லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை! - விழிச்சவால் தம்பதியரின் வெற்றி வாழ்க்கை

 குழந்தைகளுடன் காளிதாசன் – மோஹிதா
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகளுடன் காளிதாசன் – மோஹிதா

#Motivation

பெங்களூரில் வசிக்கும் காளிதாசன் – மோஹிதா தம்பதியர், விழிச்சவால் கொண்டவர்கள். காதல் திருமணம் புரிந்தவர்களின் மூன்று குழந்தைகளும் எவ்வித உடல்நலக் குறைபாடும் இன்றி நலமுடன் இருக்கிறார்கள். பொதுவாகவே, பச்சிளம் குழந்தையைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் தேவைப்படும். இதனால், இளம் பெற்றோர் பலரும் தங்கள் பெற்றோரின் உதவியை நாடுவார்கள். ஆனால், பார்வைத்திறன் இல்லாத இந்தத் தம்பதியர், யாருடைய துணையுமின்றி குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்க்கின்றனர். காளிதாசன், பொதுத்துறை வங்கி ஒன்றில் உதவி மேலாளராகப் பணியாற்றுகிறார். இவர்களின் இல்லற அத்தியாயம் பலருக்கும் நம்பிக்கைப் பாடம்.

“என்னோட பூர்வீகம் கரூர் மாவட்டம். ரொம்பவே ஏழ்மையான குடும்பம். குழந்தைப் பருவத்துலயே எனக்கு மாலைக்கண் நோய் இருந்துச்சு. ஒருகட்டத்துல பார்வைத்திறன் முழுமையா போயிடுச்சு. வாழ்க்கையே போராட்டமா இருந்தாலும், சிரமங்களைக் கடந்து டிப்ளோமா முடிச்சேன். தனியார் நிறுவன வேலை, டியூஷன் எடுக்கிறது, எல்.ஐ.சி ஏஜென்ட் வேலை, துணி வியாபாரம், மரம் வெட்டுற வேலை, ஆடுமாடு மேய்க்கிறதுனு பல்வேறு வேலைகளைச் செஞ்சேன். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மோஹிதாவும் ஏழ்மையான குடும்பம்தான். அஞ்சு வயசுல பார்வைத்திறனை இழந்த அவங்களும் டிப்ளோமா படிச்சிருக்காங்க. 10 வருஷத்துக்கு முன்னாடி நாங்க ரெண்டு பேரும் பெங் களூர்ல தனியார் அமைப்புல, கணினிப் பயிற்சி எடுத்துக்கிட்டோம். நண்பர்களா பழகி, காதலிக்க ஆரம்பிச்சோம். போட்டித் தேர்வுக்குத் தயாராக என்னை மோஹிதா ஊக்கப்படுத்த, கல்யாணத்துக்குப் பிறகு, எனக்கு பேங்க்ல வேலை கிடைச்சது” என்று புன்னகையுடன் கூறுகிறார் காளிதாசன்.

 குழந்தைகளுடன் காளிதாசன் – மோஹிதா
குழந்தைகளுடன் காளிதாசன் – மோஹிதா

அருகில் இருக்கும் குழந்தைகளைக் கொஞ்சிக்கொண்டே பேசும் மோஹிதா, “முதல் பிரசவத்தின்போது வேலையில இருந்து நான் விலகிட்டேன். ஒவ்வொரு முறையும் பிரசவம் முடிஞ்ச பிறகு மூணு மாதங்கள்தான் என் அம்மா எனக்குத் துணையா இருந்தாங்க. அதுக்குப் பிறகு எங்க குழந்தைகளைத் தனியாளா நானே கவனிச்சுக் கிறேன். தாய் குரங்கைப்போல, எந்நேரமும் குழந்தைகளை என் பிடியிலேயே வெச்சிருந்து கவனமா பார்த்துப்பேன். குழந்தைங்க தூங்கின பிறகுதான் சமையல் உள்ளிட்ட மற்ற வேலைகளைச் செய்வேன். ஆனாலும், 10 நிமிஷங்களுக்கு ஒருமுறை குழந்தைகளோட உடலை முழுமையா தொட்டுப் பார்த்துட்டே இருப்பேன். யூரின், மலம் கழிச்சிருந்தா உடனே சுத்தம் பண்ணிடுவேன். எனக்குப் பார்வையில்லாததால, பச்சிளம் பருவத்துல குழந்தைகளைக் கவனிச்சுக்க ரொம்பவே சிரமமாதான் இருந்துச்சு. பிறர் உதவியின்றியே, குழந்தைகளையும் வளர்க்க முடிவெடுத்தோம். கூடுதல் மெனக்கெடலுடன் இதைச் சாத்தியப்படுத்தியதால, குழந்தை வளர்ப்பு எங்களுக்குச் சிரமமா தெரியல'' என்றவர், குழந்தைகளைக் கவனித்துவிட்டு வந்து மீண்டும் தொடர்ந்தார்.

``வீட்டு நிர்வாகம் எல்லாத்தையும் நானும் கணவருமே செய்துடுவோம். ஸ்கூல் போற பெரிய பொண்ணும் பையனும் வீட்டுக்கு வந்த பிறகு, மூணு குழந்தைகளையும் எங்க அப்பார்ட்மென்ட் வளாகத்துல விளை யாடக் கூட்டிட்டுப்போவேன். அப்போ என்னோட முழுக் கவனமும் அவங்க மேல மட்டும்தான் இருக்கும். குழந்தைகளோட சின்னச் சின்ன சிணுங்கல், அழுகை, சிரிப்பு சப்தங்களை வெச்சே அவங்களோட உணர்வுகளையும் தேவை களையும் புரிஞ்சுப்பேன். பொருளாதார ரீதியான விஷயங்களை கணவர் பார்த்துப்பார். வீட்டு நிர் வாகத்தை முழுசா நான் கவனிச்சுக்கிறேன். ரொம் பவே மகிழ்ச்சியா வாழுறோம்'' என்னும் மோஹிதாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

“சவாலான வாழ்க்கைன் னாலும், இதை நாங்க கஷ்டமா பார்க்கிறதில்ல. கடவுளோட ஒவ்வொரு படைப்புக்கும் ஓர் அர்த்தம் உண்டுங்கிறதை உணர்ந்து, எங்களுக்குக் கிடைச்ச வாழ்க்கையை மகிழ்ச்சியா ஏத்துக்கிட்டோம். ஒரு விஷயத்தைத் தொடங்கும் முன்பே, ‘நம்மால் முடியுமா?’, ‘ஒருவேளை செய்ய முடிய லைனா?’ன்னு எதிர்மறையா யோசிக்கக் கூடாது. தோல்வி களை அனுபவ பாடமா எடுத்துக்கலாம். எத்தனை தடைகள் வந்தாலும், எல் லோரும் வெற்றி கிடைக்கிற வரைக்கும் ஓடிகிட்டே இருங்க”- பஞ்ச் டயலாக் கூறுகிறார் காளிதாசன்.

குழந்தைகளின் சிரிப்புச் சத்தத்தில் அந்த வீடே இன்ப மயமாகிறது!