தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பறையொன்று போதுமே! - கல்பனா

கல்பனா
பிரீமியம் ஸ்டோரி
News
கல்பனா

வாழ்தல் இனிது

ரத்தநாடு அருகில் உள்ள ஆதனக் கோட்டையைச் சேர்ந்தவர் 23 வயதாகும் கல்பனா. வறுமையோடு போராடும் தன் குடும்பத்தை பறையிசைக்கருவி மூலமாக மீட்டெடுத்திருக்கிறார். தார்ப்பாயால் மூடப் பட்ட சிறிய தொகுப்பு வீட்டில் வசிக்கிறார்கள் கல்பனா, அவர் அம்மா மற்றும் தம்பி.

கல்பனா
கல்பனா

``2013-ம் ஆண்டுதான் நாங்க நிலைகுலைஞ்ச வருஷம் சார். என் அக்காவுக்கு அப்போதான் கல்யாணம் நடந்தது. அதுக்கு வாங்கின கடனை எப்படி அடைக்கப்போறோம்னு குடும்பமே திணறிக்கிட்டிருந்த நேரத்துலதான் அப்பா காலமானார். அப்ப நான் பத்தாம் வகுப்புப் படிச்சிக்கிட்டிருந்தேன். அம்மாவுக்கு நடக்க முடியாத அளவுக்கு கால்கள்ல பிரச்னை இருந்தது. தம்பி ரொம்ப சின்னவன்.அதனால, கடனை அடைக்க நான் உழைச்சே ஆகணும்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டேன்.

அந்த நேரத்தில்தான் உறவினரான கோமதி சங்கர் கரகாட்டமும் பறையடித்து ஆடுறதுக்கும் கத்துக்கொடுத்தார். குடும்ப நிலையை உணர்ந்த நானும் முறைப்படி சீக்கிரமே ஆடக் கத்துக்கிட்டேன்.

கல்பனா
கல்பனா

பத்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வுக்கு முதல் நாள் இரவு ஒரு கச்சேரியில கலந்துகிட்டு பறையடிச்சு ஆடினேன். அதுக்கு 1,000 ரூபாய் கொடுத்தாங்க. அதை முடிச்சுட்டு நான் வீட்டுக்கு வர காலைநேரம் ஆகிடுச்சு. குளிச்சு முடிச்சுட்டு நேரா ஸ்கூலுக்குப் போய் தேர்வு எழுதி பாஸானேன். அடுத்தடுத்த நிகழ்ச்சி கிடைக்கிற வரைக்கும் நான் வாங்கிய அந்த 1,000 ரூபாயை நம்பிதான் குடும்பம் இருந்தது.

வந்த பணத்தை வெச்சு அக்கா கல்யாண கடன், என் படிப்பு, தம்பியோட படிப்பு, வீட்டுச் செலவு எல்லாத்தையும் எதிர்கொள்ள ஆரம்பிச்சேன். பன்னிரண்டாவது வரைக்கும் நைட்டெல்லாம் கைகால்கள் வலிக்க ஆட்டமும் காலையில படிப்புமா கழிஞ்சது. எந்தச் சூழ்நிலையிலும் படிப்பை விட்டுவிடக் கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தேன். பன்னிரண்டாவது பாஸ் ஆனதும் தஞ்சைல உள்ள தனியார் கல்லூரியில ஊட்டச்சத்துப் பிரிவைத் தேர்ந்தெடுத்து படிக்க ஆரம்பிச்சேன். அப்பா இல்லாத வேதனை, தனியாளா ஓடுறது எல்லாம் பல நேரங்கள்ல மனசைச் சோர்வாக்கும். நானே குடும்பத்துக்கு அப்பா அம்மாவா, தம்பிக்கு நல்ல அக்காவா மாறிட்டேன். கண்ணீர் வந்தாகூட பறை எடுத்து அடிச்சு ஆடி அதை மத்தவங்க பார்க்காத மாதிரி பண்ணிக்குவேன்'' என்று கூறிவிட்டு அமைதியாகிறார் கல்பனா. அந்த அமைதி அவர் கடந்து வந்த வலிகளை நமக்குள்ளும் கடத்துகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு அவரே தொடர்கிறார்...

 குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

``கல்லூரியில படிச்சுக்கிட்டே பறை நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாட்டுல ஆரம்பிச்சு டெல்லி வரை பயணமாகியிருக்கேன். நான் இரவும் பகலும் கஷ்டப்படுறதைப் பார்த்து, `அனுபவிக்க வேண்டிய வயசுல நீ கெடந்து கஷ்டப்படுறியே'ன்னு அம்மா அழுதுகிட்டே என் காலைப் பிடிச்சு அழுத்திவிடுவாங்க. கல்லூரிப் பேராசிரியர் என் நிலைமையைப் பார்த்து கொஞ்ச நேரம் கிளாஸ்ல என்னை தூங்க அனுமதிப்பார். என் தோழிகளும் என் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு ஆதரவா நிற்கிறாங்க. அந்த வகையில் நான் ரொம்ப கொடுத்து வெச்ச பொண்ணு'' என்று நெகிழ்கிற கல்பனா, தன் தம்பியைப் பொறியியல் படிக்கவைத்து வருகிறார்.

``என்னை மாதிரி அவனும் கஷ்டப்படக் கூடாது. இப்ப மாசம் 20,000 சம்பாதிக்கிறேன். அதான் அவனை பொறியியல் கல்லூரியில சேர்த்து படிக்க வெச்சுக்கிட்டிருக்கேன். மூணாவது வருஷம் படிக் கிறான். `நீ எனக்கு அம்மாக்கா... சீக்கிரம் வேலைக்குப் போய் உன்னை ரெஸ்ட் எடுக்க வைக்கிறேன்'னு சொல்லிக்கிட்டே இருப்பான்'' - சொல்லும்போதே கண்கள் கலங்குகின்றன கல்பனாவுக்கு.

``வர்ற ஏப்ரல் மாசத்தோட எனக்கு காலேஜ் முடியுது. மேற்கொண்டு படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்குது. ஆனா, நான் சம்பாதிக்கிற காசு, குடும்பச் செலவுக்கும் தம்பி படிப்புக்கும்தான் சரியா இருக்கு. அக்கா கல்யாணக் கடனை எல்லாம் எப்பவோ அடைச்சுட்டேன். ஆனா, நான் மேற்கொண்டு படிக்கணும்னா அது என் வருமானத்துல முடியாது. ஓயாம ஆடிகிட்டேதான் இருக்கேன். ஆடி ஆடி மனசும் உடம்பும் மரத்துப்போச்சு'' என்கிறவர், அடுத்த கட்டம் பற்றியும் பேசுகிறார்.

``முழுநேர பறையிசைக் கலைஞரா மாறிடலாமான்னு இருக்கேன். நாங்க இப்ப குடியிருக்கிற வீடு 20 வருஷ பழசு. தார்ப்பாய் போட்டு மூடியிருக்கோம். அதைச் சரி செய்யணும். அம்மாவை ராணி மாதிரி வாழ வைக்கணும். தம்பிக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கிற வரை தோளில் மாட்டின பறையை கீழே இறக்குற எண்ணமே இல்லை. எனக்கு வாழ்க்கை தந்த இந்தப் பறைதான் என் நம்பிக்கை, எதிர்காலம் எல்லாம். விட்ற மாட்டேன்'' என்றபடியே கண்களுக்கு மேக்அப் தீட்டி நமக்காகப் பறையிசைத்துக் காட்டுகிறார்.

பறையைப் போல உங்கள் உயர்வு சத்தமாக எழட்டும் கல்பனா!