Published:Updated:

அடிக்கடி உடையும் எலும்புகள்... ஆனாலும் அசராத ஃபாத்திமா!

கணவருடன் ஃபாத்திமா
பிரீமியம் ஸ்டோரி
கணவருடன் ஃபாத்திமா

ஒரு டாக்டரின் நம்பிக்கைக் கதை

அடிக்கடி உடையும் எலும்புகள்... ஆனாலும் அசராத ஃபாத்திமா!

ஒரு டாக்டரின் நம்பிக்கைக் கதை

Published:Updated:
கணவருடன் ஃபாத்திமா
பிரீமியம் ஸ்டோரி
கணவருடன் ஃபாத்திமா

விதி வலியது என்பார்கள். ஆனால், ஃபாத்திமாவின் வாழ்க்கையில் விதியை வென்றிருக்கிறது அவரது தன்னம்பிக்கை. லட்சங்களில் ஒரு சிலருக்கு ஏற்படும் ‘ஆஸ்டியோஜெனெஸிஸ் இம்பெர்ஃபெக்டா’ என்ற அரிய வகை நோய் பாதிப்பு ஃபாத்திமாவுக்கு. இவர் கீழே விழுந்தாலோ அல்லது வேகமாக எதன் மீதாவது மோதினாலோ எலும்புகள் நொறுங்கலாம் அல்லது உடையலாம். எப்போது எந்த எலும்பு உடையுமோ என்ற அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளையும் ஃபாத்திமா கடப்பது வேதனையின் உச்சம்.

ஃபாத்திமாவின் பூர்வீகம் கேரளா மாநிலத்திலுள்ள கோழிக்கோடு. விவசாயக் குடும்பம். பெற்றோரின் நான்கு பிள்ளைகளில் இரண்டாவது மகள் இவர். பிறந்த மூன்றாவது நாளில் தொடங்கி, இதுவரை 50 முறைக்கும் மேல் இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, பலமுறை அறுவை சிகிச்சைகளும் நடை பெற்றுள்ளன. துயரத்தை ஏற்றுக்கொண்டு, வீல்சேர் வாழ்க்கைக்குப் பழகியவர், தற்போது மருத்துவப் படிப்பை முடிக்கவிருப்பது பெரும் ஆச்சர்யம். கூடவே, கடந்த ஆண்டு ஃபாத்திமாவுக்குக் காதல் திருமணம் கைகூடியிருப்பது இவர் வாழ்க்கையின் புது வசந்தம். போர், பிரச்னைகள், கவலைகள் என எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும், இந்தப் பிரபஞ்சத்தில் தினமும் லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக்குலுங்கிப் பிரகாசிப்பதுபோல, தடைகளைத் தகர்த்தெறிந்து ஜெயித்திருக்கும் ஃபாத்திமாவின் கதை, நம் வாழ்விலும் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுகிறது.

அடிக்கடி உடையும் எலும்புகள்... ஆனாலும் அசராத ஃபாத்திமா!

“குழந்தையா இருந்தபோது தரையில என்னை உட்கார வெச்சா, பிடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி மணிக்கணக்கா உட்கார்ந்துகிட்டிருப் பேன். கொஞ்சமாச்சும் நடக்க வைக்கலாம்னு பெற்றோர் முயற்சி செஞ்சா, அடிக்கடி கீழ விழுந்திடுவேன். பதறியடிச்சு என்னை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போவாங்க. நார்மல் ஸ்கூல்லதான் படிச்சேன். ஆனா, கிளாஸ் ரூம்ல நான் மட்டும் வீல்சேர்ல தனியா உட்கார்ந்திருப்பேன். அதெல் லாம் வருத்தமா இருந்தாலும், என் ஃபிரெண்ட்ஸ் என்னை அன்பா கவனிச்சுகிட்டாங்க. சராசரி அளவை விட என் உயரமும் எடையும் குறைவு தான். பலமான காத்தடிச்சாகூட தடுமாறி விழுந்துடுவேன். இதனால, ஸ்கூல் முடிக்கிற வரைக்கும் பெரிசா வெளியிடங்களுக்குக்கூட நான் போனதில்லை. என் உடம்புல பல இடங்கள்ல ஸ்டீல் தகடுகள் வெச்சு ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கு. நிறைய ஆஸ்பத்திரிகளுக்கு ஏறி இறங்கினதுக்கு அப்புறமாதான், மரபணு கோளாறால ஏற்பட்டிருக்கிற இந்த நோயைக் குணப்படுத்த நிரந்தர தீர்வு இல்லைனு தெரிய வந்துச்சு. இதனால, சின்ன வயசுலயே வலியைத் தாங்கிக்கப் பழகிட்டேன்” எனும் ஃபாத்திமா வுக்கு, உடல் அசைவு ஒவ்வொன்றுமே முக்கிய மானது.

“இதுவரைக்கும் நான் ஓடியாடி விளையாடி னதே இல்லை. மத்தவங்க விளையாடுறதைப் பார்க்கிறப்போ, என் கால்களையும் தரையில ஊன்றி ஆட்டம் போடணும்னு ஆசையா இருக்கும். ஆனா, கொஞ்சம் வேகமா நடந்தாலோ அல்லது தரையில குதிச்சாலோ என் எலும்புகள் நொறுங் கிடுமே... அந்த விளைவுகளை நினைச்சுப் பார்த்து, மனசை சாந்தப்படுத்திக்குவேன். அதிக நேரம் வீல்சேர்ல உட்கார்ந்திருந்தாலும், வாக்கர்ல கொஞ்ச தூரம் நடந்தாலும் உடல்ல வலி அதிகமாகிடும். போன வருஷம் பஸ்ல போனப்போ லேசான அதிர்வுக்கே கீழ விழுந்துட்டேன். ரெண்டு எலும்புகள் உடைஞ்சு, இப்பதான் ஓரளவுக்குச் சரியாகி யிருக்கேன். எலும்பு முறிவு ஏற்படு றப்போ மட்டும் மருந்து மாத்திரைகள் எடுத்துப்பேன்.

எழுதுறது, சாப்பிடுறதுனு எனக் கான பெரும்பாலான தேவைகளையும் சுயமா செஞ்சுப்பேன். முடிஞ்ச வரைக்கும் என் வாழ்க்கையில ஒவ்வோர் அடியையுமே நிதானமா எடுத்து வைக்கிறேன். தோல்விக்கும், ஒரு விஷயத்தைச் செய்ய முடியாத துக்கும் காரணங்களை அடுக்குறது எந்த விதத்துலயும் நியாயமில்லை. திரும்பக் கிடைக்காத இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதா அமைச்சுக்கணும்னு டாக்டராக ஆசைப்பட்டேன். அதுக்காக, மத்த வங்களைவிட கொஞ்சம் கூடுதலா மெனக்கெட்டேன்” அரிதாரமற்ற பேச்சு, ஃபாத்திமாவின் தன்னம்பிக்கைக்கு வலுசேர்க்கிறது.

கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு ஹோமியோபதி மருத்துவப் படிப்பை முடித்த ஃபாத்திமா, அதே மருத்துவமனையில் இன்டெர்ன்ஷிப் செய்து வருகிறார்.

கணவருடன்...
கணவருடன்...

“பிராக்டிகல் சிலபஸ் அதிகமிருக்கிறதால, என் உடல்நிலைக்கு எம்.பி.பி.எஸ் படிக்கிறது சிரமம். அதனால, அந்தப் படிப்புக்கான வாய்ப்பைத் தவிர்த்துட்டு, ஹோமியோபதி படிப்பைத் தேர்வு செஞ்சேன். பயிற்சி மருத்துவரா, நோயாளிகளுக்கு முதலுதவி உட்பட ஆரம்பகட்ட தேவைகளுக்கு வீல்சேர்ல இருந்தபடியே வைத்தியம் பார்க்கிறேன். இன்னும் சில மாதங்கள்ல இன்டெர்ன்ஷிப் முடிஞ் சுடும். அப்புறமா, பிராக்டிஸ் பண்ணிகிட்டே, மேற்படிப்புக்குத் தயாராகணும்.

‘நம்ம லைஃப் மட்டும் ஏன் இப்படி இருக்கு?’னு சின்ன வயசுல தினமும் அழுவேன். எந்தப் பிரச்னையா இருந்தாலும், தெளிவு பிறக்கும்போது தானே பயம் போகும். இந்த பாதிப்பு பத்தி முழுசா உணர்ந்து, வலிகளையும் சந்தோஷமா ஏத்துக்கப் பழகிட்டேன். அடிக்கடி உடையும் எலும்புகளால என் உள்ளத்தை எதுவும் செய்ய முடியாது. அதனால, என் மனசுல எந்த வலியும் பாரமும் இல்லை” என்று உற்சாகத்துடன் கூறுபவருக்கு, காதல் கணவரின் வருகை, வாழ்க்கை மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது.

சினிமாவில் கலை இயக்குநராக வளர்ந்து வரும் தன் கணவர் ஃபிரோஸ் குறித்துப் பேசுகையில் ஃபாத்திமாவின் குரலில் சிலிர்ப்பு. “நண்பர்கள் மூலமா, போன வருஷம் கொரோனா நேரத்துல தான் நாங்க அறிமுகமானோம். மனம்விட்டுப் பேசினோம். நட்பு காத லாச்சு. என் உடல்நிலையை முழுமையா புரிஞ்சுகிட்ட ஃபிரோஸ், எந்தத் தயக்கமும் இல்லாம முழுமனசோடு என்னை ஏத்து கிட்டார். ரெண்டு வீட்டார் சம்மதத்துடன் கடந்த அக்டோபர்ல கல்யாணம் நடந்துச்சு. இப்போ நாங்க தனி வீட்டுல வசிக்கிறோம்” என்று சிரிப்பவர், தனக் கிருக்கும் நீண்டகால ஆசை ஒன்றையும் பகிர்ந்தார்.

“தமிழ் ஓரளவுக்கு மட்டுமே தெரிஞ் சாலும், நிறைய தமிழ் சினிமாக்கள் பார்ப்பேன். விஜய் சேதுபதி சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் படத்துல வேலை செஞ்சு, விஜய் சேதுபதியை நேர்ல பார்க்க ஏற்பாடு பண்ணுங்கன்னு என் கணவர்கிட்ட அடிக்கடி சொல்லுவேன். அந்த நிகழ்வுக் காகக் காத்துகிட்டிருக்கேன்” கொஞ்சலாக முடிக்கும் ஃபாத்திமாவின் ஆசைகள் அத்தனையும் நிறைவேறட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism