Published:Updated:

காணவில்லை: ரொமான்ஸ்! தம்பதிகளுக்குச் சில வார்த்தைகள்

ரொமான்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ரொமான்ஸ்

#Lifestyle

காணவில்லை: ரொமான்ஸ்! தம்பதிகளுக்குச் சில வார்த்தைகள்

#Lifestyle

Published:Updated:
ரொமான்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ரொமான்ஸ்

அனுசுயா எம்.எஸ்

டிவி-யில் ‘எந்திரன்’ படத்தில், பார்க்கில் வைத்து ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் காதல் ரத்து செய்யும் காட்சி. `ரொமான்டிக்கா ஒரு கிஃப்ட்டாச்சும் கொடுத்திருக்கீங்களா?' என ஐஸ், ரஜினியிடம் கேட்க... அதைப் பார்த்துக் கொண்டிருந்த 8 வயது மகள் என்னிடம், “ரொமான்டிக்னா என்னம்மா?” என்றவள், பதிலை எதிர்பார்க்காமல் சேனலை மாற்றி, ‘நாய் சேகர்’ காமெடியில் மூழ்கிவிட்டாள். என் மனமோ, ‘ரொமான்டிக்னா என்ன?’ என்ற புள்ளியில் தொடங்கி, ‘ரொமான்ஸ்னா என்ன?’ என்பதுவரை யோசித்தது.

`இவன்/இவள் பிறக்கிற வரைக்கும் எல்லாம் இருந்துச்சு. இப்போ எல்லாம் நேரமே இல்லை...’, `ஒழுங்கா மூஞ்சி பார்த்துப் பொட்டு வெச்சே பல மாசம் ஆச்சு. நீ என்னடான்னா புழக்கத் துல இல்லாத ஒரு வார்த்தையைப் பத்தி பேசிக் கிட்டு இருக்க’ - சரி தோழிகள்தாம் இப்படி ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றனர், ஆண்களிடம் கேட்கலாம் என்று நினைத்து நட்பு வட்டத்தில் இருக்கும் சில ஆண்களிடமும் பேசினேன். அவர்களின் பதில் ஒன்றுதான்: `குழந்தை வந்ததும் அவ விலகிட்டா. அப்படியே நானும் எஃபர்ட் போடுறதை விட்டுட்டேன்.'

நான் பேசிய எவருக்குமே ரொமான்ஸ் என்ற பதத்தைப் பற்றிய புரிந்துணர்வு இருந்ததாகத் தெரியவில்லை. ரொமான்ஸ் என்பது, ஏதோ யாருமில்லாத பிரதேசத்தில் இருவருக்கு இடையே நடக்கும் ஒரு ‘சமாச்சாரம் (நன்றி: இயக்குநர் பாக்யராஜ்)’ என்ற மனப்பான்மை இங்கு நிலவுகிறது. உண்மையில் அதுவா ரொமான்ஸ்?

‘அலைபாயுதே’வில் மாதவனுக்கும் ஷாலினிக்கும் கல்யாணத்துக்கு முன் மற்றும் கல்யாணத்துக்குப் பின்பான சில காட்சிகளில் திரையில் தெறித்ததுதான் ரொமான்ஸ் என்றால், ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் வயோதிகத்தில் சூர்யா மற்றும் சிம்ரனுக்கு இடையில் காட்டப்பட்டதன் பெயர் என்ன? கேள்வி எழுகிறதுதானே...

நான் மேலே குறிப்பிட்ட ஆண்களும் பெண்களும் ஒரு காலத்தில் மணிரத்னம் படத்தில் வரும் காதலர்களை விஞ்சிய வர்கள். லேண்ட்லைனில், சார்ஜ் போட்ட படியே நோக்கியாவில் என விடிய விடிய விடிய ‘சங்கீத ஸ்வரங்கள்’ பேசி, பேசியதையே திரும்பத் திரும்ப பேசி, காதல் வாழ்க்கையை ரொமான்ஸால் நிரப்பியவர்கள்.

காணவில்லை: ரொமான்ஸ்!
தம்பதிகளுக்குச் சில வார்த்தைகள்

`அவர் ரொம்பவே ரொமான்டிக் டி' எனச் சொன்ன பள்ளித் தோழி சங்கீதா இப்போது, `அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதே இப்போ நீ கேட்டதும்தான்டி நினைவுக்கு வருது' என்கிறாள். எந்தப் புள்ளியில் ரொமான்ஸ் - ரொமான்டிக் என்ற மனநிலை அவர்களை விட்டுப் போனது?

வெகுகாலமாக நான் பார்த்து வரும் ‘ஹைலி ரொமான்டிக்’ தம்பதியான பிமல் - தாரணி பற்றிச் சொல்வதற்கு முன், ராஜீவ் - ராகினியைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். எங்கள் அலுவலகம் முழுவதும், ‘ரொமான் டிக்பா அவங்க’ என முத்திரை குத்திய ஜோடி. ஐந்து வருடக் காதலை, இரு வீட்டாரையும் கஷ்டப்பட்டு சம்மதிக்க வைத்து, இந்த வருட ஜனவரியில் திருமணத்தில் முடித்தவர்கள்.

ராகினியின் பிறந்த நாளுக்கு அவளுடைய வொர்க் ஸ்டேஷன் முழுவதும் அவளுக்குப் பிடித்த கலர் பலூன் களால் அலங்காரம் பண்ணி அசத்துவது, அவள் பாஸிடம் திட்டு வாங்கினால் கேஃபேடீரியாவில் ஐஸ் க்ரீம் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்துவது போன்ற சில பல ரொமான்டிக் ஐடியாக் களைத் தெறிக்கவிட்ட இளைஞன் ராஜீவ்.

‘வசூல்ராஜா’ பட ‘கட்டிப்பிடி வைத்தியம்’ நமக்குத் தெரியும். ஆனால், ‘கைப்பிடி வைத்தியம்’ பற்றித் தெரியுமா? வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள பிரச்னைகளால் ராஜீவ் துவண்டுபோகும் தருணங்களில், யாரும் பார்க்காதபடி ரகசியமான ஒரு நொடியில் அவனது கையை அவள் அழுத்திச் செல்வது வழக்கம். இப்படி ஐஸ்க்ரீமும், கை வைத்தியமுமாக ஜில்லென்று வலம்வந்த ஜோடி, கல்யாண வாழ்வைத் தொடங்கி இதோ 10 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் அவளிடமிருந்து கால்.

`அவன் நிறைய மாறிட்டான். முன்னாடி யெல்லாம் எவ்வளவு ரொமான்டிக்கா இருப் பான் தெரியும்ல? இப்ப சுட்டுப் போட்டாலும் ரொமான்ஸ் வரமாட்டேங்குது. எப்பப் பாரு லேப்டாப், போன்கால்னுதான் இருக்கான்' என நொறுங்கி அழத் தொடங்கினாள். அவளை சமாதானப்படுத்தி போனை வைத்தபின் ராஜீவுக்கு மெசேஜ்ஜினேன். எதிர்பார்த்தது போலவே அவன் வெர்ஷன் வேறாக இருந்தது.

`மேனேஜர் டார்ச்சர், வேலை வேற கிழியுது. இதுவே நான் தனியாய் இருந்திருந்தா இதுவரை அனுபவித்த டார்ச்சருக்குப் பேப்பரைத் தூக்கிப்போட்டுட்டுப் போயிட்டிருப்பேன். இப்ப இவ இருக்கா. ஏற்கெனவே, எங்க ரெண்டு சைடும் நிறைய பிரச்னைகள். அதோடு சேர்த்து இவளும் என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறா. இவளுக்காகத்தானே இப்படி இருக்கேன்னு நீங்களாச்சும் அவளுக்குப் புரியுற மாதிரி சொல்லுங்க' என்றான் படபடவென. அவனிடம், `சரி கடைசியா எப்போ அவளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தே?' என்றபோது கிடைத்த பதில் மௌனம்.

இப்போது தாரணி பற்றிச் சொல்கிறேன்.தாரணி என் முன்னாள் பாஸ். என்னைவிட பல வருடங்கள் மூத்தவர். 70'ஸ் கிட்ஸ். 17 வயதில் ஒரு மகன், 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார்கள். போன வருடம்தான் வேலையை விட்டுவிட்டு கணவரின் ஸ்டார்ட்அப்பில் ஜாயின்ட் டைரக்டரானார். அம்மாவின் உடல்நிலை காரணமாக பூர்வீகமான கொல்கத்தாவுக்குப் போனவர், லாக்டௌனால் குழந்தைகளுடன் அங்கே மாட்டிக்கொண்டபோது, எனக்கு போன் செய்திருந்தார்.

‘பிமலின் பிறந்தநாளுக்கு அவருடன் இருக்க முடியலை. குழந்தைகளும் நானும் இங்கே மாட்டிக்கிட்டோம். வீட்டுக்குப் பக்கத்துல இருக்கும் போட்டோ கடையொன்றில் ஸ்பெஷலா ஒரு ‘போர்ட்ரைட்’ ஆர்டர் பண்ணிருக்கேன். பிறந்தநாளன்னிக்கு அந்தக் கடையிலிருந்து அதை வாங்கி, என் வீட்டுக்குப் போய் பிமல்கிட்ட சர்ப்ரைஸா கொடுத்துட முடியுமா? அவர் தனியா இருக்குறதா உணர்ந்துடக் கூடாது, அதான்...’ என்றார்.

நிச்சயம் செய்வதாகச் சொல்லிவிட்டு, ‘எவ்ளோ வயசானாலும் ரொமான்ஸ் மட்டும் குறையலை’ என்று கலாய்த்தேன். `நான் ரொமான்டிக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனா, நான் இருக்கேன் அப்படீங் கறதை அவரை உணர வைக்க வேண்டியது அவசியம்' என்று சொன்னவரின் வயது 47.

உணர்தலும் உணரச் செய்தலும்கூட ரொமான்ஸ்தான். காதலை, திருமண உறவை காலத்துக்கும் உயிர்ப்புடன் இருக்க வைக்கும் ரசவாதம் எதுவோ அது ரொமான்ஸ் எனத் தோன்றுகிறது. சரியா தோழிகளே..?

ரொமான்ஸைஉயிர்ப்புடன் வைத்திருக்க...தம்பதிகள் ப்ளீஸ் நோட்!

 வாரத்தில் அல்லது மாதத்தில் ஒரு நாள், ஒரே ஒரு நாளில் ஒரு சில மணி நேரம் உங்களுக்கு என்று ஒதுக்குங்கள். அது உங்களுக்கு மாத்திரமே ஆனது.

 ஹெலிகாப்டரிலிருந்து டன் கணக்காக மலர் களைத் தூவுவதுதான் ரொமான்ஸ் என்றில்லை. மனைவி துணிகளை உலர்த்தும்போது க்ளிப் போடுவது தொடங்கி அவர் செய்த சமையல் சுமாராகவே இருந்தாலும் நன்றாக இருப்பதாக ஒரு சிறிய பாராட்டைக் கொடுப்பதுவரை ரொமான் ஸின் வீச்சும் எல்லையும் ரொம்பப் பெருசு.

 மழைக்காலத்தில் லாங் டிரைவ் போவது ஒரு வகை எனில், வீட்டு மொட்டை மாடிக்குப் போய் துணையின் கைப்பிடித்து மழையில் நனைவது இன்னும் அழகிய ரொமான்ஸ்.

 ஒருவரின் மீது ஒருவர் கடுஞ்சொற்களைப் பேசுவதைத் தவிர்க்கவும். சிறிய தவறு செய் தாலும் மன்னிப்புக் கேட்கும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். நினைவிருக் கட்டும், ‘மன்னிப்புக் கேட்கிறவன் மனுஷன், மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்.’

 இவை அனைத்தையும்விட, ‘உனக்காக நானிருப்பேன்’ என்பதை அழுத்தமாக உணர்தலும் - உணரச் செய்தலும் முக்கியம்.