Published:Updated:

நயன்-விக்கிக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தைகள்? சில பிரபலங்கள் விரும்பும் Surrogacy முறை இப்படித்தான்!

Nayanthara - Vignesh Sivan with kids

பல்வேறு காரணங்களால் கருவுற இயலாத தம்பதிக்கு, குழந்தை பேறு அளிக்கும் செயல்முறையே வாடகைத்தாய் முறை. இதில் ஒரு பெண்ணின் கருமுட்டை, ஆணின் விந்தணு கொண்டு மருத்துவ முறையில் கருவை உருவாக்கி, பின் வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தி, குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது.

நயன்-விக்கிக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தைகள்? சில பிரபலங்கள் விரும்பும் Surrogacy முறை இப்படித்தான்!

பல்வேறு காரணங்களால் கருவுற இயலாத தம்பதிக்கு, குழந்தை பேறு அளிக்கும் செயல்முறையே வாடகைத்தாய் முறை. இதில் ஒரு பெண்ணின் கருமுட்டை, ஆணின் விந்தணு கொண்டு மருத்துவ முறையில் கருவை உருவாக்கி, பின் வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தி, குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது.

Published:Updated:
Nayanthara - Vignesh Sivan with kids

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. நீண்ட நாள்களாக இனித்துக் கொண்டிருக்கும் காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையாக சீரும் சிறப்புடனும் செழிக்க, திரையுலகினரும், தமிழ் சினிமா ரசிகர்களும் நயன் - விக்கி தம்பதியை வாழ்த்தி சமூக வலைதளங்களை நிரம்பச் செய்திருந்தனர். திருமணத்தை அடுத்து, தேனிலவு பயணமாக உலக நாடுகளை வலம் வந்த காதல் தம்பதி, சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் படு வைரல். அதே போல, இன்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்... சில மணி நேரத்தில் பல லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவில், “நயன்தாரவும் நானும் அம்மா, அப்பாவாக ஆகிவிட்டோம். நாங்கள், இரட்டை ஆண் குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் இருவரின் பிரார்த்தனைகள் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் ஆகியவை இணைந்து இரு குழந்தைகளின் வடிவில் எங்களை வந்து சேர்ந்துள்ளது. எங்களின் உயிரும், உலகமுமான இரு குழந்தைகளுக்கும் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் வேண்டும். எங்களின் வாழ்க்கை மிக அழகாகவும், பிரகாசமாகவும் தெரிகிறது” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இரு குழந்தைகளின் புகைப்படங்களை கொஞ்சுவது போல் புகைப்படங்களை வெளியிட்டு, தான் இயக்கிய ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ’ஐ லவ் யூ டூ’ என்ற பிரபல டயலாக்கையும் குறும்புடன் பதிவிட்டு, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

நயன்- விக்கி
நயன்- விக்கி

சமீபத்தில்தான் திருமணமான விக்கி - நயன் தம்பதிக்கு இவ்வளவு விரைவில், எப்படி குழந்தை பிறப்பது சாத்தியம் என்ற கேள்விகளுடன் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்களின் சந்தேகங்களுக்கான விடை எதுவும் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் சோஷியல் மீடியா பதிவுகளில் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில், விக்கி - நயன் தம்பதி ’Surrogacy’ என சொல்லப்படும் வாடகைத்தாய் முறை மூலம் தாய், தந்தையராக இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளதாக சில தகவல்கள் பரவிவருகின்றன. எனினும் இது குறித்து விக்கி - நயன் தரப்பு எதுவும் குறிப்பிடவில்லை.

பாலிவுட் பிரபலமான ஷாருக் கான்- கெளரி தம்பதி கடந்த 2013-ம் ஆண்டு வாடகைத்தாய் முறை மூலம் பெண் குழந்தைக்கு தாய், தந்தை ஆகினர். அதன் பிறகு, அமீர் கான், சல்மான் கான், கரண் ஜோஹர், ப்ரீத்தி ஜிந்தா, சன்னி லியோன், துஷார் கபூர் மற்றும் ஏக்தா கபூர் என வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது. சமீபத்தில், ப்ரியங்கா சோப்ரா - நிக் தம்பதியும் பெண் குழந்தையை இம்முறையில் பெற்றெடுத்ததன் மூலம் இந்த வரிசையில் இணைந்தனர்.

வாடகைத்தாய் முறை

பல்வேறு காரணங்களால் கருவுற இயலாத தம்பதிக்கு, குழந்தை பேறு அளிக்கும் செயல்முறையே வாடகைத்தாய் முறை. இதில் ஒரு பெண்ணின் கருமுட்டை, ஆணின் விந்தணு கொண்டு மருத்துவ முறையில் கருவை உருவாக்கி, பின் வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தி, குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது. ஆண், பெண் என இருவரும் தங்கள் கருமுட்டை/விந்தணு மூலம் இம்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

Traditional Surrogacy

இந்த பாரம்பர்ய முறையில் (Traditional Surrogacy), வாடகைத் தாய்க்கு, குழந்தை வேண்டும் தம்பதியில் ஆணின் விந்தணு மருத்துவ முறையில் உட்செலுத்தப்பட்டு, கரு உருவாக்கி, குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட தம்பதியே அந்தக் குழந்தைக்கு சட்டப்படி பெற்றோர் ஆவர்.

Gestational Surrogacy

ஜெஸ்டேஷனல் சரொகசி (Gestational Surrogacy) முறையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணின் கருமுட்டையில், அவர் கணவரின் விந்தணுவை செலுத்தி கருவுறச் செய்து, அந்தக் கருவை வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் பொருத்தி குழந்தைப் பேறு அடைய வழிவகை செய்யப்படுகிறது. இந்த முறையில், கருமுட்டை, விந்தணு இரண்டும் சம்பந்தப்பட்ட தம்பதியுடையதாக இருப்பதால், வாடகைத்தாயின் மரபு பண்புகளை குழந்தை பெறுவது தவிர்க்கப்படுகிறது.

சிசு (சித்திரிப்பு படம்)
சிசு (சித்திரிப்பு படம்)

வாடகைத்தாய் முறை மூலம் குழந்தைப் பேறு என்பது, இயல்பான குழந்தைப் பேறுக்கு இணையான மருத்துவச் சிக்கல்களை உள்ளடக்கியதே. வாடகைத்தாய் முறை மூலம் பெறப்படும் குழந்தையின் சட்டபூர்வ உரிமைகள் தொடர்பான எதிர்காலச் சிக்கல்களை தவிர்க்க, பெற்றோர் மற்றும் வாடகைத் தாய்மார்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது.