22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஊருக்கு நல்லது செய்ய வேண்டும்!

வாழ்வரசி பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்வரசி பாண்டியன்

மக்கள் சக்தி

தமிழ்நாடெங்கும் தண்ணீருக்கான குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்க, சின்னச் சின்ன நீர்நிலைகள் எல்லாம் தூர்வாராமல் புதர் மண்டிக்கிடக்க, நமக்கான முன்னெடுப்பை நாமே செய்வோம் என மக்களை ஒன்றுதிரட்டி தங்கள் ஊரில் இரண்டு குளங்களை தூர்வாரி அசத்தியிருக்கிறார் தேனி காமாட்சிபுரத்தைச் சேர்ந்த வாழ்வரசி பாண்டியன்.

``ஊருக்கென இருக்கும் ஒரே ஒரு கண்மாயும் புதர்களும் சீமைக் கருவேல மரங்களுமாகக் கிடந்தது. மழை பெய்தால் மிகச்சிறிய அளவு மட்டுமே தண்ணீர் தேங்கும். சுற்றிலும் சீமைக் கருவேல மரங்களும் புதர்களுமாகக் காட்சியளித்தது. அதே போல, எங்கள் ஊரின் அருகில் உள்ள வேம்பம்பட்டி ஜமீன்தார் ஊரணி குளமும் புதர்மண்டிக் கிடந்தது. இந்த இரண்டு நீர்நிலைகளையும் நம்பி சில நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. நீர்நிலைகள் இப்படிக் கிடப்பதால், எல்லோரும் மானாவாரிப் பயிருக்கு மாற ஆரம்பித்துவிட்டார்கள்.

`நம் குளத்தை நாமே தூர்வாரினால் என்ன?’ என்று தோன்றியது. கிராம மக்களிடம் பேசினேன். `அதெப்படி முடியும்… நிறைய செலவாகும்…’ என்றெல்லாம் ஆட்சேபித்தார்கள்.

வாழ்வரசி பாண்டியன்
வாழ்வரசி பாண்டியன்

`இது நம்ம கண்மாய், நாமதான் சரி செய்யணும். நம்ம ஊர்க்காரங்க யார் யார் எங்கெங்கே இருக்காங்களோ… அவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து பணம் வசூல் செய்து ஊர் பெரியவர்களிடம் கொடுத்து அவர்கள் மூலமாகவே இதைச் செய்யலாம்’ என வெளிப்படையாகப் பேசினேன். அது எல்லோருக்கும் பிடித்துப்போனது. ஊருக்குள் இருப்பவர்கள், வெளியூரில் இருப்பவர்கள் என எல்லோரையும் தேடிப்பிடித்தோம். பணம் வசூலித்தோம்.

3.5 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. அதை கவனமாக கையாண்டு, இரண்டு கண்மாய்களையும் தூர்வாரி முடித்துவிட்டோம். ஒரு பொதுச் செயலை கையில் எடுத்தால் மனத்தாங்கல் இல்லாமல் முடியுமா என்ன... ‘இந்தக் கண்மாயை இவங்க சுத்தப்படுத்திதான் தண்ணீர் கொட்டிகிட்டு இங்க வரப்போகுதாக்கும்?’, ‘தூர்வாரின மண்ணையெல்லாம் எடுத்து விக்க பார்க்கிறாங்க’ என்று ஏகப்பட்ட பேச்சுகள். பேசாம இந்த வேலையை விட்டுவிடலாமா என்று நினைத்தபோதெல்லாம், நம்பி பணம் கொடுத்த மக்கள் கண்முன் நின்றார்கள். முழுமூச்சுடன் வேலையில் இறங்கினேன்.

தொடர்ந்து, கண்மாய்களின் கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன; பனை விதைகள் விதைக்கப்பட்டன. சத்தமே இல்லாமல், எளிமையாக மக்களைத் திரட்டி வேகமாகப் பணிகளை முடித்தது, கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வரும் மழைக்காலத்தில் இரண்டு நீர்நிலைகளும் இரு கிராம மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கப்போகிறது!” என்கிறார் மகிழ்ச்சியோடு. இதுபற்றி அறிந்த பக்கத்து ஊர் மக்கள் தங்கள் கிராமத்துக் குளங்களையும் தூர்வாரித் தரும்படி அன்புடன் வாழ்வரசிக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

வாழ்வரசி பாண்டியனை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறது காமாட்சிபுரம்!