Election bannerElection banner
Published:Updated:

22 கிலோ எடைகுறைத்த விஸ்மயா மோகன்லால்... வெயிட்லாஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?

விஸ்மயா மோகன் லால்
விஸ்மயா மோகன் லால் ( Instagram )

விஸ்மயா கற்றுக்கொண்ட ‘முயே தாய்’ என்கிற தற்காப்புக்கலை ‘தாய் பாக்ஸிங்’ என்றும் அழைக்கப்படுகிறது.

மலையாள நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், ஸ்டார் வாரிசுகளில் தனித்துத் தெரிகிறார். அப்பாவின் நடிப்புப் பாதையில் தானும் பயணப்படாமல் புத்தகங்கள் எழுதுவது, தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்வது என்று சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

விஸ்மயா எழுதிய கவிதைகள், மற்றும் இவரது ஓவியங்களின் தொகுப்பு ‘கிரெயின்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்’(Grains of stardust’) என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வெளிவர இருக்கிறது.

விஸ்மயா மோகன் லால்
விஸ்மயா மோகன் லால்
Instagram

தற்போது தாய்லாந்தில் வசித்துவரும் விஸ்மயா ‘முயே தாய்’ என்கிற தாய்லாந்தின் பிரசித்தி பெற்ற தற்காப்புக் கலையைப் பயின்று வருகிறார். இந்த தற்காப்புக்கலை பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் வீடியோ ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட விஸ்மயா, தற்போது பயிற்சியை நிறைவு செய்தது குறித்த தகவலையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாது இந்தத் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொண்டதன் மூலம் தனது உடல் எடையில் 22 கிலோவைக் குறைத்தது குறித்த தகவலையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.

விஸ்மயா வெளியிட்டிருக்கும் உடற்பருமனுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் உடல் எடையைக் குறைத்ததற்குப் பிறகு எடுத்த புகைப்படம் ஆகியவை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் தனது பயிற்சியாளரான டோனிக்கு நன்றி தெரிவித்திருக்கும் விஸ்மயா, ‘முயே தாய்’ தன்னுடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்துவிட்டதாகவும் நெகிழ்ந்திருக்கிறார்.

பிரபலங்கள் தாங்கள் உடல் எடையைக் குறைத்த விதம் குறித்து இதுபோன்று பொதுவெளியில் தகவல்களைப் பகிரும்போது, அது சாமான்ய மக்களுக்கு எடை குறைப்பு குறித்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் ஒருசேரத் தந்துவிடுகின்றன என்கின்றனர் நெட்டிசன்கள்.

நடிகராக மட்டுமே நமக்கு மோகன்லாலைத் தெரியும். இவர் குஸ்தி என்கிற மல்யுத்தக் கலையை நன்கு கற்றறிந்தவர் என்பது பலரும் அறியாதது. அதேபோல ‘டேக்வொண்டோ’ எனப்படும் கொரியத் தற்காப்புக் கலையிலும் மோகன்லால் பிளாக் பெல்ட் வாங்கியவர். மோகன்லாலை போலவே அவரின் மகன் பிரணவ்வும் தற்காப்புக்கலைகள் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கிறார்.

விஸ்மயா மோகன் லால்
விஸ்மயா மோகன் லால்
Instagram

விஸ்மயா கற்றுக்கொண்ட ‘முயே தாய்’ என்கிற தற்காப்புக்கலை ‘தாய் பாக்ஸிங்’ என்றும் அழைக்கப்படுகிறது. குத்துச்சண்டையை ஒத்திருக்கும் இந்தத் தற்காப்புக் கலை உடலை ஆயுதமாகவும் கேடயமாகவும் பயன்படுத்தும் சூட்சுமத்தைக் கற்றுக்கொடுக்கிறது. ஆபத்திலிருந்து தங்களது உயிரைக் காத்துக்கொள்ள உதவும் கருவியாக பழங்காலத்தில் இக்கலை மக்களால் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக தாய்லாந்தை ஆண்ட மன்னர்கள் ‘முயே தாய்’ கலையில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு