லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 10 - கனவு மெய்ப்பட வேண்டும்..!

மெய்ப்பொருள் காண்பது அறிவு
பிரீமியம் ஸ்டோரி
News
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எப்படிக் கனவாகக் காண முடிகிறது

சோக வனத்தில் சிறைவைக்கப்பட்ட சீதை, துக்கம் தாளாமல் `என் உயிரை மாய்த்துக் கொள்ள வழியிருந்தால் சொல்லுங்கள்' என்று கதறியழ, விபீஷணனின் மகளான திரிசடை, சீதையை சமாதானப்படுத்தும் விதமாக, அதிகாலையில் தான் கண்ட கனவை விவரிக்கிறாள்.

`வெண்மையான ஆடையுடுத்தி, மாலையணிந்து ஆகாய மார்க்கமாக ராம லட்சுமணர்கள் இருவரும் இலங்கை வந்தடைய, அதேசமயம் கறுப்பு வஸ்திரம், அரளி மாலையுடன் ராவணன் கழுதைகள் பூட்டிய ரதத்திலிருந்து சேற்றில் விழுந்து மறையவும், உடனிருந்த கும்பகர்ணனும் இந்திரஜித்தும் அசுரர்களும் எண்ணெய் தேய்த்த உடலுடன் முதலையிருக்கும் அகழியில் மூழ்கவும், விபீஷணன் நான்கு தந்தங்கள் கொண்ட யானையில் பவனி வருவதாகவும் கனவு கண்டேன்' என்கிறாள். பிற்பாடு, விபீஷணன் ராவணனைப் பிரிந்து ராம லட்சுமணனுடன் சேர்ந்தும் இந்திரஜித், கும்பகர்ணன் போர்க்களத்தில் மடிந்தும், ராவணன் உட்பட ராட்சதர்கள் யுத்தத்தில் அழிந்திட திரிசடையின் கனவு அப்படியே பலித்ததை ராமாயணம் நமக்குச் சொல்கிறது.

இதேபோல, தனக்கு புத்தர் குழந்தையாகப் பிறக்கவிருப்பதை கனவிலேயே கண்டுணர்ந்தார் புத்தரின் தாயான மகாமாயா என்கிறது பௌத்த வரலாறு. உண்மையிலேயே திரிசடை மற்றும் மகா மாயாவின் கனவுகளைப்போல, நம் எல்லோருக்கும் கனவுகள் பலிக்குமா அல்லது எதிர்காலத்தை கணித்துச் சொல்லுமா நம் கனவுகள்?

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 10 - கனவு மெய்ப்பட வேண்டும்..!

நடக்கலாம் எனக்கூறும் நம் கனவு சாஸ்திரங்கள், கனவுகள் அப்படியே பலிப்பதில்லை, அவை சில குறியீடுகளைக் காட்டிக்கொடுக்கும் என்கின்றன.

`ஸ்வப்னம்' என வேதங்களிலும் உபநிடதங்களிலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள கனவுகளை மனிதனின் உணர்வுகளுடனும் ஆரோக்கியத்துடனும் இணைக்கிறது சாரக சம்ஹிதை. கனவு களுக்கான காரணங்களையும், அவற்றின் பலாபலன்களையும் விளக்கும் அக்னி புராணம், கனவில் தோன்றும் கடவுள், அரசர், குழந்தைகள், இறந்தவர்கள், உணவு, பறவைகள், பாம்பு, எண்ணெய், நெருப்பு ஆகியவற்றின் பலன்களைக் கூறுவதுடன், கனவுகளின் வகைகளையும், அவை பலனளிக் கும் காலங்களையும் எடுத்துரைக்கிறது.

இந்துமத புராணங்களைப் போலவே இஸ்லாத்திலும் கனவுகள் குறித்து பல தகவல்களைக் காணமுடிகிறது. இதற்கான விளக்கங்களை நபிகள் நாயகம் கொடுத்திருக் கிறார். பொதுவாக மூன்றுவிதமாக கனவு களைப் பிரிக்கிறது இஸ்லாம் மார்க்கம். ஒன்று, மனிதர்களுக்கு நற்செய்தியை முன்னறிவிப்பாகச் சொல்வதற்கென்றே வரும் கனவுகள். இவை, அல்லாஹ் மூலமாக வரும் கனவுகள். இரண்டாவது, சைத்தான் மூலமாக வரும் கனவுகள். இவை, மனிதர் களை தவறான பாதையில் நடைபோட வைப்பதற்காக வரும் கனவுகள். மூன்றாவது, சமீபத்தில் அல்லது சில மணிநேரத்துக்கு முன்பாகச் சந்தித்த/நினைத்த மனிதர்கள், நிகழ்வுகள் என ஏதாவது ஒன்று தொடர்பாக வரும் கனவுகள். இத்தகைய கனவுகளுக்கு பெரிய முக்கியத்துவம் ஏதுமில்லை என்கிறது இஸ்லாம்.

கி.மு 3100-லேயே மெசபடோமியாவின் ஆதி சுமேரியர்கள், கனவுகளை இறைவனுடன் தொடர்புபடுத்தி, அவற்றின் பலன்களை விவரித்துள்ள சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் கிரேக்க, ரோமானிய, சீன, அசீரிய வரலாறெங்கிலும் கனவுகளின் விளக்கங்களும், அவற்றின் நம்பிக்கைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. தங் களின் கனவுக் கடவுளான மார்ஃபியஸ் கனவு வழியே நோயாளிகளைக் குணப் படுத்துவாரென்று, தனிக் கோயில்கள் கட்டி வழி பட்டனராம் பண்டைய கிரேக்கத்தினர்.

`தெய்வத்தின் செய்தி' என்று மனிதர்கள் நம்பிய கனவுகளை, முதன்முதலாக அறிவியல்ரீதியில் அணுகியது சிக்மண்டு ஃப்ராய்டின் Interpretation of Dreams.

உளவியலின் தந்தை எனப் போற்றப்படும் சிக்மண்டு ஃப்ராய்டின் இந்த ஆராய்ச்சிப்படி, நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பு மற்றும் நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவுகள். நாம் தினசரி பார்க்கும் காட்சிகள், சந்திக் கும் நபர்கள், செய்யும் செயல்கள், கேட்கும் ஒலிகள் ஆகியவற்றின் பதிவுகள், ஓடும் நீரில் தெளிவற்றுத் தெரியும் காட்சிகள் போல மனதில் தோன்றி, காட்சி வடிவம் பெற்று கனவாகத் தோன்றுகின்றன என்கிறார் ஃப்ராய்டு. மேலும், ஆழ் மனதில் புதையுண்டு கிடக்கும் இவற்றுக்குத் தனி குணாதி சயங்களும் நினைவுத்திறனும் உண்டு என்றும், அவற்றுக் கேற்ப வெளிப்பாடுகளும் மாறுபடலாம் என்றும் விளக்குகிறது இவரது ஆராய்ச்சி.

கனவுகள் ஏன் வருகின்றன என்று இதுவரை உறுதியாகக் கண்டறியப்படவில்லை என்றாலும், கனவுகள் எப்படி உற்பத்தியாகின்றன என்பதைக் கண்டறிந் துள்ளனர் அறிவியலாளர்கள். அதாவது, நாம் தொடர்ந்து உறங்கினாலும் நமது மூளை தொடர்ந்து உறங்காமல் REM, NREM என்ற சுழற்சிமுறையில் உறங்குவதாகவும், அச்சுழற்சி மாறும்போது நமது மூளை நினைவலைகளை வரிசைப்படுத்தி ஞாபகத்திறனை அதிகரிக்கிறது என்றும் கூறும் அறிவியல், இது நமது உடல் வளர்ச்சிக்கும் புத்துணர்ச்சிக்கும் மிகவும் அவசியம் என்றும் கூறுகிறது. இச்சுழற்சியில் Rapid Eye Movement என்ற ஆழ்நிலை உறக்கத்தில், மூளையின் அடிப்பகுதியான பான்ஸின் Locus Coeruleus என்ற நரம்புப்பகுதியும், Frontal Cortex என்ற முன்மூளையும் தூண்டப்படுவதால் நமக்கு கனவுகள் தோன்றுகின்றனவாம்.

இவ்வாறு தோன்றும் கனவுகள் சில நொடிகள் முதல் 20 - 30 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். சில கனவுகள் திரும்பத் திரும்ப (Recurring Dreams) வந்துகொண்டே இருக்கும் என்று கூறும் அறிவியல் நமது மொத்த வாழ்நாளில் ஆறு வருடங்களைக் கனவுகள் காண மட்டுமே செலவழிக்கிறோம் என்றும், பெரும்பாலும் அதிகாலையில் தோன்றும் கனவுகளை விழித்தெழுந்த 10 நிமிடங் களுக்குள் 90 சதவிகிதத்தை நாம் மறந்து விடுகிறோம் என்றும் கூறுகிறது.

தாயின் வயிற்றில் ஐந்துமாதக் கருவாக இருக்கும்போதே கனவுகள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றனவாம். நான்கைந்து வயதில்தான், அவற்றை உணர்கிறோம். ஏழெட்டு வயதுவரை நாம் காண்பது Nightmares என்ற பயங்கரக் கனவுகள்தான் என்றாலும் சிலசமயம் கனவு காண்கிறோம் என்ற தெளிவுடன் காணும் லூசிட் கனவுகளும் நமக்கு ஏற்படக்கூடும். இந்தக் கனவுகளின்போது, மனிதர்களுடன் உரையாடவும் முடியுமாம்.

சில கனவுகள் மன அழுத்தம், `ஸ்கிஸோஃப்ரினியா' போன்ற மனநோய்களின் அறிகுறிகளாகவும் வெளிப்படுகின்றன என்பதால், சமீபத்திய கோவிட் பெருந்தொற்றில் ஏற்படும் மனவியல் மாற்றங்களைக் கண்டறிய, நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கனவு களை ஆராய்ச்சி செய்துவருகிறது லண்டன் பல்கலைக்கழகம்.

திரிசடையின் கனவு பலித்தது கட்டுக்கதை என்று சொல்பவர்களால்கூட, ஆபிரஹாம் லிங்கன், தான் சுட்டுக்கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, வெள்ளை மாளிகையில் தனக்கு இறுதிச்சடங்கு நடப்ப தாகக் கனவு கண்டதை தன் மனைவியிடம் விவரித்ததை உண்மையென்றே ஒப்புக் கொள்கின்றனர்.

எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எப்படிக் கனவாகக் காணமுடிகிறது என்பதற்கு தற்சமயம் பதிலில்லை என்றாலும், இனிவரும் காலத்தில் கனவுகளைப் பதிந்து வைக்கக்கூடிய தொழில்நுட்பமும் வரக்கூடும். அதுவரை கனவுகளை அறிவியலா, ஆன்மிகமா என்று பாகுபடுத்தாமல் நற் கனவுகள் காண்போம்.

கனவுகள் மெய்ப்பட உழைத்திடுவோம்..!

அன்பு அவள் விகடன் வாசகர்களுக்கு...

ன்மிக அறிவியல் தொடர் ஒன்றை எழுதும் வாய்ப்பு அவள் விகடனிலிருந்து வந்தபோது, தயக்கத்துடன் தொடங்கப்பட்டது தான், `மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற இந்தத் தொடர். ஆனால், இதில் எழுதப்பட்ட விரதங்கள், அரசமரம், குளிர்நடை, மஞ்சள், குங்குமம் என ஒவ்வொன்றிலும் புதைந் திருக்கும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் நமக்குப் புரியவைப்பது ஒன்றைத்தான்.

சசித்ரா தாமோதரன்
சசித்ரா தாமோதரன்

நம்பிக்கையோ, அறிவியலோ இரண்டுமே சக மனிதர்களின் ஆரோக்கியம் மீதான அக்கறையைத்தான் காட்டுகின்றன. அன்று கல்வி குறைவாக இருந்த காரணத்தால் இறைவன் பெயரைச் சொல்லி `இதைச் செய், இதையெல்லாம் செய்யாதே' என்று சொன்னவர்கள், இன்று அறிவியலின் பெயரைச் சொல்லி, `அதைச் செய் - செய்யாதே' என்கிறார்கள்.

ஆண்டவனோ, அறிவியலோ அதன்பின்னே சக மனிதன்மீது அக்கறை இருந்தால், அதனுடன் பயணிப்பதே அறிவுடைமை என்ற புரிந்துணர்வுடன் எழுதப்பட்ட இத்தொடரைப் படித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்திய வாசகர்களுக்கும், வாய்ப்பளித்த அவள் விகடனுக்கும் நன்றி.

மீண்டும் சந்திப்போம்..!