Published:Updated:

டெல்லியை ஆண்ட இரண்டு மகாராணிகள்! - ஷீலா தீட்சித் - சுஷ்மா ஸ்வராஜ்

சுஷ்மா ஸ்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
சுஷ்மா ஸ்வராஜ்

துருவ நட்சத்திரங்கள்

டெல்லியை ஆண்ட இரண்டு மகாராணிகள்! - ஷீலா தீட்சித் - சுஷ்மா ஸ்வராஜ்

துருவ நட்சத்திரங்கள்

Published:Updated:
சுஷ்மா ஸ்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
சுஷ்மா ஸ்வராஜ்

ரண்டு அரசியல் தலைவர்களை - தலைநகர் டெல்லியை ஆண்ட இரண்டு பெண் முதல்வர்களை அடுத்தடுத்து இழந்திருக்கிறது இந்திய அரசியல் களம். ஒருவர், இந்தியாவின் அதிகார மையமான டெல்லியின் முதல்வராக 15 ஆண்டுகள் பொறுப்பேற்றிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித். மற்றொருவர், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ்.

டெல்லியில் பெண்கள் அதிகாரத்தின் முதற் படிக்கட்டில் இந்த இரண்டு பெண்களும் ஏறி அமர்ந்த கதை அரசியலுக்கு வரும் பெண்களுக்கான உற்சாக டானிக்கும்கூட. இருவருமே நிர்வாகத்திலும் அரசியல் பயணத்திலும் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர்கள்.

‘நன்றி மோடிஜி... வாழ்நாளில் இந்தத் தருணத்துக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்’ என்று காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்ததுதான் சுஷ்மாவின் கடைசி பதிவு. சொன்னதுபோல, அதற்காகவே காத்துக்கொண்டிருந்தாற்போலவே தன் மூச்சை நிறுத்திக்கொண்டார். நாடாளு மன்றத்தில் சுஷ்மாவின் முதல் உரை காஷ்மீர் தொடர்பானது. அவரது இறுதி ட்விட்டும் காஷ்மீர் தொடர்பானது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறுநீரகக் கோளாறு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டார் சுஷ்மா ஸ்வராஜ். சிகிச்சையில் இருந்தாலும்கூட அவரது வெளியுறவுத்துறை சார்பான எந்தப் பணிகளும் தடைபடவில்லை. 2019-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடாமல், அரசியலைவிட்டு விலகி ஓய்வெடுக்கப்போவதாக அறிவித்தபோது பெரிதும் மகிழ்ந்தது அவர் குடும்பம். குறிப்பாக அவர் கணவர் ஸ்வராஜ் கெளஷல்.

 ஷீலா தீட்சித்
ஷீலா தீட்சித்

90-களில் மிசோரம் ஆளுநராக பணியாற்றியவர் கெளஷல். சுஷ்மாவின் ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு, `41 ஆண்டுக்கால மாரத்தான் ஓட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது' என்றார் ஸ்வராஜ் கெளஷல். ஆம்... இது அரசியல் மராத்தான் ஓட்டம்.

சுஷ்மாவுக்கும் கெளஷலுக்கும் நடந்தது காதல் திருமணம். அரசியல் அறிவியல் முடித்துவிட்டு சட்டக்கல்லூரியில் சேர்ந்தார் சுஷ்மா. கல்லூரி நாள்களில் சுஷ்மாவுக்கு கெளஷலுடன் அறிமுகம் ஏற்பட, இருவரும் பழகி திருமணம் செய்துகொண்டு 44 ஆண்டுகள் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பின்பற்றியவர் சுஷ்மா. கெளஷலோ, சோசியலிஷ அரசியலை முன்னெடுத்து வந்தவர். எனினும், காதலுக்கு வேறுபாடுகள் கிடையாது என்பதால் இருவரும் ஒன்றிணைந்தனர். இருவருமே உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றினர்.

1952 பிப்ரவரி 14 அன்று ஹரியானாவில் பிறந்த சுஷ்மா ஸ்வராஜின் அரசியல் பயணம் ஏபிவிபி மாணவரணியில் தொடங்கியது.

1975-ல் இந்திரா காந்தி ஆட்சியில் `எமர்ஜென்ஸி'யை எதிர்த்துப் போராடிய சுஷ்மா, பின்னர் ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதன்பின் முழு நேர அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட சுஷ்மா, 25 வயதிலேயே தனது முதல் தேர்தலில் வெற்றிபெற்று ஹரியானா மாநில அமைச்சராகப் பதவியேற்றார். தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று ஹரியானா மாநில அமைச்சராகச் செயல்பட்டார். 1984-ல் ஜனதா கட்சி உறுப்பினர்களால் தொடங்கப் பட்ட பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கட்சியின் செயலாளர் பொறுப்பை ஏற்று, படிப்படியாக முன்னேறி பொதுச்செயலாளர் ஆனார்.

சுஷ்மா ஸ்வராஜ்
சுஷ்மா ஸ்வராஜ்

52 நாள்களே ஆட்சி என்றாலும், டெல்லியின் முதல் பெண் முதல் அமைச்சராகப் பதவியேற்றது சுஷ்மாதான். மாநிலங்களவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மத்திய அமைச்சரவையில் ஒளிப்பரப்புத்துறை, குடும்பநலம், வெளியுறவுத்துறை எனப் பல்வேறு துறைகளில் அமைச்சரானது என, சுஷ்மாவின் தீவிர அரசியல் பயணத்துக்குக் கிடைத்தது நல்ல அங்கீகாரம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில் காங்கிரஸின் ஊழலை வெளிக்கொணர்ந்து மக்களவையில் சுஷ்மா ஆற்றிய உரை நாடாளுமன்றச் சுவர்களில் எதிரொலித்தது. சாதுவான மக்களவை சபாநாயகர் எனப் பெயரெடுத்த மீராகுமார்மீது வீடியோ ஆதாரங்களோடு விமர்சனங்களை வெளியிட்டு சுஷ்மா பேசிய நாடாளுமன்ற உரையை அவ்வளவு எளிதில் யாரும் கடக்க முடியாது. 33 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தவர் சுஷ்மா. `நாடாளுமன்றத்தில் முடியவில்லை என்றால் கட்சியில் தொடங்குங்கள்' என, 33 சதவிகித இட ஒதுக்கீட்டை பா.ஜ.க-வில் பெண்களுக்கு உறுதிப்படுத்தியவர் சுஷ்மா.

அதே சுஷ்மா, சோனியா பிரதமராக எதிர்ப்புத் தெரிவித்ததும், சபதம் ஏற்றதும் வியப்பை ஏற்படுத்தியது. `சோனியா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றால் நான் மொட்டை அடித்துக்கொள்வேன். வெள்ளைச் சேலை கட்டிக்கொள்வேன். கட்டாந்தரையில் தான் படுப்பேன். தானியங்களை மட்டுமே உட்கொள்ளுவேன்' என்று மிகப்பெரிய சபதத்தை எடுத்தார் சுஷ்மா ஸ்வராஜ்.

பெண்கள் மேம்பாட்டுக்காகக் குரல் கொடுக்கவேண்டிய நேரத்தில் குரல் கொடுத்த சுஷ்மா, அரசியலில் பெண்ணாக இருந்தாலும் எதிர்க்கவேண்டிய நேரத்தில் தனது கொள்கையின்பால் நின்று எதிர்த்தார். ஐ.நா-வில் பாலின சமத்துவம் குறித்து உரையாற்றும்போது, `வீட்டுவேலை செய்யச் சொல்லி ஆண்களைப் பழக்குங்கள். பாலின சமத்துவம் தானாக வரும்' என சுஷ்மா ஆற்றிய உரை என்றும் நினைவில் நிற்கும்.

ஆனால், கர்நாடகாவில் சுஷ்மாவுக்கு நெருக்கமாக இருந்த ரெட்டி சகோதரர்கள் மீதான சுரங்க முறைகேடு நிரூபிக்கப்பட்டு ஜனார்த்தன ரெட்டி சிறைக்குச் சென்றது சுஷ்மாவுக்கு பின்னடைவை அளித்தது. நிதி முறைகேடு புகாரில் சிக்கிய ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, சுஷ்மா ஸ்வராஜ் உதவியது பெரும் சர்ச்சையானது.

2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான இந்திய - இஸ்ரேல் நாடாளு மன்ற நட்புக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார் சுஷ்மா. பல பொறுப்புகளை அவர் ஏற்றிருந்தாலும் மக்களிடையே என்றும் நினைவில் நிற்பது அவர் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றிய காலகட்டம்தான். இந்திரா காந்திக்குப் பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிவகித்த இரண்டாவது பெண் சுஷ்மா ஸ்வராஜ். அவர் அமைச்சராக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ததைக் காட்டிலும் பிரதமர் மோடி அதிக பயணம் செய்து சுஷ்மா வேலையைக் குறைத்துவிட்டார் என்பது போன்ற விமர்சனங்களைக் கடந்து, தனிநபர் சார்ந்து சுஷ்மாவிடம் உதவி கேட்டவர்களுக்கு அமைச்சர் என்பதைத் தாண்டி மனிதாபிமான அடிப்படையிலும் உதவியவர் சுஷ்மா.

சுஷ்மா அன்று...
சுஷ்மா அன்று...

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களுக்குத் தேவையான உதவியை மிக விரைவில் செய்து கொடுத்து மக்கள் மனத்தில் இடம்பிடித்தார். சமூக வலைதளங்களில் இந்தியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதோடு, ட்விட்டரில் பதிவிடப்படும் புகார்களுக்கும் உடனடியாகத் தீர்வுகண்டு உதவினார். இதனால் இளைஞர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப்பெற்றார் சுஷ்மா. `ஒரு ட்விட் போதும் சுஷ்மாவின் உதவியை நாட' என்பதுதான் சாமான்யர்களும் அவரை பா.ஜ.க தலைவர்களிலேயே வேறுபடுத்தி மிகவும் உயரிய இடத்தில் வைத்துப் பார்க்க காரணமாக அமைந்தது.

மும்பையைச் சேர்ந்தவர் ஹமீது நிஹால் அன்சாரி. சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றிய இவர், 2010–ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றபோது, உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜின் முயற்சிகளால், கடந்த 2016–ம் ஆண்டு விடுதலையாகி இந்தியாவுக்குத் திரும்பினார் ஹமீது. ‘வாகா எல்லையில் என்னை ஒப்படைத்தபோது, என் பெற்றோரை சந்தித்தேன். அப்போது, எனக்கு ஒரு தாய்தான். பின்னர், சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தபோது, அவர் என்னைக் கட்டிப்பிடித்து தைரியம் அளித்தார். அப்போது அவர் என் இரண்டாவது தாயாக தெரிந்தார். அந்த இழப்பை இப்போது உணர்கிறேன்' என்று சுஷ்மாவின் மரணம் அறிந்த ஹமீது நிஹால் அன்சாரி கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

இஸ்லாமியர்களுக்கு உதவினார் எனச் சொந்த கட்சிகாரர்களே ட்விட்டரில் சுஷ்மாவை விமர்சித்தார்கள். அவரது கணவரிடம் ட்விட்டர் மூலம் புகார் அளித்து சுஷ்மாவை கண்டிக்க சொன்னார்கள்.

‘எனது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டு தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்தார். உதவிக்குச் செவிலியர்களைக்கூட வைத்துக்கொள்ளாமல் அரசியல் பணி, அமைச்சர் பணிகளுக்கிடையே தானே அனைத்து உதவிகளையும் செய்தவர் சுஷ்மா. என் தந்தையின் விருப்பப்படி ஒரு மகளாக நின்று அவரது இறுதிச்சடங்கைச் செய்தார் சுஷ்மா. இப்படிப்பட்ட மனம் கொண்ட ஒருவரையா நீங்கள் எல்லாம் வசைபாடுகிறீர்கள்? என்னையும் கண்டிக்க சொல்கிறீர்கள்?’ என்று ட்விட்டரில் கேள்வி கேட்டார் ஸ்வராஜ் கெளஷல்.

சுஷ்மா ஸ்வராஜ் என்றால் ஸ்வெட்டருடன் அவர் அணியும் புடவை, மிகப் பெரிய பொட்டு, சிரித்த முகம், பழகியவர்களை பார்த்தவுடன் ஒற்றைக் கையால் வாரி அணைக்கும் அரவணைப்பு என்பதுதான் நினைவுக்கு வரும். அதே சுஷ்மா ஸ்வராஜ் 2019 ஆகஸ்ட் 6 அன்று மாரடைப்பால் அதே டெல்லியில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், அதிபர்கள், பிரதமர்களும் இரங்கல் தெரிவித்தது அவர் எத்தகைய நட்புடன் பழகியிருக்கிறார் என்பதை உணர்த்தியது. ‘இந்திய அரசியலின் மகத்தான தோர் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது' எனப் பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி.

காங்கிரஸ் மூத்த தலைவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு (2019 ஜூலை 20), ‘எதிர்க்கட்சியில் இருந்தாலும் இருவரும் நல்ல நண்பர்கள். தோழியை இழந்துவிட்டேன்’ என்று கட்சியை கடந்த நட்பை வெளிப்படுத்தியிருந்தார் சுஷ்மா ஸ்வராஜ். தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியை ஆண்டவர் ஷீலா தீட்சித். பஞ்சாப்பில் பிறந்து, டெல்லியில் வளர்ந்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வினோத் தீட்சித்தை காதல் திருமணம் செய்து, மூன்று முறை டெல்லி முதல்வராகப் பணியாற்றியவர் ஷீலா தீட்சித். டில்லியை ‘புது டெல்லி’ என நவீனமயப்படுத்தியவர் ஷீலா தீட்சித்தே. அதனால்தான் அவரது மறைவன்று ஷீலாவை எதிர்த்து அரசியல் கட்சி தொடங்கி, அரசியல் செய்து, ஷீலாவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், `ஷீலா தீட்ஷித் இறப்பு டெல்லிக்குப் பெரியதொரு இழப்பு. அவரது பங்களிப்பு என்றுமே நினைவுகூரப்படும்' என்று இரங்கல் குறிப்பு எழுதினார்.

ஷீலா பொறுப்பேற்ற பிறகு டெல்லியில் நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை அமைத்தார். போக்கு வரத்து நெரிசல் டெல்லியில் மிகப் பெரிய சவாலாக இருந்தது ஷீலாவுக்கு. நாளுக்கு நாள் டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து வேலை தேடி தலைநகரத்துக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதை மனத்தில்கொண்டு டெல்லியின் போக்குவரத்தைச் சரி செய்தார். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தையும் மெருகேற்றினார்.

டெல்லி இன்று ஓரளவுக்குச் சுவாசித்து கொண்டிருக்கிற தென்றால் அதற்குக் காரணம் சிறியதும் பெரியதுமாக ஷீலா உருவாக்கிய 20,000-க்கும் மேற்பட்ட பூங்காக்களே. ஷீலாவின் பணிகளை டெல்லி ஒருபோதும் மறக்க முடியாது.

காவல்துறை டெல்லி முதல்வரின் கட்டுப் பாட்டில் இல்லை என்றாலும் நிர்பயா பாலியல் சம்பவத்தின்போது மிகப் பெரிய சர்ச்சைக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானார் ஷீலா. சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று அனைவரும் குரல் கொடுத்தபோது ஷீலா தீட்சித், `பெண்கள் முன்னேற வேண்டும் என்றால் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துங்கள். சமூகத்தில் மாற்றம் ஏற்படும்' என்றார்.

இப்படி சமீபத்தில் காற்றில் கரைந்த இரண்டு தேவதைகளும் தங்கள் அரசியல் பணிகளால் உயர்ந்து நிற்கிறார்கள். அரசியல் வானில் சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித் இருவருமே துருவ நட்சத்திரங்கள்!