Published:Updated:

காகங்களுக்குப் பால்சோறு, புறாக்களுக்கு அரிசி... பறவை மனுஷி கஸ்தூரி!

கஸ்தூரி
கஸ்தூரி ( வி.சதீஷ்குமார் )

"இயற்கையை வேகமா அழிச்சு வளர்ற பெருநகரங்கள்ல பறவைகளெல்லாம் வாழ்றதுக்கான சூழல் குறைஞ்சுகிட்டே வருது. உணவு கொடுக்கலைன்னா அவங்க உயிர் வாழ்றதே கஷ்டம்னு தோணுச்சு." - பறவை மனுஷி கஸ்தூரி.

சென்னை, அம்பத்தூர் கலைவாணர் நகரில் உள்ள கஸ்தூரியின் வீட்டு மொட்டை மாடி எப்போதும் ஏராளமான பறவைகளால் நிறைந்திருக்கிறது. விளையாடச் சென்றுவிட்டு பசியாற வீட்டுக்கு ஓடிவரும் பிள்ளைகளைப்போல், பசியெடுத்ததும் கஸ்தூரியின் வீடு நோக்கி தினம்தோறும் சிறகுகளை விரிக்கின்றன ஆயிரக்கணக்கான பறவைகள். கடந்த 15 ஆண்டுகளாக பறவைகளுக்கு உணவளித்து வரும் கஸ்தூரி, ஊரடங்கு காலத்திலும் அதைக் கைவிடாமல் தொடர்கிறார்.

கிளிகள்
கிளிகள்
வி.சதீஷ்குமார்

கலைவாணர் நகருக்குள் சென்று, `பறவைகளுக்குச் சாப்பாடு போடுறவங்க வீடு எங்கிருக்கிறது?’ என்று கேட்டாலே கஸ்தூரியின் வீட்டை அடையாளம் காட்டிவிடுகின்றனர். அவர் வீட்டைச் சுற்றிலும் பறவைகள் கூட்டம். நம்மை மாடிக்கு அழைத்துச் சென்ற கஸ்தூரி, `இங்கேயே நில்லுங்க, உங்களைப் பாத்தா எல்லாரும் பறந்து போய்டுவாங்க’ எனக் கடைசி படியிலேயே நம்மை நிற்கச் சொல்லிவிட்டு, புறாக்களுக்கு அரிசியும், காகங்களுக்குப் பால் சோறும் வைக்கிறார். சற்று நேரத்திலேயே அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் ஆஜராகின்றன. பறவைகள் பசியாறத் தொடங்க, இதன் பின்னணியைச் சொல்ல ஆரம்பித்தார் கஸ்தூரி.

"நான் பொறந்தது தேனி மாவட்டம் பெரியகுளம். சின்ன வயசுலயிருந்தே எனக்குப் பறவைகள்னா ரொம்ப இஷ்டம். தேனியில எங்க வீட்டைச் சுத்தி நிறைய பறவைகள் இருக்கும். கல்யாணம் ஆகி சென்னை வந்ததும் அப்படியே ஆப்போஸிட். நிறைய கட்டடம், ஃபேக்டரினு இங்கே டோட்டலா வேற மாதிரியான சூழல்.

15 வருஷத்துக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு வந்தோம். தினமும் காகங்களுக்கு சோறு வைக்கிறது என் வழக்கம். அப்படி வைக்கப்போக... நிறைய காகங்கள் வர ஆரம்பிச்சது. அதுமட்டுமல்லாம புறாக்களும் கிளிகளும் ஒண்ணு ரெண்டு வந்தது. அவற்றுக்கும் அரிசி போட ஆரம்பிச்சேன். போகப்போக எங்க வீட்டுக்கு வர்ற பறவைகள் எண்ணிக்கை அதிகமாச்சு. அப்போதான், நகரங்கள்ல இருக்கிற பறவைகளின் சூழல் புரிஞ்சது.

மாதவிடாய் கால விடுப்பு... `சலுகை அல்ல, உரிமை!' - ஜொமேட்டோவுக்கு குவியும் பாராட்டுகள் 

பொதுவா, பறவைகளுக்கு மனுஷங்க உணவு கொடுக்கிறது அதோட இயல்பை மாத்திரும், மனுஷங்களை சார்ந்து வாழப் பழகிட்டா அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகிடும்னு சொல்லுவாங்க. அது உண்மைதான். ஆனா, இயற்கையை வேகமா அழிச்சு வளர்ற பெருநகரங்கள்ல பறவைகளெல்லாம் வாழ்றதுக்கான சூழலே இல்லையே..? உணவு கொடுக்கலைன்னா அவை உயிர் வாழ்றதே கஷ்டம்னு தோணுச்சு. அதனால தினமும் உணவு கொடுக்கலாம்னு முடிவு பண்ணி என் வீட்டுக்கார்கிட்ட சொன்னேன். அவரும் ஓகேன்னு சொல்லி அரிசி வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சார். பறவைகள் எண்ணிக்கை இன்னும் அதிகமாச்சு.

பொழுது விடிஞ்சதும் முதல்ல கிளிகள், அடுத்து புறாக்கள், அதுக்கு அப்புறம் காகங்கள்னு ஒண்ணு பின்ன ஒண்ணா கூட்டமா வருவாங்க. எங்கிருந்து வர்றாங்க... சாப்பிட்டுட்டு எங்க போவாங்கனு எல்லாம் தெரியாது. ஆனா டைமுக்கு வந்துட்டுப் போயிடுவாங்க.

புறாக்கள்
புறாக்கள்
வீ.சதீஷ்குமார்

எனக்கு ஒரு மகள். கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. இப்போ எனக்கு இந்தப் பறவைகள்தான் உலகம். கிட்டத்தட்ட 15 வருஷம் ஆகிருச்சு. தினமும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்துட்டுப் போறாங்க. அதனால, வெளில எங்கேயும் போக முடியுறதில்லை. என் அம்மாவைப் பாக்க தேனிக்குக்கூடப் போக முடியலை. நான் போயிட்டா இவங்களை யார் பாத்துக்குறது? அவங்களுக்கு நான் இருக்கணும்.

காலையில விடிஞ்சதும் ஜன்னல்லோரமா காகங்கள் வந்து நிக்கும். அதைப் பாத்துட்டு என் வீட்டுக்காரரும் பொண்ணும், 'உன் ஃபிரெண்ட்ஸ் வந்துட்டாங்க... போ போ’னு கிண்டல் பண்ணுவாங்க. அந்தளவுக்கு அவங்களோட ஒன்றிப்போயிட்டேன்” என எளிய வார்த்தைகளில் அன்பைக் கோத்துப் பேசும் கஸ்தூரி பறவைகளுக்குத் தண்ணீர் வைத்துவிட்டு வந்து தொடர்ந்தார்.

லாக்டெளன்ல வெளியில போகக் கூடாதுன்னு அரசாங்கம் அறிவிச்சதும், இந்தப் பறவைகளுக்கு தானியம் வாங்க என்ன பண்றதுன்னுதான் எனக்குக் கவலை வந்துச்சு. ஆனா, சமாளிச்சுட்டோம். பூந்தமல்லியில உள்ள என் சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க எல்லாம் என் வீட்டுல நான் இப்படிப் பண்ணிக்கிட்டிருக்கிறது தெரிஞ்சு ரெகுலரா கொஞ்சம் அரிசி கலெக்ட் பண்ணி கொடுக்கறாங்க. என் வீட்டுக்காரர் போய் வாங்கிட்டு வந்துட்டார்.

காக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்? - சுவாரஸ்ய உயிரியல்!

நான் இத்தனை பறவைகளுக்கும் உணவு கொடுக்கிறது எனக்கு பெரிய சந்தோஷம்னாலும், பறவைகளோட நிலைமை இப்படி ஆகிருச்சேனு இன்னொரு பக்கம் ரொம்ப வருத்தமாவும் இருக்கு. நம்மளால முடிஞ்ச அளவுக்கு இயற்கையைக் காப்பாத்தணும். இல்லேன்னா இந்தப் பறவைகளுக்கு வந்த நிலைமை நாளைக்கு மனுஷங்களுக்கு வரும்" என்றார் தீர்க்கமாக.

அடுத்த கட்டுரைக்கு