Published:Updated:

“அம்மா என் முகம் பார்க்க பயந்தாங்க!” - இது செம்பருத்தி அக்காவின் கதை!

செம்பருத்தி

இவருக்கு உதவ விருப்பம் தெரிவிக்கும் வாசகர்கள் help@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். படங்கள்: சந்தீப்

“அம்மா என் முகம் பார்க்க பயந்தாங்க!” - இது செம்பருத்தி அக்காவின் கதை!

இவருக்கு உதவ விருப்பம் தெரிவிக்கும் வாசகர்கள் help@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். படங்கள்: சந்தீப்

Published:Updated:
செம்பருத்தி

‘`என் முகத்தைப் பார்த்ததும் அலறி அடிச்சுக்கிட்டு ஓடுவாங்க. பேய், வெந்து போனவள், அசிங்கமான மூஞ்சுன்னு கேலி பண்ணிப் பேசாத ஆட்களே கிடையாது. பலர் முன்னாடி கூனிக்குறுகி நின்னுருக்கேன். இனியும் இப்படி வாழக் கூடாதுன்னு என்னுடைய கூட்டைத் திறந்து வெளியுலகத்தை நிமிர்ந்து பார்க்க ஆரம்பிச்சிருக்கேன்’’ என நம்பிக்கை ததும்பப் பேசுகிறார் செம்பருத்தி.

சிறுவயதில் ஒரு தீ விபத்தில் காயமடைந்தவர், அதன்பின் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கி இருந்திருக்கிறார். வாழ்க்கை பற்றிய தெளிவு வந்தபிறகு தன் நண்பரைத் திருமணம் செய்து, சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கும் செம்பருத்தி அக்காவை அவர் வீட்டில் சந்தித்தோம். கூலிக்குப் பூக்கட்டிக் கொடுக்கும் தொழில் செய்யும் செம்பருத்தி அக்கா பூக்களைக் கட்டியபடி நம்மிடம் பேசத் தொடங்கினார். இது செம்பருத்தி அக்காவின் கதை!

‘‘அப்ப எனக்குப் பத்து வயசு இருக்கும். ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து, எங்க ஆயாவுக்கு வாழைப்பழம், டீ எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டுத் தூங்கினேன். கரண்ட் பெட்டியில் தீப்பிடித்து பக்கத்துல இருந்த குடிசை எல்லாம் திடீர்னு பத்திக்கிச்சு. எல்லாரும் வீட்டிலிருந்து வெளியே ஓடிட்டாங்க. நானும் வெளியில ஓடி வந்திருப்பேன்னு நினைச்சிருக்காங்க. ஆனா, தூங்கிட்டு இருந்ததால எனக்கு எதுவுமே தெரியல. வீட்டு ஓலை மேல விழுந்து முகம், கழுத்து முழுக்க வெந்துடுச்சு.

கணவருடன்...
கணவருடன்...

ஆஸ்பத்திரியில் பொழைக்க வாய்ப்பே இல்லைன்னுதான் சொல்லியிருக்காங்க. எப்படியோ போராடிக் காப்பாத்திட்டாங்க. அப்பவே செத்திருந்தாகூட சந்தோஷமா போயிருப்பேன். உயிரோடு இருந்து தினம் தினம் சாகுற நிலைமையில் தான் இருந்தேன்’’ என்றவர் சில நொடி மெளனத்திற்குப் பின் தொடர்ந்தார்.

‘‘அதுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் வீட்டுக்குள்ளேயேதான் இருந்தேன். டிரஸ் எதுவும் போட முடியாது. காயத்துக்கு மருந்து கட்டி விடுவாங்க. அதுதான் எனக்கு டிரஸ். படுத்தா தூக்கம் வராது. உடம்பெல்லாம் எரியும். கொஞ்ச நேரம்கூட ஃபேன் இல்லாம இருக்க முடியாது. வார்த்தையால சொல்ல முடியாத ரணம். வீட்டில் இருந்த கண்ணாடியை எல்லாம் எங்க ஆயா ஒளிச்சு வச்சிடுச்சு. என் முகத்தை நான் பார்க்கவே இல்ல. ஒருநாள் சாப்பிடும்போது சாப்பாட்டுத் தட்டுல என் முகத்தைப் பார்த்துக் கதறி அழுது மயங்கி விழுந்துட்டேன். என் முகம் வெந்துபோயிருக்குன்னு அப்பதான் எனக்குத் தெரிஞ்சது.

என் ஆயாதான் என் பலம். யார்கிட்டேயும் கூனிக்குறுகி நிற்காதேன்னு சொல்லி என்னை வீட்டுக்குள்ளேயே வச்சுப் பார்த்துக்கிட்டாங்க. எனக்கு நல்லா படிக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா, படிக்க வெளியில போனா என்னைக் கேலி பண்ணுவாங்க, நான் கஷ்டப்படுவேன்னு ஆயா அனுப்ப மாட்டேன்னு சொல்லிடுச்சு.

அது உண்மைன்னு எனக்கு சீக்கிரமே புரிஞ்சுது. என்கூட ஸ்கூலில் ஃப்ரெண்டா பழகின பிள்ளைங்களே என்னைப் பார்த்து கேலி பண்ணிச் சிரிச்சாங்க. சொந்த பந்தங்க என்னைக் கிட்டகூடச் சேர்க்கல. அவ்வளவு ஏன், பெத்த அம்மாவே புடவை முந்தானையால முகத்தை மறைச்சிக்கிட்டுதான் என்னைப் பார்ப்பாங்க. கேட்டா, ‘உன் முகத்தைப் பார்க்க பயமா இருக்கு’ன்னு சொல்லுவாங்க. நான் வயசுக்கு வந்தப்பகூட என் அம்மா என் பக்கத்துல நிற்கல. எங்க சித்திங்கதான் எல்லாச் சடங்கும் பண்ணு னாங்க. நாம ஏன் உசுரோட இருக்கணும்னு அப்போ தெல்லாம் தோணும். ‘என் பொண்ணு அழகை இழந்தப்பவே செத்துடுச்சு’ன்னு என் அப்பா சொல்லிட்டாரு. அதுவரை புதுத்துணி எடுத்துக் கொடுத்து என்னை அழகு பார்த்தவர், அந்த விபத்துக்குப் பிறகு எனக்கு டிரஸ் எடுத்துக் கொடுக்கிறதையே நிறுத்திட்டாரு.

செம்பருத்தி
செம்பருத்தி

ஆயா இறந்த பிறகு அண்ணன், தம்பிங்க எல்லாரும் ஒரு மாதிரியா பேசிக் கஷ்டப்படுத்தினாங்க. ஆயா இறந்த முப்பதாவது நாள் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். எங்க அத்தைங்க வீட்டில் தங்கியிருந்தேன். நண்பராக என்கிட்ட பழகின ஹூசைன் கிட்ட என் கஷ்டத்தைச் சொல்லவும் அவர் எனக்கு வாழ்க்கை கொடுக்கிறதா சொன்னார். எங்களுக்கு இப்ப கல்யாணமாகி ஒன்றரை வருஷம் ஆகுது. அவர் துணிக்கடையில் லோடுமேன் வேலை பார்க்கிறார். அவருக்கு தினமும் 400 ரூபாய் சம்பளம். நான் லாக்டௌன் சமயத்தில் பஜ்ஜிக் கடை எல்லாம் நடத்தினேன். ஆனா, யாரும் என்கிட்ட வாங்க முன் வரல. அதனால ரொம்ப நஷ்ட மாச்சுன்னு அதை விட்டுட்டு இப்ப கூலிக்குப் பூக்கட்டிக் கொடுத்துட்டு இருக்கேன். அதுல தினமும் 50, 100 கிடைக்கும். அதை வச்சுதான் குடும்பம் நடத்திட்டு இருக்கோம். பலமுறை பென்ஷனுக்கு எழுதிக் கொடுத்தேன். அதுவும் இன்னைக்குவரை கிடைக்கல.

கல்யாணத்துக்குப் பிறகு எனக்கு எல்லாமே அவர்தான். எங்களுக்குள்ள எப்பவாச்சும் சண்டை வரும். ‘நான் இப்படி இருக்கறதனாலதானே நீங்க இப்படிப் பண்றீங்க’ன்னுலாம் அவர்கிட்ட கேட்டிருக்கேன். ‘அப்படியெல்லாம் பேசாத. எனக்கு என் பொண்டாட்டி அழகுதான்’னு சொல்லுவார். எங்க ஆயாவுக்குப் பிறகு எனக்கு எல்லாமே என் கணவர்தான்! எனக்கு அடிக்கடி உடம்பு முடியாமப் போகும். திடீர்னு கண்ணுவலி எடுத்து, கண்ணுல நீர் வடியும். உடம்பெல்லாம் எரியும். அவர் ஓடிப்போய் மருந்து வாங்கிட்டு வந்து கொடுப்பார். ரொம்ப நல்லா கவனிச்சிப்பாரு.

எங்களுக்குன்னு ஒரு வீடு கட்டணும் என்கிற வைராக்கியத்தோடு உழைச்சிட்டு இருக்கேன். என்னை மாதிரி பலர் கஷ்டப்பட்டு வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்குறாங்க. சுதந்திரமா வெளியில வந்து வாழ ஆசைப்படுறவங்களை அசிங்கமா பார்க்காதீங்க. நாங்களும் உங்களை மாதிரியான மனுஷங்கதானே! எங்களை கேலி பண்றதனால உங்களுக்கு என்ன கிடைச்சிடப் போகுது? தீக்காயம்கூட எங்களை வெளியில முகம் காட்ட விடாமப் பண்ணல. உங்களுடைய கிண்டல்களும், புறக்கணிப்புகளும்தான் எங்களை வீட்டுக்குள்ளேயே முடங்க வைக்குது'’ என உடைந்த குரலில் சொன்னார்.

அக்காவின் கனவுகள் மெய்ப்படட்டும்.

ஆனந்த விகடன் 27-7-2022 தேதியிட்ட இதழில் வெளியான இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டுப் பல வாசகர்கள் இவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்கள். அதன் பொருட்டு உதவ விருப்பம் தெரிவிக்கும் வாசகர்கள் help@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.