22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

வலிகளைத் தாண்டி வாழணும்!

டாக்டர் பிரீத்திகா சாரி
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் பிரீத்திகா சாரி

ரோல்மாடல்

வர் மிகப் பிரபலமான நரம்பியல் நிபுணர். ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். வலிப்பு நோய்க்கான அறுவை சிகிச்சையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். நரம்பியல் மருத்துவராகவும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருக்கும் ஒரே பெண்மணி. சென்னையில் வலிப்பு நோய் சிகிச்சைக்கென முதன்முதலில் தனி மையம் தொடங்கி வெற்றிகரமாகப் பல நோயாளிகளுக்கு சிகிச்சை தந்திருப்பதுடன், இப்போது தனது 72 வயதிலும் அந்த மையத்தைத் தொடர்ந்து நடத்தி வருபவர். வாழ்க்கையின் மிகக் கொடூரமான வலி ஒன்றை எதிர்கொண்டு, அதைத் தாங்கி, அதைக் கடந்து வந்திருப்பவர்.

அவர்... கண்டிப்பும் கனிவும் ஒருங்கே பெற்ற டாக்டர் பிரீத்திகா சாரி. சென்னையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ‘எபி சென்டர்’ என்ற பெயரில் வலிப்பு நோய் சிகிச்சை மையத்தைத் தொடங்கியவர். தனது அறுபதுகளில் திடீரென எதிர்பாராத இடியாக மலக்குடல் புற்றுநோயைச் சந்தித்து, அதைத் தன் மனவலிமையால் கடந்து, நோயை வென்றுகாட்டியவர்.

‘அவள்’ வாசகர்களுக்காக அவருடைய வாழ்க்கை... இதோ அவர் வார்த்தைகளிலேயே... ‘‘அப்பா கொந்தமூர் வரதாச்சாரி. அம்மா யங்கம்மா சிட்டி. ரெண்டு பேரும் அந்தக் காலத்திலேயே 75 வருஷங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகிட்டவங்க. நாங்க மூணு பொண்ணுங்க. அப்பா விமானப் படையில் பைலட்டாக இருந்தவர். போர்க்காலத்தில் வேலை பார்த்த அனுபவம்கொண்டவர். தாத்தா வக்கீல். அதனால, குடும்பத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வும் ஆர்வமும் இயல்பாகவே இருந்தது.

‘டாக்டராகணும்’ என்பது என் ரெண்டு வயசு கனவு. சிலருக்கு வயது கூடக் கூட சின்ன வயசு லட்சியம் காலத்துக்கேற்ப மாறும். ஆனால், நான் தினம் தினம் என்னை டாக்டராகவேதான் நினைச்சுட்டு இருந்தேன். விளையாடறதுகூட டாக்டர் விளையாட்டுதான். பள்ளி நாடகத்தில், டாக்டர் வேஷம் என்றால்தான் பங்கேற்பேன்.

அந்த லட்சியத்தின் அடுத்தகட்டமாக, செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பகுதிநேரமாக சேவை செய்தேன். யாருக்காவது உடம்பு சரியில்லன்னா ஓடிப்போய் உதவுவேன். பள்ளிவிட்டு வந்ததும் பக்கத்தில் இருக்கும் க்ளினிக்கில் இருக்கும் டாக்டருக்கு சின்னச் சின்ன உதவிகள் செய்றது, கோடை விடுமுறைகளில் ஆஸ்பத்திரிகளில் வேலை செய்றது... இப்படி என் செயல்பாடுகள் எல்லாமே மருத்துவத்துறையையே சுத்தி வந்தது.

பியூசி முடிச்சதும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிச்சேன். எம்.எம்.சி-யில் பொது மருத்துவத்தில் எம்.டி. படிச்சேன். அங்கே படிச்ச 21 மாணவர்களில் நான் மட்டும்தான் பெண். பல்கலைக்கழகத்திலேயே முதல் இடம் பெற்றேன். பொதுமருத்துவம் படிச்ச நான், நரம்பியல் துறையில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றதுக்குக் காரணம் மறைந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்திதான்.

தற்செயலா நான் நரம்பியல் சம்பந்தமாக ஒரு தீசிஸ் பண்ணியிருந்ததைப் பார்த்துட்டு, பாராட்டி ‘‘நீ பிஹெச்.டி பண்ணலாமே’ன்னு சொன்னார். ஆய்வுப்படிப்புக்குப் பதிவு செய்துட்டு, தினமும் அதுக்காக அங்கே போக ஆரம்பிச்சேன். என்னுடைய உழைப்பையும் ஆர்வத்தையும் பார்த்துட்டு, ‘நீ டி.எம். நியூராலஜி படிக்கலாமே’ன்னு ஊக்குவிச்சார். கடினமான கோர்ஸ் அது. ரெண்டு வருஷ கோர்ஸை ஒன்றரை வருஷத்திலேயே முடிச்சுட்டு, பிஹெச்.டியைத் தொடர்ந்தேன்.

1978-ம் வருஷத்திலிருந்து பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சேன். 81-ல் எம்.எம்.சியில் உதவிப் பேராசியராக இருந்தேன். 82-ல் நான் பிஹெச்.டி பண்ணின தலைப்பிலேயே ஆராய்ச்சி பண்ண வாய்ப்பு கிடைச்சது. இந்தியா முழுவதிலுமிருந்து வந்த விண்ணப்பங்களில் தேர்வான 100 பேரில் நான் ஒருத்தி. வேலையை விட்டுட்டு ரிசர்ச் ஸ்காலரா சேர்ந்தேன்.

இடையில் அக்காவுக்குத் திருமணம். மேற்படிப்பில் நான் மும்முரமாக இருந்ததால் தங்கைக்கும் திருமணம் ஆச்சு. எனக்கு அந்த நேரத்தில் மலேசியாவில் நரம்பியல் துறை ஆரம்பிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. ஆனா, அப்பாவின் உடல்நலம் கருதி அதை வேணாம்னு சொல்லிட்டேன். ஜாதகத்தில் தோஷம் அது, இதுன்னு திருமணமும் தள்ளிப் போச்சு. என் படிப்புக்கும் சிந்தனைகளுக்கும் பொருத்தமானவராக என் அலைவரிசைக்குத் தகுந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்கணும்னு எதிர்பார்த்தேன். ஒருகட்டத்தில், வேலை மீதிருந்த காதலில் திருமணம் ஆகாததைக்கூட நான் ஒரு பொருட்டாக நினைக்கல. ‘கல்யாணமே வேண்டாம்; என்னைப் படிக்க விடுங்க’ன்னு வீட்டில் சொல்லிட்டேன்.

ஆராய்ச்சிப் படிப்பு முடிஞ்சதும் 83-ல் அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராகச் சேர்ந்தேன். அப்போலோ ஆரம்பிச்ச முதல் நாளிலிருந்து 28 வருஷங்கள் அங்கே வேலைபார்த்தேன். அங்கே நரம்பியல் துறையைக் கொண்டுவந்தேன்.

ஒண்ணு ரெண்டு வருஷங்கள் போயிருக்கும். அந்த நேரத்தில் நரம்பியல் சம்பந்தமான நிறைய நோய்கள்... பலரைக் குணப்படுத்த முடியல. ‘ஒண்ணுமே பண்ண முடியலயே’ன்னு வருத்தமா இருந்தது. அப்போதான் ‘நாம ஏதாவது ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கிட்டு அதில் தீவிரமாக இறங்கணும்’னு முடிவு பண்ணினேன். வலிப்பு நோய் நிறைய பேருக்கு இருந்தது. அதோடு, அது குறித்த கட்டுக்கதைகளும் தவறான நம்பிக்கைகளும் நிறைய இருந்தது. அதனால் அதிலேயே கவனம் செலுத்தத் தொடங்கினேன். வலிப்பு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்தால் குணமாக வாய்ப்பிருக்கு. ஆனா, அதுக்கு எம்.சி.ஹெச் படிக்கணும்.

பொதுவா சக்ஸஸ்ஃபுல்லா கரியர் அமைஞ்ச டாக்டர் யாரும் அதை விட்டுட்டு மேற்படிப்புக்கு வரமாட்டாங்க. ஆனா, நான் அஞ்சு வருஷ கோர்ஸில் சேர்ந்துட்டேன். 35 வயசுக்கு மேல படித்து, ‘பெஸ்ட் கிராஜுவேட்’ சான்றிதழுடன் 90-ல் வெளியே வந்தேன்.

வலிப்புக்கான அறுவை சிகிச்சையில் பயிற்சி வேணுமே... இங்கே அதுக்கு வாய்ப்பு இல்லாததால் இங்கிலாந்துக்குப் போய் பயிற்சி பெற்றேன். இடையில் அங்கேயும் சின்னச் சின்ன கோர்ஸ் பண்ணினேன். எதையும் போதும்னு விடமாட்டேன். இங்கிலாந்தில் நான் பார்த்துப் பார்த்து வியந்த மருத்துவமனையின் தாக்கத்தால், சென்னை வந்ததும் வலிப்பு நோயாளிகளுக்காகவே ‘எபி சென்டர்’ தொடங்கினேன். திரும்பி வர்றப்ப விமானத்திலேயே அந்தப் பெயர் என் மனசில் வந்துருச்சு! ஆனா, அறுவை சிகிச்சை மற்ற பரிசோதனை கருவிகளின் மதிப்பு 22 லட்சம் ரூபாய். வங்கிக் கடனுக்கு விண்ணப்பிச்சேன். ‘நீங்க ஒரு பெண்... ஆண் வந்து கையெழுத்து போடணும்’னு சொன்னாங்க.

இது ஒண்ணும் புதுசு இல்லை. இந்த ஆண் பெண் பாலின பாகுபாடானது கல்லூரி நாள்களிலிருந்து நான் பார்த்து, மனம் நொந்த விஷயம்தான். படிக்கும் காலத்தில் நான் கடுமையாக உழைச்சு, படிச்சு பாஸ் பண்ணியிருப்பேன். ஆனால், மாணவர்கள் ‘உனக்கென்ன.. சிரிச்சே சமாளிச்சிடுவ..!’ என்று சொல்லும்போது, கோபமும் இயலாமையும் நம்மைப் பிடுங்கித் தின்னும். நமது திறமையும் உழைப்பும் அங்கே ஒரு தூசாக மிதிக்கப்படும். அதே அவமானத்தை வங்கியில் கையெழுத்துப்போட ஓர் ஆண் தேவை என்று சொன்னபோதும் உணர்ந்தேன். ஆனா, என்ன செய்றது... வேலை நடக்கணுமே!

என் குடும்ப நண்பர் ஒருவர் வந்து கையெழுத்துபோட்ட பிறகு கடன் கிடைச்சுது. லட்சக்கணக்கில் செலவு பண்ணி, சென்னை அபிராமபுரத்தில் 1993-ம் ஆண்டில் ‘எபி சென்டர்’ தொடங்கினேன். ‘இவ்வளவு செலவு பண்ணி நல்லா நடந்துட்டா ஓகே, அப்படி சரியா நடக்கலன்னா என்ன பண்றது... எனக்குக் கல்யாணமாகி, ஒரு குழந்தை இருந்தால் அதுக்கு கல்யாணம் காட்சி பண்ண லட்சக்கணக்கில் செலவு பண்ண மாட்டேனா என்ன... அப்படித்தான் நினைச்சுக்கிட்டேன். ஆனா, என்னுடைய சென்டர் நல்ல முறையில் செயல்பட்டு, இதோ 25 வருஷங்கள் ஓடிடுச்சு!

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவங் களுக்கான அனைத்துப் பரிசோதனைகள், மனநல நிபுணர் மற்றும் டயட்டீஷியனின் ஆலோசனைகள் என எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கற மாதிரி இருந்ததால், நாலே வருஷங்களில் நல்ல பெயர் பெற்றோம். கிராமங்களில் வலிப்பு நோய் இருக்கிறவங்களுக்கு இலவசமாக சிகிச்சை தர்றது மாதிரி அப்பப்போ சேவை செய்யவும் வாய்ப்பு கிடைச்சது.

அப்புறம் ‘எபி சென்டரை’ நான் பணி செய்த அப்போலோ வளாகத்துக்குள்ளேயே வைக்கச் சொன்னாங்க. மிகப் பெரிய அங்கீகாரம் அது. 2003 வரை அங்கே நடத்தினேன். அதன்பிறகு, ஒரு நாளைக்கு 40 நோயாளிகள் பார்க்கும் அளவுக்கு பிஸி.

இப்போ காவேரி மருத்துவமனையிலும் தரமணி வி.ஹெச்.எஸ்ஸிலும் நோயாளிகளைப் பார்க்கிறேன். வலிப்பு நோயிலிருந்து மீண்ட வசதியில்லாத பெண்களுக்காக தொழிற்பயிற்சி மையம் மற்றும் பட்டறை வைக்கும் திட்டத்தையும் செயல்படுத்தலாம்னு இருக்கேன். பேக்கிங் மாதிரி தொழில்களைக் கத்துக்கிட்டு, அவுங்க சொந்தக்காலில் நிற்க இந்தப் பயிற்சி உதவும். இதைப் பெரிய அளவில் பண்ணனும்கிற விருப்பம் நிறைய இருக்கு’’ - தவழும் புன்னகையுடன் தெளிவான நீரோடை போல பேசிக்கொண்டே வருகிறார் டாக்டர் பிரீத்திகா சாரி.

இப்படிப்பட்ட ஒரு மருத்துவருக்கு, அவருடைய 70 வயதில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் எப்படியிருக்கும்?

நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அந்த இடியையும் மிகுந்த மனவலிமையோடு தாங்கியும் தாண்டியும் வந்திருக்கிறார் டாக்டர் சாரி.

‘‘2016 டிசம்பரில் எனக்கு மலக்குடல் புற்றுநோய் என்று கண்டுபிடிச்சாங்க. புற்றுநோய்க்குத் தெரியுமா நான் பெரிய நியூராலஜிஸ்ட்னு?! ‘எப்படி இதைக் கையாளப்போகிறேன்’னு எனக்குள் ஒரு பயமும் கவலையும் வந்தது. ஏன்னா, நம் மேல எவ்வளவு அன்பு, பிரியம் வெச்சிருக்கிறவங்களாக இருந்தாலும் அவங்களால் வலியை வாங்கிக்க முடியாதே! உன் நோய், உன் வலி. நீதான் அனுபவிக்கணும். சரிதானே? அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை (கீமோதெரபி), கதிரியக்க சிகிச்சை (ரேடியேஷன்) என்று கேன்சர் வந்தா செய்ய வேண்டிய எல்லா சடங்குகளையும் எனக்கும் செய்தாங்க. கீமோ காலகட்டத்தில் பசிக்கவே பசிக்காது. சாப்பாட்டைப் பார்த்துட்டு அப்படியே வெச்சிடுவேன். ஹீமோகுளோபின் லெவல் ரொம்ப இறங்கிடுச்சு. ‘இவை எல்லாம் நம்முடைய கர்மா... அதைக் கழிக்கறதுக்கான ஒரு வாய்ப்பு. பரவாயில்லை; இந்தப் பிறப்பிலேயே அதைக் கழிக்க வாய்ப்பு கிடைச்சுதே’ன்னு நினைச்சுகிட்டு எல்லா சிகிச்சைகளையும் அவற்றின் பக்கவிளைவுகளையும் மனதார ஏத்துக்கிட்டேன். மலக்குடலில் நோய் பாதித்த பகுதியை வெட்டி எடுத்துட்டு, தற்காலிகமாக மலம் கழிக்க ஒரு பையை என் வயிற்றுடன் இணைச்சிருந்தாங்க.

டாக்டர் பிரீத்திகா சாரி
டாக்டர் பிரீத்திகா சாரி

20 வருடங்களாக நான் சேர்த்து வைத்திருந்த நண்பர்கள், சோதனையான நேரத்தில் என்கூட இருந்தாங்க. அறுவை சிகிச்சை முடிந்து 10 நாட்கள் நான் ஆஸ்பத்திரியில் இருந்தாகணும். அந்த 10 நாட்களும் எனக்கு ஒரு அட்டெண்டர் வேணும். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரமாவது கண்டிப்பாக அவங்க என் பக்கத்தில் இருந்தாகணும். என்ன செய்றதுன்னு யோசிச்சேன். வாட்ஸ்அப்பில் இந்தத் தகவலைப் பகிர்ந்து உதவி கேட்டதும் 22 பேர் பதில் அனுப்பினாங்க. அவங்கதான் எனக்கு, காலையில் ஒருத்தர், மாலையில் ஒருத்தர்னு அட்டெண்டரா இருந்தாங்க.

இந்த நோயால் எனக்கு ஓர் உண்மை தெரியவந்துச்சு... ‘நான் யார்கிட்டேயும் உதவி கேட்க மாட்டேன்’னு இருக்கிறதெல்லாம் சும்மா வெட்டி பந்தா. நாம வாய்விட்டு கேட்டா, உதவுறதுக்கு இந்த உலகத்தில் நிறைய பேர் இருக்காங்க. நாமதான் கேக்கணும். தயக்கம், வெட்கம், ஈகோ எல்லாம் விட்டுட்டு நான் கேட்டேன். ஓடிவந்து, உதவினாங்க. எனக்காக எவ்வளவு பிரார்த்தனைகள்... மெக்காவிலிருந்து கொண்டுவந்த புனித நீர், லூர்துஸ் மற்றும் வேளாங்கண்ணி தண்ணீர், திருப்பதி தீர்த்தம்... இப்படி எல்லா தண்ணியும் குடிச்சேன்.

டிஸ்சார்ஜ் ஆன பிறகு 15 நாள்கள் என் நெருங்கிய தோழியின் ஹோட்டலில் தங்கினேன். அவங்க பார்த்துகிட்டாங்க. அப்புறம் வீட்டுக்கு வந்த பிறகு நானே சமாளிச்சுக்கிட்டேன். என் வேலைகளை நானே பார்க்கக் கத்துக்கிட்டேன். யாரும் என்னைப் பார்க்க வரவேண்டாம்னு சொல்லிட்டேன். இப்ப என்ன நடந்து போச்சு? எனக்கு நீரிழிவு வந்தப்பவோ, ரத்தக்கொதிப்பு வந்தப்பவோகூட வாழ்வில் எதையும் நான் நிறுத்தலை. இதுக்காக ஏன் நிறுத்தணும்? இப்படி எனக்குள் நானே சொல்லிக்கிட்டேன்!

என் வயிற்றோடு இணைக்கப்பட்டிருந்த மலப்பையுடன் நாலு மாசம் இருந்தேன். எங்கே போனாலும் அந்த மலப்பையுடன் தான் போகணும். அதனால் எங்கேயும் வெளியே போக ரொம்பத் தயக்கமாக இருக்கும். ஏன்னா, திடீர் திடீர்னு மலம் கழிக்கணும் போல உந்துதல் இருக்கும். எப்போதும் மல்லாந்துதான் படுத்திருக்கணும். ஒருக்களிச்சுப் படுக்க முடியாது. அந்தப் பை உரசிட்டே இருக்கறதால் தோல் உரியும். இங்கே வீடு முழுவதும் என்னோட தோல் துண்டுகள்தான் கிடக்கும். அந்த வேதனை யாருக்கும் வரக்கூடாதது. ஆனால், அதுவும் கடந்துதான் போனது’’ - நீண்ட பெருமூச்சுடன் நம்மை ஆழமாகப் பார்த்தபோது, மனம் கனத்திருந்தது.

பேச்சை லேசான விஷயங்களுக்குத் திருப்பினோம்.

‘‘தனியாக இருக்கீங்களே டாக்டர்? பிராக்டீஸ் தவிர்த்து வேற பொழுதுபோக்குகள்?’’

‘‘நிறைய படிப்பேன். நல்ல சினிமா பார்ப்பேன். போட்டோகிராபி பிடிக்கும். பயணங்கள் மேல் தீரா காதல் கொண்டவள் நான். உலகம் முழுவதிலும் பிரயாணம் பண்ணியிருக்கேன். ஸோ, தனிமையை நான் என்னிக்குமே உணர்ந்ததில்லை!’’

‘‘இப்போ எப்படி இருக்கீங்க...?’’

‘‘மனசு ஆரோக்கியமா, சந்தோஷமா இருக்கேன். சாப்பாடு, லைஃப்ஸ்டைல் மாத்திக்கிட்டேன். யோகா பண்றேன்! வாழ்க்கை போய்கிட்டிருக்கு!’’ - கண்களை மலர்த்தி, கைகளை விரித்து, தோள்களைக் குலுக்கிச் சிரிக்கிறார்.

மலை போல வந்த பாரத்தை, தன் மனவலிமையால் லகுவாகத் தாங்கிய தோள்கள்... டாக்டர் சாரி மீதான பரிவும் மரியாதையும் இன்னும் அதிகரிக்கச் செய்கின்றன!

வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

 • மிரளாமல் வலிப்பு வந்தவரைப் படுக்க வையுங்கள். தலைக்குக் கீழே மிருதுவான தலையணை வைத்து, அவரை ஒருபக்கமாக ஒருக்களித்துத் திருப்பிவிட்டால் வாயிலிருந்து வழியும் எச்சில் வெளியே வழிந்துவிடும். இல்லையெனில், அது மூச்சுக்குழலுக்குள் போகும் அபாயம் உள்ளது.

 • நீராகாரம் எதையும் கொடுக்கக் கூடாது. சாப்பிட எதுவுமே கொடுக்கக் கூடாது.

 • முக்கால்வாசி பேருக்கு ஒன்றரை அல்லது இரண்டு நிமிடங்களில் வலிப்பு நின்றுவிடும்.

 • வலிப்பு வந்தவரின் கையில் எதுவும் பொருள் இருந்தால் அதை எடுத்துவிட்டு, உடைகளைத் தளர்த்திவிட வேண்டும்.

 • கூட்டம் போடக் கூடாது. அவருக்கு வலிப்பு நிற்கும் வரை கூடவே ஒருவர் மட்டும் இருந்தால் போதும்.

 • வலிப்பு நின்றபிறகு சிலர் வாந்தி எடுப்பார்கள்; சிலருக்கு தலை வலிக்கும்.

 • அடுத்தடுத்து வலிப்பு வந்தாலோ, நிற்காமல் அதிக நேரம் கை கால் வெட்டிக்கொண்டே இருந்தாலோ உடனே மருத்துவரை அழைக்க வேண்டும். அல்லது ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும்.

 • பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு அளிக்க வேண்டும். அதற்கான முதலுதவியும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும்.

வலிப்பு நோய் வந்தவர்களும் எல்லோரையும் போல வாழலாம்!

 • ‘காக்காய் வலிப்பு’ எனப்படும் கால் கை வலிப்பு நோய் வந்துவிட்டால் உடனே மிரள வேண்டாம். சில விதமான வலிப்புகளைத் தவிர, முக்கால்வாசி வலிப்புகளுக்கு மருந்துகள், அறுவைசிகிச்சை, டயட் போன்ற சிகிச்சைகள் உள்ளன. ஆனால், வருடக்கணக்கில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

 • குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது சிகிச்சை எடுக்க வேண்டும். 70 சதவிகிதம் நோயாளிகள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் மருந்துகளை நிறுத்திவிடலாம். மீதி இருப்பவர்களுள் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு மருந்துகள் அறுவை சிகிச்சை உதவிசெய்யும். அதிலும் முடியாதவர்களுள் மூன்றில் ஒரு பங்கினருக்கு வாழ்நாள் முழுவதும் மருந்துகள் தேவைப்படலாம். அதிலும்

 • 30 சதவிகிதம் நோயாளிகள் மருந்து எடுத்தாலுமே வாழ்நாள் முழுதும் வலிப்பு வந்துகொண்டே இருக்கக் கூடும்.

 • சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும். இப்போது நல்ல மருந்துகள் உள்ளன.

 • வலிப்பு நோய் வந்தவர்கள் வீட்டிலேயே முடங்கத் தேவையில்லை. சிகிச்சைக்குப் பின், படிக்கலாம். வேலைக்குப் போகலாம். திருமணம் செய்துகொண்டு குழந்தையும் பெற்றுக்கொள்ளலாம். முக்கியமாக எல்லோரையும் போல நிறைந்த வாழ்க்கை வாழலாம். சாதாரணமாக இருக்கலாம்.

 • இது தொற்று நோய் அல்ல. வெகு சிலருக்கு மரபு வழியாக வரலாம்.

 • வலிப்பு வரும்போது கையில் இரும்புப் பொருள்கள், சாவி போன்றவற்றைக் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது. அதற்கான விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் எதுவும் இதுவரை இல்லை.

 • இளம் வயதினர் அல்லது 65 வயதுக்கு மேற்பட்டவர் களுக்குத்தான் பெரும்பாலும் வலிப்பு வருகிறது.

 • வலிப்பு நோய் வருவதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நீரிழிவு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, மூளையில் கட்டி அல்லது தழுப்பு போன்றவை வலிப்பு வருவதற்கான சில காரணங்கள்.