Published:Updated:

என் இதயம், கணவருக்காகவும் சேர்ந்தே துடிக்கிறது! - பானுமதி

எதிர்நீச்சல்

பிரீமியம் ஸ்டோரி
எல்லோர் வாழ்க்கையிலும் வலிகளும் பிரச்னைகளும் இயல்பானதுதான். அதுவே நிரந்தரமானால், வாழ்க்கையே போராட்டமாகிவிடும்.

அத்தகைய சவாலான கதைதான் பானுமதியுடையது. காதல் திருமணத்தால் சொந்தங்கள் ஒதுக்க, ஒரு விபத்து கணவரை முடக்கிப்போட... ‘என் வாழ்க்கையே கணவரை வாழவைப்பதுதான்!’ என்ற வைராக்கியத்துடன் துரத்திய கஷ்டங்களை விரட்டியடித்து வெற்றி கண்டிருக்கிறார் பானுமதி. சென்னை, கோடம்பாக்கத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள அவரது வீட்டில் அன்பும் பாசமும் நிறைந்திருக்கிறது. அதுவே அந்தக் குடும்பத்தைத் தினந்தோறும் உயிர்ப்பிக்கிறது.

மெல்லிய தேகத்துடன் கட்டிலில் சாந்தமாக அமர்ந்திருந்த ஞானபண்டிதனின் முகத்தில் மெதுவாக விரிகிறது புன்னகை. “30 வருஷத்துக்கு முன்ன ஹேண்ட்ஸம்மா, உயரமா இருப்பார். அந்த விபத்து இவரோட தோற்றத்தையே முழுமையா மாத்திடுச்சு” – பானுமதிக்குக் கண்ணீர் எத்தனிக்கிறது. இடைமறிக்கும் மகள் ஐஸ்வர்யா, ``முதல்ல உங்க லவ் ஸடோரியைச் சொல்லுங்க’’ என்றதும் பெற்றோர் முகத்தில் வெட்கம் மலர்கிறது. முதலில் பேசிய பண்டிதனின் நினைவுகள் காதல் அத்தியாயத்துக்குள் நுழைகிறது.

என் இதயம், கணவருக்காகவும் சேர்ந்தே துடிக்கிறது! - பானுமதி

“என்னோட அப்பா அரசு மருத்துவர். அதனால பல ஊர்களுக்கு குடும்பமே இட மாறுதலாகிட்டே இருப்போம். அப்படி தர்மபுரி கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு அப்பா மாறுதலானார். அங்க, என் பானுமதியோட அம்மா நர்ஸ். நாங்க சில முறை சந்திச்சிருந்தாலும், பெரிசா பேசிக்கிட்டதில்லை. டிப்ளோமா முடிச்சுட்டு, கேஸ் விநியோகஸ்தரா வேலை செஞ்சேன். ஒருநாள் ஃபிரெண்ட்ஸுகளோடு இருக்கும்போது, தோழிகளோடு இவங்க வந்தாங்க. ‘என்ன இந்தப் பக்கம்’னு கேட்டேன். ‘இன்னியோட காலேஜ் முடியுது. உங்க ஆட்டோகிராப் வேணும்’னு கேட்டாங்க. ‘பிரிஞ்சு போறவங்கதான் ஆட்டோகிராப் வாங்குவாங்க’ன்னு நான் சொல்ல, வெட்கத்துடன் திரும்பிப் போயிட்டாங்க.

போட்டித் தேர்வுக்குத் தயாராகிட்டிருந்த பானு, ஒருமுறை என்கிட்ட ஒரு ஸ்கூல் அட்ரஸ் கேட்டாங்க. பிறகு, நாங்க நாலு மாசம் சந்திக்கவே இல்லை. தேர்வெழுத அவங்க சேலம் வந்தபோது அந்த இடத்தில் இருந்த நான், அங்கேயே இருந்து சாயந்தரம் பானுவை பஸ் ஏத்திவிட்டுட்டுத்தான் கிளம்பினேன். எங்க காதலும் மலர்ந்தது. பி.எட் முடிச்சுட்டு, இவங்க தனியார் ஸ்கூல்ல கெமிஸ்ட்ரி டீச்சரா வேலை செய்தாங்க. ஏழு வருஷமா காதலிச்சோம். இந்த விஷயம் ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு பெரிய எதிர்ப்பு உருவாச்சு. அதையெல்லாம் மீறி, 1997-ம் ஆண்டு சாதி மறுப்புக் கல்யாணம் செய்துகிட்டோம்.”

– மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கிய பண்டிதனின் விழிகளை ஈரமாக்குகின்றன, திருமணத்துக்குப் பிந்தைய நினைவுகள்.

கணவர், மகளுடன் பானுமதி
கணவர், மகளுடன் பானுமதி

மணவாழ்க்கையைத் தொடங்கிய நாள் முதலே இருவரும் பிரச்னைகளுடனும் சேர்த்தேதான் கூட்டாகக் குடும்பம் நடத்தத் தொடங்கியுள்ளனர். வறட்சியான புன்னகையுடன் பேசும் பானுமதி, “கல்யாணமானதுமே இவர் வீட்டுக்கு ஆசீர்வாதம் வாங்கப் போனோம். ‘சொத்தில் எந்த சம்பந்தமும் இல்லை’னு கையெழுத்து வாங்கிட்டுத் தான் அரைமனசோட ஏத்துக் கிட்டாங்க. அதுக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் விவரிக்க முடியாத பிரச்னைகள். சுயமரியாதையும் மகிழ்ச்சி யும் இல்லாததால், சீக்கிரமே தனிக்குடித்தனம் போயிட் டோம். கேஸ் சிலிண்டர் டெலிவரி நிறுவனத்தை நடத்தினார். நானும் வேலைக்குப் போனேன். மகள் பிறந்ததும் சில காரணங்களுக்காக மறுபடி யும் மாமனார் வீட்டுல வசிச்சோம். ஆனாலும், பிரச்னைகள் ஓயவேயில்லை. 2004-ல் பெங்களூரில் தனியார் நிறுவன வேலையில் சேர்ந்தார்.

ஓசூர்ல வாடகை வீடு பார்த்திருந்தார். அதுதொடர்பா என்கிட்ட சொல்றதுக்காக பெங்களூர்ல இருந்து பைக்லயே வந்திருக்கார். அப்போ சாலை விபத்துல இடதுபக்க இடுப்புப் பகுதி முழுமையா நசுங்கி, காலிலும் பலத்த அடி. மாமனார் குடும்பத்தினர் தனியார் ஆஸ்பத்திரி சேர்த்தாங்க. அங்க தவறான சிகிச்சை தந்ததால நிறைய பிரச்னைகள். காயம் ஏற்பட்டிருந்த இடுப்பு, கால்ல இன்ஃபெக்‌ஷனாகி (bone infection) தினமும் ரத்தமும் சீழும் ஓயாம வடிஞ்சுகிட்டே இருக்கும். ரெண்டு வீட்டுலயும் ஆதரவில்லாத சூழல்ல, பெங்களூருல இருக்கிற ஒரு ஆஸ்பத்திரியில சேர்த்தேன். சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கு வந்தபிறகும் இன்ஃபெக்‌ஷன் குறையவே இல்லை. பெரும் போராட்டத்துடன் தனியாளாவே இவரைப் பார்த்துக்கிட்டேன்” – அந்த வலி மிகுந்த காலங்கள்தாம், பானுமதிக்கு வலிமையைக் கொடுத்திருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“திரும்பவும் தனிக்குடித்தனம்... என்னைக் கவனிச்சுகிட்டே வேலைக்கும் போனாங்க பானு. நடக்க முடியாம படுக்கையிலேயே இருந்தேன். பிறகுதான், சிறுநீரகம் இரண்டுமே செயலிழந்தது தெரிஞ்சது. என்னைவிடவும் பானுதான் அதிகம் துடிச்சாங்க. ‘இவன் விதி அவ்ளோதான்’னு கூடுதல் வேதனையை உண்டாக்கினாங்க பலரும். வாழும் காலம் முழுக்க டயாலிசிஸ் செய்யணும்னு ஆஸ்பத்திரியில் சொல்லிட்டாங்க. அடுத்தவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாம கலங்கி உட்கார்ந்திருந்தோம். ‘இந்த ஆஸ்பத்திரியிலேயே தற்கொலை செய்துகிறேன். நீ குழந்தையுடன் நிம்மதியா வாழு’ன்னு பானுகிட்ட சொன்னேன். ‘இயற்கையா உங்க உயிர் எப்போ வேணாலும் பிரியலாம். அதுவரை எவ்வளவு கஷ்டப்பட்டாவது உங்களை வாழ வைப்பேன்’னு வைராக்கியமா சொன்னாங்க பானு” – பண்டிதனின் குரல் தளர்கிறது. உடல் சோர்வுடன் கட்டிலில் படுத்துக்கொண்டவரின் பார்வை மனைவிமீது மட்டுமே படர்ந்திருந்தது.

“தக்க சமயத்துல கணவரின் நண்பர் ஜெய்குமார் அண்ணன்தான் மருத்துவச் செலவுக்கு உதவினார். சிகிச்சைக்காக

2007-ல் சென்னையில் குடியேறினோம். பிறகுதான் இன்ஃபெக்‌ஷன் பிரச்னை சரியாச்சு. இவரோட உடல்நிலைக்கு டயாலிசிஸ் மட்டுமே தீர்வுங்கறதால, சிகிச்சைகள் தொடர்ந்துகிட்டே இருக்கு. வாடகை வீட்டுக்கே வழியில்லாம, புது ஊர்ல நிறைய கஷ்டப்பட்டோம். போராடி ஒரு பிரைவேட் ஸ்கூல்ல வேலைக்குச் சேர்ந்தேன். வீட்டுலேயே ரெண்டு பேட்ச் டியூஷன், சில வீடுகளுக்கு ஹோம் டியூஷன் எடுப்பேன். ஒவ்வொரு அரைமணி நேரமும் எனக்கு முக்கியம். இப்படியெல்லாம் ஓயாம வேலை செஞ்சுதான், கணவரின் சிகிச்சை செலவுகளை இப்பவரை சமாளிக்கிறேன்.

வாரத்துல ரெண்டு முறைதான் டயாலிசிஸ் செய்ய முடியுது. ஒவ்வொரு முறையும் டயாலிசிஸ் செய்ய கிட்டத்தட்ட அரைநாள் ஆகிடும். அதுக்கு 1,500 ரூபாய்வரை செலவாகும். இவருக்குத் தனியா பத்திய சாப்பாடுதான். ஒருமுறை டயாலிசிஸ் முடிஞ்சதும் உடல்ல ஊட்டச்சத்துக்கு குறைஞ்சுடும். அதனால, ஊட்டச்சத்து பவுடர், மருந்து, மாத்திரைகள், ஊசி, புரதச்சத்து உணவுகள்னு இவருக்கான மருத்துவ, உணவுச் செலவுகளுக்கே மாதந் தோறும் 20,000 ரூபாய் செலவாகுது. இப்படியே 15 வருஷ நெருக்கடி நிலை பழகிப்போச்சு.

இவரால எந்த வேலையும் செய்ய முடியாது. பெரும்பாலும் சேர்ல உட்கார்ந்துகிட்டேதான் இவரால தூங்க முடியுது. அதுகூட மணிக்கணக்கில் நீடிக்காது. அதனால, இவரை பத்திரமா பார்த்துக்கறேன். எந்த நிகழ்ச்சிக்கும் போக மாட்டோம். எங்களுக்கு நாங்க மூணு பேர் மட்டுமே ஆதரவு. என் ஒவ்வொரு செயலுமே இவரைச் சார்ந்துதான் இருக்கும்” - நெகிழ்ச்சியுடன் கூறும் பானுமதியின் இதயம், கணவரின் நலனுக்காகவும் சேர்ந்தே துடிக்கிறது.

“எத்தனையோ நாள் துக்கம் இல்லாம, நிம்மதியில்லாம, பொருளாதார ரீதியா பானு ரொம்பவே சிரமப்பட்டிருக்காங்க. ஒருநாள்கூட என்னை பரிதாபமாவோ, கோபமாவோ பார்த்ததில்லை. வருத்தங்களை மறைச்சு, என் முன்னாடி சிரிச்ச முகத்தோடுதான் இருப்பாங்க. என்னையும் மகளையும் தாண்டிய எந்த உலகமும் பானுவுக்குத் தெரியாது. நிறைய உழைச்சதால இவங்க உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருக்கு. பானுமதி இடத்துல வேறொரு பெண் இருந்திருந்தா, என்னை விட்டுட்டுப் போயிருக்கலாம். பல வருஷமா டயாலிசிஸ் செஞ்சதால ரத்தம் உறைஞ்சுப்போய் இதய பிரச்னை ஏற்பட்டுச்சு. அதுக்காகச் சிக்கலான ஆபரேஷன் முடிஞ்சப்போ, ‘ரெண்டு வருஷம்தான் உடல்நிலை தாங்கும்’னு டாக்டர் சொன்னார். அந்தக் காலகட்டம் முடிஞ்சு சில மாதமா என் வாழ்க்கை ‘ஓவர் டியூவ்’லதான் ஓடிட்டிருக்கு. நான் வாழ்றதே என் மனைவியாலதான்” – உருக்கமாகக் கூறும் பண்டிதனுக்கு, உட்கார்ந்தபடியே பெட்டிக்கடை நடத்தி மனைவியின் சுமை களைக் குறைக்க வேண்டும், வீல் சேரில் வெளியிடங்களுக்குச் சென்றுவர வேண்டும் என்ற இரண்டு ஆசைகள் இருக்கின்றன. அதற்காகப் பிறர் உதவியை எதிர்பார்க்கிறார்.

படித்துக்கொண்டே ஹோம் டியூஷன் எடுத்து குடும்பத்துக்கு தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்து வருகிறார் மகள் ஐஸ்வர்யா. தற்போது பி.ஏ முடித்திருக்கும் அவர்,

“அப்பாவும் நானும் இன்னிக்கு நம்பிக்கையோடு பேசுறதுக்கு அம்மாதான் காரணம். உடலளவில் முடங்கினாலும், அப்பா மனதளவில் ஆக்டிவாதான் இருக்கார்.

அவரால இயன்ற குட்டிக்குட்டி சந்தோஷத் தைக் கொடுப்பார். இந்த மகிழ்ச்சியே எங்களுக்குப் போதும்” என்று பெற்றோரைக் கட்டியணைக்கிறார்.

மூவரும் புன்னகையுடன் விடைகொடுக்க, அவர்களின் உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொண்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு