என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

கைகோத்து நடந்தால்தான் காதலா?

பிரபாவதி - தான்சேன்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரபாவதி - தான்சேன்

காதலிச்சது வரைக்கும் எல்லாம் சுமுகமாத்தான் போச்சு. கல்யாணம்னு வந்தபோதுதான் பெரிய சிக்கல்.

``என் வீட்ல மட்டுமில்ல... என் ஃபிரெண்ட்ஸ், தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்கன்னு சுத்தி யிருந்த எல்லோருமே என் காதலை எதிர்த்தாங்க. ‘ரெண்டு கையில்லாதவனைக் கல்யாணம் பண்ணிட்டு நீ என்ன பண்ணப் போறே?’ன்னு பலபேர் ரொம்பக் கேவலமா பேசுனாங்க. எல்லாத்தையும் கடந்துதான் கல்யாணம் பண்ணியிருக்கோம். காதலுக்கு கைகால், காசு, பணமெல்லாம் முக்கியமில்ல சார்... மனசுதான் முக்கியம்’’ - மனதின் ஆழத்தி லிருந்து பிரபாவதி பேச, காதல் பார்வையால் அவரை அணைக்கிறார் தான்சேன்.

சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த தான்சேன் தளராத நம்பிக்கையின் அடையாளம். சிறு வயதில் எதிர்பாராத மின்சார விபத்தில் இரு கைகளையும் இழந்த தான்சேன் தற்போதுவரை நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. கைகள் இல்லை. ஆனால், டிரம்ஸ் வாசிப்பது, கீபோர்டு வாசிப்பது, பைக் ஓட்டுவது என ஆச்சர்யம் காட்டுகிறார். காஞ்சனா படத்தில் ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார். சமீபத்தில் இவர் கீ போர்டு வாசிக்கும் வீடியோவை ஷேர் செய்து பாராட்டியிருந்தார் இசையமைப்பாளர் அனிருத். அதையடுத்து, தான்சேனுக்கு `மாஸ்டர்' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கீ போர்டு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விடாமுயற்சியால் தனக்கான அடையாளத்தை உருவாக்க முயன்றுவரும் தான்சேனுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்திருக்கிறது. தான்சேனுக்கும் அவரின் காதல் மனைவி பிரபாவதிக்கும் வாழ்த்துகள் சொல்லிப் பேசினோம்.

பிரபாவதி - தான்சேன்
பிரபாவதி - தான்சேன்

``நம்மளயெல்லாம் யாராச்சும் காதலிப் பாங்களா... நமக்கு லவ்வெல்லாம் செட் ஆகுமான்னு நினைச்சுகிட்டிருந்த ஆள் நான். வாழ்க்கையில எப்போ புயலடிக்கும்... எப்போ பூபூக்கும்னு யாருக்கும் தெரியாதுல்ல... அப்படித்தான் திடீர்னு காதல் வந்து என் வாழ்க்கையை அழகாக்கிருச்சு” - புதுமாப்பிள்ளைக்கே உரிய வெட்கம் மினுங்கப் பேசும் தான்சேனின் வாழ்க்கை சாதாரணமானது இல்லை.

“13 வயசு வரைக்கும் ரெண்டு கைகளோட வும் நான் நல்லாத்தான் இருந்தேன். ஒருநாள் இரும்புக்கம்பியை வெச்சு விளையாடி கிட்டிருந்தபோது, அந்தக் கம்பி மின்சாரக் கம்பியில பட்டு ஷாக் அடிச்சுருச்சு. உயிர் பிழைச்சதே பெரிய விஷயம்ங்கிற நிலைமை. கரன்ட் ஷாக்ல கைகள் பலமா பாதிக்கப் பட்டிருந்ததால. ரெண்டு கைகளையும் முட்டியோட எடுத்துட்டாங்க. அதுவரைக்கும் சந்தோஷமா எந்தக் கவலையும் இல்லாம விளையாடிகிட்டிருந்த நான் அதுக்குப் பிறகு, இயல்பான வேலைகளைச் செய்யுறதுக்கே இன்னொருத்தரை சார்ந்திருக்கிற நிலைமைக்கு ஆளானேன். உலகமே இருண்டதுபோல ஆகிருச்சு” - தன் வாழ்வையே தடம்புரளச் செய்த சம்பவத்தைச் சொல்லும்போது வார்த் தைகள் கனத்துப் போகின்றன தான்சேனுக்கு.

கைகோத்து நடந்தால்தான் காதலா?

``கல்யாண வீடுகள்லயும் திருவிழாக்கள்லயும் இசைக் கச்சேரி நடத்துறதுதான் அப்பாவோட தொழில். அதனால சின்ன வயசுலயிருந்தே டிரம்ஸ் அடிக்கிறதுதான் எனக்கும் எங்க அண்ணனுக்கும் விளையாட்டு. அந்த விபத்துல என் ரெண்டு கைகளும் போனதுக்கு அப்புறம், நான் முடங்கிட்டேன். சில வருஷங்கள் இப்படியே போச்சு... எனக்கும் டிரம்ஸ் வாசிக்கணும்னு ரொம்ப ஆசை. கை இல்லைன்னா என்ன... என்னாலயும் வாசிக்க முடியும்னு எனக்குள்ள ஒரு நம்பிக்கை. அப்பாகிட்ட சொல்லி ரெண்டு கைகள்லயும் குச்சியை இறுக்கமா கட்டிகிட்டு வாசிச்சுப் பழகினேன். ஆரம்பத்துல ரொம்ப வலிச்சது. ஆனா, நான் டிரம்ஸ் வாசிக்கிறேங்கிற சந்தோஷம் அந்த வலியையெல்லாம் மறைச்சுரும். அப்படியே போகப் போக நல்லா வந்துருச்சு. அப்புறம் கீ போர்டு வாசிக்கக் கத்துகிட்டேன், பைக் ஓட்டக் கத்துகிட்டேன். அதுக்கெல்லாம் என் அப்பாவும் அம்மாவும் கொடுத்த சப்போர்ட்தான் காரணம்” என்று தான்சேன் நிறுத்த... பிரபாவதி தொடர்கிறார்...

“சட்டக் கல்லூரியில நானும் இவரும் ஒரே கிளாஸ். இவரோட தன்னம்பிக்கையும் பாசிட்டி விட்டியும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் எதேச்சையா சட்டம் படிக்க வந்தேன். ஆனா, இவர் அப்படி இல்ல. சமூகத்துல நடக்குற அநியாயத்தை எதிர்த்துக் கேள்வி கேக்கணும்ங்கிற வைராக்கியத்தோட சட்டம் படிக்க வந்தவர். ஆரம்பத் துல ஃபிரெண்ட்ஸாதான் பழகி னோம். திடீர்னு ஒருநாள் வந்து ‘ஐ லவ் யூ’ சொல்லிட்டார். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. யோசிச்சுட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன். யோசிச்சுப் பார்த்தபோது நானும் அவரை காதலிச்சுக்கிட்டிருக்கேன்னு தெரிஞ்சது. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு சம்மதம் சொல்லிட்டேன்” - பிரபாவதியை வெட்கம் இடைமறிக்க... “இவங்க என்கிட்ட ரொம்ப அன்பா இருப்பாங்க. இவங்க நம்ம லைஃப்ல வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஏதோவொரு தைரியத்துல போய் சொல்லிட்டேன். கடைசியில் பச்சைக்கொடி காட்டிட்டாங்க” என்கிறார் தான்சேன்.

“காதலிச்சது வரைக்கும் எல்லாம் சுமுகமாத்தான் போச்சு. கல்யாணம்னு வந்தபோதுதான் பெரிய சிக்கல். எங்க வீட்ல யாருமே ஒப்புக்கலை. எல்லாருடைய காத லுக்கும் குறைந்தபட்சம் அவங்க ஃபிரெண்ட்ஸோட சப்போர்ட் டாவது இருக்கும். எனக்கு அதுவும் இல்லை. என் ஃபிரெண்ட்ஸே என் காதலுக்கு எதிரா பேசினாங்க. கல்யாணத்துக்குப் பிறகு, புருஷன் கைகோத்து ரோட்ல நடந்துபோக முடியுமா உன்னால?’ன்னு கேட்டாங்க. கைகோத்து நடந்து போறது மட்டும்தான் காதலா... எல்லார் கண்ணுக்கும் இவருக்கு ரெண்டு கை இல்லாதது மட்டும்தான் தெரிஞ்சது. எனக்கு இவரோட தன்னம்பிக்கை மட்டும்தான் தெரிஞ்சது. விடாம போராடினேன். அப்புறம் இவர்கூட பழகிப் பார்த்ததுல எங்க அப்பாவுக்கு இவரை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதுக்கு அப்புறம்தான் ஓகே சொன்னாங்க. இப்போ நாங்க ரொம்ப ஹேப்பியா இருக்கோம். இவர் கச்சேரிக்குப் போறார். அதிலிருந்து போதுமான வருமானம் கிடைக்குது. மனசுக்குப் பிடிச்சவரோட வாழு றதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டியிருக்கு” என்கிற பிரபாவதி யின் கண்களில் காதல் ஒளிர்கிறது.