Published:Updated:

“காடும் விலங்குகளுமே சொர்க்கம்!” - புதுமைப்பெண் சங்கீதா

சங்கீதா
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா

வனமகள்

“காடும் விலங்குகளுமே சொர்க்கம்!” - புதுமைப்பெண் சங்கீதா

வனமகள்

Published:Updated:
சங்கீதா
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா

த்தியப் பிரதேச மாநிலம் பன்னா தேசிய வனவிலங்குச் சரணாலயம் புலிகளுக்குப் புகழ்பெற்றது. அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை இன்முகத்துடன் சஃபாரி வண்டியில் அழைத்துச் சென்று வழிகாட்டும் சங்கீதா, தமிழ்ப் பெண். ‘நேச்சுரலிஸ்ட்’ எனப்படும் இந்தச் சவாலான பணியில் இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலேயே பெண்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் ஒரே தமிழ்ப் பெண்ணான சங்கீதாவின் பணித்திறனை, இந்தச் சரணாலயத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பாராட்டத் தவறுவதில்லை. வீடியோ காலில் இணைந்தவர் கணீர் குரலில் இனிமையாகப் பேசினார்.

“காடும் விலங்குகளுமே சொர்க்கம்!” - புதுமைப்பெண் சங்கீதா

“பூர்வீகம் தமிழ்நாடு. ரெண்டாவதுவரை சென்னையில் படிச்சேன். அப்பாவின் திடீர் மறைவால் பெங்களூரில் குடியேறினோம். குடும்பம், ஸ்போர்ட்ஸ், பி.காம் படிப்புனு இளமைக்காலம் சிறப்பா போச்சு. நீலகிரி மாவட்டத்துல வசிச்ச தாத்தாவைப் பார்க்க ஸ்கூல் சம்மர் லீவ்ல போவேன். அப்போ முதுமலை சரணாலயத்துக்கும் போவோம். அப்போதிலிருந்தே விலங்குகள்மீது எனக்கு அலாதியான அன்பு உண்டாச்சு. கால்சென்டர் வேலை, பெங்களூரு பல்கலைக்கழகத்தில் ஹேண்ட் பால் டீம் பயிற்சியாளர், தனியார் கன்சல்டன்சி நிறுவன ஹெச்.ஆர் வேலை, கார்ப்பரேட் கம்யூனிகேஷன் நிறுவன மேனேஜர், மார்க்கெட்டிங் மேனேஜர்னு எட்டு வருஷத்துல பல நிறுவனங்கள்ல வேலை செஞ்சேன். அடுத்தடுத்த வேலைகளில் சம்பளம் கூடியதே தவிர, மனநிறைவு கிடைக்கலை. தினமும் புதுப்புது அனுபவங்களோடு பணிச்சூழல் சவாலா இருக்கணும்னு நினைச்சேன். அந்தத் தேடலில்தான் இந்த நேச்சுரலிஸ்ட் வேலை பத்தி தெரிஞ்சுகிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“காடும் விலங்குகளுமே சொர்க்கம்!” - புதுமைப்பெண் சங்கீதா

தேவையைப் பொறுத்து சில வருஷங்களுக்கு ஒருமுறை, சிலரை மட்டுமே இந்த வேலைக்குப் புதிய பணியாளர்களைத் தேர்வுசெய்வாங்க. அதில் பெண்கள் தேர்வாவது ரொம்பவே அரிது. விலங்குகளின் குணாதிசயங்கள், பாதுகாப்பு விஷயங்கள், வனப்பகுதியில் சஃபாரி வாகனம் ஓட்டுறது உட்பட அடிப்படைப் பயிற்சிகளை முடிக்க சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை ஆகும். ஏழு மாசத்துலயே எல்லா பயிற்சிகளிலும் தேர்வாகி 2013-ல் வேலையில் சேர்ந்தேன். பயமில்லாம இருப்பதுதான் இந்த வேலைக்கான முதல் தகுதி. ‘உங்களால இந்த வேலையைச் சமாளிக்க முடியுமா?’ன்னுதான் ஆரம்பத்துல ஆண்கள் பலரும் என்கிட்ட கேட்டாங்க. அவங்களுக்கு என் பணித்திறன்தான் பதில்” என்ற சங்கீதாவின் முகம் புன்னகையில் மலர்கிறது.

புகழ்பெற்ற தாஜ் ஹோட்டல் குழுமத்தின் ‘தாஜ் சஃபாரீஸ்’ நிறுவனம், மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள கன்ஹா, பெஞ்ச், பந்தாவ்கர், பன்னா ஆகிய தேசிய வனவிலங்குச் சரணாலயங்களில் செயல்படுகிறது. இவற்றி லுள்ள காலிப்பணியிடத்தின் அடிப்படையில் நேச்சுரலிஸ்ட் பணியாளர்களைச் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்வார்கள். அதன்படி ஏற்கெனவே மற்ற மூன்று சரணாலயங்களிலும் பணியாற்றியுள்ள சங்கீதா, கடந்த ஓராண்டாக பன்னா சரணாலயத்தில் பணியாற்றுகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“என் கட்டுப்பாட்டில் நியமிக்கப்படும் சுற்றுலாப் பயணிகளை, வனப்பகுதியில் சுத்திக் காட்டுறது முதல் அவங்க பத்திரமா திரும்பிப் போகும்வரைக்கும் என் பொறுப்புதான். தினமும் 4 மணிக்குள் எழுந்திரிச்சுடணும். அதிகபட்சம் ஆறு சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஓர் உள்ளூர் வழிகாட்டியுடன், 5.30 மணிக்குள் சரணாலயத்துக்குள் நுழைஞ்சுடுவோம். டிரைவிங் பண்ணிகிட்டே, சுற்றுலாப் பயணிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்வேன். வனப்பகுதியின் தன்மை, வனவிலங்குகளின் குணாதிசயங்கள், வனப்பகுதியில் நடந்துகொள்ளும்விதம், மிக அவசியத் தேவையைத் தவிர, எதற்கும் வாகனத்தில் இருந்து இறங்கக் கூடாது, கத்தக் கூடாது, எந்தப் பொருள்களையும் வனப்பகுதியில் வீசக் கூடாது உட்பட எல்லா விஷயங்களையும் முதலில் அவங்களுக்குச் சொல்லிக்கொடுப்போம். வைல்டு லைஃப் போட்டோகிராபர்களுக்கும் வழிகாட்டணும்.

 கணவருடன்...
கணவருடன்...

காலை 11.30 மணிக்குள் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்திடணும். பிறகு, மதியம் 3 – 6.30 மணி வரை மீண்டும் வனப்பகுதிக்குள் சவாரி இருக்கும். திறந்தவெளி ஜீப்ல பயணிக்கிறதால, வெயில் அதிகம் இருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்த மாட்டோம். வனப்பகுதியில் பழக்கப்பட்ட பாதைகளில் தினமும் போனாலும்கூட ஒருநாள்போல இன்னொரு நாள் இருக்காது. தினமும் வனவிலங்குகளை மாறுபட்ட தன்மையுடன் பார்க்க முடியும். திறந்தவெளி சஃபாரி வண்டியில் சில அடி இடைவெளியில்தான் விலங்குகளைப் பார்ப்போம். மானை வேட்டையாடும் புலியின் ஆக்ரோஷம் முதல் தன் குட்டிகளை அரவணைக்கும் தாய் விலங்குகளின் சிநேகம் வரை ஒவ்வொரு நாள் பயணத்திலும் சுவாரஸ்யமும் திகிலும் நிச்சயம் இருக்கும். ஓர் ஆண் புலியை 32 செந்நாய்கள் வேட்டையாடிய காட்சிதான் என் பணி அனுபவத்தில் மறக்க முடியாத காட்சி”

- திகிலான அனுபவத்தையும் சிரிப்புடனே கூறுகிறார் சங்கீதா. சவாலான இந்தப் பணிக்கு வரும் பெண்கள் பெரும்பாலும் நீண்டகாலம் பணியில் நீடிப்பதில்லை. ஆனால், இந்த வேலையில் அனுபவம் கூடக்கூட சங்கீதாவுக்கு விலங்குகள் மீதான நேசமும் அதிகரிக்கிறது. இவரின் காதல் கணவர் நாராயணாவும் இதே நிறுவனத்தில் கன்ஹா வனவிலங்குச் சரணாலயத்தில் தலைமை நேச்சுரலிஸ்டாகப் பணியாற்றுகிறார்.

“காடும் விலங்குகளுமே சொர்க்கம்!” - புதுமைப்பெண் சங்கீதா

“மனிதர்களால் தனக்கு ஆபத்து வரும்னு உணர்ந்தால்தான் விலங்குகள் நம்மைத் தாக்க நினைக்கும். எனவே, விலங்குகளுக்குத் தொந்தரவு செய்யாம உரிய இடைவெளிவிட்டுதான் வண்டியை ஓட்டுவோம். எவ்வளவுதான் வருமானம் இருந்தாலும்கூட நகர வாழ்க்கையில் ஏதோ ஒருவித வெறுமையை உணர்ந்தேன். ஆனா, வனப்பகுதிக்கு அருகிலேயே குடியிருப்பு, நாங்களே விளைவிக்கும் இயற்கை விவசாய உணவுகள், திரும்பிய பக்கமெல்லாம் மனதை மகிழ்விக்கும் இயற்கைச் சூழல்னு இந்த வாழ்க்கை சொர்க்கம்போல் தோணுது. அத்தியாவசியத் தேவைக்கு மீறியது எல்லாமே அவசியமற்றதுனு உணர வெச்ச இந்த வேலைதான், எளிமையான வாழ்க்கை முறையே சிறந்ததுனு எனக்கு உணர்த்தியிருக்கு.

கர்நாடக மாநிலம் கபினியைச் சேர்ந்த கணவர், சமையற்கலைஞராக இருந்தவர். விலங்குகள் மீதான பிரியத்தில்தான் அவரும் இந்த வேலைக்கு வந்தார். எனக்கு சீனியர். ஆறு வருஷம் காதலிச்சு, இருவீட்டார் சம்மதத்துடன் போன வருஷம்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இருவர் வேலை செய்ற இடத்துக்கும் எட்டு மணிநேர பயண தூரம். எனவே, ரெண்டு மாதத்துக்கு ஒருமுறைதான் சந்திச்சுக்குவோம். தினமும் போன்ல அவருக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கறேன். பிடிச்ச வேலையுடன் மண வாழ்க்கையும் சிறப்பா போகுது”

- நிறைவாகக் கூறும் சங்கீதாவுக்கு, விரைவில் பிரசவம் நடைபெறவிருக்கிறது.

வாழ்த்துகள் தோழி!