600 ஆர்.டி.ஐ. மனுக்கள்... அரசு மருத்துவமனைகளில் நல்மாற்றங்கள்... ஆச்சர்யப்படுத்தும் வெரோணிக்கா மேரி!

#Motivation
சமூக அவலங்களுக்குத் தீர்வு காண தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்பட்டு வந்தாலும் இச்சட்டத்தைப் பொதுநலனில் அக்கறையுள்ள ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர், மதுரையைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி. குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, ஆர்.டி.ஐ மனுக்கள் மூலம் பல சமூகப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தியுள்ளார் வெரோணிக்கா.
``எளிய மக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க மறுக்கும், அலட்சியம் காட்டும், ஊழல் செய்யும் அரசையும், அரசின் கீழ் செயல்படும் அதிகாரிகளையும் கேள்வி எழுப்பி, அவர்கள் தரும் பதில்களை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்று நீதியைப் பெற்றுத் தரவும் பயன்பட்டுவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், இதுவரை நான் 600-க்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ மனுக்களை அனுப்பியிருக்கிறேன். அதன் பலனாகப் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி'' என்று கூறும் வெரோணிக்காவின் வார்த்தைகளில் திடம்.

இந்தச் சட்டப் போராட்டத்துக்கு வெரோணிக்கா வந்தது எப்படி?
அண்ணாநகரில், வீடெங்கும் நிறைந்து கிடக்கும் ஆர்.டி.ஐ பதில் கடிதங்கள் மத்தியில், வெரோணிக்கா தன் கதை சொல்ல ஆரம்பித்தார். ``திருமணமாகி 12 வருடங்களாகின்றன. இரண்டு குழந்தைகள். கணவர் ஆனந்த்ராஜ், மதுரையில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படும் மக்களைச் சந்திக்க அடிக்கடி வெளியூர் செல்வதும், மனு எழுதுவதும், அதிகாரி களுக்குப் புகார் அனுப்புவதும் என ஊருக்காக உழைத்துக்கொண்டிருப்பார். அப்போது அது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், அவர் தன் சமூகப் பணிகளை விடுவதாக இல்லை.
இதன் காரணமாக என் கணவருக்கு மிரட்டல்கள் வரும்போது, எந்தவொரு பின்புலமும் இல்லாத எங்களுக்கு ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என்று அச்சம், பதற்றம் ஏற்படும். ஆனால் அவரோ, `என் சுயநலத்துக்காக எந்தப் புகாரையும் எழுப்பல. என் ஆர்.டி.ஐ, பொதுநல வழக்குகளால பயனடைந்த மக்கள் நம் பக்கம் நிப்பாங்க' என்பார்'' என்பவர், தானும் இந்தக் களத்துக்கு வர ஒரு சம்பவம் காரணமாக அமைந்திருக்கிறது.

``என் அக்கா கர்ப்பமாக இருந்தபோது, ஊரில் இருந்த அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து குழந்தையின் வளர்ச்சியை உறுதிப்படுத்த வசதி இல்லாததால், பிறந்த நான்கு மாதங்களில் அந்தக் குழந்தையை இழந்தோம். இதனால் மனச்சோர்வுக்கு ஆளானோம். ஆரம்ப மாதங் களிலேயே குழந்தையின் வளர்ச்சியின்மை பற்றி அறிய அரசு மருத்துவ மனையில் ஸ்கேன் வசதி இருந்திருந்தால், மாற்று வழிகளைச் செய்திருக்கலாமே என்ற ஆதங்கத்திலிருந்த நான், அரசு மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் குறித்துக் கேட்டு ஆர்.டி.ஐ மூலம் என் முதல் மனுவை 2015-ல் அனுப்பினேன். அப்போதுதான் அரசின் மாவட்ட மருத்துவ மனைகள், தாலுகா மருத்துவ மனைகள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங் களில் பல்வேறு வசதிகள் இல்லாதது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் இல்லாதது, நவீனக் கருவிகள் இல்லாதது, பிரசவத்தின்போது மருத்துவர் இல்லாததால் பெண் களின் மரணங்கள், அதிகமான சிசு மரணங்கள், தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் வசதி இல்லாதது போன்ற பல முக்கியப் பிரச்னைகள் பற்றி ஆர்.டி.ஐ மூலம் மனு செய்து தீர்வு காண முடிந்தது. இதன் மூலம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து உத்தரவும் பெற முடிந்தது'' என்றவர் இன்னும் பல முக்கிய மாற்றங்களுக்குக் காரணமாகியிருக்கிறார்.
``இரண்டு வருடங்களுக்கு முன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டு வென்டிலேட்டர் செயல்படாததால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஐந்து அப்பாவி நோயாளிகள் உயிரிழந்தபோது, நீதி விசாரணையும், தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் ஆய்வு செய்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுநல வழக்கு தொடர்ந்தேன். அதை விசாரிக்க உயர் நீதிமன்றம் அமைத்த குழுவில் நானும் இடம்பெற்றேன்.
உசிலம்பட்டியில் கர்ப்பிணி கருக்கலைப்பின் போது மரணமடைந்த சம்பவத்தின்போது, கருவிலுள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவிக்கும் சட்டவிரோத ஸ்கேன் சென்டர்கள் மீதும், சட்டவிரோத கருக்கலைப்பு செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கள ஆய்வு செய்து மருத்துவ இயக்குநரகத்துக்கு அறிக்கை அனுப்பினேன். அதனால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மருத்துவர்களின் அலட்சியத்தால் ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தைச் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணுக்குத் தேவையான சிகிச்சையும் நியாயமும் கிடைக்க நடவடிக்கைகள் எடுத்தது, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமைகளுக்கு நீதி கேட்டு பெண் சமூக செயற்பாட்டாளர்களின் உண்மை கண்டறியும் குழுவோடு பொள்ளாச்சிக்குச் சென்று கள ஆய்வு செய்தது, கல்வி உரிமைச் சட்டத்தில் முறைகேடு நடப்பது பற்றி பொதுநல வழக்குத் தாக்கல் செய்து அதை முறைப்படுத்த உத்தரவு பெற்றது என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன்.
தொடர்ச்சியான ஆர்.டி.ஐ மனுக்களால் தற்போது மதுரை அரசு மருத்துவமனை உட்பட பல மருத்துவ மனைகளில் நவீனக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரையில் செயல்படாமல் இருந்த பல் மருத்துவப் பிரிவில் இப்போது தனியார் மருத்துவமனைகளைவிட சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆர்.டி.ஐ மனுக்களால் ஏற்பட்டுள்ள மாற்றம் மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றவர் இதற்காகச் செலவழிக்கும் நேரம் பற்றி பகிர்ந்தார்.
``எல்லா குடும்பத் தலைவிகளையும்போல வீட்டுக்கான பொறுப்புகளுடன், இன்னொரு பக்கம் செய்திகளையும் ஊன்றிக் கவனித்து, பிரச்னைகளை தேர்வு செய்து ஆர்.டி.ஐ கேள்விகளை உருவாக்குவேன். நானே கம்ப்யூட்டரில் டைப் செய்து போஸ்ட் ஆபீஸுக்குச் சென்று தபால் அனுப்புவேன். வருகின்ற பதில்களை ஃபைல் செய்து தொடர்ந்து ஃபாலோ செய்வேன். குடும்பத்தோடு பொதுநல வேலை பார்ப்பதில் என் கணவருக்கு மகிழ்ச்சி'' என்றவர், இதற்கான செலவுகளை எப்படிச் சமாளிக்கிறார்..?
'யாரிடமும் எந்த உதவியும் பெற்றதில்லை. வீட்டுச் செலவில் மிச்சப்படுத்தியும், வீட்டுக்கு வரும் உறவினர்கள் தரும் பணத்தையும் இந்த விஷயங்களுக் காகச் செலவழிக்கிறேன்.
சாமான்ய மக்களுக்கு ஆர்.டி.ஐ பற்றி எடுத்துச் சொல்லி, தங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெற அவர்களுக்கும் பயிற்சியளிக்கிறேன். இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் ஏற்பட வேண்டும் என்பதே என் விருப்பம்!''
வெரோணிக்காவின் முயற்சிகள் தொடர்ந்து திருவினையாகட்டும்!