Published:Updated:

மீன், கருவாடு, சங்கு, சிப்பி, பாசி... இது கடலம்மா போடுற சோறு!

கடலம்மா போடுற சோறு!
பிரீமியம் ஸ்டோரி
கடலம்மா போடுற சோறு!

#Motivation

மீன், கருவாடு, சங்கு, சிப்பி, பாசி... இது கடலம்மா போடுற சோறு!

#Motivation

Published:Updated:
கடலம்மா போடுற சோறு!
பிரீமியம் ஸ்டோரி
கடலம்மா போடுற சோறு!

வ்வொரு நிலத்திலும் ஊரிலும் அங்குள்ள பெண்களின் உழைப்பும் கலந்தே கிடக்கிறது. அப்படி, ராமேஸ்வரத்தில் கடலன்னை தரும் வளங்களைக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டுள்ள பெண்கள், அவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

அலுப்புத் தெரியாம இருக்கப் பாடுவோம்!

முத்துலெட்சுமி, கரைவலை மூலம் மீன்பிடிப்பவர். இரண்டு குழந்தைகளை ஒற்றை பெற்றோராக வளர்க்கும் வைராக்கிய மனுஷி.

``17 வருஷத்துக்கு முன்னால குடியால எங்க வீட்டுக்காரரு உசுர விட்டுட்டாரு. ரெண்டு, மூணு வயசுல இருந்த எம்புள்ளைங்கள காப்பாத்துறதுக்காகக் கரைவலை தொழிலுக்குக் கூலியா வந்தேன். காலையில 5 மணிக்கு வல்லத்துல போய் ஆம்பள ஆளுங்க கடல்ல வலையை விரிச்சுட்டு வருவாங்க.

மீன், கருவாடு, சங்கு, சிப்பி, பாசி... இது கடலம்மா போடுற சோறு!

மறுக்கு, காரவலை, மீன்மடினு மூணுமா சேர்ந்து 38 அசவு (ஓர் அசவு என்பது 9 அடி) தூரம் இருக்கும். வலையைக் காலையில 7 மணிக்கு 25 பேர் சேர்ந்து இழுக்க ஆரம்பிச்சா, மத்தியானம் 12 மணிக்கு மீனு கரையேறும். இந்த அஞ்சு மணி நேரமும் ஆம்பளைங்களுக்கு ஈடா இடுப்புல கயித்தக் கட்டிக்கிட்டு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வலையை இழுத்துக்கிட்டே இருக்கணும்.

அலுப்பு தெரியாம இருக்க `அம்பா பாட்டு' பாடிக்கிட்டே கடல்ல போட்ட வலையைக் கரைக்கு இழுத்துருவோம். செருப்பு போட்டா வலு கிடைக்காது. இதனால கடற்கரை மணல் சூடு ஒரு பக்கம், கால்ல குத்துற சங்கு, முள்ளு மறுபக்கம்னு எல்லா வேதனைகளையும் தாங்கிக்கிட்டுத்தான் இந்தத் தொழில செய்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீன், கருவாடு, சங்கு, சிப்பி, பாசி... இது கடலம்மா போடுற சோறு!

வலையில படும் மீனு மூலமா கிடைக்கிற பணத்துல சம்மாட்டி (படகு - வலை உரிமையாளர்) பங்குபோக மத்ததை வலை இழுக்குற 25 பேருக்கும் பிரிச்சுக் கொடுப்பாங்க. மீன் பாடு நல்லா வந்தா 400 ரூபாய் கெடைக்கும். அதோட கறிக்கு (வீட்டு சமையலுக்கு) கொஞ்சம் மீனும் கெடைக்கும். வாரத்துல ஆறு நாள்கள் இப்படித்தான்னாலும், எல்லா நாளும் அதிக மீனு கிடைக்கும்னு உறுதியில்ல'' என்றபடியே வலையில் சிக்கிய மீன்களையும், அதைவிட அதிகமாகச் சிக்கியிருந்த கடல் தாவரச் செடிகளையும் பிரிக்கச் சென்றார்.

வெள்ளிக்கிழமை மீன் வாங்க மாட்டாங்க!

மீன்களை வீடு வீடாகச் சென்று விற்கிறார் கோட்டை ஈஸ்வரி.

``வீட்டுக்காரரு விபத்துல இறந்துட்டாரு. ஒரு பொண்ணு, ஒரு பையன், நான்னு நாங்க மூணு பேரும் வாழ, வீடு வீடா போய் மீன் விக்குறதுல கிடைக்குற காசுதான் கைகொடுக்குது. காலையில கடற்கரையில போட்டுக் காரங்ககிட்ட மீனை வாங்கித் தலையில வெச்சுக்கிட்டு, 10, 15 கிலோமீட்டர் தூரம்வரை வீடு வீடா போய் வித்து முடிக்க மத்தியானம் ஆகிடும். ஒரு நாளைக்கு 200, 300 ரூபாய் கெடைக்கும். செவ்வாய், வெள்ளிக்கிழமை பெரும்பாலும் மீன் வாங்க மாட்டாங்க, 100 ரூபாய் கெடைக்குறதே பெருசு. கால் வலிக்க நடந்துபோனாலும் கால்வயித்துக் கஞ்சிக்குத்தான் ஆகும். ஆனாலும், உழைச்சு வாழுற நிம்மதி இருக்கு''

- தராசு தட்டுகளில் மீன்களை வைத்தபடி பேச்சை முடிக்கிறார்.

மீன், கருவாடு, சங்கு, சிப்பி, பாசி... இது கடலம்மா போடுற சோறு!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனாவால அஞ்சு மாசம் வருமானம் போச்சு!

திலகவதி, கூலிக்கு சங்கு, சிப்பிகள் கொண்டு அலங்காரப் பொருள்கள் செய்து கொடுக்கிறார்.

``பெரிய கம்பெனிகள்ல இருந்து வாங்கிட்டு வர்ற சங்கு, சோவி, சிப்பிகளை வெச்சு அலங்கார டூம் லைட்டுகள், வாசப்படியில தொங்கவிடுற நிலமாலை, அலங்காரப் பொருள்கள்னு கோத்துக் கொடுப்போம். சதுரம், மீடியம், கூஜானு பல சைஸ் இதுல இருக்கு. ஒரு டூம் லைட் கோத்துக் கொடுக்க ஒன்றரை மணி நேரம் ஆகும்.

மீன், கருவாடு, சங்கு, சிப்பி, பாசி... இது கடலம்மா போடுற சோறு!

கூலியா 10 ரூபாயும், பெரிய சைஸுக்கு 17 ரூபாயும் கொடுப்பாங்க. ஒரு நாளைக்கு அஞ்சாறு டூம் லைட்டுதான் கோக்க முடியும். இதேபோல, நிலமாலை செய்ய பயன்படுத்துற சின்ன சங்குகள்ல ஓட்டை போட்டுக்கொடுக்க ஒரு படிக்கு 10 ரூபாய் கொடுப்பாங்க. கொரோனாவால அஞ்சு மாசமா அந்த வருமானத்துக்கும் வழியில்லாமப் போச்சு'' என்றவர் இரண்டு மாதங்களுக்கு முன்தான் வேலைகள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன என்கிறார்.

150 பெண்களுக்கு வேலை கொடுக்குறோம்!

ஜாஸ்மின், கடல் சங்கு விற்பனை நிறுவனத்தின் நிர்வாகி. கடலில் இருந்து கிடைக்கும் பலவகைப்பட்ட சங்குகளை வாங்கி, சுத்தம்செய்து, மெருகேற்றி, நாடு முழுவதும் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை தன் தந்தைக்கு உதவியாக இருந்து நிர்வகித்து வரும் இவர், ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. ``போட்டோ வேண்டாமே சார்...'' என்று பேச ஆரம்பித்தார்...

``சின்ன வயசுல கஷ்டப்பட்ட எங்க அப்பாவோட உழைப்புல உருவான நிறுவனம் இது. அப்பாவுக்கு ஆண் வாரிசு இல்ல. நான் ஒத்தாசைக்கு வந்தேன். கடல்ல கிடைக்கக்கூடிய அத்தனை வகையான சங்குப் பொருள்களும் எங்ககிட்ட கிடைக்கும். விவசாயமோ, வேற தொழில்வாய்ப்புகளோ இல்லாத ராமேஸ்வரத்துல, எங்க நிறுவனத்துல 150-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைகொடுத்திருக்கோம்'' என்பவர், மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் உறவினர்.

பாசியை மீனுங்க தின்னுரும்!

மருந்துப் பொருள்கள், சாக்லேட், டூத்பேஸ்ட், ஷாம்பூ, சோப்பு என நூற்றுக்கணக்கான பொருள்கள் தயாரிக்கப்பயன்படுபவை, கடலில் இயற்கையாக வளரும் கடல்பாசிகள். இவற்றில் ‘கேப்பபிகஸ் அல்வரீஸியை' (Kappaphycus Alvarezii)' என்ற வகையைச் சேர்ந்த கடல் பாசியை செயற்கை முறையில் வளர்த்துவருகிறார் மண்டபம் முகாமைச் சேர்ந்த சகுந்தலா.

மீன், கருவாடு, சங்கு, சிப்பி, பாசி... இது கடலம்மா போடுற சோறு!

``10 X 10 அளவுள்ள மூங்கில் தெப்பத்துக்கு நடுவுல, பாசி இலைகள வரிசையா கட்டி கடல்ல மிதக்கவிடுவோம். 30 நாள்ல அந்தத் தெப்பம் நிறைய பாசி வளர்ந்து செழிப்பா இருக்கும். அதை அப்புடியே எடுத்துவந்து கடற்கரை மணல்ல காய வெப்போம். தினமும் காலையில 9 மணிக்கு ஆரம்பிச்சா மத்தியானம் 3 மணிக்கு வேலை முடியும். தினமும் கடற்கரைக்கு வந்தவுடனேயே கடல்ல போட்டுருக்கிற பாசிகள கவாத்து பாத்து பராமரிக்கணும். இல்லையினா வளர்ந்திருக்கிற பாசியை மீனுங்க தின்னுரும்.

ஒரு நாளைக்கு 10 தெப்பம்வரை கட்டி கடல்ல விடுவோம். பாசி நல்லா வளர்ந்திருந்தா தெனமும் 300, 400 ரூபாய் கெடைக்கும்'' என்கிறார் பாசிகளைக் கவாத்து செய்தபடி.

100 கிலோ மீனுக்கு 60 கிலோ கருவாடு!

மீன்களைக் கருவாடாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறார், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆலின். அதிகாலையில் பாம்பன் பாலத்தின் கீழ்புறமுள்ள கடற்கரைக்கு வந்துவிடும் இவர், அங்கு மீனவர்களால் பிடித்து வரப்படும் நகரை, பண்ணா, காரா, நெத்திலி, சீலா, விலைமீன் ஆகியவற்றை கூடைகளில் மொத்தமாக வாங்கி வந்து, கருவாடாக மாற்றத் தொடங்கிவிடுகிறார்.

``100 கிலோ மீன் வாங்கி காய போட்டா 60 கிலோ கருவாடுதான் கெடைக்கும். இதனாலதான் மீனைவிட கருவாடு விலை அதிகம். நெய்மீன்னு சொல்ற சீலா மீன் கருவாடுதான் ரொம்ப ருசியா இருக்கும்.

இத வாங்குறதுக்குன்னே பாம்பனுக்கு வர்றவங்க அதிகம். இங்க வாங்கிட்டுப் போயி ராமநாதபுரம், பரமக்குடி சந்தைகள்ல விப்பாங்க. ராமேஸ்வரத்துக்குச் சுற்றுலா வர்றவங்களும் வாங்கிட்டுப் போவாங்க.

ஒரு நாளைக்கு 200 - 500 ரூபாய் வரை வருமானம் வரும். சில நாளு மீனு வாங்குன விலைகூட கெடைக்காம நஷ்டமாயிடும். வேறு பொழப்பும் இல்லாததால 10 வருஷமா கருவாடுதான் விக்கிறேன். கடல் மாதா போடுற சோறு இது'' என்கிறார் அதன் திசை பார்த்து.

தனக்குள் வாழும் ஆயிரமாயிரம் உயிரினங்களை வாழவைக்கும் கடல் அன்னை, தன்னை நம்பி கரையில் வாழும் பல அன்னையரையும் அரவணைத்துக்கொள்கிறாள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism