Published:Updated:

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 6 - தேங்காய், பழம்

தேங்காய் - பழம்
பிரீமியம் ஸ்டோரி
தேங்காய் - பழம்

படங்கள்: மதன்சுந்தர்

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 6 - தேங்காய், பழம்

படங்கள்: மதன்சுந்தர்

Published:Updated:
தேங்காய் - பழம்
பிரீமியம் ஸ்டோரி
தேங்காய் - பழம்

கோயிலுக்குச் செல்லும்போது அர்ச்சனை பிரசாதம், பெரியவர் களைச் சந்திக்கும்போது மரியாதை நிமித்தம், திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளில் ஒப்புக்கொண்ட அங்கீகாரம், பூரண கும்ப மரியாதை என தமிழர்களின் ஒவ்வொரு சுப நிகழ்ச்சியிலும் பங்கெடுப்பது தேங்காய் - பழம்தான்.

மனிதர்களுக்குத் தருவது இருக்கட்டும். எத்தனையோ காய்கனிகள் இருக்க, தெய்வத்துக்குப் படைக்கும் அளவுக்கு இந்த இரண்டு மட்டும் ஏன் முக்கியத்துவம் பெற்றன என்பதைப் பார்ப்போமா..?

சசித்ரா தாமோதரன்
சசித்ரா தாமோதரன்

முதலில் தேங்காய்... இறைவனுக்கு உகந்த சுவைமிக்க தேங்காய் தோன்றிய இறை வரலாறுகூட சுவைமிக்கதுதான். தன் தலையை வெட்டியபின் யானைத் தலையை வைத்து உயிர்ப்பித்ததும் விநாயகர் கோபத்துடன், `பதிலுக்கு நான் உனது தலையை வெட்ட வேண்டும்' என்று சிவபெருமானைக் கேட்க, அருகிலிருந்த தென்னையில் உள்ள தேங்காய்க்கு மூன்று கண்களைப் படைத்து, தனக்குப் பதிலாக உடைக்குமாறு தேங்காயை நீட்டினாராம் தந்தை. அதன்பிறகு உலகில் தோன்றிய அத்தனை தேங்காய்களும் சிவனின் அம்சமான மூன்று கண்களுடன் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

திருவையாறு வடகுரங்காடுதுறை திருத்தலத்தில் உறையும் ஈஸ்வரனான குலைவணங்குநாதர், கோடையில் அங்கு வந்த பக்தையான கர்ப்பிணி யின் தாகத்தைத் தீர்க்க, தென்னங் குலைகளை வளைத்துக் கொடுத்த தாகவும் கூறப்படுகிறது. இறைவனின் சிறப்புமிக்க அவனது படைப்பாகிய தேங்காய், இறைவனுக்கு உகந்தது என்பதாலேயே, ஸ்ரீபழா என்றும், கல்பவிருக்ஷம் என்றும் வழிபடப் படுவதுடன், ராமாயண, மகாபாரதக் கதைகளிலும், இலங்கையின் மகாவம்சத்தி லும் தென்னை குறிப்பிடப்பட்டுள்ளது.

நமது தேசத்தில் மட்டுமன்றி, `சொர்க்கத் தின் விருட்சம்' என பிலிப்பினோக்களும், `ஆயிரம் நன்மைகள் கொண்ட மரம்' என மலேசியர்களும், `மூன்று தலைமுறையினருக் கான மரம்' என்று இந்தோனேசியர்களும் என உலகெங்கும் தென்னையைக் கொண் டாடுகின்றனர்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 6 - தேங்காய், பழம்

கேரளத்தின் அனைத்து பகவதிக் கடவுள்களுக்கும் குரும்பா என்ற பெயருண்டு, அதற்கு இளநீர் என்ற பொருளுண்டு என்பதுடன், துர்கை, காளி, பார்வதி ஆகிய அனைவருக்கும் பிரசாதமாகப் படைப்பதும், உடைப்பதும் தேங்காயைத்தான். தேங்காய் உடைத்தல் தோன்றியதுகூட, நரபலியைத் தவிர்க்கும் முறை என்று கூறும் மத்தியப்பிரதேசத்தின் கோல் பழங்குடியினர் காளிமாய், ஷ்ரதமாய் ஆகிய தங்களின் குலதெய்வங்களுக்கு பலி கொடுக்க மனிதர்களுக்குப் பதிலாக தேங்காயை உடைத்ததனராம். மகாராஷ்டிர மீனவர்களோ, தங்களது தொழில் சிறக்கவும், குடும்பம் தழைத்தோங்கவும் வருடந்தோறும் `நாரியல் பூர்ணிமா' நாளன்று வருண பகவானை வழிபட்டு, தேங்காய்களை கடலுக்குள் சமர்ப் பிக்கின்றனர்.

மேலும், தேங்காயின் மூன்று கண்கள் மனிதனின் மூன்று குணங்களான சத்வ, ரஜ, தமோ குணங்களை உருவகப்படுத்துவதுடன், மனிதன் தனது இரு புறக்கண் களால் பார்க்கும் இந்தக் கடினமான புறவாழ்க்கைக்குப் பின்னே ஒளிந்திருப்பது தனது அகக்கண்ணால் பார்க்கப் படும் வெண்மையான மெய்ஞ்ஞானம்தான் என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தவும்தானாம்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 6 - தேங்காய், பழம்

`தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்...' என மூதுரையில் ஔவை மூதாட்டி உரைத்ததுபோல, தான் பருகிய நீரை தனது தலையில் அமிர்தமாக சேர்த்துவைத்து அனைத்துப் பலன்களையும் அள்ளித் தருகிறது தென்னை. தாகத்தைப் பெரிதும் போக்கும் இளநீரில், அதிக அளவிலான நீருடன் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், ட்ரான்ஸ்-ஜியாடின் மற்றும் வைட்டமின் சி, பி, ஈ, மனிதனின் ஆரோக்கியத்தைப் பெருமளவு காக்கின்றன என்பதை அறிவோம்.

இத்தகைய சிறப்புமிக்க இளநீரை இரண்டாம் உலகப்போரின்போது சலைனுக்கு பதிலாகப் பயன்படுத்திய வரலாறும் காணக் கிடைக்கிறது. ஆனால், இளநீர் முற்றிய தேங்காயை அதன் சுவைக்காகவே கொண்டாடுகிறோம் எனலாம். கேரளத்தில் தேங்காய் இல்லாமல் எந்த உணவுமே இல்லை என்பதுபோல, தேங்காய் அதிகம் விளையும் தமிழகத்துக்கும் இது பொருந்தும்.

ஆனால், தேங்காய் எண்ணெயின் Saturated Fat என்ற கெட்டகொழுப்பு மாரடைப்புக்குக் காரணமாகிறது என்ற ஒரு தகவலுக்குப் பிறகு, தேங்காயை முற்றிலுமாக அனைவரும் புறக்கணிக்கத் தொடங்கிட, இவற்றுக்கான தீர்வாக வந்துள்ளது இந்த சமீபத்திய ஆய்வு.

உண்மையில், தேங்காயின் லாரிக் அமிலம் உட்பட்ட எம்சிடி என்ற மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள், மற்ற கொழுப்புகள் போலன்றி எளிதாக ஆக்ஸிஜனேற்றம் அடை வதால், உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுவதில்லை என்பதுடன், ரத்தத்தின் ஹெச்டிஎல் என்ற நல்ல கொழுப்பின் அளவைக் கூட்டுவதால் பருமன், நீரிழிவு, மாரடைப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்கிறது இந்த ஆய்வு.

மேலும் தேங்காயின் புரத அமைப்புகள் தசைகளுக்கு வலிமையைக் கூட்டுவதால் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பரிந்துரைக்கப்படுவ துடன், இவற்றின் பாலிபினால்கள் மற்றும் எம்சிடி பெண்களின் ஹார்மோன்களை சமன்படுத்தி, கருவுறும் ஆற்றலை அதிகரிப்பதுடன், கருத்தரித்தபின், மசக்கை, வயிற்று அழற்சி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குறைத்து, கருவின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன. அத்துடன் குழந்தை பிறந்தபின், தாய்ப்பால் சுரப்பையும் கூட்டுகிறது தேங்காய். அதனால்தான், நமது அன்றாடச் சமையலில் துருவிய தேங்காய், தேங்காய்ப்பால் என ஏதாவது ஒருவகையில் இதைச் சேர்த்ததுடன், கோயில், பூஜை ஆகியவற்றின் வாயிலாக இதன் பலன்களைப் பெண்களும் பெற்றிட நமது முன்னோர்கள் உதவியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

அடுத்து, முக்கனிகளில் ஒன்றான வாழை... வாழைமரம் என்பது பிரகஸ்பதி என்றும், மகாலக்ஷ்மியும் பார்வதியும் உள்உறையும் மரம் என்றும், செல்வத்தை, ஆரோக் கியத்தை, மகிழ்ச்சியை, சந்தான பாக்கியத்தைத் தருவிக்கும் இந்த இயற்கைப் படைப்பானது, தன்னிடம் இருக்கும் அனைத்தையும் பலன்க ளாக அள்ளித்தருவதுடன், தன் கன்றுகள் மூலமாகவும் தொடர்ந்து அப்பலன்களைத் தருவதால் தான், `வாழையடி வாழை' என்றும் போற்றப்படுகிறது..

உண்மையில் அதிக நார்ச்சத்து மற்றும் கலோரிகளுடன், பொட்டா சியம், கால்சியம், மாங்கனீஸ், வைட்டமின்கள் பி,சி,ஈ, கரோட்டினாய்டுகள், பெக்டின்கள், ஃபரக்டோ ஆலிகோசேக்கரைட்கள் என அனைத்தும் நிறைந்த பவர் பேக்டு பழமான வாழை பசியின்மை, தூக்கமின்மை முதல் புற்றுநோய் வரையிலான அனைத்து உபாதை களுக்குமான தீர்வாகவும் காணப்படுகிறது. முக்கியமாக, மன அழுத்தத்தைப் பெரிதும் குறைக்கும் மூளையின் செரட்டோனின் அளவை இதிலுள்ள ட்ரிப்ட்டோபன் கூட்டுவதால் மன அமைதியையும், நிம்மதியையும் தருவிக்கிறது வாழைப் பழம் என்கிறது மருத்துவ அறிவியல். இன்றளவும் வாழையையும் தேங் காயையும் மட்டுமே உட்கொண்டு தொழுநோய் குணமான சான்றுகளை இயற்கை மருத்துவர்கள் அளிக்கின்றனர்.

ஆக, அனைத்து இடங்களிலும் சுலபமாகக் கிடைக்கும் தேங்காயும், பழமும் ஆரோக்கிய வாழ்வுக்கான ஆதாரமாகவும் விளங்குவதால்தான், தம்மை இறைவனுக்குப் படைத்தபின் பக்தர்களாகிய நம்மை உட்கொள்ளச் செய்து, நமது ஆரோக்கியத்தை முழுமையாகப் பாதுகாக்கின்றன தேங்காய் - பழம்.

- மெய்ப்பொருள் தேடல் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism