போன் செய்து, `சும்மா பேசணும்னு தோணுச்சு' என்று பேசுங்கள். இவையெல்லாம் தன் வாழ்க்கைத்துணை தன்னை எந்நேரமும் நினைத்துக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்தும்.

அதேபோல் வீட்டில் தனிமையில் பேசும் போது மெல்லிய காதலுடன் கைகளைக் கோத்துக்கொள்ளுங்கள். உங்கள் கணவரோ / மனைவியோ நீண்ட நாள்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொருளைத் திடீரென்று அவர்களுக்குத் தெரியாமல் வாங்கித் தாருங்கள். நீங்கள் கடைத்தெருவுக்குத் தோள்கள் உரச நடந்து செல்வதுகூட மனத்துக்குள் அன்பை வளர்க்கும்.

உங்கள் வாழ்க்கைத்துணைக்குப் பிடித்த உறவினர்கள் மற்றும் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து அவர்களோடு நேரம் செலவழிக்க ஏற்பாடு செய்யுங்கள். அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், ஆசைகளைத் தெரிந்துகொண்டு நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்குள் ஒரு பந்தத்தை ஏற்படுத்தும். இவ்வாறு ஏதேனும் ஒரு விதத்தில் உங்கள் காதலை நீங்கள் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தால்தான் அவர்களால் அதை உணர முடியும்.

 உங்கள் வாழ்க்கைத்துணையிடம் ஏதேனும் குறை இருந்தால் அதை அடிக்கடி சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்காதீர்கள். அந்தக் குறையோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். ஏனெனில், குறை இல்லாதவர் என்று இங்கு யாரும் இல்லை.

 உங்கள் வாழ்க்கைத்துணையோடு பெரிய சண்டை ஏற்பட்டு முறுக்கிக்கொண்டு நிற்கும்போதெல்லாம், அவர் இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை என்னவாகும் என்று சற்றே கற்பனை செய்து பாருங்கள். அப்போது அவரின் அருமை உங்களுக்குத் தெரியும்.

 ஒரு பிரச்னையில் உங்கள் மீதுதான் தவறு என்று நீங்கள் உணர்ந்தால் கொஞ்சமும் யோசிக்காமல் ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேளுங்கள். குறிப்பிட்ட பிரச்னையின்போது தொடர்ந்து சண்டையிட்டு வார்த்தைகளை விடாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, பிறகு அதைப் பற்றிப் பேசும்போது பிரச்னையின் தீவிரம் குறைந்துவிடும்.

 வயது ஆக ஆக உடல்நலக் கோளாறுகளால் செக்ஸில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உரிய மருத்துவர்களைச் சந்தித்து அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாத முதிர்ந்த வயதை அடையும்போது நீங்கள் பரிமாறிக்கொள்ளும் அன்பின் மூலமாக அதை ஈடு செய்ய முடியும். இதையும் மீறி தம்பதிகளுக்கிடையே காலப்போக்கில் ஓர் இடைவெளி ஏற்படலாம். அதை உங்களால் சரி செய்ய முடியவில்லை என்றால், மனநல ஆலோசகர்களை அணுகி அதற்கான தீர்வைப் பெறுவதில் தவறில்லை.

இந்த இதழுடன் இக்கட்டுரைத் தொடர் நிறைவு பெறுகிறது. இந்தத் தொடரை எழுதுவதற்காக நான் பல ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தபோதும் பலரிடம் பேசியபோதும் பல கோணங்களில் யோசித்தபோதும் ஒரு விஷயம் எனக்குத் தெளிவாகப் புலப்பட்டது.

உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ பேர் சம்பந்தப்பட்டிருந் தாலும், உங்கள் மணவாழ்க்கையின் மகிழ்ச்சி உங்கள் கையில்தான் உள்ளது. நீங்கள் நடந்துகொள்ளும் விதம்தான் அதைத் தீர்மானிக்கிறது. உங்கள் காதலும் பொறுமையும் சகிப்புத்தன்மையும்தான் அதைத் தீர்மானிக்கிறது.

எனவே, மணவாழ்க்கையின் வெற்றி வேறு யாருடைய சாய்ஸும் அல்ல. உங்கள் சாய்ஸ்தான்.

வாழ்த்துகள்.