Election bannerElection banner
Published:Updated:

`லாக்டௌனுக்கு நன்றி சொல்லுங்க அம்மாக்களே!' - ஒரு கொரோனா கால அனுபவம் #MyVikatan

Mother and Son
Mother and Son

இருந்தாலும் ஒரு குறை... ஓர் இல்லத்து அரசிக்கு தினம்தோறும் கிடைக்கும் தனக்கான நேரம் என்பது இந்த லாக்டௌன் நாள்களில் முற்றிலும் பறிபோனது.

லாக்டௌன் நாள்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தந்திருக்கும். என்போன்ற நடுத்தர வயதுக் குடும்பத் தலைவிகளுக்கு இது ஒரு சுகமான சுமைதான். அதிகப்படியான வேலைப்பளுதான் என்றாலும் இத்தனை நாள்கள் தொடர்ந்து ஆரோக்கியமான குடும்ப நேரத்தைப் பெற முடிந்ததில் மகிழ்ச்சியே.

அம்மா / Representational Image
அம்மா / Representational Image
Pixabay

இருந்தாலும் ஒரு குறை... ஓர் இல்லத்து அரசிக்கு தினம்தோறும் கிடைக்கும் தனக்கான நேரம் என்பது இந்த லாக்டௌன் நாள்களில் முற்றிலும் பறிபோனது. அதிகாலை முதலே வேலையைத் தொடங்கும் எனக்கு, கணவன் மற்றும் குழந்தைகளை அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் அனுப்பிவிட்டு எனக்கே எனக்காகக் கிடைக்கும் சில மணி நேரம் என்பது சொர்க்கத்துக்கு நிகரான ஒன்று. தனியாக... ஓர் ஏகாந்த நிலையில் சூடான ஒரு கப் டீயும் 90'ஸ் பாடல்களும் சேர்ந்தால், அது ஒவ்வொரு நாளும் எனக்கான ரீசார்ஜ். இந்த லாக்டௌன் நாள்களில் அந்த `மீ டைம்' கிடைக்காமல் எனது பேட்டரிகள் காலியான நேரங்கள் பல!

அது போன்ற ஒரு பேட்டரி டௌன் ஆன மாலை நேரம், ஓயாத வீட்டு வேலைகளால் சலித்துப்போய் இருந்தேன். சோர்ந்த முகத்துடன் என்னைப் பார்த்த என் கணவரும் பிள்ளைகளும் அருகில் வந்து அமர்ந்து, "ஏன் இப்படி உம்முன்னு உக்காந்துருக்கீங்க?" என்று விசாரிக்க, சோர்வின் உச்சத்தில் இருந்த நான் மடை திறந்த வெள்ளம்போல் புலம்பித் தீர்த்து விட்டேன். வெறுமனே கேட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டனர்.

திடீரென கிச்சனில் டமால் டுமீல் சத்தங்களும் எக்குத்தப்பான வாசனைகளும் வந்தன. சிறிது நேரத்தில் சுடச்சுட ஒரு முட்டை ஆம்லெட்டுடன் வந்தனர் மூவரும். "நீ டயர்டா இருக்குற, இத முதல்ல சாப்பிடு" என்று என்னிடம் அதைக் கொடுத்தனர். உண்மையிலேயே மிகவும் சுவையாக இருந்தது. "எப்படிடா இப்படி டேஸ்ட்டா பண்ணுனீங்க?" என்று ஆச்சர்யமாகக் கேட்டேன். " யூடியூப் பார்த்து செஞ்சோம் அம்மா" என்று பெருமையாகக் கூறினர் மூவரும்.

அம்மா / Representational Image
அம்மா / Representational Image
Pixabay

உண்மையில் இத்தனை நாள்களில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லை. அம்மா வீட்டுக்குச் சென்றால் மட்டுமே எனக்கு உட்கார்ந்த இடத்தில் சாப்பாடு தேடி வரும். இன்று என் வீட்டிலேயே எனக்காக மற்ற அனைவரும் சமைத்துத் தந்ததில் ஓர் அலாதியான இன்பம். இப்படி ஒரு தருணத்தைத் தந்ததுக்கு லாக்டௌனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அது மட்டுமல்ல, காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் நள்ளிரவு வரை தொடரும் மொனோபோலி, லூடோ, ரம்மி போன்ற ஆட்டங்களும், பிள்ளைகளுக்குக் கதை சொல்லி அவர்களின் கருத்துகளையும் மன ஓட்டத்தையும் அறிந்துகொள்ளவும் இதுபோன்று எந்த ஒரு விடுமுறையும் இதற்கு முன்பு அமைந்ததில்லை!

லாக்டௌன் போற்றுதும்!

- விஜி குமரன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு