Published:Updated:

பொழுதெல்லாம் புத்தகங்கள்!

 மல்லிகா அம்மா
பிரீமியம் ஸ்டோரி
மல்லிகா அம்மா

தினமும் நியூஸ் பேப்பர்களைப் படிச்சு நாட்டு நடப்புகளைத் தெரிஞ்சுப்பேன்.

பொழுதெல்லாம் புத்தகங்கள்!

தினமும் நியூஸ் பேப்பர்களைப் படிச்சு நாட்டு நடப்புகளைத் தெரிஞ்சுப்பேன்.

Published:Updated:
 மல்லிகா அம்மா
பிரீமியம் ஸ்டோரி
மல்லிகா அம்மா
சென்னை, பரபரப்புகளுக்குக் குறைவேயில்லாத டி.பி.ஐ வளாகம். செய்தி சேகரிப்பதற்காக அங்கே காத்திருந்த நேரம். சுண்டல் விற்றுக் கொண்டிருந்த அறுபது வயது மதிக்கத்தக்க மல்லிகா அம்மா, காய்த்துப்போன தன் கைகளில் ‘ரோண்டா பைர்ன் எழுதிய ‘தி சீக்ரெட்’ புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்ததைப் பார்த்ததும், ஆச்சர்யத்துடன் அவரைக் கவனிக்கத்தொடங்கினேன்.

கடைக்கு சுண்டல் வாங்க வரும் நபர்களிடம், “வூட்டுல எதாவது புத்தகம் இருந்தா கொண்டாங்க சாமி, படிச்சுட்டுத் தர்றேன்” என இயல்பாய்க் கேட்டுக்கொண்டிருந்தார். சுண்டல் விற்ற சில்லறைகளை நிரப்பும் துணிப்பையில் இறையன்பு ஐ.ஏ.எஸ் எழுதிய ‘ஏழாவது அறிவு’, கண்ணதாசனின் `அர்த்தமுள்ள இந்து மதம்’ போன்ற புத்தகங்கள் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவரின் அருகில் சென்றதும் பளீரென்ற சிரிப்புடன், “ என்னம்மா சுண்டல் வேணுமா?’’ என்று கேட்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவருடன் அவரின் புத்தக வாசிப்பு பற்றிய ஆச்சர்யம் நிறைந்த உரையாடல் தொடங்கியது.

“புத்தகம்னா எனக்கு உசுரும்மா. மனசு உடஞ்சு சாவக்கிடந்த நேரத்திலெலாம் புத்தகங்கள்தான் வாழ்றதுக்கான தெம்பைக் கொடுத்துச்சு. நான் படிச்ச ஒவ்வொரு புத்தகமும் எனக்கு எங்க அம்மா மாதிரி தாயீ. ஒரு நாள்கூட புத்தகம் இல்லாம வியாபாரத்துக்கு வரமாட்டேன்” என மடியில் இருக்கும் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டே தொடர்ந்தார்.

 மல்லிகா அம்மா
மல்லிகா அம்மா

“எங்களுக்குச் சொந்த ஊரு திருவண்ணாமலை. ரெண்டாப்புதாம்மா படிச்சிருக்கேன். 12 வயசுல கண்ணாலம் பண்ணிக்கொடுத்துட்டாங்க. அடுத்தடுத்த வருஷம் குழந்தைகளும் பிறந்திருச்சு. வீட்டுல வறுமை. சென்னை போனா பொழைச்சுக்கலாம்னு ஊருக்காரவக சொன்னதை நம்பி சென்னைக்கு வந்தோம். கையில காசு இல்லாம புள்ள குட்டிகளை வெச்சுக்கிட்டு ரொம்பவே கஷ்டப்பட்டோம். விவரம் அறியாத வயசு. காசு சம்பாதிச்சாதான் வாழமுடியும். பகட்டா இருக்கவங்களைத்தான் உலகம் நம்பும், கொண்டாடும்னு நானா நினைச்சுப்பேன். ஆனா அது இல்ல வாழ்க்கை. மனுஷங்கள சம்பாதிக்கணும், இருக்கறதை வெச்சு சந்தோஷமா வாழணும்கற பக்குவத்தை புத்தகம்தாம்மா கத்துக்கொடுத்திருக்கு. இப்போ நிறைவா வாழறோம்” என்றவரிடம் அவரின் புத்தக வாசிப்பு தொடங்கிய கதையைக் கேட்டேன்.

“40 வருஷத்துக்கு முன்னாடி கடன் வாங்கி, தள்ளு வண்டியில் இட்லிக்கடை ஆரம்பிச்சோம். அடுப்பு வேலையெல்லாம் வீட்டுக்காரரு பார்த்துப்பாரு. நான் பிள்ளைகளைப் பார்த்துக்கிட்டே பொட்டலம் மடிக்கற வேலைகளைப் பார்த்துப்பேன். பொட்டலம் மடிக்கும்போது, அதுல இருக்கற சின்னச் சின்ன கவிதைகள், ஜோக்குகளை எழுத்து கூட்டிப் படிக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் வாசிக்க ஆரம்பிச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தினமும் நியூஸ் பேப்பர்களைப் படிச்சு நாட்டு நடப்புகளைத் தெரிஞ்சுப்பேன். கடையில எம்புட்டு வேலையிருந்தாலும், என் கையில எதாவது நியூஸ் பேப்பர் இருந்துட்டே இருக்கும். நான் வாசிக்கிறதைப் பார்த்துட்டு, `கடை வேலையைப் பார்க்காம, புத்தகம் படிச்சுக்கிட்டு இருக்க, பாத்திரம் கழுவுறவ நீ படிச்சு விஞ்ஞானியா ஆகப்போறியா?’ன்னு நிறைய பேர் கேட்டுருக்காங்கம்மா.

பள்ளிக்கூடம்தான் போகல, நாலு எழுத்து படிச்சுக்கூட அறிவை வளர்த்துக் கூடாதா, பாத்திரம் கழுவுனா வாழ்க்கை முழுக்க அது தான் அடையாளமா?’’ என உணர்ச்சிவசப்படும் மல்லிகா அம்மா, சில நிமிடங்கள் நிதானித்துப் பேச ஆரம்பித்தார்.

``ஒரு முறை காய்கறி வாங்கப் போனப்ப, அங்க இருந்த பழைய புத்தகக் கடையில், விவேகானந்தரோட புத்தகம் ஒண்ணைப் புரட்டிப்பார்த்துட்டு, காசில்லாம வெச்சுட்டு வந்தேன். ஆனா அதைப் படிக்கணும்னு மனசுக்குள்ள அம்புட்டு ஆசை. என்னோட ஆசையைத் தெரிஞ்சுக்கிட்ட எங்க வூட்டுக்காரரு அந்தப் புத்தகத்தை எனக்காக வாங்கிக்கொடுத்தாரு. அந்தப் புத்தகம்தான் எனக்கு அறிமுகமான முதல் புத்தக நண்பன். சொன்னா நம்ப மாட்டீங்க, அந்தப் புத்தகத்தை ஒரு நாள்முழுக்கக் கட்டிப் பிடிச்சுட்டு இருந்தேன். ஏதோ பெரிய கனவு நிறைவேறுன மாதிரி இருந்துச்சு. அதைப் படிச்சு முடிக்க மூணு மாசம் ஆச்சு. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் தன்னம்பிக்கை அளவு அதிகரிச்சுட்டே இருந்துச்சு. ஆயிரம் மனுஷங்க சேர்ந்து கத்துக்கொடுக்க முடியாத பக்குவத்தை ஒரு புத்தகம் தந்துச்சு.

புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்ச புதுசுல அதுல இருக்கற கருத்துகள் எல்லாம் புரியாது. ஆனா புரிஞ்சுக்கணுங்கிறதுக்காக ஒரே புத்தகத்தை மூணு முறை வாசிப்பேன். ஒவ்வொரு புத்தகமும் எனக்கு ஏதோ ஒன்றைக் கத்துக்கொடுக்க ஆரம்பிச்சுது. பள்ளிக்கூடம் போகாததால் பொது இடங்களில் எப்படி நடந்துக்கணுங்கிறது தெரியாது. வீட்டுல அதிகப்படியான வறுமை, அதனால் எங்க போனாலும் எனக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்துட்டே இருந்துச்சு. அதையெல்லாம் புத்தக வாசிப்பு உடைச்சு எறிஞ்சுச்சும்மா” என்றவரிடம், புத்தகங்களை எப்படிப் பராமரிக்கிறீங்க எனக் கேட்டேன்.

“அதாம்மா பெரிய சிக்கலு. இப்போ நாங்க சுண்டல் வியாபாரம் பண்றோம். மாசம் 2000 ரூபா கிடைக்கும். 400 ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கிருவேன். என் புள்ளைகளும் வாங்கிக்கொடுப்பாங்க. நான் வாசிச்ச ஒவ்வொரு புத்தகமும் எனக்குப் பொக்கிஷம்தான்.

அதை யெல்லாம் என் கூடவே வெச்சுக்கணும்னு ஆசை. ஆனா இடவசதி இல்லம்மா. பாதி புத்தகத்த கறையான் அரிச்சிடுச்சு. நாங்க இருக்கிறது வாடகை வீடு. ஒவ்வொரு முறை வீடு மாத்தும் போதும், இடவசதி இல்லாம கொஞ்ச புத்தகத்தை யாருக்காவது குடுத்துட்டு வந்துருவேன். புத்தகங்களைப் பிரியும்போது என் பிள்ளைகளைப் பிரியிற மாதிரி இருக்கும்மா” என, கையில் வைத்திருக்கும் புத்தகத்தை நெஞ்சோடு ஒட்டிக் கொள்கிறார். `கடைசியா என்ன புத்தகம் படிச்சீங்க’ என்று கேட்டதும் முகம் மலர்கிறது.

 மல்லிகா அம்மா
மல்லிகா அம்மா

“கடைசியா படிச்ச புத்தகம் பேரு தெரியல. ஆனா, கவிதை என்பது அதுவாக மனசுக்குள் இருந்து பிறப்பது, உணர்வுகளின் தொகுப்பு’’ என்று ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ் வொர்த்தின் தமிழ் மொழிபெயர்ப்பைச் சொல்ல... ஆச்சர்யம்!

“எப்போ புத்தகம் வாசிச்சாலும், புத்தகப் பேரு என்ன, யாரு எழுதினாங்கன் னெலாம் பார்க்கமாட்டேன். ஆனா ஒரு முறை வாசிச்சுட்டா அதுல எழுதியிருக்கிறது மட்டும் மனசுக்குள்ள ஆணி அடிச்ச மாதிரி பதிஞ்சுரும். யாரு எழுதினா என்னம்மா. அதுல இருக்கற நல்லதை புத்திக்கு ஏத்திக்க வேண்டியது தானே.

இப்போ நிறைய பேர் எனக்குப் புத்தகம் கொடுத்து உதவுறாங்க. இப்ப நீங்க எடுக்குற இந்தப்பேட்டி புத்தகத்துல வரலைன்னாலும் பரவாயில்ல, எனக்கு உங்க வீட்டுல இருந்து நாலு பழைய புக்கு கொண்டு வந்து கொடுத்துட்டுப் போம்மா, வாழ்க்கை முழுக்க உன்னை நினைச்சுட்டே இருப்பேன்’’ என்று நட்போடு நம் கரங்களைப் பற்றிக் கொள்கிறார் இந்தப் புத்தகக்காதலி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism