Published:Updated:

“ஒரு டிகிரி முடிச்சுட்டா எல்லாம் மாறிடும்ண்ணே!” - தன்னம்பிக்கை பெண் வெற்றிலா

வெற்றிலா
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிலா

போராட்டம்

``18 வயசாகுது. 18 வருஷமும் போராட்ட வாழ்க்கைதான். ஆனாலும், நாளைக்கு சரியாகிடும்ங்கிற நம்பிக்கையை நான் இழக்கவேயில்ல...” - மெல்லிய குரலில் உறுதியாகச் சொல்கிறார் வெற்றிலா.

சிறு பிரச்னைகளுக்கே மூலையில் முடங்கிவிடுபவர்களுக்கு மத்தியில், கரூர் மாவட்டம், குளித்தலைப் பக்கமுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வெற்றிலா, ஓயவே ஓயாத பிரச்னைகளுக்கு இடையில்தான் அன்றாட வாழ்க்கையை வாழ்கிறார். ஆனாலும், கொஞ்சமும் துருப்பிடித்துப்போகாத தன் தன்னம்பிக்கையை மனதுக்குள் பொத்திவைத்து எதிர்நீச்சல் போடுகிறார்.

வெற்றிலாவின் அம்மாவையும் அவரையும் அவரின் அப்பா கைவிட்டுவிட்டார். இப்போது வெற்றிலாவின் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு இருக்க வீடில்லை. நான்கு நைந்துபோன ஃபிளெக்ஸ்களைக்குவித்து வைத்து, அதை வீடாகக்கொண்டு வாழும் கொடுமை. வறுமையுடன் உடல்நலக் குறைவும் வெற்றிலாவை தன் பங்குக்கு வாட்டுகின்றன. இப்படி ஈக்களைப்போல பிரச்னைகள் தன்னை எப்போதும் மொய்த்துக் கிடந்தாலும், எல்லாவற்றையும் ஒரு சிறுபுன்னகையாலும், அசாத்தியமான மனதைரியத்தாலும் கடந்து அடுத்த அடியை எடுத்து வைத்துக்கொண்டே வருகிறார் வெற்றிலா.

“அப்பா ராஜமாணிக்கம், அம்மா தனபாக்கியம். எங்கப்பா 15 வருஷத்துக்கு முன்னால ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு, எங்கம்மாவைத் துரத்திவிட்டுட்டார். அப்போ மூணு வயசுக் குழந்தை யாயிருந்த என்னையும், என் அம்மாச்சியையும் கூட்டிக்கிட்டு, போக்கிடம் இல்லாம எங்கம்மா அல்லாடியிருக்காங்க. நடுரோட்டுல நின்னவங்களுக்கு சொந்தக்காரங்க யாரும் உதவல. சாலை ஓரமா போட்டிருந்த பெரிய சிமென்ட் குழாயை வீடாக்கிக்கிட்டு, நாங்க மூணு பேரும் வாழ ஆரம்பிச்சோம்.

அம்மாவும் அம்மாச்சியும் கூலி வேலைக்குப் போயி பொழப்பை ஓட்டினாங்க. நான் எட்டாவது படிச்சப்போ எங்கம்மாச்சி இறந்துபோக, எங்களுக்கு இந்த ஒலகத்துல ஆதரவாயிருந்த ஒரே உயிரையும் இழந்து பரிதவிச்சு நின்னோம். அப்புறம், எங்கம்மா தோகைமலையில இருக்கிற ‘ஸ்நேகிதி’ அறக்கட்டளையில சேர்ந்து, மகளிர் மன்றத் தலைவியா இருந்தாங்க. எல்லாரும் வீட்டு நெலமையைச் சொல்லிப் புள்ளைங்களப் படிக்கச் சொல்லுவாங்க. எங்கம்மா, எங்களுக்கு வீடே இல்லாத நெலமையைச் சொல்லி என்னை படிப்புல கவனம் செலுத்த வெச்சாங்க. இன்னொரு பக்கம், எங்களோட சிமென்ட் குழாய் வீட்டை கூடப் படிக்குற புள்ளைங்க எல்லாம் கேலி பேசுவாங்க. சில நேரங்கள்ல கேவலமாவும் பேசுவாங்க. மனசு நொறுங்கிப்போகும். அம்மா தட்டிக்கொடுத்து, ‘நீ நல்லா படிச்சு நல்ல நெலமைக்கு வந்தா, இதெல்லாம் மாறிடும்’னு சொல்லிட்டேயிருப்பாங்க’’ - இரண்டு பத்திகளில் இத்தனை துயரங்களை வெற்றிலா சொல்ல, அவர் துயரம் நம் மனத்தையும் பற்றிக்கொண்டது.

 “ஒரு டிகிரி முடிச்சுட்டா எல்லாம் மாறிடும்ண்ணே!” - தன்னம்பிக்கை பெண் வெற்றிலா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘பட்ட கால்லேயே படும், கெட்ட குடியே கெடும்னு சொல்வாங்களே... அதுதான் எங்களுக்குத் தொடர்ந்து நடந்துச்சு. பல வருஷ உழைப்புல எங்கம்மா சிறுகச் சிறுக ஒன்றரை லட்சம் சேர்த்து வெச்சிருந்தாங்க. இலவச வீட்டுமனை வாங்கித் தர்றதா சொல்லி, ஒருத்தர் எங்கம்மாகிட்டயிருந்த அந்த ஒன்றரை லட்சத்தையும் வாங்கிட்டு ஏமாத்திட்டாரு. அந்த அதிர்ச்சியில, இருந்ததும் போச்சேங்கிற மன அழுத்தத்துல, அஞ்சு வருஷத்துக்கு முன்னால அம்மாவுக்கு மனநிலை சரியில்லாமப் போச்சு. இனி எனக்கு ‘நான் இருக்கேன்’னு ஆறுதல் சொல்லகூட யாருமில்லாத நெலமை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரேஷன் அரிசியை வெச்சு சாப்பிட்டுக்கிட்டு, படிப்புல கவனம் செலுத்தினேன். ஆனா, பத்தாவது முழு ஆண்டுத் தேர்வுக்கு முன்னால கடுமையான மஞ்சள் காமாலையால நான் பாதிக்கப்பட்டதால, 340/500 மார்க்தான் வாங்கினேன். இதுக்கிடையில, நாங்க குடியிருந்த சிமென்ட் குழாயை, அரசு வேலைக்காக எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. வெயில், மழைக்கு ஒதுங்க வீடுன்னு இருந்த குழாயும் போச்சு. ஒருபக்கம் அம்மா, மறுபக்கம் என் உடல்நிலைனு... என்ன வார்த்தைகள்ல அண்ணே என் கஷ்டத்தை நான் சொல்லுவேன்? இருந்தாலும், மனசுல வைராக்கியத்தை விட்டுடலை’’ - வார்த்தைகளற்று கேட்டுக்கொண்டிருந்தோம்.

‘‘ரோட்டோரமா இருந்த அரசு புறம்போக்கு இடத்துல, கிழிஞ்சுபோன ஃபிளெக்ஸ்களை எடுத்துவந்து, நாலு கம்புகளை ஊன்றி, கூரைபோல ஏதோ செஞ்சேன். வெயிலடிக்கும், மழைத்தண்ணி வரும்... ஆனாலும் வீடுபோல ஏதோ ஒண்ணு இருக்குன்னு நெனச்சுக்குவேன். மழை அதிகம் பெய்யுறப்போ, பக்கத்து பஸ் ஸ்டாப்புல தங்கிக்குவோம். இதுக்கிடையில, அரசு மேல்நிலைப்பள்ளியில 11-ம் வகுப்பு சேர்ந்தேன். ரெண்டாவது தடவை மஞ்சள்காமாலை வந்து, பாடுபட்டு மீண்டு வந்தேன்.

ப்ளஸ் டூ படிச்சப்போ, ஒடம்பு ரொம்ப பலவீனமானதால திருச்சி ஜி.ஹெச்சுக்கு போனேன். ரத்தத்துல ஹுமோகுளோபின் அளவு ரொம்ப குறைஞ்சுபோயிருந்ததைச் சொன்ன டாக்டர், ‘துணைக்கு யாரையாச்சும் கூட்டிட்டு வந்து உடனே ட்ரீட்மென்ட் எடு’னு சொன்னாங்க. ஆனா, நான் யாரைக் கூட்டிக்கிட்டுப் போவேன்... நடக்குறது நடக்கட்டும்னு ஊருக்கு வந்துட்டேன்.

தொடர்ந்து ஒடம்பு ரொம்ப மோசமாச்சு. தனியார் கிளினிக்குக்குப் போனப்போ, அந்த டாக்டர் என் நெலமையைக் கேட்டு, ஃபீஸ் வாங்காம வைத்தியம் பார்த்தாங்க. மருந்துக்கு 1,000 ரூபாய் ஆச்சு. ‘உடம்பை நல்லா பார்த்துக்க, ரெஸ்ட் அவசியம்’னு சொல்லி அனுப்பினாங்க. இந்த நெலமையில ப்ளஸ் டூ-ல 320/600 மார்க்தான் எடுக்க முடிஞ்சது. இன்னொரு பக்கம், அம்மா நெலமை இன்னும் மோசமாயிட்டே இருந்தது’’ - இத்தனை புயல்களுக்கு இடையிலும் தன் படிப்பை கொண்டு செலுத்த நினைத்த வெற்றிலாவை, கல்லூரிக் கட்டணம் பயமுறுத்தியிருக்கிறது.

‘‘காலேஜுக்கு ஃபீஸ் கட்ட 2,500 ரூபாய் என்கிட்ட இல்ல. கரஸ்ல டிகிரி படிச்சுக்கிட்டு, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்குப் பயிற்சி எடுக்கலாம்னு யோசிச்சேன். எங்க ஊரு இளைஞர்கள் சிலர் அதைக் கட்டுறதா சொன்னாங்க. ஆனாலும் நான் மறுத்துட்டு,

படிப்புக்கு முழுக்குப் போட்டுட்டு, கூலி வேலைக்குப் போய் அம்மாவுக்கு வைத்தியம் பார்ப்போம்னு முடிவெடுத்தேன். ஆனா, எங்கம்மா குணமானதுக்கு அப்புறம், நான் படிக்காமப் போனதுக்கு கோபப் படுவாங்களேனு ஒரு பக்கம் மருகுனேன்.

ஆனாலும், கூலி வேலைதான் நெசம், மத்த தெல்லாம் கற்பனைனு காட்டு வேலைகளுக்குப் போக ஆரம்பிச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருட்டையே பார்த்து வந்த எங்க வாழ்க்கையில, மொத தடவையா ஒரு கீத்து வெளிச்சம் விழுந்துச்சு. எங்க நெலமையை யார் மூலமாவோ தெரிஞ்சுக்கிட்ட ‘ஸ்நேகிதி’ அறக்கட்டளை இயக்குநர் சத்தியபாமா, எங்களுக்கு உணவுப் பொருள்களைக் கொடுத்தாங்க. தனியார் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், அந்தக் கல்லூரி முதல்வர்கிட்ட சொல்லி, முதல் வருஷம் இலவசமா பி.காம் கோர்ஸில் என்னை சேர்த்துக்க வெச்சாரு.

இப்போ ரெண்டாவது வருஷம் படிக்கிறேன். இந்த வருஷ ஃபீஸை நாராயணன்னு ஒரு சார் கட்டுறதா சொல்லியிருக்கிறாரு. மனநிலை சரியில்லாத என் அம்மாவை, எங்க ஊரு காவல் நிலைய ஆய்வாளர், மனநல காப்பகத்துல சேர்த்துவிட்டிருக்காரு.

சந்தோஷமும் நிம்மதியும், நல்ல மனுஷங் களோட ஆதரவும் வாழ்க்கையில முதல் முறையா கிடைச்சிருக்கு. செமஸ்டர் கட்டணம் தேர்வுக் கட்டணம்னு, இனி வர்ற நாலு செமஸ்டர்களுக்கு ஃபீஸ் கட்ட யாராச்சும் உதவுவாங்களாண்ணே..? நல்லா படிக்கணும், ஒரு டிகிரி முடிச்சுட்டா போதும், நல்ல வேலைக்குப் போய் எங்கம்மாவை பார்த்துக்குவேன். கஷ்டமெல்லாம் வரும், போகும். படிப்பு கடைசிவரை நம்ம கூட வரும்னு சொல்லுவாங்க. கரையேறிடலாம்ல..!''

எண்ணம் வாழ்க்கையாகட்டும் வெற்றிலா!

விகடனிலிருந்து வெற்றிலாவுக்கு!

பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் வெற்றிலாவிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க இயலவில்லை. அவர் வீடாகப் பயன்படுத்திவரும் ஃபிளெக்ஸ் போர்த்திய குடிசையும் வீடாக இல்லை. அடுத்தடுத்து வரவிருக்கும் செமஸ்டர், தேர்வுக் கட்டணங்களுக்கும் வழியில்லை. இதையெல்லாம் உணர்ந்துகொண்ட நாம், விகடனில் அறத்திட்டப்பணிகளுக்காக இயங்கிவரும் `வாசன் சாரிடபிள் டிரஸ்ட்' சார்பில் ஆண்ட்ராய்டு மொபைல்போன், தார்ப்பாய், மொபைல் சார்ஜ் செய்யும் வசதியுடன்கூடிய சோலார் லைட், காலேஜ் பேக், லஞ்ச் பேக் ஆகியவற்றை உடனடியாக வாங்கிக்கொடுத்ததுடன், செமஸ்டர் மற்றும் தேர்வுக் கட்டணங்களையும் டிரஸ்ட் சார்பிலேயே செலுத்துவதாகச் சொன்னதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார் வெற்றிலா.

 “ஒரு டிகிரி முடிச்சுட்டா எல்லாம் மாறிடும்ண்ணே!” - தன்னம்பிக்கை பெண் வெற்றிலா

“நவம்பர் மாசம் பரீட்சை வருதேனு தவிச்சிட்டிருந்தேன், இனி ஆன்லைன் கிளாஸுக்கு நான் தயார். மழைக்காலத்துல வீட்டை சரிபண்ண படுதா கிடைச்சிருக்கு. பழைய பட்டன் போனை சார்ஜ் பண்றதுக்கு தினம் ஒவ்வொரு வீட்டுக்கா போய் நிப்பேன். இனி அந்த கவலையும் இல்ல. ‘வாழ்ந்து காட்டலாம்'ங்கிற நம்பிக்கையை விகடன் இன்னும் அதிகரிச்சிருக்கு’’ என்று நன்றியும் மகிழ்வுமாகச் சொல்லி கைகூப்பினார் வெற்றிலா!