Published:Updated:

``எனக்காக கர்ப்பப்பைக் கட்டியை மறைச்சாங்க அம்மா..!'' மருகும் ஜோதிமணி

" 'உங்கப் பொண்ணு மரத்து மேல ஏறுது, கிணத்து மேல உட்கார்ந்திருக்கு, அந்தப் பையன் மேல கல்லெடுத்துப் போட்டுடுச்சு. பாம்பு இருக்கிற வேலியில காட்டுமல்லி பூப்பறிச்சிட்டிருக்கு'ன்னு என் மேல நிறைய புகார்கள் வரும்."

சமூக ஆர்வலர், கரூர் தொகுதியின் எம்.பி, எழுத்தாளர்... இப்படியெல்லாம் நமக்குப் பரிச்சயமான ஜோதிமணிக்கு இன்னோர் அழகு முகம் உண்டு. பாசமிகு மகள். அம்மாவின் நினைவுகளை உயிரிலும் உணர்விலும் சுமப்பவர். அன்னையர் தினப் பகிர்வுக்காக தன் அம்மா முத்துலட்சுமி பற்றிப் பேசிய ஜோதிமணியின் ஒவ்வொரு வார்த்தையிலும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்.

Jothimani with her mother
Jothimani with her mother

"சின்ன வயசுல அப்பா இறந்துட்டாங்க. அம்மாவால் வளர்க்கப்பட்ட பொண்ணுதாங்க நானு. என்னோட அப்புச்சி (அம்மாவோட அப்பா) ஒரு காந்திய சிந்தனையாளர். பெண்களை அடக்கி ஒடுக்கும் விஷயங்களை எல்லாம் எங்க அப்புச்சி வீட்ல பார்க்கவே முடியாது. பெண் குழந்தைகளுக்கு நல்ல மதிப்பு கொடுத்து வளர்ப்பாங்க. நான் பாதி நாளு அப்புச்சி வீட்லதான் வளர்ந்தேன். ஆணாதிக்கம் இல்லாத ஒரு குடும்பச் சூழல்ல பிறந்து வளர்ந்த எங்க அம்மா என்னையும் அப்படித்தான் வளர்த்தாங்க.

அம்மாவுக்கு பொய் சொன்னா பிடிக்காது, ஆடம்பரம் பிடிக்காது, பெரியவர்களை மரியாதைக் குறைச்சலா நடத்தக் கூடாது, எப்போதும் சுத்தமா இருக்கணும். மத்தபடி, நான் என்ன சேட்டை பண்ணாலும் அடிக்கவே மாட்டாங்க.

'உங்கப் பொண்ணு மரத்து மேல ஏறுது, கிணத்து மேல உட்கார்ந்திருக்கு, அந்தப் பையன் மேல கல்லெடுத்துப் போட்டுடுச்சு. பாம்பு இருக்கிற வேலியில காட்டுமல்லி பூப்பறிச்சிட்டிருக்கு'ன்னு என் மேல நிறைய புகார்கள் வரும்.

ஜோதிமணியின் அம்மா முத்துலட்சுமி
ஜோதிமணியின் அம்மா முத்துலட்சுமி

"அம்மா என்னை படிபடின்னு விரட்டியதே இல்ல. அங்க போகாதே, இங்க போகாதே, இந்த டிரெஸ் போடாதே, அந்த டிரெஸ் போடாதேன்னு என்னை கன்ட்ரோல் பண்ணதே இல்ல. அதனாலேயே எனக்குள்ள சுயகட்டுப்பாடு அதிகமாக வளர்ந்துடுச்சு.

அம்மாதான் என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட். நான் அவங்களை முத்துன்னு செல்லமா கூப்பிடுவேன். என்னோட ஸ்கூல் டேஸ்ல, காலேஜ் டேஸ்ல எனக்கு வந்த லவ் லெட்டர்ஸை எல்லாம் அம்மாவும் நானும் சேர்ந்துதான் படிப்போம். ஒரே சிரிப்பா இருக்கும் எங்களுக்கு...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்மாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அம்மாவும் நானும் சரிக்குச் சமமா கேலி பண்ணிப்போம். நான் கோவிச்சுக்கிட்டு சாப்பாடு வேணாம்னு சொன்னா 'மாலைக்கண்ணு மாப்பிள்ளை கணக்கா ஆயிடப் போறேடி'ன்னு சொல்வாங்க. அதாவது, சாப்பாடு வேணாம்னு சொன்ன மாப்பிள்ளை நைட்டு பசியில சமையல்கட்டை உருட்டுனானாம். அப்படி நானும் செய்வேன்னு கிண்டல் பண்ணுவாங்க.

ஜோதிமணி, அம்மா முத்துலட்சுமி
ஜோதிமணி, அம்மா முத்துலட்சுமி
`அம்மா எனும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே..!'- தாய்மையின் சிறப்பு பகிரும் பிரபலங்கள் #VikatanPhotoCards

நானும், 'உனக்கு பவுடர் டப்பி வாங்கியே நம்ம பண்ணையம் எல்லாம் அழிஞ்சு போயிடும்'னு அம்மாவைக் கேலி பண்ணுவேன். அம்மா, காலையில சீக்கிரமா எந்திரிச்சு அந்நேரமே முகத்தைக் கழுவி, பவுடர் போட்டு, தலைவாரி, பவுடர்லேயே திருநீறு வெச்சு சுத்தமா இருப்பாங்க. இடியே விழுந்தாலும் எங்கம்மா பவுடர் போட்டு பளிச்சினு இருக்கிறது மட்டும் மாறாது. அப்புறம் குளிச்சுட்டு மறுபடியும் பவுடர் போட்டு திருநீறு வெச்சு ஜம்முனு இருப்பாங்க.

அப்பா இருந்தப்போ எங்க தோட்டத்துல ஒத்தப் பனை மர பதநீர் இறக்குவாங்க. அது உடம்புக்கு ரொம்ப நல்லது. இதுக்காகக் காலையில 4 மணிக்கு எழுப்புவாங்க. அந்த நேரத்திலேயும் எங்க அம்மா எனக்கு பல்லு வெளக்கி, முகம் கழுவி, தலை வாரி பவுடர் போட்டுதான் அனுப்புவாங்க. நான் போயி பதநீர் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து மறுபடியும் தூங்கிடுவேன். அந்நேரம் அந்தக் காட்டுல அந்த ஒத்தப் பனை மரமும், பதநீர் எறக்குற அண்ணனும்தான் என்னைப் பார்க்கப் போறாங்க. இருந்தாலும் அம்மா என்ன அப்படித்தான் அனுப்புவாங்க.

"அம்மா வெஷப்பாம்பு எதுனா கண்ணுலபட்டுச்சுன்னா, புடிச்சு அடிச்சுப் போட்டுடுவாங்க."
ஜோதிமணி

ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தா, நான் சோறு எங்கேன்னுதான் வருவேன். ஆனா, எங்க அம்மா குளிக்க வெச்சு, கந்த சஷ்டிக் கவசத்தை முழுசா படிக்கவெச்சு அதுக்கப்புறம்தான் சாப்பாட்ட கண்ணுல காட்டுவாங்க. ஒரு மணி நேரம் படிக்க வேண்டிய கந்த சஷ்டிக் கவசத்தை அஞ்சு நிமிஷத்துல படிப்பேன்னா பார்த்துக்கோங்க. என் மனசெல்லாம் எப்போ சோறு தின்போம்னே இருக்கும்.

அம்மாவுக்கு தைரியம் அதிகம். நாங்க தோட்டத்து வீட்டுலதான் இருந்தோம். அங்க லைட்கூட இருக்காது. பேட்டரி லைட் எடுத்துட்டுதான் வெளியே போயிட்டு வருவாங்க. நான் அதுகூட இல்லாம போவேன். அம்மா வெஷப்பாம்பு எதுனா கண்ணுலபட்டுச்சுன்னா, புடிச்சு அடிச்சுப் போட்டுடுவாங்க" என்றவர் தொடர்ந்தார்.

ஜோதிமணியின் அம்மா முத்துலட்சுமி
ஜோதிமணியின் அம்மா முத்துலட்சுமி
எந்த ஆணாலும் கற்பனையே செய்ய முடியாத பிரசவ வலியைக் கடந்தே அவள் அம்மா ஆகிறாள்! #MothersDay

"அம்மா பொறந்ததும் வாழ்க்கைப் பட்டதும் பெரிய வீட்லதான். பின்னாடிதான் சொத்தெல்லாம் போயி கஷ்டம் வந்துச்சு. அப்போவும் கஷ்டம்னு யாராவது வீடு தேடி வந்தா கையில இருக்கிறதைக் கொடுத்துடுவாங்க. உங்க அப்பா பொன்னு வெச்ச இடத்துல நாம பூவையாவது வெக்கணும் சொல்வாங்க.

நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தப்போ பேங்க்ல இருந்த பணம் அத்தனையும் தீர்ந்துபோச்சு. எப்படியாவது என்னைப் படிக்க வைக்கணும்கிறதுக்காக, அவங்களுக்கு கர்ப்பப்பையில இருந்த ஃபைப்ராய்டு கட்டியைப்பத்தி என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டாங்க. நான் அப்போ ஹாஸ்டலில் தங்கிப் படிச்சிட்டிருந்தேன். ஒரு வருஷம் அம்மா ரத்தப் போக்குல கஷ்டப்பட்டு இருந்திருக்காங்க. ஆபரேஷன் செஞ்சா இருக்கிற பணமும் செலவாகிடும். அப்புறம் என்னைப் படிக்க வைக்க முடியாதுன்னு என்கிட்ட மறைச்சிருக்காங்க. ஒரு லீவுல வீட்டுக்கு வந்தப்போ நானா இதைக் கண்டுபிடிச்சு அம்மாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனேன். நல்ல நேரம் கேன்சர் கட்டியாக மாறுறதுக்கு முன்னாடி கூப்பிட்டு வந்தீங்கன்னு சொன்னாங்க.

இருந்த நிலத்தை வித்துதான் அந்த ஆபரேஷன் செலவை சமாளிச்சேன். இதுவும் போயிடுச்சுன்னா உனக்கு நான் எப்படிக் கல்யாணம் பண்ணுவேன்னு அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க. நீங்க இருந்தாதான் எல்லாமே எனக்குன்னு சொல்லி அம்மாவை சமாதானம் பண்ணேன். அப்புறம் அம்மாவைப் பார்த்துக்கிறதுக்காக நான் ஒரு வருஷம் நான் படிப்பை விட்டுட்டு வீட்ல இருந்தேன். அப்ப தான் எங்க ஊர்ல தலித் மக்களுக்கு தண்ணீர் விட மறுத்த பிரச்னையைப் பத்தி தெரிய வந்துச்சு. ரொம்ப டென்ஷனாகி நான் தேர்தல்ல நிக்கப் போறேன்னு சொன்னப்ப எனக்கு வயசு இருபத்தியொண்ணு. எங்க சொந்தக்காரங்க எல்லாம் தடுத்தாங்க. நான் பிடிவாதமாக இருந்ததால 'சரி உள்ளூர் எலெக்ஷன்ல தானே நிக்கப்போறா. பரவால்ல விடு'ன்னாங்க.

Jothimani with her mother
Jothimani with her mother

எங்க அம்மா, 'உனக்கு 21 வயசு ஆயிடுச்சு. மேஜர் ஆயிட்டே. அரசியலுக்குப் போனதுக்கப்புறம் உன்மேல பணம் விஷயமா ஏதாவது கெட்ட பெயர் வந்தா அப்புறம் நீயும் நானும் உயிரோட இருக்க முடியாதுங்கிறதை நினைப்புல வெச்சிக்கோ'ன்னு சொன்னாங்க. தலித் மக்களுக்குத் தண்ணீர்விட மறுத்த பிரச்னைக்காகத்தானே நான் தேர்தல்ல நின்னேன். அதுக்கு அப்புறமும்கூட அந்தப் பிரச்னையை என்னால தீர்த்து வைக்க முடியல. ஒரு கட்டத்துல என்னால அதைத் தாங்கிக்க முடியாம வீட்ல வந்து குப்புறப் படுத்துட்டு அழ ஆரம்பிச்சேன். உடனே எங்க அம்மா, 'ஒரு காரியத்துல இறங்கிட்டு, அதுக்கப்புறம் இப்படி வீட்ல படுத்துட்டு அழக்கூடாது. அதை முடிச்சிட்டு வா'ன்னாங்க. அந்தப் பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயி நிறைய போராட்டத்துக்கு அப்புறம் ஒரு முடிவுக்கு வந்துச்சு.

நான் சிங்கிளா இருக்கணும்னு முடிவெடுத்தப்போ அம்மா ரொம்ப மனசு ஒடிஞ்சு போயிட்டாங்க. ஆனா, அதுக்காக அம்மா என்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்ணதே இல்ல. உள்ளுக்குள்ளேயே உருகினாங்களே தவிர என்னை டார்ச்சர் பண்ணலை.

எங்க அம்மாவுக்கு ஆக்சிடன்ட் ஆகி முதுகுல எலும்பு முறிவு ஆகுற வரைக்கும் நானும் அம்மாவும் ஒரே பெட்லதான் தூங்கிட்டு இருந்தோம். அவங்க என்னைவிட்டுப் போன இந்த ரெண்டு வருஷமும் அம்மாவோட புடவையை என் பக்கத்துல வெச்சுட்டுத்தான் தூங்குறேன்.

`நான் என்னைப் பார்த்துப்பேன். நீ நிம்மதியா போயிட்டு வாம்மா'ன்னு சொன்ன15 நிமிஷத்துல அம்மா கிளம்பிட்டாங்க.’’
ஜோதிமணி
லாக்டெளனில் வரும் அன்னையர் தினத்திற்கு இப்படியெல்லாம் சர்ப்ரைஸ் தந்து அசத்தலாம்! #MothersDay

அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ, என் பெயரைத்தான் எழுதிக் காட்டினாங்க. டாக்டர்ஸ் இன்னும் ரெண்டு அல்லது மூணு நாள்தான்னு சொல்லிட்டாங்க. அம்மா என்னை விட்டுப் போக மனசில்லாம தவிக்கிறது தெரிஞ்சதும், வேற வழியே தெரியாம, 'நான் என்னைப் பார்த்துப்பேன். நீ நிம்மதியா போயிட்டு வாம்மா'ன்னு சொன்ன15 நிமிஷத்துல அம்மா கிளம்பிட்டாங்க.

இந்த உலகத்திலேயே எனக்கு கெடச்ச மிகப் பெரிய கிஃப்ட் எங்க அம்மாதான். முத்து இருந்த வரைக்கும் லைஃப்ல எல்லாமே இருந்த மாதிரி இருந்துச்சு. அவங்க போனதுக்கப்புறம் என்கிட்ட ஒண்ணுமே இல்லைங்கிற மாதிரி தோணுது..." என்கிற ஜோதிமணியின் குரலில் அவர் அம்மாவுடைய நினைவுகளின் ஈரம் சிலிர்க்கிறது.

எல்லா அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு