Published:Updated:

“தோலும் சுத்தியலும் ஆணியும் பிடிச்ச கையானு!”

கீதா
பிரீமியம் ஸ்டோரி
கீதா

திருமணத்துக்குப் பிறகும் தான் தோல் பதனிடுவதைத் தொடர்ந்ததன் பின்னணியிலான சுவாரஸ்யக் கதையையும் அவரே பகிர்ந்துகொள்கிறார்.

“தோலும் சுத்தியலும் ஆணியும் பிடிச்ச கையானு!”

திருமணத்துக்குப் பிறகும் தான் தோல் பதனிடுவதைத் தொடர்ந்ததன் பின்னணியிலான சுவாரஸ்யக் கதையையும் அவரே பகிர்ந்துகொள்கிறார்.

Published:Updated:
கீதா
பிரீமியம் ஸ்டோரி
கீதா

ர்னாடக சங்கீதத்தைப் புனிதமாகக் கருதுபவர்கள் அதற்கான இசைக்கருவிகளைத் தயாரிப்பவர்களின் உழைப்பை அங்கீகரிப்பதில்லை. இதை மையமாக வைத்து அண்மையில் ‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார் பாடகர் டி.எம்.கிருஷ்ணா. பக்கவாத்தியக் கருவியான மிருதங்கத்தைத் தயாரிப்பவர்களின் சமூக வரலாறு, கருவி தயாரிக்கும் முறை குறித்த புத்தகம் அது. செபாஸ்டியன், பர்லாந்து, காசுமணி, செல்வராஜ், ஜான்சன் என முழுக்கவும் ஆண்கள் பெயர் மட்டுமே நிரம்பியிருந்த வரலாற்றுப் பதிவில் ஒற்றைப் பெண்ணாய் கீதாவின் பெயர் இடம்பெற்றிருந்தது.

மாட்டுத்தோல்
மாட்டுத்தோல்

கீதா கேரள மாநிலம் பெருவெம்பு பகுதியைச் சேர்ந்தவர். பறை, மத்தளம், மிருதங்கம், செண்டை என அத்தனை தோல் இசைக் கருவிகளுக்குமான தோலை அடித்துப் பதப்படுத்தித் தயாரித்துத் தருவது இவரது பணி. 99 சதவிகிதம் ஆண்கள் மட்டுமே செய்யும் இந்த வேலையில் ஈடுபடும் ஒரே பெண் இவர்தான் என்கின்றனர் மிருதங்கப் படைப்பாளர்கள். கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் பேசினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பாலக்காட்டின் பல்லஷேன கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். என் அப்பா கோயம்புத்தூரில் மிருதங்கம் தயாரிக்கும் தொழில் செய்துட்டிருந்தார். அம்மாவுக்கு வயலில் வேலை. அப்பாவுக்கு உதவியா அண்ணன் வேலை செய்வாரு.

அப்பா மிருதங்கம் தயாரிக்கும்போது அவருக்குச் சின்னச்சின்ன உதவி நான் செய்வேன். ஒருமுறை அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத சமயம் தோல் தயாரிக்கக் கேட்டிருந்தாங்க. அண்ணெயும் (அண்ணன்) ஊரில் இல்லை. அப்பா என்னைக் கூப்பிட்டார். தோலை எப்படி இழுத்துப் பிடிக்கணும், எங்க எல்லாம் ஆணி அடிக்கணும்னு சொல்லிக் கொடுத்தார். அவர் சொன்னபடியே செஞ்சேன்.

மாட்டுத்தோல்
மாட்டுத்தோல்

எனக்கு எட்டாவதுக்கு அப்புறம் படிப்பில் நாட்டமில்லை. அம்மாவோடு வயல் வேலைகளுக்குப் போவேன். நான் செய்யாத வேலைகளே கிடையாது. ஆனா அப்பா சொல்லச் சொல்ல நான் தோலைத் தயாரிச்சு முடிச்சதும் அதுதான் எனக்குப் பொருத்தமான வேலையாகத் தெரிஞ்சது. அப்படித் தொடங்கியது இருபது வருஷமா இதை நான் செய்துவரேன்” என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமணத்துக்குப் பிறகும் தான் தோல் பதனிடுவதைத் தொடர்ந்ததன் பின்னணியிலான சுவாரஸ்யக் கதையையும் அவரே பகிர்ந்துகொள்கிறார்.

கீதா
கீதா

``எனக்குக் கல்யாணம் ஆனதும் ரெண்டு பேர் வருமானம் குடும்பத்துக்குத் தேவையா இருந்தது. என் பர்த்தாவும் (கணவர்) தோலைப் பதப்படுத்தித் தரும் வேலையைச் செய்துட்டிருந்தார். அவருக்கு உதவியா அவரின் அண்ணன் இருந்தார். ஒருமுறை அவர் அண்ணன் ஆஸ்பத்திரியில் இருந்தப்போ தோல் பதப்படுத்த வேண்டியிருந்தது. நான்தான் அப்போ உதவி செய்தேன். பலநாள் கழிச்சு தோல் வேலை செய்ததும் எனக்கு அதை விட மனசில்ல. பர்த்தாகிட்ட கேட்டேன். நீ தினமும் வேலை செய்யுறதா இருந்தா சொல்லு, உனக்கு நான் தோல் தரேன்னு சொன்னார். நான் அவருடைய வேலைகள்ல தோள் கொடுக்க ஆரம்பிச்சேன். ஊரில் எல்லோரும், ``பாரு ஆ பெண்குட்டி கீதே எப்படித் தோல் வேலை செய்யான்பாரு’’ன்னு சொல்லுவாங்க. ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு மாதிரி தோல் எடுக்கணும் அப்போதான் சத்தம் சரியாக் கேட்கும் செண்டைக்கு மூரித்தோல் (காளை), மத்தளத்துக்கு போத்தித் தோல் (பெண் எருமை)” என்று தன் வேலை குறித்து அவ்வளவு சுவாரஸ்யத்துடன் சிரித்தபடியே பகிர்கிறார் கீதா.

கீதாவின் சிரிப்புகளுக்கிடையே இடைமறித்தார் அவர் தம்பி மணிகண்டன். கோவையில் மிருதங்கம் தயாரிக்கும் கடை வைத்திருப்பதால் எளிதாகவே தமிழ் வருகிறது. ``ஆண்கள் இந்த வேலையைச் செய்தாலே கவுச்சி வாடை தாங்காம மூக்கை மூடிக்கொண்டு போவாங்க. ஒரு பொண்ணு மாட்டுத்தோல் அடிக்கற வேலை செய்யறாளேங்கற பார்வை எங்க ஊர்ல இன்னும் இருக்கு. ஆனா அதை இவங்க கண்டுக்கிறது இல்லை. `காஜா’ன்னு ஒருத்தர் இவங்களுக்காகச் சந்தைக்குப் போய் தோல் வாங்கிட்டு வருவாரு. காலையில் 9 மணிக்கு தோல் அடிக்க உட்கார்ந்தா மதியம் 2 மணி வரைக்கும் அந்த வேலையைச் செய்யணும். உச்சி வெயில்ல தோல் காயுற மாதிரி இவங்களும் காய்ஞ்சாதான் வருமானம். ரெண்டு பெரிய டேபிள் அகலம் இருக்கும் தோலை இழுத்துப் பிடிச்சு ஆணி அடிக்கணும். குறைஞ்சது நூறு ஆணியாச்சும் அடிக்கணும். இருபது வருஷத்துக்கு முன்ன ஒரு தோலுக்கு ஐம்பது ரூபாய் கிடைக்கும். இப்போ நானூறு ரூபாய். அதுவும் மழைக்காலத்துல தோல் இளகாது என்பதால் இந்த வேலையைச் செய்ய முடியாது. இவ்வளவு கஷ்டம் இதுல இருக்கறதால தனக்கு அப்புறம் இந்தக் குடும்பத்துல யாரும் இந்த வேலையைச் செய்யக்கூடாதுங்கறதுல உறுதியா இருக்காங்க. இந்த வருமானத்துலதான் தன்னோட ரெண்டு பிள்ளைங்களையும் படிக்க வைக்கிறாங்க. பையன் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கிறான், பொண்ணு ஏழாவது படிக்கிறா…” என்கிறார்.

இத்தனையும் கேட்டபிறகு `உங்கள் கையைத் தொட்டுப் பார்க்கலாமா?’ என்று கீதாவிடம் கேட்டோம். ‘நிங்கடே கையைப்போல் ஸ்மூத்தாயிட்டு இருக்காது. தோலும் சுத்தியலும் ஆணியும் பிடிச்ச கையானு’ எனக் கரங்களைப் பற்றிக்கொள்கிறார். அனலில் காய்ச்சிய பறை போல அவ்வளவு வலுவேறியிருந்தது அந்தக் கரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism