Published:Updated:

சிறுத்தை ரமேஷின் சிக்கன் டின்னர்!

டாக்டர் நளினி
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நளினி

விலங்குகளுக்கான உணவுகளைப் பிரித்துக்கொடுக்கும் பணி முடிந்ததும், பூங்காவிலுள்ள எல்லா விலங்குகளையும் நேரில் பார்த்து ஆய்வு செய்கிறார் நளினி.

சிறுத்தை ரமேஷின் சிக்கன் டின்னர்!

விலங்குகளுக்கான உணவுகளைப் பிரித்துக்கொடுக்கும் பணி முடிந்ததும், பூங்காவிலுள்ள எல்லா விலங்குகளையும் நேரில் பார்த்து ஆய்வு செய்கிறார் நளினி.

Published:Updated:
டாக்டர் நளினி
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நளினி
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான வண்டலூர் உயிரியல் பூங்காவின் அன்புக்குரிய மருத்துவராகப் பணியாற்றிவருகிறார் டாக்டர் நளினி.

விலங்குகள் சரியாகச் சாப்பிடாவிட்டாலும், அவற்றின் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் உடனே நளினிக்குத் தகவல் செல்கிறது. அடுத்த சில நிமிடங்களில் அங்கு ஆஜராகி விலங்குகளுக்குச் சிகிச்சையளிக்கிறார். தமிழகத்திலுள்ள வனவிலங்குச் சரணாலயம் மற்றும் உயிரியல் பூங்காக்களில் விலங்குகளுக்குச் சிகிச்சையளிக்கும் கால்நடை மருத்துவர்களில் ஒரே பெண் மருத்துவர் நளினி மட்டுமே!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் பணியிலுள்ள மருத்துவர்கள் பெரும்பாலும் விடுமுறை எடுக்கக்கூடாது. அதிகளவில் பார்வையாளர்கள் வரக்கூடிய அரசு விடுமுறை தினங்களில் கட்டாயமாகப் பணிக்கு வரவேண்டும். நேரம் காலம் பார்க்காமல், அச்சமின்றிப் பணியாற்ற வேண்டும். மிகச் சவாலான பணியையும் தாயுள்ளத்துடன் செய்துவருவதால் உயிரியல் பூங்காப் பணியாளர்கள் தவிர, விலங்குகளும் நளினியின் மீது அன்பு காட்டுகின்றன. உயிரியல் பூங்காவில் அன்றாட மதிய ஆய்வுப் பணியில் இருந்தவரைச் சந்தித்தேன். ராம் என்ற காண்டாமிருகத்தின் உடல்நிலையைக் கேட்டறிந்து அதற்குச் சாப்பிடக் கரும்பு கொடுத்துத் தடவிக்கொடுத்துவிட்டு வந்தார்.

டாக்டர் நளினி
டாக்டர் நளினி

“என் அப்பா கால்நடை மருத்துவராக வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார். அரசுக் கல்லூரியில் இடம் கிடைத்தும், குடும்ப வறுமை தடையாக அமைந்ததால் அப்பாவின் விருப்பம் நிறைவேறவில்லை. அவர் கனவை நிறைவேற்ற நான் கால்நடை மருத்துவம் படித்தேன். அரசுக் கால்நடை மருத்துவராகி, பல்வேறு இடங்களில் பணியாற்றினேன். ஆனால், வனவிலங்குகளுக்குச் சிகிச்சையளிக்க வேண்டும் என்ற என் நீண்டகால ஆசை இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நிறைவேறியது. 2018-ம் ஆண்டு முதல் வண்டலூர்ப் பூங்காவில் பணியாற்றி வருகிறேன்” என்கிற நளினி, 24 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். வண்டலூர்ப் பூங்காவிலுள்ள விலங்குகளுக்கான உணவுப் பிரிவின் பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

டாக்டர் நளினி
டாக்டர் நளினி

“இந்தப் பூங்காவில் வசிக்கும் விலங்குகளின் இனம், எடை, விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் உணவு அட்டவணையைத் தயாரித்தி ருக்கிறோம். அதன்படி, பழங்கள், காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட உணவுகள் இங்குள்ள விலங்குகளுக்கான உணவுக்கூடத்துக்கு முதலில் வரவழைக்கப்படும். இங்கு பராமரிக்கப்படும் 2,000-க்கும் மேற்பட்ட விலங்குகளின் அன்றாட உடல்நிலையைப் பொறுத்து, எல்லா விலங்குகளுக்கும் சரிவிகித அளவில் உணவினைப் பிரித்துக்கொடுப்பேன். பின்னர், இனம்வாரியாக ஒவ்வொரு விலங்குக்குமான பராமரிப்பாளர்கள் மூலமாக விலங்குகளுக்கு உணவினைக் கொடுப்போம்.

யானை, ஒட்டகச்சிவிங்கி, கரடி, காண்டாமிருகம், நீர் யானை, மான், குரங்கு உள்ளிட்ட சைவ உணவுகள் சாப்பிடும் விலங்குகளுக்குக் கேரட், முட்டைக்கோஸ், வாழைப்பழம், பிரெட் உள்ளிட்ட பல்வேறு உணவுகளைக் காலை 10 மணிக்குள் வழங்கிவிடுவோம்.

சிங்கம், புலி, சிறுத்தை, கழுதைப்புலி உள்ளிட்ட மாமிச உணவுகளைச் சாப்பிடும் விலங்குகளுக்கு மாலை வேளையில் உணவுகள் கொடுப்போம். அதிக எடையுள்ள யானைக்கு மட்டும் காலை, மாலை இருவேளையும் உணவு கொடுப்போம். தவிர, மற்ற எல்லா விலங்குகளுக்கும் ஒருவேளை மட்டும்தான் உணவு வழங்குவோம். ஆண் புலிக்கு 10 கிலோ, பெண் புலிக்கு 8 கிலோ, ஆண் மற்றும் பெண் சிறுத்தைக்கு தலா 4 கிலோ, ஆண் மற்றும் பெண் சிங்கத்துக்கு தலா 7 கிலோ அளவில் தினமும் மாட்டிறைச்சி வழங்குவோம். கருவுற்ற மற்றும் குட்டிகளை ஈன்ற தாய்ச் சிங்கம், புலி, சிறுத்தைகளுக்கு மட்டும் சிலநாள்களுக்கு மாட்டிறைச்சியுடன் கூடுதலாகக் கோழியையும் கொடுப்போம். இறைச்சி கெட்டுப்போகாமலும் நோய்த்தொற்று இல்லாமலும் இருப்பதை உறுதிசெய்து, சரியான எடையில் பிரித்துக்கொடுப்பதும் என் பணியே” என்பவர் நம்மிடம் உரையாடிக்கொண்டே யானைகளைப் பார்வையிடச் சென்றார். தடுப்பு வேலிக்குள் இருந்த ரோகிணி மற்றும் பிரக்ருதி யானைகள், நளினியைப் பார்த்ததும் தும்பிக்கையை உயர்த்திச் சத்தமிட்டு வரவேற்றன.

டாக்டர் நளினி
டாக்டர் நளினி

விலங்குகளுக்கான உணவுகளைப் பிரித்துக்கொடுக்கும் பணி முடிந்ததும், பூங்காவிலுள்ள எல்லா விலங்குகளையும் நேரில் பார்த்து ஆய்வு செய்கிறார் நளினி.

இதற்கிடையே, உடல்நிலை சரியில்லாத விலங்குக்குச் சிகிச்சையளிக்கவும் செல்கிறார். பூங்காவிலுள்ள சில விலங்குகளின் சுவாரஸ்யமான குணாதிசயங்களைக் கூறுபவர், “பத்து வயதாகும் ரமேஷ் என்ற சிறுத்தை மட்டும் சிறுவயது முதல் இப்போதுவரை கோழியை மட்டுமே சாப்பிடுகிறது. வாரக்கணக்கில் சாப்பிடாமல் இருந்தாலும், மாட்டிறைச்சியைச் சாப்பிட மறுக்கிறது. கூண்டில் வைக்கப்படும் கோழி ஓடாமல் இருக்க அதன் கால்களை முதலில் சாப்பிட்டுவிட்டு, பிறகு இறகுகளைத் தன் வாயால் நீக்கிச் சுத்தம் செய்த பிறகு ரமேஷ் முழுக்கோழியையும் சாப்பிடும். மற்ற கீரை வகைகளைவிட இங்குள்ள இரண்டு காண்டாமிருகங்களும் அரைக்கீரையைத்தான் விரும்பிச் சாப்பிடுகின்றன. பட்டினியாக இருந்தாலும்கூட அவை மற்ற கீரைகளை அதிகம் சாப்பிடுவதில்லை. ஒட்டகச்சிவிங்கிக்குப் பச்சை நிற வாழைப்பழம் மட்டும் பிடிக்காது. இப்படி, விலங்குகளின் விருப்பத்துக்கு ஏற்ற உணவுகளைக் கொடுப்பதற்கும் முன்னுரிமை தருகிறோம்.

மனிதர்களைப்போலத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளாலும் விலங்குகள் அவ்வப்போது சாப்பிடாமல் அடம்பிடிக்கும். அதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைச் சமாதானப்படுத்தி, சாப்பிட வைப்போம்.

அதிகளவில் பார்வையாளர்கள் வரும் தினங்கள், கோடைக்காலம், சுதந்திரமாக உலாவ முடியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலங்குகளுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. தினமும் ஆய்வின் போது, எல்லா விலங்குகளும் சரியான முறையில் சாப்பிட்டுள்ளதை உறுதி செய்வதுடன், அவற்றின் செயல்பாடு, சாணம், உற்சாகம் ஆகியவற்றின் மூலம் அதன் உடல்நலத்திலுள்ள மாறுபாடுகள் குறித்துத் தெரிந்துகொள்வேன். கோடைக் காலத்தில் வெப்ப அயர்ச்சியைத் தவிர்க்க, இளநீர், தர்ப்பூசணி, முலாம் பழம், பழச்சாறு உள்ளிட்ட உணவுகளையும் விலங்குகளுக்குக் கொடுப்போம்.” என்கிறார்.

சிறுத்தை ரமேஷின் சிக்கன் டின்னர்!

நளினி செல்லும் இடங்களிலெல்லாம், ‘வணக்கம் டாக்டரம்மா!’ என்கிற குரல் தவறாமல் ஒலிக்கிறது.

“அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற என் அப்பாவுக்குத் தற்போது 85 வயதாகிறது. அவர் கனவை நான் நிறைவேற்றியதில் மிகவும் பெருமிதம் கொண்டிருக்கிறார்” என்று சிரிக்கும் நளினியின் மகிழ்ச்சியை அங்குள்ள விலங்குகளும் ஆமோதிக்கின்றன.