Published:Updated:

`ஆழ் மனதைக் கேள், அது உன்னை வழிநடத்தும்!' - அன்புக் குழந்தையை ஐ.ஏ.எஸ் ஆக்கிய தாய் #WowMom

அன்னையர் தின சிறப்பு பகிர்வு!  #MothersDay
அன்னையர் தின சிறப்பு பகிர்வு! #MothersDay

நித்தமும் அம்மாவிடம், நான் படித்ததை எனக்கு விளங்க அவருக்குப் பாடம் எடுப்பேன். அலுவலகப் பணி, பின் வீட்டில் அயராது பணி இருக்கும் அம்மாவுக்கு. ஆனாலும், கிஞ்சித்தும் தளராமல் அன்பை மட்டுமே இழைத்து, எனக்கு ஊக்கத்தைச் செலுத்தினார்.

இப்பிரபஞ்சம் என்ற ஆலயத்தில், அளப்பரிய அன்பை மட்டுமே கொண்ட தெய்வம் ஒன்று உண்டு எனில், அது பெற்ற தாயைத் தவிர வேறில்லை. அந்த உயிர் ஊசலாடும்போதும், பிள்ளைகளின் நலனையே அந்தக் காற்றிடமும் பேசி சுவாசித்துக்கொண்டிருக்கும். அந்த உயிர் பிரிந்த பின், எத்தீமைகளும் தான் ஈன்ற பிள்ளைகளை நெருங்கா வண்ணம் தன் எண்ணத்தால், செயல்களால் அவள் தரித்து வைத்திருந்த காவல் வளையம் அகற்றப்பட்டு, `இனி நிராயுதபாணியாக நின்று பழகிக்கொள்' என அந்த இயற்கை நம்மை ஒரு கணம் எகத்தாளிக்கும்.

அந்த இயற்கையின் எதிரொலியை, தாயன்பின் நினைவுகளை நெஞ்சில் ஏந்தி, அவள் வளர்ப்பின் கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு வரும் காலங்களைக் கடந்துவிடலாம் என்று எத்தனித்தபோது... நினைவுகள் பின்னோக்கிச் சுழன்றன.

க.கமலா
க.கமலா

`அம்மா ஸ்கூலுக்குப் போகணும்!'

பாலக்காடு. ஒரு மழைக்காலத்தின் காலை நேரம். முன்னிரவில் பெய்த அடைமழை விடாமல் தூறிக்கொண்டிருக்கும் அந்த மண்வாசனை இன்னும் மனதை விட்டுஅகலவில்லை. நான், `அம்மா ஸ்கூலுக்குப் போகணும்...' என்ற ஒற்றை ஏக்கத்தில் அழுதுகொண்டிருப்பேன். அம்மா, அப்போது பாலக்காடு ரயில்வே மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்.

அம்மாவின் கை விரல்களைப் பிடித்துக்கொண்டு, சாலையைக் கடந்து, காலை நேரத்தில் பயிற்சிக்காகக் கைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கும் வாலிபர்களையும், `தொப்', `தொப்' என்ற சத்தத்துடன் வலையின் இருபுறமும் மாறி மாறிப் பாயும் கைப்பந்தின் ஒலியையும் கடந்து, ஒரு சிறிய படிக்கட்டில் ஏறி, ரயில்வே காலனி சாலையை அடைவோம். அண்ணன் கையில் ஒரு அழகான நீல நிறத்திலான சூட்கேஸ் போன்ற பெட்டியில் புத்தகங்கள் வைத்திருப்பான். அவனைப் பார்க்க, `நானும் அம்மா ஸ்கூலுக்குப் போகணும்' என்ற எண்ணம் அடக்க முடியாமல் பீறிட்டு எழும். ``அடுத்த வருஷம் அம்மா ஸ்கூலுக்கு வரலாம்மா என்று" சொல்லி என்னை சாந்தப்படுத்த முயன்று, எனது தேம்பலால் அம்மாவும் அழுதுவிடுவார்.

மூன்று மாதங்கள் இப்படியாக அழுதே கரைத்தேன். பிறகு, நர்சரி பள்ளிக்குச் செல்லாமல், ஒரு ஆறு மாதங்களுக்குப் பிறகு அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு சந்தோஷமாக `அம்மா ஸ்கூலுக்குச்' செல்ல ஆரம்பித்தேன், முதன்முதலாய், போராடி வென்றதைப்போல் ஒரு திருப்தி.

பள்ளிப் பருவத்தில் அன்னை பயிரிட்ட பழக்கங்கள்!

பள்ளி நாள்களில், முன்தினம் இரவு படித்ததை மறுநாள் காலை நினைவூட்டிக்கொள்ள வேண்டும். அன்றாடப் பாடங்களை அன்றைக்கே புரிந்து படித்து எழுதிப் பார்த்துவிட வேண்டும். அந்தக் காலத்தின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பருகுவதாக விளம்பரத்தில் வரும் பூஸ்ட்தான், காலையில் பருகும் சத்து பானம். அருகில் உள்ள விநாயகர் ஆலயத்துக்குச் சென்று வந்த பிறகுதான் காலை உணவு.

அன்னையர் தினம்
அன்னையர் தினம்

பள்ளி சென்று திரும்பிய பின் மாலையில் கதிரவன் மேற்கில் மறையும்வரை விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொண்டோம். அதற்கு பிறகு, ஒரு அரை மணி நேரம் பாரதியார், நாமக்கல் கவிஞர் மற்றும் தேசிய விநாயகம் பிள்ளையின் பாடல்கள் மூலமாகத் தமிழில் இறை வழிபாடு. வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் நாகூர் தர்காவுக்கும் வேளாங்கன்னி ஆலயத்துக்கும் சென்று வழிபாடு. புதிய வேதாகமத்தில் தினமும் ஓர் அத்தியாயம். சென்னை வரும் போதெல்லாம் பெசன்ட் நகர் தேவாலயத்தில் வழிபாடு. `அனைத்து மதமும் ஒன்றே, நல்லவற்றைத் தேடு, தீங்கினர் கண் தெரியா தூரத்தில் நீங்குவதே நல்ல நெறி' என்பதை பசுமரத்தாணி போல பள்ளிப்பருவத்திலே இட்டார் அம்மா.

நீட்சி அடையும் இலக்கு!

மாந்தர்க்கு கற்றணைத்தூறும் அறிவு - வார இறுதி நாள்களில் நூலகங்களையும் புத்தகங்களையும் நண்பனாக்கிக்கொள்ள அம்மாவால் பழக்கப்படுத்தப்பட்டேன். `காந்தி, நேரு, அம்பேத்கர், படேல், மார்ட்டின் லூதர் கிங், ஆஸாத், பகத்சிங், சாக்ரடீஸ், செஞ்சிஸ் கான், ஜூலியஸ் சீசர் என்று அனைவரையும் படி. நல்லவற்றை ஏற்றுக்கொள். ஒப்பாதவற்றை புறந்தள்ளு' என்றார் அம்மா. பள்ளிப் பாடங்கள் அனைத்திலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும். 90 வாங்கிவிட்டால் 95, அடுத்து 100 என்று இலக்கு நீட்சி அடையும். மதிப்பெண் சிறிது குறைந்தால் கண்டிப்பும், இலக்கை அடைந்தால் அன்பையும் ஒரு சேர குழைத்துக் கொடுப்பார்.

பொழுதுபோக்குக்கு கட்டுப்பாடு!

பரீட்சை காலங்களுக்கு ஒரு மாதம் முன்பாகத் தொலைக்காட்சி, டேப்ரெக்கார்டர்கள் பூட்டப்படும். திரைப்படங்கள் வழக்கமாகவே வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டுதான். அதுவும் முழுமையாக விசாரித்து பிள்ளைகள் பார்க்கக்கூடியவைக்கு மட்டுமே அனுமதி. திரைப்படம் பார்த்த பின்னர் அதைப் பற்றிய அநாவசிய கதையாடல், திறனாய்வு கூடாது. அடுத்த செயல்களுக்கு நகர்ந்துவிட வேண்டும்.

பெண்ணை மதிக்கும் ஆணாக வளர வேண்டும்!

ஆண்டு முழுவதற்கும், தேவையைப் பொறுத்து மட்டுமே ஆடை, கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கிடைக்கும் அம்மாவிடமிருந்து. சமையல் முதற்கொண்டு அனைத்து வீட்டுப் பணிகளும் தெரிந்து பழக வேண்டும் என்று பழக்கினார். மனைவிக்கு ஒத்தாசையாக இருப்பதற்காக இவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்ததாக, பல வருடங்களுக்குப் பின் கூறினார். ஆணுக்குப் பெண் நிகர், அநாவசிய செலவும் ஆடம்பரமும் பிணி, பெண்களை அம்மாவாக, அக்காவாக, தங்கையாக பாவிக்க வேண்டும் என்ற புத்தரின் கருத்துகளையும், நீங்கா கல்வியினும் உயர்ந்தது எளிமையும் ஒழுக்கமும் என்றும் நித்தமும் போதித்தார்.

Mother -Son Representational Image
Mother -Son Representational Image
Image by Марина Вельможко from Pixabay

கைசிவக்க உதவி!

அம்மா, சென்னை தென்னக ரயில்வே ஜி.எம் அலுவலகத்தில் சூப்பரின்டென்டென்ட் ஆக ரிட்டயர்டு ஆனார். அந்தக் காலகட்டத்தில் எத்தனையோ பேர், உறவுகள், ஊரைச் சேர்ந்தவர்கள், வேலை நிமித்தமாகச் சென்னை வந்தவர்கள், வேலையில்லாமல் சென்னை வந்தவர்கள், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும், பொருள் உதவி கேட்டும், தங்குவதற்கு இடம் கேட்டும் குடும்பத்தோடோ, தனியாகவோ வந்தவர்கள்... என அத்தனை பேருக்கும் வயிறார உணவளித்து, பொருளுதவி கேட்டவருக்கு பொருள் கொடுத்து, தங்குவதற்கு இடமளித்து, பத்தியச் சாப்பாடு சமைத்துக் கொடுத்து, கைம்மாறு கருதாமல் கைசிவக்க உதவினார் அம்மா. ஒரு நாளைக்கு 10 மாத்திரை என்பது, 15 ஆகி, 20 ஆகி, வருடம் ஆக ஆக உடல் நலம் குன்றிய நிலையிலும், அம்மா அடுத்தவருக்கு உதவுவது மட்டும் அதிகரித்துக்கொண்டேதான் சென்றது.

இல்லம் தேடி வரும் எவருக்கும் இல்லையென்ற சொல்லை தவிர்த்து, முடிந்த வரை பொருளுதவியோ, குறைந்தபட்சம் ஒரு வேளை உணவேனும் அளிப்பார். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, இரத்தல் இழிந்தன்று, ஈயேன் என்பதே அதனினும் இழிந்தது என்பதை அடிநாதமாகக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்தார்.

அம்மாவுக்குப் பாடம் எடுப்பேன்... மனனம் ஆகும்!

நான் கிண்டி பொறியியல் கல்லூரியிலும், ஐஐடி டெல்லியிலும் படித்த காலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடங்கள் இருக்கும். ஒவ்வொரு செமஸ்டருக்கும், ஏழு அல்லது எட்டு பேராசிரியர்கள் இருப்பார்கள். அத்தனை பெயர்களையும் ஞாபகம் வைத்து, மூன்று வாரங்களுக்கு ஒரு முறை தேர்வு நடக்கும்போது, என்ன பாடங்களில் நான் என்ன மதிப்பெண் பெற்றுள்ளேன், எந்தப் பாடம் எனக்குக் கடினமாக உள்ளது என அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். அம்மாவிடம் சிறப்பான மதிப்பெண் பெற்றுவிட்டேன் என்று கூறுவதற்காகக் கடும் முயற்சிகள் மேற்கொண்டதுண்டு.

நிறைய புத்தகங்கள், சில வழிமுறைகள், சித்தரைப் போன்ற தனிமை, பயிற்சிக் கூடங்களைத் தவிர்த்து கடும் பிரயத்தனம் என்றிருந்தேன். கடினமான விடயங்களை இலகுவாக்கிக்கொள்ள நித்தமும் அம்மாவிடம், நான் படித்ததை எனக்கு விளங்க அவருக்குப் பாடம் எடுப்பேன். அலுவலகப் பணி, பின் வீட்டில் அயராது பணி இருக்கும் அம்மாவுக்கு. ஆனாலும், கிஞ்சிற்றும் தளராமல் அன்பை மட்டுமே இழைத்து, எனக்கு ஊக்கத்தை செலுத்தினார்.

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது அம்மா சொன்னவை..!

அந்த ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து இறுதியில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற செய்தி கிடைத்த அடுத்த கணமே அம்மா, `இந்த வெற்றியைவிட இனிமேற்கொண்டுதான், நீ மிகக் கவனமாக எந்தச் சூழலிலும் நடந்துகொள்ள வேண்டும்' என்றார். கடந்து செல், நிறைகுடம் நீர் தளும்பக்கூடாது என்று உணர்த்திய அந்த நொடிகள் பொறுப்பை உணரவைத்தன.

இல்லாதவர்க்கும், இயலாதவர்க்கும் இயன்றதைச் செய் என்பார் அம்மா. இக்கட்டான தருணங்களில், அம்மாவிடம் ஆலோசனை கேட்பேன். அப்போதெல்லாம், `ஆழ் மனதைக் கேள், அது வழிநடத்தும் பாதையில் செல்' என்பார். ஒவ்வாத உடல்நிலையைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் அம்மா என்று சொல்லும் போதெல்லாம், `என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற நாவுக்கரசர் வாக்கையே பதிலாகத் தருவார். அவர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், `அம்மா... நான் ஐஐடி சென்னையில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுவிட்டேன்' என்று சொன்னபோது, `பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்றார்.

Mother's day representational image
Mother's day representational image
Image by Hier und jetzt endet leider meine Reise auf Pixabay aber from Pixabay
`தெம்பு இருக்கிற வரை இந்தக் கால் என் மகளுக்காக ஓடிட்டே இருக்கும்!' - தாயெனும் அந்தத் தெய்வம் #WowMom

நினைவலைகள் அதிர்வலைகளாக நெஞ்சில் அறைந்து செல்கின்றன. பெண்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை, ஐந்து கிலோமீட்டர் தூரம் தினமும் நடந்தே சென்று பள்ளிக் கல்வியை முடித்து, பின்னர் தொழிற்கல்வியையும், பட்டமேற்படிப்பையும் போராடிப் பெற்றவர் அம்மா. பெண் என்பவள் அடுப்பூத அல்ல என்ற பாவேந்தரின் வரிகளை நெஞ்சில் ஏந்திக்கொண்டு, நன்னெறியையும், நல்வழியையும், திருவள்ளுவர், பாரதி மற்றும் புத்தர் வழியாக வழங்கிச் சென்ற என் அன்னையைப்போல், அவரவர்க்கும் அவர் அன்னை வணங்கித் தொழ வேண்டிய தெய்வம். அவர் அடிப்பற்றி செல்லும்போது எதிர்வரும் கற்களும் முற்களும் கால்களுக்கும் மனதிற்கும் மெத்தையாகிப் போகும் என்பதை தவிர வேறல்ல.

அன்னையர் தின வாழ்த்துகள்!

முனைவர். மு.பாலாஜி, இ.ஆ.ப

செயல் இயக்குநர், இந்திய தேயிலை வாரியம்,

இந்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம்

அடுத்த கட்டுரைக்கு