Published:Updated:

தீரா உலா: வீடு திரும்புதல்!

 கோதுமை வயலில்...
பிரீமியம் ஸ்டோரி
News
கோதுமை வயலில்...

காயத்ரி சித்தார்த்

வீடென்பது கனவு

வெளியென்பது யதார்த்தம்

வீடும் வெளியுமாய்த்தான்

விளங்குகிறது உலகம்

இங்கு எதற்காக வீடு திரும்ப வேண்டும் நாம்?

யார் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் நம்மை?

- கவிஞர் விக்ரமாதித்யன்

வேறு யாருமல்ல. வீடுதான் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பயணத்திலிருந்தும் நாம் திரும்பி வருவதற்காக, மென்மையாக அணைத்துக் கொள்வதற்காக, எல்லாவற்றையும் நாம் விட்டுச் சென்றபடி மாறாமல் வைத்திருந்து, நமக்காக மெளனமாக நகம் கடித்துக் காத்திருக்கிறது. அதன் அரவணைப்பைத் தேடித்தான் ஒவ்வொரு முறையும் நாம் ஆவலாக மீண்டு வருகிறோம். நீண்ட நெடும் பயணங்களில், பெரும்பாலும் அது நிறைவதற்குள்ளாகவே நாம் மனத்துக்குள் வீட்டை நினைத்து ஏங்க ஆரம்பித்து விடுகிறோம்.

தீரா உலா: வீடு திரும்புதல்!

நாங்கள் சென்றது ஒன்பது நாள் பயணம். என்னதான் எகிப்து திரும்பிய பக்கமெல்லாம், ‘என்னைப் பார்... என்னைப் பார்’ என்று கண்ணைப் பிடித்து இழுத்தாலும், ‘இவற்றையெல்லாம் உருவாக்கியவர்கள் மனிதர்கள் தானா அல்லது ராட்சசர்களா...’ என்று மலைக்க வைத்தாலும் நான் இரு நாள்களுக்கு முன்பாகவே பெட்டிகளைக் கட்டிவைக்க ஆரம்பித்துவிட்டேன். க்ரூஸில் தினமும் சாப்பிட்ட பாஸ்தாவும் பீட்சாவும், அரேபிய குபூஸ் ரொட்டியும், கபாபும் கொஷரியும் வெறுத்துப் போய், நாக்கு சுர்ரென்ற காரக்குழம்புக்கும் பருப்புத் துவையலுக்கும் ஏங்க ஆரம்பித்துவிட்டது.  

பயணத்தின் கடைசி இரண்டு நாள்கள் லக்ஸாரிலும் கெய்ரோவிலும் கழிந்தன. ஏற்கெனவே சொன்னது போல அஸ்வானும் லக்ஸாரும் எகிப்தின் மிக முக்கியமான, மிகப் பழைமையான கோயில் நகரங்கள். எகிப்தைப் பொறுத்தவரை பழைமை என்று சொன்னாலே குறைந்தது 5,000 முதல் 7,000 வருடங்களுக்கு முந்தையவை என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அஸ்வானிலிருந்து 230 கி.மீ தொலைவிலிருக்கும் லக்ஸார் நகரத்தை நைல் நதியில் பயணித்துச் சென்று சேர்ந்தோம். நதிக்கரையிலிருந்து கார் மூலம் உள்ளே 2.5 கி.மீ பயணித்தால் வருவது கர்னாக் என்ற ஊர். இங்கே எகிப்தை ஆண்ட 30 மன்னர்கள் கோயில்கள் கட்டியுள்ளனர். இந்த ஊரில் மனிதர்கள் வாழும் பகுதியைவிட இரண்டு மடங்கு பெரிய பரப்பளவில் இந்த பிரமாண்டக் கோயில்கள் கட்டப் பட்டிருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 கர்னாக் கோயில்...
கர்னாக் கோயில்...

உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி அருங்காட்சி யகமாக இருக்கும் இக்கோயில்களுக்கு பிரமிடுகளுக்கு இருக்கும் அதே மகத்துவமும் முக்கியத்துவமும் இருக்கிறது.

மொத்தம் நான்கு பகுதிகளைக் கொண்ட இந்தக் கோயில் தொகுதியில், ஒரு பகுதியை மட்டுமே பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கிறார்கள். அதுவே பார்த்துத் தீர்க்க முடியாத அளவும், பார்த்தால் மறக்க முடியாத அழகும் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், பழைமையும் பெருமையுமாக ஆயிரமாயிரம் காலம் அங்கே நின்றுகொண்டிருக்கும் மிக உயரமான தூண்களும் சிலைகளும், ஸ்தூபிகளும் குழந்தைகள் கண்களுக்கு மட்டும் அற்பமாகத்தான் தெரியும் போல. அம்முவும் கீர்த்துவும் தூண்களுக்குப் பின்னால் ஓடி ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள். சித்து அன்றே எகிப்திய பல்கலைக்கழகத்தில் தொல்லியல் ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் வாங்கப்போகிறவர் போல, உடன் வந்திருந்த வழிகாட்டியுடன் மிகத் தீவிரமாக வரலாற்றுத் தகவல்கள் பற்றி விவாதித்துக்கொண்டும், தூண்களில், கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருந்த சித்திர எழுத்துகளை வாசிக்க முயற்சி செய்துகொண்டும் இருந்தார். நான் அந்தச் சுவர்களிலும் தூண்களிலும் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களில் ஆணெது, பெண்ணெது... கடவுள் யார், மன்னர் யார் என்று பிரித்தறிய முடியாத குழப்பத்துடன் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உச்சி வெயில் கொளுத்தும் வேளையில் அரசியர் பள்ளத்தாக்கு என்ற இடத்துக்கு அழைத்துப் போனார்கள். பிரமிடுகளில் டன்கணக்கில் வைக்கப் பட்ட தங்கப்பொருள்கள் மீண்டும் மீண்டும் கொள்ளை யடிக்கப்பட்டதனாலும், பிரமிடுகளைக் கட்டுவதைப் போலவே அதைப் பராமரிப்பதற்கும் எக்கச்சக்கமாய் செலவு ஆனதாலும், பிற்காலத்தைய எகிப்து மன்னர்கள் பிரமிடுகளைக் கட்டுவதை நிறுத்தி யிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக, கொள்ளையர்களால் கண்டுபிடிக்க முடியாதபடி மலைகளைக் குடைந்து கல்லறைகளை அமைக்கத் தொடங்கினார்கள். மன்னர்களின் மம்மிக்கள் வைக்கப்பட்ட குடைவரைக் கல்லறைப் பகுதியை ‘மன்னர்களின் சமவெளி’ என்றும், ராணிகள், அரச குடும்பத்துக் குழந்தைகள் ஆகியோரின் மம்மிக்கள் வைக்கப்பட்ட பகுதியை ‘அரசியர் பள்ளத்தாக்கு’ என்றும் இப்போது குறிப்பிடுகிறார்கள்.

 அரசியர் பள்ளத்தாக்கு
அரசியர் பள்ளத்தாக்கு

அரசியர் பள்ளத்தாக்குக்கு பண்டைய எகிப்தியர்கள் ‘அழகின் இருப்பிடம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அரசிகளின் கல்லறைகளில் மன்னர் இரண்டாம் ராமேஸஸின் ராணி நெபர்தாரி அரசியர்கள் நெஃபெர்டிட்டி, ஹட்செப்சூட் ஆகியோரின் கல்லறைகள் குறிப்பிடத்தக்கவை என்கிறார்கள். எங்களால் போக முடியாத, உலகப் புகழ்பெற்ற அபு சிம்பெல் கோயிலைக் கட்டியவர்தான் இரண்டாம் ராமேஸஸ். அங்கே அரசி நெபர்தாரிக்கும் மிகப் பெரிய கோயில் கட்டப்பட்டிருக்கிறதாம்.

எந்தப் பக்கத்திலிருந்து வேண்டு மானாலும் கற்களைப் பெயர்த்தெடுத்து உள்ளே நுழையக்கூடிய பிரமிடுகளைப் போல இல்லாமல் மலைக்குள் பலநூறு அறைகளைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்தக் கல்லறைகளுக்கு ஒரே ஒரு வாசல்தான். இந்த வழக்கம் கல்லறைக் கொள்ளையர்களின் அட்டகாசங் களைக் குறைத்தது மட்டுமல்லாமல் ஆராய்ச்சியாளர்களுக்கும் பொக்கிஷங்கள் போல தகவல்கள் கிடைக்க வழி செய்திருக்கிறது.

 எகிப்து குழந்தைகளுடன் செல்ஃபி...
எகிப்து குழந்தைகளுடன் செல்ஃபி...

பிரமிடுகளைக் கட்டும்போது அதன் பிரமாண்டமான உட்புற சுவர்களில், விவசாயம் செய்வது, ஆடு மாடுகளை மேய்ப்பது, பழ மரங்கள் வளர்ப்பது என ஏராளமான வண்ண ஓவியங்களை வரைந்து வைத்த எகிப்தியர்கள், பிரமிடுகள் வழக்கொழிந்த பின்பாகக் குடைவரை கல்லறை அறைகளுக்குள் அவற்றையெல்லாம் பொம்மைகளாகச் செய்து வைத்திருக்கிறார்கள்.

எகிப்து அருங்காட்சியகத்திலேயே மன்னருக்காக உணவு தயாரிக்கும், துணி துவைக்கும், பணிவிடை செய்யும் ஆட்களின் பொம்மை உருவங்களைப் பார்த்தோம்.  7,000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த எகிப்தியர்களின் ஆடையலங்காரம் எப்படியிருந்தது என்பதைக் கண்முன்னால் பார்த்து நாம் தெரிந்து கொள்ள இந்த பொம்மைகள் உதவுகின்றன. அவையெல்லாம் இந்தக் குடைவரை கல்லறைகளில் கிடைத்தவைதானாம்.

லக்ஸாரில் கோயில்களுக்குப் போகும் வழியிலெங்கும் பச்சைப் பசேலென வயல்கள் இருந்தன. நம்மூரைப் போலவே இருக்கிறதே என்று காரிலிருந்து இறங்கி பக்கத்தில் போய்ப் பார்த்தால், நெல்லுக்குப் பதிலாய் கோதுமைப் பயிரும் வரப்போரங்களில் தென்னைக்குப் பதிலாகக் குட்டைமான ஈச்ச மரங்களும் இருந்தன. பச்சை நிறக் கரும்பும்கூட பயிரிட்டிருந்தார்கள். வயல்களுக்கு நடுவே தண்டவாளங்கள் போன்ற அமைப்பு இருந்தது. சின்னஞ்சிறு கூட்ஸ் ரயில் போல பத்து திறந்த பெட்டிகளாக இருக்கும் குட்டி ரயிலில் அறுவடை செய்த பயிர்களை, வைக்கோல் கட்டுகளை நிரப்பி ஓட்டிக் கொண்டு போகிறார்கள். பார்ப்பதற்கு விநோதமாகவும் அழகாகவும் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழியில் ஓரிடத்தில் உடைந்து சிதிலமான மகா பெரிய சிலைகளை சாரங்கள் கட்டி ஒவ்வொரு கல்லாய் அடுக்கி மீண்டும் சிலையாக உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். எதையும் நின்று நிதானித்துப் பார்க்க முடியாமல் வெயில் தீயாய்ச் சுட்டது. மாலையிலோ, எகிப்தில் வெயில் என்ற ஒன்றை யாரும் பார்த்ததே இல்லை என்பது போல கடும்குளிர் கொல்லப் பார்த்தது. நானும் அம்முவும் மிகவும் களைத்துப் போய், குளிர் தாளாமல் காருக்குத் திரும்பிவிட, சித்து மட்டும் ஆர்வமிகுதியில் கீர்த்துவையும் தூக்கிக்கொண்டுபோய் வெட்டவெளியில் கொட்டும் பனிக்குள் நிற்கும் சிலைகளைப் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். ஒருவழியாய் லக்ஸாரிலிருந்து கிளம்பி அன்றிரவே மீண்டும் விமானமேறி கெய்ரோ வந்து சேர்ந்தோம்.

 கோதுமை வயலில்...
கோதுமை வயலில்...

காலையில் கீஸா பிரமிடுகளுக்குச் சென்று அங்கு நடத்தப்படும் லேசர் ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியைப் பார்ப்பதாகத் திட்டமிருந்தது. ஆனால், விடிகாலை கீர்த்துவுக்குக் காய்ச்சல் வந்து, உடம்பு தூக்கித் தூக்கிப் போட்டதில் மிகவும் பயந்து போனோம். இரவில் குளிருக்குள் சுற்றியதால் வந்த வினை போல. நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு குழந்தைக்கு மருந்து கொடுத்து அறையிலேயே தங்கினோம். மாயம் போல, மதியத்துக்குள்ளாக காய்ச்சல் நின்று எழுந்து விளையாட ஆரம்பித்துவிட்டாள்.

டூர் ஏஜென்சியிலிருந்து போன் செய்து, “எகிப்து வந்துவிட்டு ஒரு முழு நாளை ஏன் வீணடிக்கிறீர்கள்? அருகிலிருக்கும் பூங்காவுக்குச் செல்கிறீர்களா?” என்றார்கள். சரியென்று அரை மனதாகக் கிளம்பினோம். Al Azhar park என்றொரு இடம். 74 ஏக்கர்களில் பரந்து விரிந்திருந்தது. உள்ளேயே மால்களும் உணவகங்களும் இருந்தன. குழந்தைகள் விளையாடும் சாதனங்கள் நிறைந்திருந்தன.

விளையாடி முடித்து, மதிய உணவு சாப்பிட்டு, ஒரு கடையில் குழந்தைகளுக்கான கிளியோபாட்ரா, டூட்டன்காமன் உடைகளையும், எகிப்தின் பாரம்பர்ய உடைகளையும் வாடகைக்குத் தருவதைப் பார்த்து அவற்றை அணிவித்து புகைப்படம் எடுத்தோம்.

பூங்காவில் ஏதோ பள்ளியிலிருந்து சுற்றுலா வந்திருந்த குழந்தைகள் எங்களைப் பார்த்ததும், “indians... indians” என்று சூழ்ந்துகொண்டார்கள். இந்தியாவைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறோம் என்றார்கள். ஆசையாய் எங்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.

நமக்கு எகிப்து ஆச்சரியப்படுத்து வதைப் போல அவர்களை இந்தியா ஈர்ப்பது பெருமையாக இருந்தது. பார்க்காமல் எஞ்சியவை நிறைய இருந்தபோதும் குளிருக்கு பயந்து இரவுக்குள்ளாக அறைக்குத் திரும்பினோம். மறுநாள் காலை விமானமேறி குவைத் வந்து சேர்ந்தோம். பூட்டைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்ததும் வந்த மனநிறைவு சொல்லில் அடங்காதது.

இப்போது யோசித்தால் எகிப்தின் நினைவுகளில் முதன்மையானதாக இருப்பது பிரமிடுகளோ, ஸ்ஃபிங்க்ஸ் சிலையோ, அஸ்வான் அணையோ, கர்னாக் கோயில்களோ இல்லை. நள்ளிரவில் கீர்த்துவுக்கு வந்த காய்ச்சல்தான் மறக்க முடியாதது. “ஊர் சுத்தினதெல்லாம் போதும். எப்ப வீட்டுக்குப் போய்ச் சேருவோம்?” என்று தவிக்க வைத்த கணம் அது.

வீடென்பது வெறும் கட்டடமல்ல, நாம் வேறெங்கும் பெற முடியாத பாதுகாப்பையும் ஆசுவாசத்தையும் அளிக்கும் தாய்மடி என்று புரிந்த நாள் அது.

ஆனால், வீடு அத்தோடு நிறுத்திக்கொள்வதில்லை. மீண்டும் சிறகு விரித்து வெளியுலகம் நோக்கிப் பறக்கவும் அதுவே நம்மைத் தயார்ப்படுத்துகிறது.

பறவைகளுக்கு கூடும் பறத்தலும் ஒரே சரடின் இரு வேறு முனைகள்தான். இவை இரண்டுக்கும் நடுவே நீள்வது தான் அவற்றின் வாழ்க்கை. நாமும் அவ்வப்போது பறவைகளானால் தான் என்ன...

எங்களோடு கைகோத்து இத்தனை நாடுகளுக்குப் பயணித்து எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன் தோழியரே... மீண்டும் வேறொரு தருணத்தில் சந்திப்போம்.