Published:Updated:

`சிஸ்டர்ஸ் நம்மளைப் பார்த்துப்பாங்கனு நம்பி வாங்க! - பரிமளா

நம்ம ஊர் நைட்டிங்கேல்

பிரீமியம் ஸ்டோரி
``காலையில ஏழரை மணிக்கு ஹாஸ்பிடலுக்குள்ள நுழைஞ்சா கிளம்ப நைட்டு எட்டு, எட்டரை ஆயிடும். எங்களோடது நேரம் பார்த்துச் செய்யுற வேலை கிடையாதுங்க.

அதிலேயும் கொரோனா வந்ததுல இருந்து றெக்க இல்லாமலே பறந்திட்டிருக்கோம்’’ என்று உற்சாக ஓப்பனிங் கொடுத்து பேசத் தொடங்கிய பரிமளாவுக்கு செவிலியர் பணியில் இது 32-வது வருடம். சென்னைதான் சொந்த ஊர்.

``ப்ளஸ் டூ முடிச்சவுடனே நர்ஸிங் படிக்கணும்னு தோணுச்சு. மார்க் இருந்ததால சீட்டும் கிடைச்சிடுச்சு. இப்போ சென்னை ஜி.ஹெச். கோவிட் வார்டோட இன்சார்ஜா வேலைபார்த்துட்டிருக்கேன். சிக்குன் குன்யா, டெங்குன்னு நிறைய மோசமான காலகட்டங்களை எல்லாம் பார்த்துட்டேன். ஆனா, கொரோனா மக்களுக்கு மட்டுமல்லாம, அவங்களைக் காப்பாத்துற எங்களுக்கும் சேர்த்தே உயிர் பயத்தைக் கொடுத்திருச்சுங்க. என்னுடன் இருந்த ரெண்டு சிஸ்டர்ஸ் இப்போ இல்ல'' என்று சற்றே இடைவெளி விட்டவர், தொடர்ந்தார்.

பரிமளா
பரிமளா

``ஒவ்வொரு நாளும் எங்களையும் காப்பாத்திட்டு, நோயாளிகளையும் காப்பாத்துணுங்கிறது பெரிய சவாலா இருக்கு. ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல `என் 95' மாஸ்க் போட்டுக்கிட்டு வேலை பார்க்கறதுல மூச்சுத்திணறுது. பேஷன்ட்ஸ் கூப்பிட்டா மாஸ்க், முகத்துக்கு ஷீல்டு, பி.பி.ஈ (கவச உடை) எல்லாம் போட்டுட்டுதான் போக முடியும். உடம்பு பூரா வியர்த்துக்கொட்டும். தீவிர கொரோனா பாதிப்புல இருக்கிற நோயாளிகளை நெருங்கி ட்ரீட்மென்ட் தர்றப்போ மனசு என்னவோ செய்யும். ஆனா, எங்களோட கஷ்டங்களைப் புறந்தள்ளிட்டுதான் நோயாளிகளைக் கவனிச்சுட்டிருக்கோம்.

லேசான ஜலதோஷ அறிகுறிகளோட வர்ற நோயாளிகள்கூட கொரோனா இருக்குமோங்கிற பயத்துல திடீர்னு கொலாப்ஸ் ஆயிடுறாங்க. கொரோனா பாசிட்டிவ்னு ரிசல்ட்டைப் பார்த்தவுடனே டிப்ரெஷனுக்குள்ள போயிடறாங்க. என் அனுபவத்துல நோயாளிகள் இந்த அளவுக்கு பயப்படுறதை இப்பதாங்க பார்க்குறேன். அதனால அவங்ககிட்ட நிறைய பேச வேண்டியதா இருக்கு. பிரச்னையே இல்லாம பயப்படறவங்களுக்கு ‘நீங்க நல்லாயிருக்கீங்க’ன்னு அடிக்கடி சொல்லிட்டே இருக்கணும். கொஞ்சம் சீரியஸா இருக்கிறவங்களுக்கு `ஒண்ணும் இல்லைங்க. சரியாகி வீட்டுக்குப் போயிடுவீங்க’ன்னு சொல்லிட்டே இருக்கணும். மூச்சுத்திணறல் பிரச்னை இருக்கிறவங்களுக்குப் பத்து வார்த்தை பேசுறதுக்குள்ள மூச்சு வாங்கிடும். அவங்க பேசறதும் கேட்காது. கிட்ட போய்தான் கேட்கணும். `என்ன சொன்னீங்க’ன்னு ரெண்டாவது தடவை கேட்டாகூட `சிஸ்டர்ஸ் கோபப்படறாங்களோ’ன்னு நினைச்சிடுறாங்க.

கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமில்லீங்க, எல்லாருக்குமே ஒரு வார்த்தை சொல்லிக்க விரும்புறேன். `சிஸ்டர்ஸ் நம்மளைப் பார்த்துப் பாங்கனு நம்பி வாங்க. கொரோனா மட்டுமல்ல... எவ்ளோ பெரிய நோய் வந்தாலும் உங்களுக்காக நாங்க இருக்கோம்.

குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும் என் வீட்ல சின்ன குழந்தைங்க யாருமில்ல. ரெண்டு பொண்ணுங்களுக்குமே கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டோம். என் கணவரும் நானும் மட்டும் வீட்ல இருக்கோம்னாலும், தனித்தனியா இருக்க முடியாது. தினமும் என்னை டிராப், பிக்கப் பண்றதெல்லாம் அவர்தான். `டெய்லி லேட்டா வர்றியே’னு வாயளவுக்குக் கோவிச்சுப்பார். ஆனா, மறுநாள் காலையில வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டு நிப்பார்’’ என்று சிரிக்கிற நர்ஸ் பரிமளா,

‘`என்னை மாதிரி பிள்ளைங்களுக்குக் கல்யாணம் காட்சியெல்லாம் செஞ்சுட்ட சீனியர் நர்ஸுங்க எல்லாம், நேரம் காலம் இல்லாமதாங்க வேலை பார்த்துட்டிருக்கோம். எங்கள்ல சிலருக்கு டயாபடீஸ் இருக்கு. எனக்கும் இருக்கு. காலையில 7 மணிக்கு வீட்ல இருந்து கிளம்புறப்போ என்ன சாப்பிட முடியும்... யூனிஃபார்மை போட்டதுக்கப்புறம் சுகர் மாத்திரை போடறதுக்கே மறந்திடுறேன். என் பொண்ணுங்கதான் போன் பண்ணி நினைவுபடுத்துறாங்க. ‘இன்னும் நாலு வருஷம்தானேம்மா சர்வீஸ் இருக்கு. வி.ஆர்.எஸ். கொடுத்திடும்மா’ன்னு பொண்ணுங்க சொல்லிட்டு தான் இருக்காங்க. ஆனா, என் கரியர்ல ரொம்ப முக்கியமான நேரத்துல இருக்கேன். டயாபடீஸ் இருந்தாலும் ஐ நெவர் கிவ் அப் மை ஜாப்’’ என்று கட்டைவிரல் உயர்த்துகிறார் சிஸ்டர் பரிமளா.

சல்யூட் சிஸ்டர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு