Published:Updated:

அம்மம்மாவின் சேலைகள்... ஆயிரம் நினைவுகள்!

ஐஷ்வர்யா ராவ்
பிரீமியம் ஸ்டோரி
ஐஷ்வர்யா ராவ்

நூலும் நூலும்

அம்மம்மாவின் சேலைகள்... ஆயிரம் நினைவுகள்!

நூலும் நூலும்

Published:Updated:
ஐஷ்வர்யா ராவ்
பிரீமியம் ஸ்டோரி
ஐஷ்வர்யா ராவ்

பாட்டி... இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே இனம்புரியா பாசம் மனதுக்குள் பரவும். பாட்டியின் அன்பும் அரவணைப்பும் அம்மாவின் அன்பையும் அரவணைப்பையும்விட உயர்ந்தது என்பதை உணர்ந்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆஸ்திரேலியா, சிட்னியில் வசிக்கும் சென்னைப் பெண் ஐஷ்வர்யா ராவுக்கும் பாட்டி என்றால் ஸ்பெஷல். கூடவே இன்னொரு விஷயமும்... பாட்டியின் சேலைகள். பாட்டியின்மீதும் அவரின் சேலைகள்மீதும் கொண்ட காதலின் வெளிப்பாடாக ‘ப்ளீட்டடு’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். புத்தகத்தின் முதல் பகுதிக்கு ‘தி ஸ்டோரி ஆஃப் அம்மம்மா அண்டு ஹர் சாரீஸ்’ என்றும், இரண்டாம் பகுதிக்கு ‘தி ஸ்டோரீஸ் ஆஃப் அன்கன்வென்ஷனல் விமன் இன் டிரெடிஷனல் டிரேப்ஸ்’ என்றும் பெயரிட்டுள்ளார்.

அம்மம்மாவின் சேலைகள்... ஆயிரம் நினைவுகள்!

நேர்த்தியாக நெய்யப்பட்ட பட்டுப்புடவையைப் போலவே இருக்கிறது புத்தகம். புடவையின் கொசுவத்தை நினைவூட்டுகின்றன புத்தகத்தின் பக்கங்கள். முதல் பகுதி முழுக்க பாட்டியின் வாழ்க்கைப் பதிவு... அடுத்த பகுதியில் சேலையில் புரட்சிசெய்த பெண்களின் சாதனை பகிர்வு என மிரட்டுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாட்டி மரகதவள்ளியின் போச்சம்பள்ளி புடவையில் அவரை அணைத்த படியே பேச ஆரம்பிக்கிறார் பேத்தி ஐஷ்வர்யா ராவ்.

‘`பிறந்தது பெங்களூரில். வளர்ந்தது சென்னையில். படித்தது அமெரிக்காவில். இப்போ இருப்பது ஆஸ்திரேலியாவின் சிட்னியில். அங்கே இ-காமர்ஸ் கன்சல்ட்டன்ட் டாக வேலை பார்க்கிறேன். போன வருஷம் என் அம்மம்மாவின் (அம்மாவின் அம்மா) 80-வது பிறந்தநாள் வந்தது. அதுக்கு ஏதாவது பண்ணணும்னு ஆசை. அம்மம்மாகிட்ட ரொம்ப அழகான, அந்தக் காலத்து கலர்களில் புடவைகள் இருக்கும். கம்மியான கலெக்‌ஷனா இருந்தாலும் ஒவ்வொண்ணும் அவ்வளவு அழகா இருக்கும். அம்மம்மாவின் வாழ்க்கையையும் அவங்களுடைய புடவைகளையும் இணைச்சு ஒரு கதையா புத்தக வடிவத்துல தொகுக்கலாம்னு யோசிச்சேன்.

புடவை கட்டிட்டு பொட்டு வெச்சிருந்தாலும் அவை அவங்களுடைய மாடர்ன் சிந்தனையை எந்த வகையிலும் தடுக்கலை...

ரித்தினு ஒரு பெண்ணின் இல்லஸ்ட் ரேஷன்ஸைத் தொடர்ந்து இன்ஸ்டாவில் பார்த்திட்டிருந்தேன். ரொம்ப பிடிச்சது. வெறும் கதையா கொடுக்காம, படங்களோடு சேர்த்துக் கொடுத்தால் இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்னு தோணினது. அப்படித்தான் இந்த முயற்சி ஆரம்பமானது. கடந்த ஒன்றரை வருஷமா ரெண்டு பேரும் சேர்ந்து இந்தப் புத்தகத்துக்காக வொர்க் பண்ணினோம். அம்மம்மாவுடைய ஒவ்வொரு புடவை கலரும் அவங்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு சம்பவத்தோடு தொடர்புடையதா தெரிஞ்சது. அப்படிப்பட்ட சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்’’ - அறிமுகத்தைத் தொடர்ந்து அழகான உதாரணமும் சொல்கிறார் ஐஷ்வர்யா.

ஐஷ்வர்யா ராவ்
ஐஷ்வர்யா ராவ்

‘`பாட்டியை, தாத்தா பொண்ணு பார்க்க வந்தபோது அவங்க கறுப்பு கலர் புடவையில இருந்தாங்களாம். பொண்ணு பார்க்க வரும்போது கறுப்பு கட்டக்கூடாதுங்கிற மாதிரியான விவாதத்தையெல்லாம் பாட்டி அனுமதிக்கலை. `இதுதான் நான்... இப்படித்தான் இருப்பேன்'னு அந்தக் காலத்துலேயே புரட்சியா யோசிச்சவங்க அவங்க. அம்மம்மாவோடு இந்தப் புத்தகத்துக்காகப் பேச ஆரம்பிச்சபோது இதைச் சொன்னாங்க. அப்பதான் புத்தகத்துக்கான இன்னொரு ஐடியா வந்தது. புத்தகத்தின் ஒரு பகுதி முழுக்க அம்மம்மாவின் கதை, இன்னொரு பகுதி முழுக்க பாட்டி மாதிரி சேலை உடுத்திட்டு மாடர்ன் சிந்தனையில் இருந்த பெண்களைப் பற்றி எழுதலாம்னு யோசிச்சேன்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா, ருக்மிணிதேவி அருண்டேல், ஜெயலலிதா மாதிரி குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்தேன். பெங்களூரு நாகரத்தினம்மாள்னு ஒருத்தங்களைப் பத்தி எழுதியிருக்கேன். அவங்களுடைய முயற்சியால்தான் தியாகராஜர் ஆராதனையில் பெண்கள் இன்னிக்குப் பாட முடியுது. அந்தக் கால நடிகைகள் பத்மினி. சாவித்திரி மாதிரியானவங்களும் இருக்காங்க. சாவித்திரியம்மா அந்தக் காலத்தில் தன் ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்கினவங்க. ரேஸ் கார் பிரியை. புடவை கட்டிட்டு, பொட்டு வெச்சிருந்தாலும் அவை அவங்களுடைய மாடர்ன் சிந்தனையை எந்தவகையிலும் தடுக்கலை’’ - புதிய கோணத்தில் சிந்தித்திருப்பவரின் புத்தகத்தில் கடவுள் சரஸ்வதியும் இருக்கிறார்.

‘`சரஸ்வதியை நாம கடவுளா யோசிக்கிறோம். ஆனா, அவங்க பாட்டு, டான்ஸ், படிப்புக்கான அடையாளமா தெரியறாங்க. தனக்குப் பிடிச்ச புரொஃபஷனை அவங்க தேர்ந்தெடுத்ததா எனக்குத் தோணுது. வெள்ளைப் புடவை மங்கலகரமானதில்லைனு நினைப்போம். சரஸ்வதி எப்போதும் வெள்ளைப் புடவையிலதான் இருக்காங்க. அவங்களை வணங்கிட்டுதான் வேலைகளை ஆரம்பிக்கிறோம்.

இப்படி வழக்கமான மரபுகளை உடைத்த பெண்களையும் என் புத்தகத்தில் பதிவு செய்ய நினைச்சேன். அம்மம்மா பிரமாதமா பாடுவாங்க. அவங்களை ‘காற்றினிலே வரும் கீதம்’ பாட்டைப் பாடச் சொல்லி எம்.எஸ் மாதிரியே பாடறியேனு தாத்தா பாராட்டின காட்சிகள் எனக்கு ஞாபகமிருக்கு.

புத்தகம்
புத்தகம்

அம்மம்மா குறைவாதான் பேசுவாங்க. தன்னுடைய எந்த வார்த்தையும் அடுத்தவங் களை காயப்படுத்திடக் கூடாதுங்கிறதுல கவனமா இருப்பாங்க. தாத்தா இறந்தபோது அம்மம்மாவுக்குள்ள அந்தத் தனிமையைப் பார்த்தேன். ‘தாத்தாவை மிஸ் பண்றியா’ன்னு பாட்டிகிட்ட கேட்டபோது கண்ணீரை மட்டும் பதிலா தந்தாங்க. வார்த்தைகளே இல்லாத அந்த எக்ஸ்பிரஷன் நிறைய விஷயங்களைப் பேசின மாதிரி இருந்தது’’ - தாத்தாவைப் பற்றி எழுதியுள்ள பக்கத்தை அம்மம்மாவுக்குக் காட்டுகிறார். பாட்டியின் பார்வை அதில் வெறிக்கிறது.

புத்தகத்தின் அத்தியாயங்களுக்கு மாம்பழம், கறுப்பு, வாடாமல்லி, கத்திரிப்பூ, மாந்துளிர், அரக்கு, மயில் கழுத்து, கிளிப்பச்சை, வெங்காயம் எனத் தலைப்புகள் வைத்திருக்கிறார். ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப்பகுதியையும் புடவையின் பார்டர் டிசைன்கள் விதம்விதமாக அலங்கரிக்கின்றன.

நூலும் நூலும்
நூலும் நூலும்

‘`கல்யாணத்துக்கு அரக்கு கலர்லதான் கூரைப்புடவை வாங்குவாங்க. பாட்டியோ, தனக்குப் பிடிச்ச வாடாமல்லி கலர்தான் வேணும்னு வாங்கி உடுத்திக்கிட்டாங்க. சுயமா முடிவெடுக்கும் அவங்களுடைய அந்தக் குணமும் தைரியமும் பிடிச்சது. இப்படி ஒவ்வொரு புடவை கலருக்கும் ஒரு கதை இருக்கு. அதனாலதான் அவற்றையே தலைப்புகளா வெச்சேன்’' - பின்னணி பகிர்கிறவர், அம்மம்மாவின் 80-வது பிறந்த நாளைக்கு அவருக்குப் பிடித்த மயில் கழுத்து கலர் பட்டுப்புடவையைப் பரிசளித்திருக்கிறார்.

‘`நான் வசிக்கிற ஆஸ்திரேலியாவில் சேலை கட்டும் தருணங்கள் குறைவு. ஆனாலும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புடவைக்கு மாறிடுவேன். என் பாரம்பர்யத்தை நான் விட்டுக்கொடுக்காமலிருக்கேன் என்பதற்கான விஷயமா இதைப் பார்க்கிறேன். அம்மாவுடைய புடவையையோ, பாட்டியின் புடவையையோ கட்டிக்கிறது இன்னும் ஸ்பெஷல் ஃபீலிங்’’ - அந்த உணர்வை நமக்கும் கடத்துகிறவர், அப்படியொரு ஸ்பெஷல் நபரைவைத்துத்தான் இந்தப் புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

‘`புடவைன்னு நினைச்சாலே எனக்கு நினைவுக்கு வர்றவங்க கர்னாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன். இந்த வயதிலும் அவங்களுடைய அந்தச் சிரிப்பும் சந்தோஷமான முகமும் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். என் புத்தகத்தில் இடம்பெற்ற பெண்களைப் போலவே அவங்களும் புடவையில் நடமாடும் மாடர்ன் சிந்தனைகள் கொண்ட பெண். அதனாலதான் அவங்களையே புத்தகத்தை வெளியிடச் செய்தோம். மீனாட்சி அம்மாளின் சமையல் புத்தகத்தைப் பார்த்து மைசூர் ரசம் வைக்கக் கத்துக்கிட்ட கதையெல்லாம் சொல்லி, கடைசியா ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடி எல்லாரையும் சிலிர்க்க வெச்சுட்டாங்க சுதா.

இந்தப் புத்தகத்தைப் படிக்கிற எல்லாருக்கும் அவங்களுடைய பாட்டி ஞாபகம் வரும். பாட்டியோடு பூ தொடுத்ததும், காய்கறி நறுக்கினதும், புள்ளிக்கோலம் கத்துக்கிட்டதும் ஞாபகத்துக்கு வரும். அந்த நினைவுகள் கொடுக்கிற சந்தோஷம் சாதாரணமானதில்லை. என்னுடைய சின்ன முயற்சி இப்படியொரு நல்ல நினைவுப் பகிர்தலுக்குக் காரணமாயிருக்குன்னு நினைக்கிறபோது பெருமையாகவும் இருக்கு’’ - மீண்டும் அம்மம்மாவை அணைத்துக் கொள்கிறார் பேத்தி.