Published:Updated:

சுனாமியில் எதிர்நீச்சல்... வாழ்க்கையில் புதுப்பாய்ச்சல்... நம்பிக்கை மனுஷி மணிமேகலை

மணிமேகலை
பிரீமியம் ஸ்டோரி
News
மணிமேகலை

உழைப்பாளி

சுரங்கத் தொழில்கள் மிகவும் சவாலும் ஆபத்தும் நிறைந் தவை. எனவே, அவற்றில் பெண்கள் நுழையக்கூட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், சுண்ணாம்புக் கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்களிலும், அவற்றைக் கொண்டு சிமென்ட் தயாரிக்கும் ஆலைகளிலும் 13 ஆண்டுகள் துணிச்சலாக வேலை செய்திருக்கிறார் மணிமேகலை. சித்தாள் வேலை முதல் கறி வெட்டுவதுவரை இவர் பார்க்காத வேலைகள் இல்லை. தற்போது இயற்கை விவசாயி. சென்னையை அடுத்த கண்டிகையிலுள்ள தோட்டத்தில் பந்தல் காய்கறிகளை அறுவடை செய்து கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“ப்ளஸ் டூ முடிச்சதுமே உன்னி கிருஷ்ணனோடு காதல் திருமணம். என் வீட்டில் ஏத்துகிட்டாலும், கணவர் வீட்டில் கடைசி வரை ஏத்துக்கலை. நானும் கணவரும் வசதியான குடும்பத்தில் வளர்ந்திருந்தாலும், பிறர் தயவில்லாம சுயமா முன்னேற முடிவெடுத்தோம். கணவர் தனியார் நிறுவன ஊழியர். கரஸ்ல பி.காம் முடிச்சிட்டு, தனியார் நிறுவன வேலைக்குப் போனேன். ஓய்வு நேரத்திலும் விடுமுறை தினத்திலும் டியூஷன் எடுக்கறது, இறைச்சி வெட்டுறது, டைப்பிங், அக்கவுன்ட்ஸ் எழுதுறது, டெய்லரிங், சித்தாள் வேலை உட்பட பலதையும் கூச்சம் பார்க்காம செஞ்சேன். அப்பல்லாம் வெறும் கஞ்சி மட்டுமே எங்களுக்கு மூணு வேளை சாப்பாடு.

துப்பட்டால மகளை முதுகில் கட்டிக்கிட்டே வேலை செய்வேன். கறி வெட்டும்போது கை விரல்ல வெட்டுக்காயம் பட்டு ரத்தம் கொட்டும். உடனே மஞ்சள்தூள் வெச்சுக்கிட்டு சளைக்காம வேலையைத் தொடர்வேன். ‘சிக்கன் சிஸ்டர்’னுதான் பலரும் என்னைக் கூப்பிடுவாங்க. வலி மிகுந்த அந்த நாள்களையும் மகிழ்ச்சியாகவே ஏத்துகிட்டோம்”

- உறுதியான மனுஷி மணிமேகலையை சுனாமி உலுக்கியிருக்கிறது. அதன் பிறகு, புதிய பாய்ச்சலுடன் நடைபோட்டிருக்கிறார்.

“பட்டினப்பாக்கத்துல ஒத்திக்கு எடுத்த வீட்டுல இருந்தோம். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற அப்பா கறிக்கடை ஆரம்பிச்சார். அங்கே சம்பளத்துக்கு வேலை செஞ்சேன். ஞாயிற்றுக்கிழமை கறி விற்பனையில் இருந்தேன். ‘ஊருக்குள் கடல் தண்ணி புகுந்து பேரழிவு ஏற்பட்டுடுச்சு’ன்னு தகவல் வந்ததும் பதறிப்போய் ஓடினேன். கடலுக்கும் ஊருக்கும் வித்தியாசம் தெரியாம குடியிருப்புகள் முழுக்க தண்ணியில மூழ்கியிருந்துச்சு. தப்பிப் பிழைச்ச மகளைக் கண்டுபிடிச்சேன். ரெண்டு நாள் கழிச்சு கணவரும் பத்திரமா வந்தார். அப்போதும் எந்த உறவினர் வீட்டுக்கும் போகலை. மாத்து துணிகூட இல்லாம வாரக்கணக்கில் வீதியில் இருந்தோம். நகை, பணம், உடைனு வீட்டுல இருந்த பொருள்கள் தண்ணியில அடிச்சுட்டுப் போயிடுச்சு. தண்ணி வடிஞ்சப்போ, இடிஞ்ச நிலையில் சுவர் மட்டும்தான் இருந்துச்சு. ‘கஷ்டப்பட்டு சேர்த்த செல்வங்கள் இப்படிப் போயிடுச்சே’ன்னு கதறி அழுதேன். ‘உசுரு இருக்கே. மீண்டு வந்திடலாம்’னு கணவர் ஆறுதல் சொன்னார். பிறகு, என் வேலையிலிருந்து விலகினேன். கிடைச்ச பிடிப்புப் பணத்துல இன்னொரு வாடகை வீட்டுல குடியேறினோம். புது வேலையுடன், கறிக்கடை வேலையையும் பார்த்தேன். மறுபடியும் கடுமையா உழைச்சு கஷ்ட நிலையில் இருந்து மீண்டோம்.

மணிமேகலை
மணிமேகலை

முன்னணி சிமென்ட் நிறுவன வேலைக்கான நியூஸ் பேப்பர் விளம்பரத்துல, ‘ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்’னு குறிப்பிட்டிருந்தாங்க. ஆனாலும், அந்த இன்டர்வியூல துணிச்சலா கலந்துகிட்டுத் தேர்வானேன். நிர்வாகப் பிரிவில் வேலை செய்த நிலையில், பணித்திறனைப் பாராட்டி சுரங்க மேலாளரா என்னை நியமிச்சாங்க. சுரங்கத்திலும் சிமென்ட் தயாரிக்கும் ஆலையிலும் இரவு பகலா வேலை செஞ்சேன்.

ஆயிரக்கணக்கான ஆண்கள் சூழ்ந்த அந்தச் சுரங்க வேலையில் நான் மட்டுமே ஒரே பெண். சுரங்கத்துல சுண்ணாம்புக் கற்களை வெட்டியெடுக்கும் ஒப்பந்த நிறுவனத்தை நடத்திக்கிட்டிருந்த நண்பரின் கம்பெனியில பார்ட்னராக இணைஞ்சேன். பிறகு, இந்தியா முழுக்கப் பல சிமென்ட் நிறுவன சுரங்கங்கள்லயும் வேலை செஞ்சேன். நிறைவா சம்பாதிச்சேன். இந்த நிலையில், அடுத்தடுத்து ஒவ்வோர் உடல் உறுப்பா செயலழிந்த நிலையில் படுக்கையில் இருந்த கணவரைப் போராடி குணப்படுத்தினேன். அதையும் மீறி 2014-ல் புற்றுநோயால் இறந்துட்டார். அவர் இழப்பிலிருந்து இப்பவரை நான் மீளலை” என்ற மணிமேகலையின் கண்கள் கலங்குகின்றன.

“பெற்றோர், மகள் குடும்பத்துடன் கூட்டுக் குடும்பமா இருக்கோம். பொருளீட்டும் என் ஓட்டம் இப்பவரையும் ஓயலை. புதுசா எம் சாண்ட் நிறுவனம் ஒண்ணு தொடங்க இருக்கேன். ஒரு வருஷமா இயற்கை விவசாயம் செய்யறேன். 15 ஏக்கர் குத்தகை நிலத்துல தக்காளி, புடலை, பீர்க்கன், பாகல், கத்திரி, வெண்டை, முருங்கை, அகத்தி எல்லாம் நல்ல விளைச்சல் தருது. விற்பனையில் குறிப்பிடத்தக்க வருமானம் கிடைக்குது. அவரை, காராமணி, சின்ன வெங்காயம், முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, உளுந்துடன் நிறைய பழ வகை மரங்களும் இருக்கு. கோழி, ஆடு, மீன் வளர்ப்பும் நடக்குது. தோட்டத்துல ரெண்டு குடும்பங்களுக்கு வேலை கொடுக்கறேன். லாக்டெளன்லகூட விவசாயம் உட்பட என் வேலை விஷயமா பயணத்துலயேதான் இருந்தேன். உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருக்கிறவரை ஓடியாடி உழைக்கிற ரகம் நான். அடுத்தடுத்த புதிய முயற்சிகளிலும் நிச்சயம் ஜெயிப்பேன்”

- மணிமேகலையின் வார்த்தைகளில் தன்னம்பிக்கை தெறிக்கிறது!