Published:Updated:

எழுத்தாளர்களுக்கு வாரிசுகள் இருக்க வேண்டும் என்பது விதியில்லையே! - தி.ஜானகிராமன் மகள் உமா சங்கரி

தி.ஜானகிராமன், மகள் உமா சங்கரி
பிரீமியம் ஸ்டோரி
தி.ஜானகிராமன், மகள் உமா சங்கரி

#Lifestyle

எழுத்தாளர்களுக்கு வாரிசுகள் இருக்க வேண்டும் என்பது விதியில்லையே! - தி.ஜானகிராமன் மகள் உமா சங்கரி

#Lifestyle

Published:Updated:
தி.ஜானகிராமன், மகள் உமா சங்கரி
பிரீமியம் ஸ்டோரி
தி.ஜானகிராமன், மகள் உமா சங்கரி

து எழுத்துலக ஜாம்பவான் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.ஜா, பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, பிறகு ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, `மரப்பசு’ வரிசையில் பிரபல நாவல்கள் பல எழுதியவர்.

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்த மாகத் தடம்பதித்தவரின் படைப்புகள், இந்தக் காலத்திலும் கொண்டாடப்படுபவை. காலத்தைவென்ற அவரின் படைப்புகளை வாசிக்கும் சுகானுபவம் யாரும் தவறவிடக் கூடாதது. தி.ஜாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை வாசகர்கள் அறிய செய்ததில் அவரின் மகள் உமா சங்கரிக்கு முக்கியப் பங்கு உண்டு. தி.ஜாவின் எழுத்து, அவர் உருவாக்கிய பெண் கேரக்டர்கள், அவரது குடும்ப பாசம் என அப்பாவின் நினைவுகள் அத்தனையும் பகிர்கிறார் உமா சங்கரி.

 உமா சங்கரி
உமா சங்கரி

மகள்களுக்குப் பொதுவாக அப்பாவே முதல் ஹீரோவாக இருப்பார். உமா சங்கரிக் கும் அப்படித்தான். இரண்டு அண்ணன் களுக்கு அடுத்து இவர் ஒரே மகள்என்பதால் குடும்பத்தில் கூடுதல் செல்லமும் சலுகையும் இருந்ததை மகிழ்ச்சியோடு பகிர்ந்தபடி பேச ஆரம்பிக்கிறார்.

அப்பா இருந்திருந்தால்..?

‘`கற்பனை செய்து பார்த் தால் சிரிப்புதான் வருகிறது. 100 வயதில் பல்லெல்லாம் விழுந்து படுகிழமாகி நடக்கக்கூட முடியாமல் குளிருக்கும் கோவிட் 19-க்கும் பயந்து ஒரு மூலையில் உட்கார்ந்திருப்பாரோ என்னவோ! முதுமையில் இருக்கக் கூடாது என்று அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார், அது போலவே முதுமை வருமுன்பே விடைபெற்றுக் கொண்டுவிட்டார்’’ - சிரிப் பவரின் பேச்சு, பால்யத் துக்குள் நுழைகிறது.

‘`நான் மூன்றாவது படித்துக்கொண்டு இருந்தபோது அப்பாவை சுதந்திர தினத்துக்குக் கொடியேற்ற பள்ளிக்கூடத்தில் அழைத்திருந்தார்கள். கொடியேற்றிவிட்டு அதே கொடியின்கீழே இருந்த படியில் உட்கார்ந்தார். குழந்தைகள் எல்லோரையும் தன் அருகே உட்கார வைத்து சிபிச் சக்கரவர்த்தியின் கதையைச் சொன்னார். சொல்லப்போனால் அது சிக்கலான ஒரு கதை. பல ஆண்டுகள் கழித்து பருந்துக்கும் சிபிக்கும் நடந்த வாக்குவாதத்தைப் படித்தேன். ஆனால், உயிரினங்களின்மேல் ஒருவன் வைத்திருந்த அன்பையும் அதற்கு தன்னையே பலி கொடுக்கத் தயாராக இருந்ததையும், குழந்தைகளும் எளிதில் புரிந்துகொள்ளும்படி அப்பா உருக்கமாகச் சொன்னது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. அப்பா குடும்ப உறவுகளிலிருந்து எப்போதும் விலகி இருந்ததில்லை. குடும்ப, சமூக உறவுகள் அவரின் எழுத்துப் பொருள்களாகவே அமைந்தன. குடும்பத்தில் எல்லோருடனும் அவர் பிரியமாகவே பழகினார்.

 தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமன்

எழுத்தாளர்களுக்கு, பொதுவாகக் கலைஞர் களுக்கு அவர்களுடைய கற்பனை உலகில் சஞ்சரிக்க கொஞ்சம் தனிமை வேண்டும்; கூடவே அதற்கான நேரமும் சௌகரியமும் பிரைவஸியும் வேண்டும்; குடும்பத்தினரும் சமூகமும் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்பாவுக்கு அவற்றில் ஒரு தடையும் இருந்ததில்லை. சென்னை வீட்டில் மாடியில் அவருக்கென தனி அறை இருந்தது. இரவில் பல மணி நேரம் சிந்திக்கவோ படிக்கவோ எழுதவோ முடிந்தது. டெல்லியில் இருந்த வீடு சிறியது, அதனால் சில நேரம் அலுவலக அறையில் உட்கார்ந்து எழுதினார் அல்லது இரவில் வீட்டில் எழுதினார்...’’ - மலரும் நினைவுகளில் மலர்ந்தவர், அப்பாவின் படைப்புகளில் வரும் பெண் கேரக்டர்கள் பற்றி பெருமைகொள்கிறார்.

‘`அப்பாவின் கதைகளில் வரும் பெண்கள் தங்கள் வாழ்க்கையைச் சுதந்திரமாக அமைத்துக்கொள்ளும் சக்தி உடையவர்கள். சங்கடமான சூழ்நிலைகளையும் தைரியமாகக் கையாள்பவர்கள்.

ஓர் எழுத்தாளர் உயிர் நாடியுடன் பாத்திரங்களைப் படைக்கும்போது நாமும் அவர்களுடன் ஒன்றிவிடுகிறோம். உணர்ச்சிவசப்படுகிறோம். சிரிக்கிறோம், அழுகிறோம். அந்த கேரக்டர்கள் பல காலத்துக்கு நம் மனதில் தங்கிவிடுகிறார்கள்.’’

புரட்சியான பெண் கேரக்டர்களைப் படைத்த எழுத்தாளர் தி.ஜாவால், தன் மகளின் காதல் திருமணத்தை ஓர் அப்பாவாக அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைப் பற்றியும் பேசுகிறார் உமா சங்கரி.

‘`எங்களுடையது காதல் திருமணம் மட்டுமல்ல, கலப்புத் திருமணமும்கூட. திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்று நம்பும் நம் நாட்டில், அதுவும் சாதி அமைப்புக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நம்பும் நம் நாட்டில் பெற்றோர் தம் மகனோ, மகளோ காதல்-கலப்புத் திருமணம் செய்துகொள்வது பற்றிக் கவலைப்படுவது இயற்கை. பிள்ளைகள் தவறு செய்கிறார்களோ, அந்தத் திருமணம் நிலைக்குமா என்றெல்லாம் அவர்களுக்குத் தோன்றும். என் பெற்றோரும் கவலைப்பட்டார்கள். எங்கள் குடும்பத்தில் முதல் கலப்புத் திருமணம் என்னுடையது. அதற்கு எதிர்ப்பு எழுந்ததில் ஆச்சர்யமில்லை. இன்றும்கூட நம் சமூகத்தில் அந்த எதிர்ப்பு இருக்கத்தானே செய்கிறது. ஆனால், பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு என் பெற்றோர் விட்டுக் கொடுத்து எங்களையும் எங்கள் குழந்தைகளையும் ஏற்றுக் கொண்டது பெரிய விஷயம். இந்த விஷயத்தில் அம்மாவைக்கூட அப்பாதான் சமாதானப்படுத்தினார் ‘‘ - பெற்றோரின் பெருந்தன்மையில் பூரிக்கிறார் மகள்.

அப்பாவை இழந்த வலியின் எச்சம் இன்னுமிருக்கிறது மகளிடம்.

‘`ரிடையர் ஆனதும் அப்பா சென்னையில் இருக்க வேண்டும் என்று வந்தார். நான் அப்போது ஹைதராபாத்திலும், என் அண்ணன்கள் டெல்லியிலும் இருந்தோம். அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமல்போய் நான் பார்த்ததில்லை. ஆனால், இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு அவருக்கு புரோங்கைடிஸ் எனப்படும் மூச்சுக்குழல் அழற்சி பிரச்னை வந்தது. அடிக்கடி காய்ச்சல் வந்தது. திடீரென்று அது விஷக்காய்ச்சலாகி இறந்துவிட்டார். அப்பாவின் மறைவு எங்களைவிடவும் அம்மாவைப் பெரிதும் பாதித்தது, ஆனாலும், அதிலிருந்து மீண்டு பல வருடங்கள் நல்லபடியாகவே இருந்தார். இன்று அம்மாவும் இல்லை, அண்ணன்களும் இல்லை. என் கணவரும் தவறிவிட்டார். நான், என் கணவர், இரண்டு மகள்கள் என நால்வரும் திருப்பதி அருகில் கணவரின் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்துகொண்டு பல சமூக இயக்கங்களில் 30 வருடங்களாக ஈடுபட்டிருந்தோம். இப்போது நான் மகளுடன் ஹைதராபாத்தில் இருக்கிறேன்.’’

வலி மறைத்துத் தொடர்பவரின் பேச்சு மீண்டும் தி.ஜாவின் நூற்றாண்டு பக்கம் திரும்புகிறது.

‘`அறுபது எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் அப்பாவின் எழுத்துகளைப் பலரும் வாசிக்கிறார்கள். இளம் வயதினர் அவரின் எழுத்துகளைப் பாராட்டி, பரவசமாகப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என்பதுதான் அப்பாவின் நூற்றாண்டில் எனக்கு ஆச்சர்யம் தருகிறது. இதற்கு சில காரணங்கள் இருக்கலாம். நம் சமுதாயம் சில பல விஷயங்களில் இன்னும் பெரிதாக மாறவில்லை. மனிதர்களின் அடிப்படை உணர்ச்சிகளைப் பற்றி, அடிப்படை பிரச்னைகளைப் பற்றி எழுதியதால் அந்தக் கதைகள் இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கின்றன. அப்பாவின் எழுத்து ஸ்டைல் துடிப்பும் தெறிப்பும் நிறைந்தது’’ - நிதர்சனம் சொல்பவர், அப்பாவின் நூற்றாண்டு ஸ்பெஷலாக ‘மெச்சியுனை’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

“தி.ஜா இலக்கிய வட்டம் ஃபேஸ்புக் பக்கம் வந்தபோது இளவயதினர் அவரின் எழுத்துகளைப் பாராட்டி எழுதுவதைக் கவனித்தேன். அவர்களுக்கு தி.ஜா எப்படி இருந் திருப்பார் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நூற்றாண்டு ஸ்பெஷலாக என் கைவசம் இருந்த போட்டோக்களை வைத்து ஒரு போட்டோ ஸ்டோரி எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதுதான் ‘மெச்சியுனை’...’’

எழுத்தாளர்களுக்கு ஏன் வாரிசுகள் உருவாவதில்லை?

‘‘அப்பா இருந்தபோதும் சரி, அவருக் குப் பிறகும் சரி நான் கதை எழுத முயன்றதில்லை. அதற்கான உந்துதல், திறமை என்னிடம் இல்லை. ஆனால், நானும் ஆராய்ச்சி அறிக்கைகள் போன்று நிறைய எழுதியிருக்கிறேன். எழுத்தாளர்களுக்கு வாரிசுகள் இருக்க வேண்டும் என்று விதியில்லையே! அதென்ன குடும்ப சொத்தா? தான் தேர்ந்தெடுத்த துறையில் நேர்மையாக, திறமையாகப் பணி செய்தால் போதுமே!’’ என்கிறார் திருப்தியோடு.