Published:Updated:

எனக்கு 80 உனக்கு 74... விசிறி விற்று வாழும் வைராக்கிய தம்பதி

வைராக்கிய தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
வைராக்கிய தம்பதி

#Lifestyle

எனக்கு 80 உனக்கு 74... விசிறி விற்று வாழும் வைராக்கிய தம்பதி

#Lifestyle

Published:Updated:
வைராக்கிய தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
வைராக்கிய தம்பதி
எனக்கு 80 உனக்கு 74... விசிறி விற்று வாழும் வைராக்கிய தம்பதி

ந்தச் சின்ன குடிசை வீட்டில் வசந்தா, குஞ்சிதபாதம் தம்பதி பனைமட்டையில் விறுவிறுவென விசிறிகளைச் செய் கிறார்கள். ‘‘கொஞ்சம் வெரசா முடிச்சாத்தான் வியாபாரத்துக்குப் போயிட்டு பொழுது சாயறதுக்குள்ள வீடு திரும்பலாம்’’ என்று கணவரை விரைவுபடுத்தும் வசந்தாவுக்கு வயது 74. செய்த விசிறிகளை சைக்கிளில் கட்டிக்கொண்டு வியாபாரத்துக்குச் செல்லும் குஞ்சிதபாதத்துக்கு வயது 80. முதுமையிலும் சுறுசுறுப்புடன் உழைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உத்வேக ஜோடியிடம் பேசும்போது, நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.

எனக்கு 80 உனக்கு 74... விசிறி விற்று வாழும் வைராக்கிய தம்பதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரியலூர் மாவட்டம் தா.பழூர் தோப்பு தெருவில் உள்ள தங்களது குடிசை வீட்டில், செய்துகொண்டிருந்த விசிறிக்கும் விரல்களுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு நம்மிடம் பேசினார் வசந்தா. ‘‘எங்களுக்குக் கல்யாணமான கையோட கும்பகோணம் பக்கத்துல வாழ்க்கையைத் தொடங்கினோம். ஆரம்பத்துல இவரு விவசாயம் பார்த்தாரு. அது சரிப்பட்டு வரல. மளிகைக்கடை, பால் வியாபாரம்னு ஒவ்வொண்ணா செஞ்சு பார்த்தோம். எதுவும் சுகப்படல. அரியலூர் பக்கம் வந்தோம்.

இந்த சுத்துவட்டாரத்துல பனங்குருத்து நிறைய கிடைக்கும். அந்த மட்டைகளை வெட்டிட்டு வந்து விசிறி செஞ்சு விற்க ஆரம்பிச்சோம். எங்க வாழ்க்கையிலயும் லேசா காத்து வீச தொடங்குச்சு. அதை கெட்டியா பிடிச்சுக்கிட்டோம். முதல் எதுவும் போட வேண்டியதில்ல, உடல் உழைப்பு மட்டுமே போதும்ங்கிறதால விசிறி வியாபாரம் எங்களை கைதூக்கிவிட்டுச்சு. எங்களுக்குக் கல்யாணமாகி 55 வருஷங்கள் ஆகுது. புள்ளயில்ல. இன்னிக்கு வரைக்கும் நாங்களே உழைச்சு வாழறது மனசுக்குத் தெம்பா இருக்கு’’ என்கிறார்.

எனக்கு 80 உனக்கு 74... விசிறி விற்று வாழும் வைராக்கிய தம்பதி

விசிறி செய்வது பற்றிச் சொன்னார் குஞ்சிதபாதம். ‘‘தெனமும் 10 கிலோமீட்டர் தூரம்வரை பனங்குருத்துகளைத் தேடி நடந்தே போயி மட்டைகள வெட்டிட்டு வருவேன். அப்போ குருத்துல இருக்குற பெரிய வண்டு கையில கடிச்சிடும். சில நாள்கள்ல வசந்தாவும் எனக்கு ஒத்தாசையா வரும்.

‘நீ வந்ததால இன்னிக்கு வண்டு கடிச்ச வலியே தெரியல’னு அதை வம்புக்கிழுத்துட்டு, பொழுதைக் கழிப்போம்.

வெட்டுன மட்டையில தேவையில்லாததைக் கழிச்சு காயவெச்சு, மட்டைக்கு மேல பாரம்வெச்சு பாடம் செய்வோம்.

அப்புறம் ஓலைகளை ஒரே அளவுல நீளமா வெட்டிக் காயவெப்போம். பச்சை, செவப்புனு சாயம் காய்ச்சி, ஓலைகளை அதுல ஊறவெப்போம். அதையும் காயவெச்சு எடுத்துட்டு, கத்தரிக்கோலால அந்த மட்டைய வெட்டி விசிறி செய்வோம். அப்புறம் ஊசியில நூலை கோத்து ஓரம் முழுக்க தைப்போம். கடைசியா விசிறி ஓரத்துல வசந்தா பூ டிசைன் வரையும்’’ என்றவரை தொடர்ந்தார் வசந்தா.

எனக்கு 80 உனக்கு 74... விசிறி விற்று வாழும் வைராக்கிய தம்பதி

‘‘தயாரான விசிறிகளை சைக்கிள்ல எடுத்துட்டு இவரு வியாபாரத்துக்குப் போவாரு. மொத்த வியாபாரத்துல ஒரு விசிறி 15 ரூபாய்க்கும், சில்லரை வியாபாரத்துல 20 ரூபாய்க்கும் விற்போம். கும்பகோணம், அரியலூர், விருத்தாசலம், ஜெயங்கொண்டம்னு பல ஊர்களுக்கும், கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் வரையெல் லாம் சைக்கிள்லேயே போவாரு. பஸ்ஸுல விசிறியை ஏத்த மாட்டாங்க, அப்படியே ஏத்துனாலும் உடைஞ்சிடும்ங்கிறதால சைக்கிள்தான் அவருக்குத் துணை’’ என்கிறார் வசந்தா. அந்த சைக்கிள் பழைய சைக்கிளாக இருக்கிறது. புது சைக்கிளாக இருந்தால் மிதிக்கக் கொஞ்சம் எளிமையாக இருக்கும். தொடர்ந்தார் வசந்தா.

இலவச பட்டா! வசந்தா - குஞ்சிதபாதம் தம்பதியின் இலவச பட்டா குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ‘`உரிய அதிகாரிகள் மூலம் வெகுவிரைவில் பட்டா வழங்கு வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்’’ என்று உறுதியளித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘வியாபாரத்தை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்ததுமே கால் வலி தாங்காம அப்புடியே சாஞ்சுடுவாரு. அதுமாதிரியான சில நேரங்கள்ல, நமக்குப் புள்ள இருந்திருந்தா இந்த வயசுல இன்னமும் நாம உழைக்க வேண்டி இருக்காதேனு நான் கலங்கு வேன். ‘உனக்கு நானிருக்கேன், எனக்கு நீயிருக்க, வேற என்ன வேணும்’னு சொல்லி என்னை கலங்கவிட மாட்டாரு. இத்தனை வருஷமா இப்புடித்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையா இருக்கோம்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

எனக்கு 80 உனக்கு 74... விசிறி விற்று வாழும் வைராக்கிய தம்பதி

‘‘விசிறி வியாபாரத்துக்குப் போற அன்னிக்கு 300 ரூபாய் கிடைக்கும். ஆனா, மாசத்துல 15 நாளு வியாபாரத்துக்குப் போறதே பெருசு. குளிர்காலத்துல சுத்தமா வியாபாரம் இருக்காது. வீட்டு வாடகை மாசம் 300 ரூபாய். மளிகை செலவு போக மிச்ச காசை சேர்த்துவெச்சு, வியாபாரம் இல்லாத நாளுல பொழப்பை ஓட்டுவோம். ஆண்டவன் எங்களுக்குக் காசு பணத்தைக் கொடுக்காம இருந் தாலும், ஒடம்புல எந்த நோவும் கொடுக்கல. அதையே பெரிய கொடுப் பனையா நெனைக்கிறோம். ஒடம்பு சரியில்லைன்னு நாங்க ஆஸ்பத்திரிக்குப் போனதே இல்ல. இந்த வயசுலயும் நாங்க விசிறி செய்ய ஊசியில நூலை கோத்து, தைக்குறதைப் பார்த்து எல்லாரும் ஆச்சர்யப்படுவாங்க’’ என்று பெருமிதத்துடன் குஞ்சிதபாதம் சொல்ல, பொக்கை வாய் தெரிய சிரிக்கிறார் வசந்தா.

‘‘உழைச்சு சாப்பிடுற வைராக்கியம் தான் எங்களை இந்த வயசுலயும் ஓடவைக்குது. அதைப் பார்த்த அரசு அதிகாரிங்க சிலர், எங்களுக்கு இலவச பட்டா கொடுப்பதா சொன்னாங்க. அது இன்னும் கைக்குக் கிடைக்காம இருக்குறது ஏன்னு தெரியல. பட்டா கிடைச்சுட்டா சின்னதா ஒரு குடிசையப் போட்டு சொச்ச காலத்தை ஓட்டிடுவோம். அப்புறம் புள்ளைங்களா... எல்லாரும் நல்லாயிருங்க, பத்திரமா இருங்க!”

- ஆசீர்வாதமாகச் சொல்கிறார்கள் அந்த வைராக்கிய தம்பதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism