என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 4 - மகாலக்ஷ்மி உருவில் மஞ்சள்!

மெய்ப்பொருள் காண்பது அறிவு
பிரீமியம் ஸ்டோரி
News
மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Lifestyle

மஞ்சள் இருக்குமிடத்தில் மகாலக்ஷ்மி குடியிருக்கிறாள் என்பதாலேயே, நமது மங்களகரமான நிகழ்வுகள் அனைத்திலும் மஞ்சள் நிச்சயம் இடம்பெறுகிறது. அதிலும் புது மஞ்சள் கட்டாமல் பொங்கல் அரிசி, பானையில் விழாது.

ஆம்... தமிழருக்கு பொங்கலில் இடும் அரிசியைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது, பானையில் கட்டப்படும் மஞ்சள். எதற்காக மஞ்சளுக்கு மட்டும் இந்த மகத்துவம்..?

பாரம்பர்யமாக நம் தமிழ்ப் பெண்கள், மழை வருவதற்கும், விளைச்சல் அமோகமாக இருப் பதற்கும், விளைந்த பயிர்களைத் தடையின்றி அறுவடை செய்வதற்கும் பொங்கலை ஒரு நோன்பாகத்தான் கடைப்பிடித்தனராம். மண்ணில் விளைந்த புது மஞ்சள் என்ற மகாலக்ஷ்மி, இந்த வருடத்தைக் காட்டிலும் அடுத்த வருடம் அதிக விளைச்சலைத் தருவாள் என்பது அவர்கள் நம்பிக்கை.

அதனால்தான், புதுப்பானையில் கட்டப்பட்ட மஞ்சளைப் பத்திரப் படுத்தி, மறுநாள் “மஞ்சள் கீறுதல்” என்று அந்தக் கிழங்கு மஞ்சளைக் கீறி, வீட்டிலிருக்கும் அனைவருக்கும் அடுத்த வருட விளைச்சல் இன்னும் அமோகமாக இருக்க, பெரியவர்கள் ஆசியுடன் வழங்குவது இன்றளவும் கிராமங்களில் வழக்கில் உள்ளது.

பொன்மஞ்சள் இருக்குமிடத்தில் பொன்மகளும் குடியிருக்கிறாள் என்பதாலேயே, தமிழரது அனைத்து மங்கள நிகழ்ச்சிகளிலும் முதலில் பிடித்து வைக்கப்படும் பிள்ளையாராக ஆரம்பித்து, அணியப்படும் மஞ்சள் சரடாகவும், முனைமுறியாத அரிசியுடன் கலந்த அட்சதையாகவும், அளிக்கப்படும் தாம்பூலமாகவும், திருஷ்டி கழிக்கும் ஆரத்தியாகவும் தவிர்க்க முடியாத ஒன்றாக மஞ்சள் விளங்குகிறது.

சசித்ரா தாமோதரன்
சசித்ரா தாமோதரன்

புதுக்கணக்கு புத்தகத்தில்கூட மஞ்சளால் பிள்ளையார் சுழியுடன் ஆரம்பிக்கும், இந்த மஞ்சள் மகிமைக்கு பிள்ளையார் சுழி போடப் பட்டது எப்போதிலிருந்து என்றால், அதுவும் பிள்ளையாரிலிருந்துதான் என்கின்றன புராணங்கள்.

ஒருமுறை வெளியே போயிருந்த சிவபெருமான் கைலாயத்துக்கு திரும்பும் முன், தான் நீராடி தயாராக இருக்க நினைத்த பார்வதிதேவி, வாயிலில் காவலர் யாருமில்லாததால், மஞ்சள் விழுதுகொண்டு ஒரு சிறுவனை உருவாக்கி, அவனுக்கு `விக்ன விநாயகன்' என்று பெயரிட்டு, தனக்கு காவல் நிற்கச் சொல்லிவிட்டு, நீராடச் சென்றாராம்.

அதற்குள்ளாகவே சிவபெருமான் கைலாயம் திரும்பிவிட, அடையாளம் தெரியாததால், அவரை உள்ளே அனுமதிக்க மறுக்கிறார் விநாயகர். கோபத்தில் சிவபெருமான் விநாயகனின் தலையைக் கொய்ததும், பிறகு கஜாசுரனின் தலையைப் பொருத்தி, கணபதி என்ற முதற்கடவுள் உருவான புராணக்கதையும் ஏற்கெனவே நாமறிந்ததுதான்.

இப்படி, எந்தவொரு காரியத்தைத் தொடங்குமுன் வணங்கும் முழுமுதற்கடவுளான பிள்ளையார் தோன்றியது மஞ்சளிலிலிருந்து என்பதால்தான், மஞ்சளுக்கு இந்த மகிமையும் என்றே தோன்றுகிறது.

நமக்கு மட்டுமல்ல. `மஞ்ஞள்', `பசுப்பு', `அரீசினா' என நம் அண்டை மாநிலங்களிலும், `ஹல்தி' என வடக்கிலும் இது பரவியுள்ளது. அதிலும், மஹாராஷ்டிர மாநிலத்தின், பிரசித்திபெற்ற கண்டோபா திருவிழாவில் சிவபார்வதியின் மறுவடிவமாக விளங்கும் கண்டோபனையும், மால்சா வையும் குலதெய்வமாகத் தொழுதிடும் டாங்கர் பழங்குடி மக்கள், கண்டோபனின் கையிலுள்ள பந்த்ரா (மஞ்சள்) பாத்திரத்தில் தங்களது விளைச் சலை வைத்து வழிபடுவதுடன், ஒருவர்மீது ஒருவர் மஞ்சளை

வீசி, மராத்திய மொழியில் `சோனியாச்சி ஜெஜூரி' - அதாவது, இந்த மஞ்சள் எனும் பொன், தங்களுக்கு வளமனைத் தையும் வழங்கட்டும் என்று வழிபடுவார்களாம்.

ஹரி என்ற திருமாலையும் அலங்கரிப்பதால் ஹரித்ரா என வடமொழியில் அழைக்கப்படும் மஞ்சள், துர்கை, கிருஷ்ணன், காளி, கணபதி, சூரிய பகவான், பிரஹஸ்பதி என நம் ஆன்மிக நம்பிக்கைகள் அனைத்திலும் பரவியுள்ளது.

நாம் மஞ்சளைத் தொடாது புத்தாடை உடுத்த மாட்டோம் என்பது போலவே பௌத்தர் களின் அங்கிகளிலும், கேரளாவில் ஓணத்தன்று குழந்தைகள் உடுத்தும் முண்டுகளிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 4 - மகாலக்ஷ்மி உருவில் மஞ்சள்!

ஆன்மிக நம்பிக்கைகளிலும், உடுத்தும் உடையிலும் மட்டுமல்லாமல், உணவுப்பொருள், அழகுப்பொருள், மருத்துவப்பொருள் என்று, மஞ்சள் நமது வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே விளங்குகிறது.

அதிலும் நாம் உண்ணும் அனைத்து உணவிலும் நிறத்தையும் மணத்தையும் சேர்க்கப் பயன்படுத்தப்படும் மஞ்சள், ஆரோக்கியத்தைப் பெரிதும் காக்கிறது என்கிறார்கள்.

சாரக சம்ஹிதை முதல் வேதங்கள் அனைத்தும், மஞ்சளின் அதீத மருத்துவ குணங்களைப் பேசிக்கொண்டேதான் இருக்கின்றன.

மஞ்சளின் நிறத்துக்கும், அதன் மருத்துவ குணங்களுக்கும் காரணமாக விளங்கும் கர்க்யூமென் (Curcumin) என்ற எளிதில் ஆவியாகும் எண்ணெய் நிறமியைப் பெரிதும் கொண்டாடுகிறது மருத்துவ உலகம்.

ஆன்டி செப்டிக், ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி ஏஜிங் என்ற தன் குணங்களால் மனிதனின் அனைத்து நோய்களையும் எதிர்த்துப் போராடும் வல்லமைமிக்க இந்த கர்க்யூமென்னுடன், மஞ்சளில் உள்ள மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம் ஆகிய தாதுப்பொருள்களும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் நமது ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதுகாக்கின்றன என்கிறது இயற்கை மருத்துவம்.

இதன் அதீத நோயெதிர்ப்பு ஆற்றல் காரணமாக, கோவிட் வைரஸ் நோய்க்கு கர்க்யூமென் மாத்திரைகள் வைரலானதும் நினைவிருக்கலாம். இந்தியா தாண்டியும் உலகெங்கிலும் கொண்டாடப்படும் மஞ்சள், சீன, ஜப்பானிய, பெர்சிய, எகிப்திய மருத்து வத்திலும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பிலிப்பைன்ஸில் மஞ்சளில் டீ என்பது ஒரு பிரத்யேக பானம்கூட.

ஆக, கிருமிநாசினியாக, பசியைத் தூண்டும் உணவாக, புத்துணர்ச்சி தரும் பானமாக, சரும கட்டிகளைக் கரைக்கும், காய்ச்சல் இருமலைத் தணிக்கும், குடற்புழுக்களை அகற்றும் மருந்தாக, கர்ப்பப்பை பிரச்னை களுக்குத் தீர்வாக விளங்கும் நம் மஞ்சள், நாள்பட்ட நுரையீரல் நோய், இதய நோய், பருமன், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள், கண் மற்றும் சரும அழற்சி, மூட்டு பிரச்னைகள் ஆகியவற்றிலிருந்தும் காக்கிறது.

மேலும் Brain Derived Neurotrophic Factor (BDNF) என்ற மூளையின் ஊக்கியைத் தூண்டி நரம்புகளை வலுப்படுத்துவதால், அல்சைமர் உட்பட்ட மூளைத் தேய்வு நோய்களுக்கும் அருமருந்தாகிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

இது டி.என்.ஏ வளர்ச்சியையும், இண்டர்லூகின் மற்றும் சைட்டோக்கைன் களைக் கட்டுப்படுத்தும் புரதங்களையும் (Apoptotic Protein) மஞ்சள் அதிகரிப்பதால் எதிர்காலத்தில் மஞ்சளை புற்றுநோய்க்கான மருந்தாகவும் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகமுள்ளது என்கின்றன சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மார்பகப் புற்றுநோய், சினைப்பை, நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய் ஆய்வுகள்.

ஆக, தன்னைக் காக்கும் எந்தவொரு பொருளையும் மஞ்சளுடன் இணைப்பது தமிழ்ப் பெண்களின் மரபு. அதனால்தான், அவர்கள் தமது மானத்தைக் காக்கும் உடையில் மஞ்சளைத் தடவுவதும், வாழ்வைக் காக்கும் கணவனின் கையால் மஞ்சள்சரடைக் கட்டிக் கொள்வதும்.

அனைத்துக்கும் மேலாக, உயிர்காக்கும் உணவில் மருத்துவமிக்க மஞ்சளைச் சேர்ப்பதோடு நிற்காமல், அதற்கு நன்றிகூறும் விதமாக, அறுவடையின் முதல் அரிசியை சூரியனுக்குப் பொங்கலிடும்போது, சூரியனைப் போலவே மின்னும் மஞ்சளை, புதுப்பானையில் கட்டுகின்றனர்.

தனது மஞ்சள் நிறத்தால் மங்களகரத்தையும், மருத்துவத்தையும் ஒருங்கே அள்ளித்தரும் `தி அல்டிமேட் மஞ்சள்' கிழங்குடன் (மகாலக்ஷ்மி) சிறக்கட்டும் இந்தப் பொங்கல் திருநாள்!

- மெய்ப்பொருள் தேடல் தொடரும்