Published:Updated:

மெய்ப்பொருள் காண்பது அறிவு - 8 - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா..!

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
பிரீமியம் ஸ்டோரி
News
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

ஏன் இந்தியர்களுக்கு பொட்டு வைப்பதன் மேல் இவ்வளவு காதல்?

செவ்வாய்க்கிரகத்துக்கு, சமீபத்தில் பெர்சிவீரன்ஸ் ரோவர் விண்கலம் வெற்றிகர மாகத் தரையிறங்கியதை உலகமே கொண்டாடி யது. அதிலும், நாசா கட்டுப்பாட்டு அறையி லிருந்து அனைத்தையும் வழிநடத்திய விஞ்ஞானி டாக்டர் ஸ்வாதி மோகன் என்ற இந்திய வம்சாவளிப்பெண் என்பதையும், குறிப்பாக அவர் நெற்றியில் வைத்திருந்த பொட்டையும் குறிப்பிட்டு, `பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா' என்றும் சமூக வலைதளங் களில் இந்தியர்கள் கொண்டாடிவிட்டனர்.

ஏன் இந்தியர்களுக்கு பொட்டு வைப்பதன் மேல் இவ்வளவு காதல்?

மங்கலச் சின்னங்களில் ஒன்றான பொட்டு வைத்தல் அல்லது திலகமிடுதல், ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்கிறது என்றாலும், எப்போது எவ்வாறு தொடங்கியது இதன் பயன்பாடு என்பதற்கு சுவைமிக்க புராணங்களும், சிந்திக்கச் செய்யும் வரலாறும் உள்ளன.

அப்போது பெண்களில் பார்வதிதேவிக்கும் நெற்றியில் ஒரு கண் இருந்ததாகவும், தன்னைப் போலவே மூன்று கண்களையுடைய சிவ பெருமானை திருமணம் செய்ய விரும்பிய பார்வதி அதற்காகத் தன் கண்ணையே அர்ப்பணம் செய்திட, பார்வதி இழந்த மூன்றாவது கண்ணின் ஞாபகமாகத் திருமணத்தின்போது சிவபெருமான் அவருக்கு திலகமிட்டதுதான், குங்குமத்தின் ஆரம்ப கதை என்றும் கூறுகின்றன சைவப்புராணங்கள்.

அதேசமயம், சீதையை மணமுடித்தபோது, தனது விரல் ரத்தத்தை நெற்றிப்பொட்டாக இட்ட ராமபிரானின் மீது தனது அன்பைக் காட்ட, சீதை தனது நெற்றியில் எப்போதும் செந்தூரம் இடுவதைக் கண்ட அனுமன், தானும் ராமனை எப்போதும் மறந்துவிடக் கூடாதென்று தனது உடல் முழுவதும் செந் தூரத்தைப் பூசிக்கொண்டதைக் கூறுகின்றன வைணவப் புராணங்கள்.

அதனால்தானோ என்னவோ, பார்வதியின் துர்கை மற்றும் மீனாட்சியம்மனின் ஆலயங் களில் நடப்பதைப் போலவே, பத்மாவதி தாயாரின் ஆலயங்களிலும் சைவ, வைணவ வித்தியாசமின்றி, குங்குமார்ச்சனை மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது.

ஒருபுறம் குங்குமம் இப்படிக் காதலையும் பக்தியையும் சொல்கிறது என்றால், மறுபுறம் மகாபாரதத்தில் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களின் மனைவி திரௌபதி கோபத்துடன், வேதனையுடன் `இனி என் அவமானம் தீரும் வரை அணிய மாட்டேன்' என்று தனது நெற்றிப்பொட்டை அழித்தது, இது பெண்களின் கௌரவம் என்றும் அதைக் காப்பது ஆண்களின் பொறுப்பு என்றும் அன்று இருந்ததை அறிந்துகொள்ளவும் முடிகிறது.

மெய்ப்பொருள் காண்பது அறிவு - 8 - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா..!

குங்குமமும் செந்தூரமும் தோன்றிய வரலாற் றைப் புராணங்கள் இப்படிக் கூறும்போதே, வலிமிகுந்த ஒரு வரலாற்றை மனித வரலாறு கூறுகிறது. கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்த ஆதிமனிதர்களில் ஆண்கள் வேட்டையாடி உணவு ஈட்ட, பெண்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். கூட்டங் களுக்கிடையே பகை மூண்டபோது மனித இழப்புகள் அதிகமாக, அதற்கு ஈடுகட்டவே தங்களின் பெண்களில் இனவிருத்திக்குத் தயாரான பெண்களை அடையாளம் காண அவர்களது மாதவிலக்கு ரத்தத்தைத் திலகமாக அணிவித்தனர் என்றும், இந்த வழக்கத்தில் ஆரம்பித்ததுதான் நெற்றிப்பொட்டு வரலாறு என்றும் கூறுகிறது அது. உருவான கதைகளில் மட்டுமல்ல... உருவாக்கப்படும் வகைகளிலும் வித்தியாசப்படுகின்றன இந்த நெற்றிப் பொட்டுகள்.

பாரம்பர்யமாக சிவப்பு, மெரூன் வண்ணங் களில் கிடைக்கும் குங்குமமானது விரலி மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு, கற்பூரம் ஆகியவற்றாலோ, குங்குமப்பூ, சிவப்பு சந்தனத்தாலோ தயாரிக்கப்படுகிறது. அதுவே, மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அடை யாளமாக விளங்கும் தாழம்பூ குங்குமமோ கஸ்தூரி மஞ்சள், வெங்காரம், எலுமிச்சைச் சாறு, நல்லெண்ணெய் சேர்த்து இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. என்றாலும் பெரும்பாலான தற்போதைய தயாரிப்புகளில் பல்வேறு செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப் படுவதுடன், பசையுடன்கூடிய ‘பிந்தி’ என்ற ஸ்டிக்கர்களே பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. வடமொழியில் பிந்தி என்றால் சிறு துளி/ துகள் என்று பொருளாம். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பிந்தஸ்’ எனும் சிறுதுகள், இந்தப் பிரபஞ்சம் உருவான தையும், அதன் புனிதத் தன்மையையும் நமக்கு உணர்த்துகிறது.

புனிதத்தை மட்டுமல்ல... இந்தக் குங்குமப் பொட்டு மகாலட்சுமியின் அம்சத்தைக் குறிக்கிறதென்றும், அது பெண்களின் வசீகரத்தை அதிகரிப்பதுடன் வளத்தையும் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுவதால்தான், மணப்பெண்ணின் நெற்றி வகிட்டில் முதன்முதலில் குங்குமம் இடுவதை, `சிந்தூர் தானா' என்று கொண்டாடும் வட இந்தியர்கள், கணவனுடன் புதுவாழ்வைத் தொடங்கும் மணப்பெண்ணுக்கு இந்தச் செந்தூரம் பொலிவு, ஆற்றல் மற்றும் அதிர்ஷ்டத்தை அளிக்கவல்லது என்று நம்புகின்றனர்.

பெண்கள் மட்டுமல்ல...

ஆண்களும் சுப நிகழ்ச்சிகளின்போதும், வெற்றிவாகை சூடிய பின்பும் சிவப்புநிற திலகத்தை அணிவது நாடெங்கிலும் நமது வழக்கிலுள்ளது. இந்தியா மட்டுமன்றி, பங்களா தேஷ், நேபாளம், இலங்கை, மலேசியா, வியட்நாம் எனத் தென்கிழக்கு ஆசியாவில் வசிக்கும் இந்துக்களும், ஜைன மற்றும் பௌத்த மதத்தினரும் புருவங்களுக்கு இடையே சிவப்பு நிற நெற்றிப்பொட்டை இட்டுக் கொள்வதை யும் காணமுடிகிறது.

சிந்துசமவெளி நாகரிக காலத்திலேயே இந்த வழக்கம் இருந்ததன் அடையாளமாக, அங்கே கண்டறியப்பட்ட களிமண் பெண் உருவங் களின் நெற்றியிலும், முன்வகிட்டிலும் பொட்டு காணப்பட்டது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறும்போதே, நம்பிக்கை ரீதியாக குங்குமம் வசியத்துக்கு எதிரானது என்று ஆரம்பித்து பல்வேறு விளக்கங்களை அளிக்கின்றனர் ஆன்மிக நம்பிக்கையாளர்கள்.

யோக முறைகளின்படி, நெற்றியில் குங்குமம் வைக்குமிடம் சிந்திக்கும் திறன் மற்றும் நினைவாற்றலுக்குரிய `ஆக்ஞா சக்கரம்' என்ற ஞானக்கண் என்று வழங்கப்படுகிறது என்றும், இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இந்த இடத்தில் சந்தனம் அல்லது குங்குமத்தை இடும்போது முகம் வெளிப்புறமாக பிரகாச மடைவதுடன், ஞானம், அமைதி, தெளிவு ஆகியன தூண்டப்பட்டு தியான நிலையை உள்ளே அடைய உதவுகிறது என்றும் நம்பப் படுகிறது. இதை முன்வைத்துதான், லாமா புத்த பிட்சுகளின் சடங்காக புருவ மத்தியில் சூடு வைக்கும் நிகழ்வு `ஞானக்கண் திறப்பு' என்று மேற்கொள்ளப்படுகிறது. நமது சிந்தனை நரம்புகள் அனைத்தும் ஒன்றுகூடும் ஆக்ஞா சக்கரத்தை ஆள்காட்டி விரலால் அழுத்தமாகத் தொடும்போது தியான நிலையை சுலபமாக அடைய முடியுமென்றும் கூறப்படுகிறது.

உண்மையில் திருமணமான நிலையையும், சுமங்கலி அந்தஸ்தையும் சொல்லும் இந்தக் குங்குமத்துக்கு அறிவியல் நன்மைகள் உள்ளனவா என்றால், மஞ்சள், சந்தனம், நல்லெண்ணெய் போன்ற இயற்கை பொருள் களை உள்ளடக்கிய குங்குமம் சிறந்ததொரு கிருமிநாசினியாக விளங்குவதுடன் சருமத்துக்கு குளிர்ச்சியையும் பாதுகாப்பையும் தந்து மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கிறது என்றும் கூறுகிறது அறிவியல்.

கூடவே எதிர்மறை எண்ணங்களை அகற்றி, மனவலிமையை குங்குமம் அதிகரிக்கச் செய்கிறது என்றும் கூறுகிறது. மூளையின் பிட்யூட்டரி மற்றும் ஹிப்போகேம்பஸ் பகுதிகள் நரம்பூக்கிகளை இது தூண்டவல்லது என்பதை முற்றிலும் மறுக்கிறது.

அதிலும், இன்று கடைகளில் வண்ணமயமாக விற்கப்படும் பெரும்பாலான செயற்கைப் பொடிகளில் உள்ள துத்தநாகம், ஈயம், மெர்க்குரி சல்ஃபைட் அல்லது ரோடமைன் போன்ற ரசாயனங்கள் உண்மையில் சரும அழற்சி, அரிப்பு, பொடுகு, முடியுதிர்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துவதுடன், இவற்றின் நீண்டகால பயன்பாடு நுரையீரல், சிறுநீரக, நரம்பியல் என இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடுமென்பதால் பயன்படுத்தும் முன், குங்குமத்தில் உள்ள உட்பொருள்களை சரிபார்க்கவும் அறிவியல் வலியுறுத்துகிறது.

எது எப்படியென்றாலும் தெய்வீகத் தன்மை மற்றும் மருத்துவ நன்மைகள் நிறைந்த இந்தக் குங்குமத்தை வைத்துக்கொள்வது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது தான்...

அது நாசா விஞ்ஞானி டாக்டர் ஸ்வாதி மோகனே ஆனாலும்..!

- மெய்ப்பொருள் தேடல் தொடரும்...