Published:Updated:

எந்த வேதனையும் என் உள்ளத்தை அசைக்காது!

கார்த்தீபா
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தீபா

- நம்பிக்கை மனுஷி கார்த்தீபா

எந்த வேதனையும் என் உள்ளத்தை அசைக்காது!

- நம்பிக்கை மனுஷி கார்த்தீபா

Published:Updated:
கார்த்தீபா
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தீபா

வழக்கம்போல அன்றும் உற்சாகமாகப் பள்ளிக்குக் கிளம்பிய கார்த்தீபாவுக்கு, அந்த மகிழ்ச்சி ஒரு மணி நேரம்கூட நீடிக்கவில்லை. அவர் பயணித்த தனியார் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து, பெரிய பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த விபத்தில் கார்த்தீபாவுக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு வாழ்க்கையும் நிலைகுலைந்துபோனது. வேதனைகள் வாட்டினாலும், தளராத நம்பிக்கையுடன் எலெக்ட்ரோ ஹோமியோபதி படிப்பை முடித்திருக்கிறார். சென்னையை அடுத்த செம்மஞ்சேரியிலுள்ள உறவினர் வீட்டில் இருந்தவரை சந்தித்தோம்.

“கோவில்பட்டியில ஏழைக் குடும்பம். பால்ய பருவம் மகிழ்ச்சியா போச்சு. கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். ப்ளஸ் ஒன் படிச்சிட்டிருந்தபோது வழக்கம் போல அன்னிக்கும் பஸ்ல ஸ்கூலுக்குப் போயிட்டிருந்தேன். திடீர்னு நடந்ததுதான் அந்த எதிர்பாராத துயரம். பஸ்ல முன்பக்கம் உட்கார்ந்திருந்த என்மேல அஞ்சு பேர் விழுந்திருந்தாங்க. ஒருவர் அங்கேயே உயிரிழக்க, என்னோடு சேர்த்து பலருக்கும் பலத்த காயம். ‘நான் உயிரிழந்துட்டேன்’னு பேசப்பட்ட நிலையில், முதலுதவி சிகிச்சையால் உயிர் பிழைச்சேன். ஆனா, இயல்பான வாழ்க்கையைத் தொடர முடியலை. எழுத முடியாம, ரொம்ப நேரம் உட்கார முடியாம அவதிப்பட்டேன்.

வலிகளைப் பொறுத்துகிட்டு ப்ளஸ் டூ முடிச்சுட்டு, பி.எஸ்ஸி சேர்ந்தேன். இதுக்கிடையே, நிறைய டாக்டர்களைச் சந்திச்சோம். ‘வாழுற காலம்வரை இப்படியேதான் இருக்கணும்’னு சொல்லிட்டாங்க.சிகிச்சைக்காக வீடு, நகை, சேமிப்புனு எல்லாத்தையும் பெற்றோர் வித்துட்டாங்க. ஒருகட்டத்துல வீட்டுலயே முடங்கிட்டேன். நொறுங்கிப் போயிருந்த கழுத்து எலும்பைச் சரியாக்க ஆபரேஷன் நடந்துச்சு. அதுல என்ன நடந்துச்சுன்னு தெரியல. அதன் பிறகு, முகம், கழுத்து, குரல்வளம்னு மொத்த உடலும் உருமாறிடுச்சு. எல்லாத் தேவைகளுக்கும் இன்னொருத்தர் உதவி தேவைப்பட்டுச்சு. ‘ஏன்டா அந்த ஆபரேஷன் பண்ணினோம்’னு வருத்தப்படுற அளவுக்கு வேதனைகள்”

- அத்துணை துயரங்களையும் தன்னம்பிக்கையாலும் மேடைப் பேச்சுத் திறமையாலும் சுமக்கத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்.

எந்த வேதனையும் 
என் உள்ளத்தை அசைக்காது!

“அந்த ஆபரேஷனால காலேஜ் படிப்பையும் தொடர முடியலை. என்னோட உடல் கண்டிஷனைத் தெரிஞ்சுக்கணும், என்னைப்போல பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவணும்னு எலெக்ட்ரோ ஹோமியோபதி படிப்பில் சேர்ந்தேன். நாலரை வருஷப் படிப்பை முடிச்சுட்டு, ஒரு வருஷ இன்டர்ன்ஷிப்பையும் போன வருஷம் முடிச்சேன். இதுக்கிடையே, என் முதுகுத் தண்டுவடத்துல ‘சர்விக்கல் சி லெவல்’ முழுக்கவே பாதிக்கப்பட்டிருப்பது தெரிஞ்சது. எனக்கான தேவைகளைச் சுயமா செய்துக்கப் பழகினேன். கழுத்தைத் திருப்ப முடியாம, தலையைத் தூக்க முடியாம, வாயை அகலமா திறக்க முடியாம... இன்னும் நிறைய பாதிப்புகள் இருக்கு. கிட்டத்தட்ட ரோபோ மாதிரிதான் இருக்கேன். தூங்கினா வலி உயிர்போகும். ரெண்டு மணிநேர ஆழ்ந்த தூக்கமே பெரிய விஷயம். அப்புறம் உட்கார்ந்துகிட்டேதான் கொஞ்ச நேரம் தூங்குவேன். அடிக்கடி மயங்கிடுவேன். சாப்பாட்டை வாய்ல போட்டு தண்ணியை விட்டு முழுங்கிடுவேன். மென்னு சாப்பிட முடியாது.”

- நீண்ட நேரம் உட்கார முடியாமல், கையைத் தரையில் ஊன்றியபடியே சற்று ஆசுவாசமான பிறகு மீண்டும் தொடர்ந்தார்.

“என்னைப் போன்ற முதுகுத் தண்டுவட பாதிப் பாளர்கள் பலரும் நடக்க முடியாம வீல்சேர்லதான் இருக்காங்க. ஆனா, நடக்கறது உட்பட தன்னிச்சையாவே என்னால இயங்க முடியுது. எந்த வேதனையும் என் உள்ளத்தை பாதிக்காதபடி பக்குவப்பட்டுட்டேன். டாக்டர்களுக்கு என்னோட உடல்நிலை ஆச்சர்யம்தான். பெற்றோர் இன்னும் சிரமத்துலதான் இருக்காங்க. எலெக்ட்ரோ ஹோமியோபதி படிப்புக்கு இந்தியாவில் முறையான அங்கீகாரம் வழங்கப்படலை. அதனால ஒரு மருத்துவருக்கான பணிகளை எங்களால செய்ய முடியாது. எனவே, தனியார் கிளினிக்ல செவிலியருக்கான வேலை செஞ்சுகிட்டு உறவினர் வீட்டுல தங்கியிருக்கேன். மாற்றுத்திறனாளிகளுக்கு என்னாலான உதவிகளைச் செய்யுறேன். டிப்ளோமா பார்மஸி படிக்க ஸ்பான்ஸர் கிடைக்காம காத்துகிட்டிருக் கேன். தனியா மெடிக்கல் ஷாப் வெச்சு முன்னேற ஆசை. ஆனா, அதுக்கும் பண உதவி தேவை. என்ன நடக்குதுனு பார்ப்போம்”

- வறண்ட புன்னகை யுடன் விடைகொடுத்தார் கார்த்தீபா!