Published:Updated:

வலிகளைக் கடந்துவருவேன்... சாமான்ய மக்களுக்கு உதவுவேன்! - வழக்கறிஞர் கற்பகம்

தன்னம்பிக்கை மனுஷி

பிரீமியம் ஸ்டோரி

சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களில், மாற்றுத்திறனாளி பெண் வழக்கறிஞரான கற்பகத்தின் குரல் நீதிமன்றத்தில் தனித்துவமாக ஒலிக்கிறது.

விழிச்சவால் கொண்ட கற்பகம், எதிர்கொண்ட புறக்கணிப்புகளும் வலிகளும் ஏராளம். அவை மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது எனச் சட்டத்தின் துணையோடு சாமான்ய மக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் நோக்கில் வழக்கறிஞரானவர். மேலும், இவரது சமூகப்பணி காதுகேளாத, வாய் பேசமுடியாத இளைஞர்களுக்குச் சென்னை, வேளச்சேரியிலுள்ள ஓர் உணவகத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க உதவியிருப்பது என்று நீள்கின்றன. அங்கு நண்பர்கள் சூழ உற்சாகமாக இருந்தவரைச் சந்தித்தோம்.

“பூர்வீகம் திருவள்ளூர் மாவட்டம். பிறக்கும்போதே பார்வைத்திறன் குறைபாடு இருந்தது. என்னுடைய மருத்துவச் சிகிச்சைக்காக ஆறு வயசுல சென்னைக்குக் குடியேறினோம். சிறப்புப் பள்ளியில் சேர்க்காம, தனியார் பள்ளியில் சேர்த்தாங்க. வகுப்பறை போர்டுல எழுதுறது எதையும் பார்க்க முடியாதுங்கறதால, ஆறாம் வகுப்பு வரை எனக்குக் கல்வி அறிவு பெரிசா கிடைக்கலை. தினமும் வீட்டில் அழுவேன். பல விளையாட்டுகள்ல ஆர்வமிருந்தும், ‘உன்னால முடியாது’ன்னு எல்லாச் செயல்பாட்டுகளிலும் ஒதுக்கியே வெச்சாங்க.

ஒருகட்டத்துல, கல்வி மட்டும்தான் நமக்கான அடையாளத்தைக் கொடுக்கும்னு உணர்ந்தேன். பாடங்களைப் புரிஞ்சு படிக்க ஆரம்பிச்சேன். பத்தாவதுல 457 மதிப்பெண் எடுத்தேன். பிறகுதான், ஸ்கூல்ல எனக்கு மதிப்புடன் ஊக்கமும் கிடைச்சுது. ப்ளஸ் டூ-ல 1137 மதிப்பெண் எடுத்தேன். மெடிக்கல் கட் ஆஃப் 197.25 எடுத்தேன். அப்போதைய 2011-ல் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவப் படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு இல்லை. எனவே, டாக்டராகும் என் ஆசை கனவாவே போயிடுச்சு” என்று ஆதங்கத்துடன் கூறுபவர், சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் படித்திருக்கிறார்.

 வழக்கறிஞர் கற்பகம்
வழக்கறிஞர் கற்பகம்

“காலேஜ்ல சேர, டிசபிளிட்டி சர்டிஃபிகேட் வாங்க சென்னையிலுள்ள பிரபல அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். ‘நீயெல்லாம் படிச்சு என்ன பண்ண செய்யப் போறே’ன்னு என்னையும், அங்கு வந்திருந்த மற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களையும் பார்த்து சான்றிதழ் கொடுத்த டாக்டர் கேட்டார். `அவருக்கே எங்கள் மீதான புரிதல் இப்படியிருக்கும்போது, நியாயமான விஷயத்துக்குக்கூட வாழ்நாள் முழுக்க நாம போராடணுமே’ன்னு அங்கேயே அழுதேன். இப்பவரை போராட்ட வாழ்க்கைதான்.

எனக்கு வலக்கண் பார்வைச் சுத்தமா தெரியாது. இடக்கண்லயும் 50 சதவிகிதத்துக்குக் குறைவாகவே பார்வை தெரியும். புத்தகத்தைக் கண்களுக்குப் பக்கத்துல கொண்டுவந்துதான் படிக்க முடியும். காலேஜ்ல படிக்கும்போது ரொம்பவே சிரமப்பட்டேன். ஹாஸ்டல்லயும், தோழிகளோடு ரூம் எடுத்து தங்கியும் படிச்சேன். அப்போ தோழிங்க பாடம் படிக்க, அதை மனத்திரையில் பதிவு செஞ்சும், புத்தகங்களை ஸ்கேன் பண்ணி கம்ப்யூட்டர்ல ஜூம் பண்ணியும்தான் என்னால படிக்க முடியும். அதனாலேயே, என் கண்களுக்குள் தொடர்ந்து அழுத்தம் (Eye Intraocular Pressure) ஏற்படுவதால், வருஷந்தோறும் பார்வைத்திறன் அளவு குறையும். ஒவ்வொரு முறையும் எக்ஸாம் எழுதிட்டு வந்ததும் கண்ணில் அழுத்தம் அதிகமாகி தலைசுற்றல் வரும். சம்மர் லீவில் தவறாம எனக்கு ஆபரேஷன் நடக்கும். என் கண்களில் இதுவரை 15 ஆபரேஷன்கள் செய்திருந்தாலும், இன்னும் ஆபரேஷன் செய்யணும். இத்துடன் கண்புரை (Cataract) பாதிப்புக்கும் சிகிச்சை எடுத்துக்கறேன்.

இந்த நிலையிலும் காலேஜ் படிச்சுக்கிட்டே ஹோம் டியூஷன் எடுத்தேன். அதுமூலமா எனக்கான எல்லாச் செலவுகளையும் பார்த்துக்கிட்டேன். ஒருமுறை என் பஸ் பாஸ் தொலைந்துபோக, என்.ஓ.சி சான்றிதழ் வாங்க போலீஸ் ஸ்டேஷன் போனேன். அங்கே என்னை அலைக்கழிப்பு செஞ்சு அவமானப் படுத்தினாங்க. இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் செஞ்சேன். உடனே தீர்வு கிடைச்சுது.

‘என்னை மாதிரி நிறைய மாற்றுத்திறனாளி களும் சாமான்ய மக்களும் பல வகையிலும் நியாயமான தேவைகளுக்கும் அலைக்கழிக்கப் படுறாங்க. அவங்களுக்கு உரிய அதிகாரத்துல இருந்து உதவணும்’னு அப்போதான் முடிவெடுத்தேன். இன்ஜினீயரிங் முடிச்சதும் உடனே சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன்” என்பவர், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவியாக தங்கப்பதக்கத்துடன் பட்டம் பெற்றதுடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியிருக்கிறார்.

 உணவகத்தில்...
உணவகத்தில்...

“வழக்கறிஞர் பிரபாகரனிடம் ஜூனியரா இருக்கேன். நிறைய வழக்குகள்ல என்னைச் சுதந்திரமா வாதாட விடுவார். அந்த வகையில் என் திறமையை வெளிப்படுத்தினாலும், மக்களின் நன்மைக்காகப் பொதுநல வழக்கு களையும் தாக்கல் செய்ய ஆரம்பிச்சேன். ‘பெண் நீதிபதிகள் குறைவாக இருக்கும் சூழலில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தஹில்ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியது நியாயமில்லை’ன்னு பொதுநல வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் உரிய தீர்வு கிடைக்காதுன்னு தெரிஞ்சும், எல்லோரும் அமைதியாக இருந்த சூழலில் நான் தைரியமா வழக்கைத் தொடுத்தேன். தமிழகத்தில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 38,000 கோயில்கள்ல, சில கோயில்களைத் தவிர, மற்ற எல்லா கோயில்கள்லயும் மாற்றுத்திறனாளிகள் உள்ளே போறதுக்கு ஏதுவா சாய்வுத்தள வசதி ஏற்படுத்தப்படவேயில்லை. மாற்றுத்திறனாளி களால் கோயில்களுக்குப் போக முடியாது. இதுகுறித்து பொதுநல வழக்கு தாக்கல் செஞ்சேன். ‘இந்த நியாயமான விஷயத்தையும் ஏன் செய்யலை?’ன்னு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்விகேட்டிருக்கும் இந்த வழக்கு நிலுவையில் இருக்கு.

கொரோனா சூழலில் சாலையில் ஆதரவில்லாமல் திரியும் மனநலம் சரியில்லாதவர்களின் நலனுக்காக ஒரு வழக்கு தாக்கல் செஞ்சேன். இன்னும் தீர்ப்பு வரவில்லையென்றாலும், இந்த வழக்கின் மூலம் 200-க்கும் மேற்பட்ட மனநலம் சரியில்லாதவர்கள் மீட்கப்பட்டு, அரசின் முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்காங்க. இதுவே எனக்குக் கிடைச்ச வெற்றிதான். முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதி குறித்த எந்த விவரமும் அரசு வெளியிடறதில்லை. இதுகுறித்து பொதுநல வழக்கு தாக்கல் செஞ்சேன். ‘நிதி அளிப்போர், செலவு செய்த விவரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் எட்டு வாரங்களுக்குள் இணையதளத்தில் அரசு வெளியிட வேண்டும்’னு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இப்படி என்னோட கடமையைத் தொடர்ந்து செய்றேன்.

நீதிபதி என்ன மனநிலையில் இருக்கார்னு அவர் முகத்தைப் பார்த்து தெரிஞ்சுகிட்டுதான், பல்வேறு வழக்குகள்ல வழக்கறிஞர்கள் பலரும் வாதங்களை முன்வைப்பாங்க. பார்வைத்திறன் குறைபாட்டால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. ஆனாலும், நான் வாதாடும் வழக்கின் அனைத்து விஷயங்களையும் தெரிஞ்சுகிட்டு, சரியா வாதாடிடுவேன். செக் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், ‘கண்ணு தெரியாத நீயெல்லாம் விசாரணை செய்யப் போறியா?’ங்கிற மாதிரி கிண்டலா என்னைப் பார்த்துச் சிரிச்சார். ஆனா, என் குறுக்கு விசாரணையில் பதில் சொல்ல முடியாம அவரே திணறியது எனக்கு மறக்க முடியாத அனுபவம்” என்கிற கற்பகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகளிடம்

500-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டுப் பதில்களும் பெற்றிருக்கிறார்.

சமீபத்திய பாராட்டுக்குரிய முன்னெடுப் பான உணவகப் பணி ஏற்பாடு குறித்துப் பேசும் கற்பகம், “மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கத்துடன் சில நண்பர்கள் சேர்ந்து, ‘வாய்ஸ் ஃபார் தி வாய்ஸ்லெஸ் இண்டியன் பீபிள் ஃபவுண்டேஷ’னைத் தொடங்கினோம். காது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞர்கள் பலரும், கொரோனா சூழல்ல வாழ்வாதாரம் இல்லாம அவங்க சிரமப்பட்டாங்க. அவங்களுக்கு எங்க அமைப்பின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவெடுத்து, ‘சேலம் ஆர்.ஆர் பிரியாணி’ உரிமையாளர் தமிழ்ச்செல்வனிடம் உதவிக் கேட்டோம். சென்னை, வேளச்சேரியில் இருந்த அவரது உணவகத்தின் ஒரு கிளையைக் கொடுத்து உதவினார். இப்போ காலை, இரவில் உணவு விற்பனைப் பணிகளை மாற்றுத்திறன் ஊழியர்கள் பார்த்துக்கறாங்க” என்று புன்னகையுடன் கூறுபவர், உணவகத்தில் சைகை மொழிப் பயிற்சிக்கு உதவியாளராக இருக்கும் சித்ரா தேவியை நமக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

“பிரமிளா, ரத்தினம் உட்பட நாலு பெண்களுடன் சேர்த்து மொத்தமுள்ள 15 பணியாளர்களுக்கும் காது கேட்காது, வாய் பேச முடியாது. அவங்க மட்டுமே உணவகத்தை நடத்தும் சவாலான முயற்சியை நம்பிக்கையுடன் தொடங்கியிருக்கோம். சில வாரங்கள்ல, காய்கறிகள் வாங்குவது முதல் எல்லா வேலைகளையும் யார் உதவியும் இல்லாம இவங்களே செய்து உணவகத்தைச் சிறப்பா நடத்த ஆரம்பிச்சுடுவாங்க” என்ற சித்ரா தேவியுடன், அனைவரும் மகிழ்ச்சியுடன் விடைகொடுத்துவிட்டு உணவகப் பணிகளைக் கவனிக்கத்தொடங்கினர்.

வாழ்த்துகளும் பாராட்டுகளும் கற்பகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு