நமக்கான முதல் முகவரியும் வாழ்நாள் அடையாளமும் நம் பெயர்தான். மனிதனுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கு, மாநிலத்துக்கு, ஊருக்கு, தெருவுக்கு... இப்படி இடம், பொருள் என சகலத்துக்கும் பெயர்களே பிரதானம். தங்கள் குழந்தை களுக்குத் தமிழ்ப் பெயர் வைத்த பிரபலங்கள் சிலரிடம் அது குறித்துப் பேசினோம்...

`நீயா நானா' கோபிநாத்

“மகளுக்கு தமிழில்தான் பெயர் வைப்போம். அதில் தான் எங்கள் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவோம் என்ற எண்ணத்திலெல்லாம் நாங்கள் அவளுக்கு `வெண்பா' என்று பெயர் சூட்டவில்லை. அந்தப் பெயரை வைத்தவர் என் மனைவி. நான் அதற்கான காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

என் பள்ளி நாள்களில் பேச்சுப் போட்டிகளில், பெரும்பாலும் எதுகை மோனையாகப் பேசுவேன். என் தமிழாசிரியர் முத்தி யாலு ஐயா, ‘உன்கிட்ட பேசுகிற மொழியிருக்கிறது. ஆனால், மொழி வளம் இல்லை’ என்று திட்டுவார். ‘தினம்தோறும் வெண்பா எழுது. அப்போதுதான் மொழி வளம் பெருகும். மொழி ஆளுமை உருவாகும்’ என்று சொல்லி என்னைத் தயார்படுத்தினார்.

பக்கத்து வகுப்பு புத்தகங்களெல்லாம் வாங்கி வந்து அவற்றிலுள்ள அருஞ்சொற் பொருள்களையெல்லாம் படித்து வெண்பா எழுதிப் பழக ஆரம்பித்தேன். அந்தப் பயிற்சிதான் பிறகு, எனக்கு பெரியளவில் கைகொடுத்தது. அந்தக் கதைகளையெல்லாம் என் மனைவியிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். குழந்தை வயிற்றிலிருக்கும்போது திடீரென்று ஒருநாள், ‘வெண்பாங்கிற பேர் நல்லாயிருக்குல்ல' என்று என் மனைவி கேட்டார். எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. அதையே வைத்தோம்.

நம் தாய்மொழியில் பெயர் வைப்பது என்பது உணர்வு ரீதியான ஒரு தொடர்பை நமக்குத் தருகிறது. அதற்கு ஒருவரை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து. அதற்கான அவசியத்தைக் காலமே உருவாக்கிவிடும். தமிழ்ப் பெயர் வைப்பதைத் தாழ்வாகப் பார்த்த காலம் மாறி இப்போது பெருமிதத்துடன் தமிழில் பெயர் வைக்கின்றனர்.”

கவிஞர் தாமரை

``என் அம்மா தமிழாசிரியர், கணித ஆசிரியரான அப்பாவும் தமிழ்க் கவிஞர்தான். பெற்றோர் இருவரும் தீவிர தமிழ்ப் பற்றாளர்கள். அதனாலேயே எனக்கு `தாமரை', என் தங்கைக்கு `மல்லிகை', என் அண்ணனுக்கு `பூங்குன்றன்' என அழகான தமிழ்ப் பெயர் களைச் சூட்டினார்கள்.

என் மகனுக்கு ‘சமரன்’ எனப் பெயர் சூட்டி யுள்ளேன். சமரன் என்றால் போராளி என்று பொருள். ‘குழந்தைக்குச் சூட்ட ஒரு நல்ல தமிழ்ப் பெயர் சொல்லுங்கள்’ என்று என்னிடம் பலரும் கேட்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம்,

‘ஒரு நல்ல தமிழ்ச்சொல் அகராதியை எடுங்கள். உங்கள் குழந்தையின் பெயர் எந்த எழுத்தில் தொடங்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து உங்களுக்குத் தேவையான காரணிகளையும் உள்ளடக்கிய ஒரு சொல்லைத் தேர்வு செய்யுங்கள். அந்தச் சொல்லிலிருந்து உங்கள் குழந்தைக்கான பெயரை நீங்களே உருவாக்குங்கள்' என்பதுதான்.

25 ஆண்டுகளாக ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பாடல்கள் எழுதி வருகிறேன். இதற்காக நான் இழந்த பாடல்கள் அதிகம். தமிழைக் காக்க எல்லோரும் முனைப்பு காட்ட வேண்டும். அதன் முதல்படியாக உங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள்.”

மா.சுப்பிரமணியன்

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்

``தமிழ்மொழிதான் நம் அடையாளம். அதுதான் உணர்வு, மதிப்பு, மரியாதை எல்லாம். எனக்கு இரு மகன்கள். இளஞ்செழியன் லண்டனில் மருத்துவராகப் பணிபுரிகிறார். இன்னொரு மகன் அன்பழகன் கொரோனா காலத்தில் உயிரிழந்துவிட்டார். இளஞ்செழியனுக்கு ஒரு மகன், ஒரு மகள். அவர்களுக்கும் `இன்பா', `மகிழினி' எனத் தமிழில்தான் பெயர் சூட்டியுள்ளோம். தமிழில்தான் பெயர் வைக்க வேண்டுமா என்று சிலருக்கு கேள்வி எழலாம். லண்டனில் வேலை செய்கிற என் மகனை, அங்குள்ளவர்கள் டாக்டர் இளஞ்செழியன் என்று அழைக்கும்போது அருகில் உள்ள இந்தியர்களுக்கு வேறெந்த அறிமுகமும் இல்லாமல் இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பது புலப்படும். அது தனி அடையாளம். பெரிய மரியாதை.

நான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த காலத்தில் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கிற குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் குழந்தைக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்ததை இந்த நேரத்தில் நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

அந்தத் திட்டத்தில் 6,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. அது தவிர, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டடங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தியது, மாநகராட்சி கட்டடங் களின் முகப்புகளில் ஒரு திருக்குறளும் அதற்கான பொழிப்புரையும் வைத்து ‘வாயில்தோறும் வள்ளுவம்’ என்ற திட்டத்தை முன்னெடுத்தது என தமிழுக்கான எங்கள் பணிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.”