என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

மண்ணை நம்பினேன், அது என்னை ஏமாத்தலை!

மாதங்கி
பிரீமியம் ஸ்டோரி
News
மாதங்கி

கரும்பு - மஞ்சள் விவசாயி மாதங்கி

“எல்லாரும் வளர்ச்சியை நோக்கிப் போயிட்டா, மண்ணை யார் காப்பாத்துறது. இன்னும் சொல்லணும்னா மண்ணுலதான் நம்ம நாட்டின் வளர்ச்சி புதைஞ்சுகெடக்கு. நாம் மாறாம சமுதாயம் மாறணும்னு நினைக் கிறதுல அர்த்தம் இருக்கா... இந்த எண்ணம் தான் இன்னிக்கு என்னை விவசாயியா உங்க முன்னாடி நிறுத்தியிருக்கு'' - செழித்து வளர்ந்திருக்கும் கரும்புகளைக் கட்டி யணைத்தபடி பேச ஆரம்பிக்கிறார் மாதங்கி. கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை, கண்டிகையில் கரும்பு, மஞ்சள் விவசாயம் செய்துவரும் இவர், தன் விவசாய அனுபவங் களைப் பகிர்ந்துகொள்கிறார்.

“எனக்கு சொந்த ஊரு மன்னார்குடி. படிச்சது முதுகலை கணிதம். விவசாயக் குடும்பம். திருமணத்துக்குப் பிறகு, சென்னை யில் செட்டில் ஆகிட்டேன். ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியரா வேலைக்குச் சேர்ந் தேன். சென்னையின் பரபரப்பான வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டாலும் கூட, கிராமத்து உணவுகளை மிஸ் பண்ற மாதிரி இருந்துச்சு. அதுக்காக ஆர்கானிக் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். அந்தத் தேடல் எனக்குள்ள விவசாய எண்ணத்தை விதைச்சுது. ஆட்களை வேலைக்கு வெச்சு கணவருடன் சேர்ந்து விவசாயம் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

 கணவருடன்...
கணவருடன்...

சென்னையில் சொந்த நிலம் கிடையாது. லட்சங்கள் செலவழிச்சு நிலம் வாங்குற பொருளாதார சூழலும் இல்ல. அதனால் குத்தகைக்கு நிலத்தைத் தேட ஆரம் பிச்சோம். கண்டிகையில் ஒரு நிலம் கிடைச்சது. பண் படுத்தாம கிடந்த அந்த நிலத்தைச் சுத்தப்படுத்தி உழுது உரமிட்டு, காய்கறிகள் பயிரிட ஆரம்பிச்சோம்.

தனியா விவசாயம் பண்ணும்போது நிறைய தடுமாற்றங்கள் இருந்தது. தவறுகளில் இருந்து நிறைய கத்துக்கிட்டேன். நிலத்தில் விளைஞ்ச காய்கறிகளை நண்பர்கள் மூலமா விற்பனை செய்தேன். காய்களின் சுவை நல்லா இருக்குன்னு கமென்ட்ஸ் வர ஆரம்பிச்சுது. முதன்முறை பெரிசா லாபம் இல்லை. ஆனாலும், இயற்கை விவசாயம் பண்றதுல உறுதியா இருந்தேன்.

மண் பழக்கப்பட்டு, செழுமையாகி வந்த நேரம் நிலத்தின் உரிமையாளர் நிலம் வேணும்னு சொன்னதால் வேற இடம் தேட ஆரம்பிச்சோம். அடுத்தடுத்து கிடைச்ச இடங்கள் எல்லாமே ஒரு ஏக்கர் அளவில்தான் கிடைச்சுது. கத்திரிக்காய், புடலங்காய், எள், கடலை, முருங்கைனு அத்தியாவசிய பொருள்களைப் பயிரிட்டோம். எங்க தேவைபோக மீதியை நண்பர்களுக்கு வித்துருவோம். நாங்க இப்போ விவசாயம் செய்யும் இந்த 9 ஏக்கர் இடம் மூணு வருஷத்துக்கு முன்னாடி லீஸுக்குக் கிடைச்சுது. கரும்பு, மஞ்சள், வாழை, பப்பாளி, கீரைகள், காய்கறிகள் பயிரிட்டு இருக்கோம். மஞ்சளும் கரும்பும் அறுவடைக்குத் தயாரா இருக்கு'' என்றவர் மஞ்சள் விவசாயம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

மாதங்கி
மாதங்கி

``ஆரம்பத்தில் விதை மஞ்சளை ஈரோட்டில் ஒரு விவசாயிகிட்ட இருந்து வாங்கினோம். அப்புறம், எங்க தோட்டத்திலிருந்தே விதை மஞ்சள் எடுக்க ஆரம்பிச்சோம். ஒவ்வொரு வருஷமும் தை மாசம் சணப்பு விதைப்போம். மூணு மாசத்துல அது நல்லா செழுமையா வளர்ந்து நிற்கும். அந்தப் பருவத்துல அதை அப்படியே உழுதா மண்ணுக்கு உரமாக மாறிடும். அப்புறம் தொழு உரம் போட்டு மண்ணை நான்கு முறை உழுவோம். பாத்தி வாய்க்கால் அமைச்சு, ஒவ்வோர் அரை, அடிக்கும் சின்ன குழிகள் தோண்டி ஒரு விதைக் கிழங்கை ஆடி மாசம் நடவு செய்வோம். 25 நாள்களுக்கு ஒருமுறை களை எடுக்கிறது, உரம் கொடுக்கிறது போன்ற வேலைகள் இருக்கும். மார்கழி மாசமே மஞ்சள் செழுமையா வளர்ந்திருக்கும். பொங்கல் நேரத்தில் பச்சை மஞ்சள் தேவை இருக்கும் என்பதால், குறிப்பிட்ட ஒரு மஞ்சளை மட்டும் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பு வோம். மீதி மஞ்சளை, பங்குனி மாச இறுதியில அறுவடை செய்து, வெயிலில் கொட்டி பொடி செய்து செய்து கிலோ 400 ரூபாய் என்ற கணக்கில் விற்பனை செய்யுறோம். நல்லா விளைஞ்ச மஞ்சளைத் தேர்வு செய்து பஞ்ச கவ்யாவில் நனைச்சு 90 நாள்கள் மூடாக்கு போட்டு எடுத்து வெச்சு அடுத்த ஆண்டுக்கான விதை மஞ்சளா பயன்படுத்துவோம் ஒரு ஏக்கருக்கு மூணு டன் மஞ்சள் அறுவடை பண்றோம்” என்ற மாதங்கி, கரும்பு சாகுபடி பற்றிப் பேச ஆரம்பித்தார்.

``30 சென்ட்டில் கரும்பு விதைச்சுருக்கோம். கரும்புக்கும் தானியங்களை விதைச்சு 45-வது நாளில் உழுது பசுந்தாள் உரமாக்கிருவோம். அப்புறம் மறுபடியும் மண்ணை நல்லா உழுது, நாலு அடி அகலத்தில் பார்பிடிச்சு, ரெண்டடி இடைவெளிவிட்டு, விதைக் கரணைகளை நட்டு வெச்சுருவோம். கரும்பு சாகுபடியில் மண் ஈரம் வற்றாமல் இருப்பது ரொம்ப முக்கியம். அதனால் 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சணும். நடவு செய்த 20-ம் நாளிலிருந்தே 10 நாளைக்கு ஒரு முறை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரோடு கலந்து விடுவோம். பிறகு, ஒவ்வொரு கரும்புக்கும் ஒரு கைப்பிடியளவு மண்புழு உரத்தைக் கொடுக் கணும். 15 நாளைக்கு ஒரு முறை பஞ்சகவ்யாவை ஒரு லிட்டருக்கு 30 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிப்போம். 3ஜி கரைசலும் 15 நாளைக்கு ஒருமுறை பயன்படுத்துறோம். நடவு செய்த 90-ம் நாளில் கரும்புத் தோகைகளை உரிச்சு மண் புழு உரத்தோடு சேர்த்து மூடாக் கிடணும். மாசம் ஒருமுறை தோகை உரிப்போம். பூச்சித் தாக்குதலுக்கு அக்னி அஸ்திரம் பயன்படுத்துறோம்.

இந்த வருஷம் புயல் வெள்ளம் வந்ததால் நிறைய கரும்புகள் பாதிப்புகுள்ளாகிருச்சு. இப்போ 4,000 கரும்புகளுக்கு மேல் விளைஞ்சு அறுவடைக்குத் தயாராக இருக்கு. ஒரு கட்டு கரும்பு 600 ரூபாய் வரை விலை கேட்குறாங்க” என்ற மாதங்கி, நிலத்திலிருந்து மண்ணை கையில் அள்ளி, “நிறைய புறக்கணிப்புகள், தோல்விகள், நஷ்டங்களைச் சந்திச்சிட்டேன், ஆனாலும் மண்ணை நம்பினேன். அது என்னை ஏமாத்தல'' என்று நெகிழ்ந்தார்.