Published:Updated:

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 3: மதங்கள் கொண்டாடும் மார்கழி குளிர்!

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

#Lifestyle

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 3: மதங்கள் கொண்டாடும் மார்கழி குளிர்!

#Lifestyle

Published:Updated:
சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

மார்கழி மாதத்தில் ஒன்பது நாள்கள் விரதமிருந்து, பத்தாவது நாள் பௌர்ணமியன்று, சிவபெருமான் ஆலயத்தில் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடி, திருவாதிரைக்களியை பிரசாதமாக உட்கொண்டு, மஞ்சள் கயிறணிந்து நோன்பை முடிக்கும் சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்து நிலைத் திருக்கும் என்பது நம்பிக்கை.

இந்தத் திருவாதிரை நோன்பில் உட்கொள்ளப்படும் களிக்கும், மஞ்சள்கயிற்றுக்கும் ஆயுள் பலத்துக் கும் என்ன தொடர்பு..?

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 3: மதங்கள் கொண்டாடும் மார்கழி குளிர்!

சேந்தனார் என்ற சிறந்த சிவபக்தர், திருவெண்காட்டுக்கு அருகில் நாங்கூர் என்னும் ஊரில் பிறந்தவர். தன் மனைவி மக்களுடன் தில்லையில் வாழ்ந்து வந்தார். தனது ஏழ்மையைப் போக்க விறகுவெட்டி வாழ்ந்து வந்தாலும், ஒவ்வொரு நாளும் விறகுவெட்டிய வருமானத்தில் அரிசி வாங்கிச் சமைத்து, அதில் ஒருபங்கை யாராவது சிவனடியாருக்குத் தந்து, மீதமிருப்பதை தான் உண்ணும் வழக்கம் கொண்டவர். அன்றைய தினம், சோதனையாகப் பெய்த பெருமழையால் விறகுவெட்டவும் முடியாமல், வெட்டியதை விற்கவும் முடியாமல் அரிசி வாங்க வழியின்றி, வீட்டிலிருந்த கேழ்வரகில் களி சமைத்து, தோட்டத்தில் காய்த்திருந்த அவரைக்காய், அரசாணிக்காயில் கறிசமைத்து, சிவனடி யாரின் வருகைக்காகக் காத்திருந்தார். மழையின் காரணமாக யாரும் அன்று வரவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியபோதும், பொறுமையுடன் தன் அடியாருக்காகக் காத்திருப்பதைப் பார்த்த சிவபெருமான் சேந்தனாரின் பக்தியை உலகுக்குக் காட்ட, தானே சிவனடியாராக சேந்தனாரின் இல்லம் வந்து உண்டதோடு, களியில் சிறிதைக் கையிலும் வாங்கிச் சென்றாராம்.

மறுநாள் சிதம்பரனார் கோயிலைத் திறக்கும்போது, மூலவர் சந்நிதியில் சிதறிக்கிடந்த கேழ்வரகுப் பருக்கைகள் சேந்தனாரின் பக்தியைப் பறைசாற்ற, பக்தனின் வீட்டில் திருவாதிரைக் களியுண்ட பரமனின் நினைவாக இன்றும் மார்கழித் திருவாதிரையன்று களி படைப்பது தொடர்கிறது.

பிறப்பும் இறப்பும் இல்லாத சிவ பெருமானுக்கு உகந்தது மார்கழித் திருவாதிரை. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் ஆகிய ஐந்தொழில்களையும் உணர்த்த சிவன் ஆனந்த ருத்ரவம் ஆடி, `ஆருத்ரா தரிசன' அருள்புரியும் நாளாகவும், இந்நாளில் ஆண்களுடன் பெண்கள் விரதமிருந்து மஞ்சள் கயிற்றை அணிந்துகொண்டால் மாங் கல்ய பலம் நீடிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

கேரள நாட்டிலோ, `சமதர்ம சாரிணி' அதாவது, உமையும் சிவனும் ஓருடலாகி அர்த்தநாரீசுவரராக அவதரித்த நாள் இதுவென்றும், இத்தினத்தன்று பெண்கள் நிலவிளக்கைச் சுற்றி நடன மாடினால் நினைத்த காரியம் கைகூடும் என்றும் நம்பப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க திருவாதிரை மட்டுமல்ல... இந்த மார்கழி மாதம் முழுவதும், ஆண்களும் பெண்களுமாக இறைவனைத் துதிபாடி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என சைவத்தில் நம்பப்படுவது போலவே, கடவுள் கண்ணனைப் போல வாழ்க்கைத்துணை அமையவும் வீடும், நாடும் சுபிட்சமடையவும் பாவை நோன்பிருந்து திருப்பாவை பாடல்களைப் பாடி இறைவனை வழிபடச் சொல்கிறது வைணவம்.

`மாஸானாம் மார்க சீர்ஷோ...' (மாதங்களில் நான் மார்கழி) என்று ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பித்துச் சொல்லும் மார்கழியை சைவர்களும் வைணவர்களும் இறை வனுக்கு உகந்த மாதமாகக் கொண்டாடுவது போலவே, `ஹானுகா' என்ற ஒன்பது நாள் தீப வழிபாடாக யூதர்களிடையேயும், `அக்ஷரா' என்ற இஸ்லாமியர்களின் தொழுகையாகவும், `ரோஹட்சு' என்ற போதி தினமாக பௌத்தத்திலும், `கிறிஸ்துமஸ்' என கிறிஸ்து வத்திலும் உலகெங்கும் அனைத்து மதங்களிலும் இந்தக் குளிர்மாதம் கொண்டாடப்படுகிறது. இப்படி அனைத்து மதங்களும், மார்கழி என்ற குளிரை ஏன் கொண்டாடு கின்றன என்ற கேள்விக்கு இயற்கையைக் கைகாட்டுகிறது அறிவியல்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 3: மதங்கள் கொண்டாடும் மார்கழி குளிர்!

மார்கழியில் சூரியக்கதிர்கள் முழுமையாக பூமியைச் சென்றடைவதில்லை என்பதால், தானியங்களை விதைக்காமல் சேமித்து வைப்பதுடன், இருப்பையும் செலவழிக் காமலிருக்க, திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை இம்மாதத்தில் தள்ளிவைத்து, தொடர்ந்துவரும் தைமாத விளைச்சலுக்கேற்ப, நெல், கரும்பு, மஞ்சள் ஆகியவற்றை அறுவடை செய்து, விமரிசையாகக் கொண்டாடவும் செய்கின்றனர். அதாவது, விளைச்சல் இல்லாதபோது செலவைக் குறைத்தும், விளைச்சலுக்குப் பிறகு, கொண்டாட்டத்தைக் கூட்டியும் சமநிலைப்படுத்தும் விதமாக, இயற்கை நமக்களித்துள்ள Hibernation என்ற மயக்க நிலையாக மார்கழி விளங்குகிறது.

ஆனால், இந்த Hibernation இயற்கையில் மட்டுமல்லாமல், மனித உடலிலும் ஏற்படுகிறது. பொதுவாகவே, குளிர்காலத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகளை நாம் தொடர்ந்து செய்வதில்லை என்பதாலும், இயற்கையாகவே Basal Metabolic Rate என்ற வளர்சிதை மாற்றங்கள் குளிர்மாதங்களில் குறைவாக இருப்பதாலும், நடுங்க வைக்கும் குளிர், அதிக உறக்கத்தையும் அதிகளவு சோம்பலையும் தருவிப்பதுடன், உடல்பருமனையும் அதனூடே பல்வேறு வாழ்க்கைமுறை நோய்களையும் பரிசளிக்கிறது என்பதே உண்மை.

இதற்கான தீர்வாகத்தான் உண்ட அதிகப்படியான உணவுகளைச் செரித்து சமன் செய்ய விரதங்களும், கோயிலுக்கு கால்நடையாக ஓடி, பிராகார வலம் என்று இயல்பான உடற்பயிற்சிகளையும் பழக்கப் படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள். அதிலும், காலைநேர ஓஸோன் மற்றும் மிதமான சூரிய ஒளிதரும் வைட்டமின்-டி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உடலுக்கும் உள்ளத்துக்கும் சுறுசுறுப்பை அளித்து, இயற்கையுடன் இயைந்து வாழவும் மனிதனைத் தயார்ப்படுத்துகிறது.

இவையனத்துக்கும் மேலாக, கொழுப்புத் திசுக்கள் பற்றிய சமீபத்திய ஆய்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. நமது ரத்தத்தின் HDL, LDL, TGL, கொலஸ்ட்ரால் ஆகிய கொழுப்புகளில், நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்று இருவகை இருப்பதைப்போலவே, நமது உடலின் கொழுப்புத் திசுக்களிலும் (Adipose Tissue) பழுப்பு, வெள்ளை என இருவகை உள்ளது. இவற்றுள் நமது சருமத்தின் அடிப்பகுதியில் உடலெங்கும் படர்ந்து பரவியிருக்கும் White Adipose Tissue (WAT) என்ற வெள்ளைக் கொழுப்புத்திசு, லெப்டின், அடிப்போநெக்டின் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்து உள்ளுறுப்புகளைக் காப்பதுடன், அதிக கலோரிகளை ஆற்றலாக தம்முள்ளே சேமித்தும் வைக்கிறது. ஆனால், இவ்வெள்ளைக் கொழுப்புத் திசுக்கள் அதிகமாகும்போது, பருமன், நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற வாழ்க்கைமுறை நோய்களை அது ஏற்படுத்துகிறது.

அதேநேரம் உடல் உறுப்புகளின் உள்ளிருக்கும் Brown Adipose Tissue (BAT) என்ற பழுப்புப் கொழுப்புத் திசுவோ அதிக கலோரிகளை எரிப்பதுடன், நமது உடல் வெப்பத்தை, Non-shivering Thermogenesis வாயிலாகச் சமன்படுத்துகிறது. குழந்தைப் பருவத்தில் அதிகம் காணப்படும் இப்பழுப்பு கொழுப்பு, வளரும்போது குறைகிறதென்றாலும், தேவைப்படும்போது வெள்ளையைப் பழுப்பாக மாற்றும் (beige) பணியும் நடைபெறுகிறது.

மேற்கூறப்பட்ட சமீபத்திய ஆய்வு, அதிகாலைக் குளிரில் நடக்கும்போதும், குளிர்நீரில் குளிக்கும்போதும், வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி துணையுடன், லெப்டின் ஹார்மோன்களை அதிகம் சுரக்கச் செய்து, வெள்ளைக் கொழுப்புத்திசுக்களைப் பழுப்பாக்கும் beiging பணியைத் துரிதப்படுத்தி, உடலில் நோய்கள் உருவாவதைத் பெரிதும் தடுக்கிறது என்கிறது.

ஆக, வைட்டமின்-டி, வைட்டமின்-ஏ நிறைந்த திருவாதிரைக் களியை ஒரு வாயுண்ண, குளிர்மாதம் முழுவதும் விரதமிருந்து, உங்கள் மனைவியுடன் கோயிலுக்கு நடந்தால், அது உங்கள் ஆரோக்கியம் என்ற மஞ்சள் சரடை அதிகம் வலுவாக்குகிறது என்பது உண்மைதானே..?!

- மெய்ப்பொருள் தேடல் தொடரும்...