Published:Updated:

பதம் பார்த்த ஆசிட்... மீட்டெடுத்த மன உறுதி! - தன்னம்பிக்கை மனுஷி ரின்ஸியின் கதை

ரின்ஸி
பிரீமியம் ஸ்டோரி
ரின்ஸி

ரின்ஸியின் கதை...

பதம் பார்த்த ஆசிட்... மீட்டெடுத்த மன உறுதி! - தன்னம்பிக்கை மனுஷி ரின்ஸியின் கதை

ரின்ஸியின் கதை...

Published:Updated:
ரின்ஸி
பிரீமியம் ஸ்டோரி
ரின்ஸி

வாழ்க்கையில் சோதனைகள் வரலாம். ஆனால், சோதனையே வாழ்க்கையானால்? அப்படியான வலி மிகுந்த வாழ்க்கையை, தன் குடும்பத்துக்காக நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ரின்ஸி யின் துயரம், எதிரிக்கும் ஏற்படக் கூடாதது. பால்யத்திலேயே திருமணம், இளம் வயதிலேயே விவாகரத்து, சிங்கிள் பேரன்ட், சிறப்புக் குழந்தையின் தாய் எனத் தொடர் சவால்கள் ரின்ஸிக்கு. இந்த நிலையில், கொடூரன் ஒருவன் வீசிய ஆசிட் பாட்டில், ரின்ஸியை மட்டுமன்றி, அவரின் குழந்தை யையும் சேர்த்தே பதம்பார்த்தது. முகம் முழுக்க சிதைந்து, ஒரு கண்ணில் பார்வைத் திறனை இழந்தாலும்கூட, குடும்பத்தைக் கரைசேர்க்க அயராது போராடு கிறார் இந்தத் தன்னம்பிக்கை மனுஷி. கேரள மாநிலம் கண்ணூ ரைச் சேர்ந்த ரின்ஸியின் பேச்சில், வலிகளை மீறிய தன்னம்பிக்கை.

“என் பெற்றோர், ஏழ்மையிலும் கூட என்னை நல்லா படிக்க வெச் சாங்க. விளையாட்டு, டான்ஸ்ல ஆர்வமா இருந்தேன். என்னோட உறவினர் வீட்டுக்குப் பக்கத்துல குடியிருந்த ஒருத்தர், ஆசை வார்த்தைகளைச் சொல்லி, என்னை நம்ப வெச்சார். நானும் அவரைக் காதலிச்சேன். ஒன்பதாவது படிச்சிட்டிருந்தபோது, ஒருநாள் கடத்திட்டுப் போய் என்னைக் கல்யாணம் செய்ய முற்பட்டார். பிரச்னை பெருசாச்சு. என் பெற்றோர்கிட்ட ரொம்பவும் கெஞ்சினார். என்னை மாதிரியே அவங்களும் அவரை நம்பி, எனக்கு விவரம் தெரியாத வயசுலயே அவருக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சுட்டாங்க.

பதம் பார்த்த ஆசிட்... 
மீட்டெடுத்த மன உறுதி! - 
தன்னம்பிக்கை மனுஷி ரின்ஸியின் கதை

அதுக்குப் பிறகுதான், அந்த மனுஷனுக்கு இருந்த குடிப்பழக்கம் உள்ளிட்ட தவறான பழக்க வழக்கங்கள் பத்தியெல்லாம் தெரிஞ்சது. அடி, உதை, வசைப்பேச்சுன்னு ஒவ்வொரு நாளும் எனக்கு நரகமாச்சு. இதுக்கு நடுவுல ரெண்டு குழந்தைங்க பிறந்தாங்க. பையனுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருந்ததால, அவனுக்கான சிகிச்சைக்கும் ரொம்பவே மெனக்கெட்டேன். டான்ஸ் டீச்சரா வேலை செஞ்சுகிட்டே, ரெண்டு பிள்ளைகளையும் வளர்த்தேன். குழந்தைகளுக்கும் அவரால பாதிப்பு வந்தப்போ, என்னால தாங்கிக்க முடியல. அவருடனான 13 வருஷ பந்தத்தை உதறிட்டு, பிள்ளைகளோடு பிறந்த வீட்டுக்கு வந்துட்டேன். பிறகு, விவாகரத்து வாங்கி னேன். இதுக்கிடையே, தடைப்பட்ட ஸ்கூல் படிப்பை மறுபடியும் தொடங்கினேன். வருமானத்துக்காக, பெற்றோர்கூட சேர்ந்து ஆடு, கோழி, வாத்துனு கால்நடை வளர்ப்புல இறங்கினேன்...” - புது வாழ்க்கையை நம்பிக்கையுடன் தொடங்கிய ரின்ஸிக்கு, அந்த மகிழ்ச்சி சில ஆண்டுகள்கூட நீடிக்காதது வேதனையின் உச்சம்.

“எங்க ஊரைச் சேர்ந்த ஒருவர், என்மீதும் என் பிள்ளைகள்மீதும் அக்கறை காட்டினார். சகோதரரா நினைச்சுதான் அவர்கிட்ட பழகினேன். ஏற்கெனவே கல்யாணம் ஆன அவர், என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டார். அதை ஏற்க மறுத்து, என் நிலைப்பாட்டை பக்குவமா சொன்னேன். ஆனாலும், என்மேல அவருக்கு வன்மம் இருந்திருக்கு. கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தின இரவு பிரார்த்தனைக்காக மகனுடன் தேவாலயத்துக்குப் போயிட்டிருந்தேன். கிறிஸ்து மஸ் தாத்தா வேடத்துல வந்த அந்த நபர், எங்க மேல ஆசிட் ஊத்திட்டு ஓடிட்டார்.

நானும் பையனும் வலி யில அலறித் துடிச்சோம். பக்கத்துல இருந்தவங்க, கண்ணூர் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில எங்க ளைச் சேர்த்தாங்க. ஆனா, ஆபத்தான கட் டத்துல இருந்ததால, உடனடியா கர்நாடகா மாநிலம் மங்களூர்ல தனியார் ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டோம். பைய னும் நானும் ரெண்டு மாசம் சுயநினைவில்லாம வென்டிலேட்டர் சிகிச்சையில இருந்தோம். ரெண்டு பேருக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி நடந்துச்சு. வலது கண்ணுல எனக்குச் சுத்தமா பார்வையில்ல. ஏழு வயசு குழந்தையா இருந்த மகனுக்கும் உடல்ல பல பகுதிகள்ல காயம். ரெண்டு வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினோம்...” குரல் நடுங்க, சற்றே இடைவெளி விடுகிறார் ரின்ஸி.

பதம் பார்த்த ஆசிட்... 
மீட்டெடுத்த மன உறுதி! - 
தன்னம்பிக்கை மனுஷி ரின்ஸியின் கதை

அந்த மங்களூரு ஆஸ்பத் திரியில் இருவருக்குமான சிகிச்சை செலவுகளை மட்டும் கேரள அரசு ஏற்றுக்கொண் டது. பின்னர், ஓர் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் மகனுடன் இரண்டு மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார் ரின்ஸி. ஆனால், இருவருக்குமே பாதிப்பின் வீரியமும் ரணமும் அதிகரித்துள்ளது. மனக் கஷ்டத்தையும் புன்னகை யாக மாற்றும் அசாத்திய தன்னம்பிக்கை கொண்ட ரின்ஸி, அடுத்தடுத்த கடினமான தருணங்களையும் எளிதில் கடந்து வந்துள்ளார்.

“அடுத்து கொச்சி தனியார் ஆஸ்பத்திரி ஒண்ணுல, ரெண்டு பேருக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி நடந்துச்சு. ரொம்பவே மெனக்கெட்டும்கூட, வலது கண்ணுல பார்வை வரல. இடது கண்ணுலயும் அழுத்தம் அதிகமாகி, பார்வைத்திறன் குறைய ஆரம்பிச்சது. சிரமம் பார்க்காம, பிள்ளைகளைப் படிக்க வெச்சேன். ஏர்ஹோஸ்டஸ் கோர்ஸ் முடிச்ச மகள், இப்போ பி.காம் படிக்கிறா. கல்யாணமாகி, கணவர் வீட்டுல இருக்கா. பையன் எட்டாவது படிக்கிறான்.

கால்நடை வளர்ப்பு வேலைகளைப் பெற்றோர்கிட்ட ஒப்படைச்சுட்டு, டிரைவிங் ஸ்கூல்ல பயிற்சியாளரா வேலை செஞ்சேன். கொரோனா பிரச்னையால அந்த வேலைக்கு இப்போ போக முடியல. பெற்றோருக்கும் வயசாகிடுச்சு. அதனால, கடந்த ஒரு வருஷமா கோழி வளர்ப்பை நான் கவனிச்சுக்கிறேன். குறைவான வருமானமே கிடைச்சாலும், இதுலயே தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்கிறோம். இதுவரைக்கும் 38 லட்சம் ரூபாய் செலவாகிடுச்சு. 30 லட்சம் ரூபாய் கடன் இருக்கு. ரெண்டு பேருக்குமே இன்னும் சில பிளாஸ்டிக் சர்ஜரி செய்யணும்னு டாக்டர்கள் சொல்றாங்க. ஆனா, மேல் சிகிச்சைக்குப் பணம் இல்லாம அமைதியா இருக்கேன். ஆசிட் காயங்கள்ல தொடர்ந்து வலி இருக்கும். முன்னாடி மாதிரி ஓடியாடி எந்த வேலையும் செய்ய முடியல. அதனாலேயே, தொடர்ந்து டான்ஸ் கத்துக்கணும்; வகுப்பெடுக்கணும்ங்கிற ஆசைகள் கானல் நீராவே இருக்கு”

- வலி மிகுந்த ஏக்கத்தையும், களங்கமற்ற சிரிப்பால் மறைக்கும் ரின்ஸியின் வாழ்க்கையில் தற்போது மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த மைக்கேல், ரின்ஸி யின் நிலையை உணர்ந்து, வாழ்க்கைத் துணையாக இணைந் துள்ளார். கடந்த ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது.

“ஆசிட் வீச்சுக்குப் பிறகு, கவர்ன்மென்ட்ல இருந்து எந்தச் சலுகையும் நிதியுதவியும் எனக்குக் கிடைக்கல. ஆசிட் ஊத்தின அந்த ஆளுக்கு, 12 வருஷ சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில, ஒரு வருஷத்துலயே ஜாமீன்ல வெளியே வந்துட்டார். பிறகு, மேல் முறையீடு செய்யுறதுக்கும், நீதிக்காகப் போராடவும் எனக்குப் போதிய பக்கபலம் இல்ல. அதனால, அந்த கேஸ் பத்தியும், அந்த ஆள் பத்தியும் சுத்தமா மறந்துட்டேன். அதேசமயம், தப்பு செஞ்சவங்களே தைரியமா சமூகத்துல நடமாடுறப்போ, பாதிக்கப்பட்ட பெண்கள் ஏன் வீட்டுலயே முடங்கியிருக்கணும்னுதான் வெளியே வந்தேன். இந்த வேதனை, வாழ்நாள் முழுக்க எனக்கும் என்னைச் சார்ந்தவங்களுக்கும் ஆறாத வடுதான். இதுபோல இனி யாருக்கும் நடக்காதபடி, வன்முறை, துவேஷம் மறந்து, எல்லோரையும் குறைந்தபட்சம் சக மனுஷங்களாவாவது அணுகுவோம்”

- அழுத்தமான மெசேஜ் சொல்லி முடிக்கும் ரின்ஸியின் வார்த்தைகளில் தன்னம்பிக்கை ததும்புகிறது.