பிரீமியம் ஸ்டோரி
பிள்ளைகள் மட்டுமல்ல, வீட்டுக்கு வந்த மருமகள்கூட குடும்பப் பெருமைக்கு மேலும் புகழ்சேர்ப்பது உண்டு. அப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களில் ஒருவர் பார்வதி ரவி கண்டசாலா.

தமிழ்த் திரையுலகிலும் தெலுங்குத் திரையுலகிலும் புகழோடு இருந்த பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் மருமகள் பார்வதி, பரத நாட்டியக் கலைஞர்கூட!

`நீ தானா...... என்னை நினைத்தது’, `அமைதியில்லாதென் மனமே’, `ராஜசேகரா’, `ஆஹா இன்ப நதியினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே’ என்று காதலையும் மென் சோகத்தையும் குழைத்துப் பாடிய கண்டசாலா வின் அனைத்துப் பாடல்களுமே இன்றுவரை மனத்தைவிட்டு நீங்காதவை. தன் மாமனார் பாடிய பாடல்களுக்கு மேடைகளில் அபிநயம் பிடித்து வருகிற பார்வதி, கடந்த மூன்று வருடங்களாக பத்மா சுப்ரமணியம், வைஜெயந்தி மாலா போன்ற மூத்த கலைஞர்களுக்குத் தன் மாமனாரின் பெயரால் கலாபிரதர்ஷனி கண்டசாலா விருதையும் வழங்கி வருகிறார். அவரிடம் உரையாடினோம்...

பார்வதி
பார்வதி

‘`நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னை, தேனாம்பேட்டையில்தான். அம்மா வுக்கு பரதநாட்டியத்துல ஆர்வம் அதிகம். அப்பாவுக்கோ சுத்தமா பிடிக்காது. இருந்தாலும் எதிர்வீட்ல இருந்த டான்ஸ் மாஸ்டர்கிட்ட நடனம் கத்துக்க என்னை அனுப்பி வெச்சாங்க. அப்பா வீட்ல இல்லாதப்போ எதிர்வீட்டுக்கு ஓடிப்போய் டான்ஸ் கத்துக்கிட்டு, அப்பா வர்ற நேரத்துக்குள்ள வீட்டுக்கு வந்திடுவேன். சலங்கை பூஜை வரைக்கும் இப்படித்தான் என் டான்ஸ் வாழ்க்கை நடந்துகிட்டிருந்துச்சு’’ என்று இப்போதும் பல்லைக் கடித்தபடி சிரித்த பார்வதி, ``என்னோட அரங்கேற்றதுக்கான நேரமும் வந்துச்சு. என் தாய்மாமா எனக்காக அப்பாகிட்ட வக்காலத்து வாங்க, அதுவும் நல்லபடியா நடந்துச்சு. அரங்கேற்றத்தின்போது எனக்குக் கிடைச்ச பாராட்டைப் பார்த்துட்டு அப்பா மனசு மாற, அம்பது வருஷமா கிட்டத் தட்ட உலகம் முழுக்க நானும் என் சலங்கையும் வலம் வந்துட்டோம்’’ என்று சிலிர்க்கிறார்.

 கண்டசாலா
கண்டசாலா

``எங்கப்பா `விஷ்ணுமாயா’ன்னு ஒரு தெலுங்குப் படம் தயாரிச்சார். அதுக்கு இசையமைப்பாளர் கண்டசாலா. பின்னாளில் அவரோட பையன் ரவிக்கு என்னை பெண் கேட்டு வந்தப்போ அப்பா ரொம்ப சந்தோஷமாயிட்டாரு. காலேஜ் படிச்சிட்டு இருந்தப்போவே எங்களுக்கு கல்யாணமாயிடுச்சு. என் பையன் பிறந்து, கொஞ்சம் வளர்ந்ததும் அத்தையிடம் பிள்ளையை விட்டுட்டு மறுபடியும் பரதமாட ஆரம்பிச்சேன்.

கலாபிரதர்ஷனி என்ற பெயர்ல டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிச்சு இதுவரைக்கும் நிறைய குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்திருக்கேன். நாட்டியம் காஸ்ட்லியான கலையா இருக்கிறதால, அது கிடைக்காத ஏழைக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கிறேன். என் மாமாவோட பாடல்களுக்கு நானே கொரியோகிராஃப் செஞ்சு மேடைகள்லே ஆட ஆரம்பிச்ச பிறகுதான் என்னோட தனித்துவம் வெளிப்பட ஆரம்பிச்சுது’’ என்கிற பார்வதிக்கு, 3,000 குழந்தைகள் ஒரே இடத்தில் நடனமாடிய கின்னஸ் நிகழ்ச்சிக்கு கொரியோகிராஃப் செய்த பெருமையும் உண்டு.

பார்வதி
பார்வதி

``மாமா, `மாயாபஜார்’ படத்துல பாடின ‘ஆஹா இன்ப நிலாவிலே’ பாட்டுக்கு, படகு செட்டெல்லாம் போட்டு மேடையில ஒரு தடவை ஆடினேன். கைதட்டல் நிக்கவே இல்ல. மகிழ்ச்சியில திக்குமுக்காடி நின்னுக்கிட்டிருந்தப்போ, திடீர்னு ஒரு பெரியவர் எழுந்து நின்னு, ‘கண்டசாலா பாடின முத்துக்கு முத்தாகப் பாட்டுக்கு ஏன் டான்ஸ் ஆடலை’ன்னு ஒரே அழுகை. `அடுத்த ஸ்டேஜ்ல அந்தப் பாட்டுக்கு டான்ஸ் பண்றேன்’னு சமாதானப்படுத்திட்டு வந்தேன்.

தமிழக கவர்னரா இருந்த ரோசய்யா, மாமாவோட தீவிர ரசிகர். நான் மாமாவோட பாடல்களுக்கு டான்ஸ் ஆடுறதைத் தெரிஞ்சுக்கிட்டு கவர்னர் மாளிகைக்கு அழைச்சிருந்தார். அங்கேயும் டான்ஸ் பண்ணிட்டு வந்தேன். இந்த மரியாதை, மாமா வோட குரலுக்கு பதம் பிடிச்சதாலதான் கிடைச்சுது’’ என்று உணர்ச்சிவசப்படுகிறார் பார்வதி.

``மாமா சின்ன வயசுலேயே தவறிட்டார். தனி மனுஷியா நின்னுதான் அத்தையம்மா பிள்ளைங்களை வளர்த்திருக்காங்க. ‘உன்னோட ஆக்டிவிட்டீஸ் எல்லாம் அவரை மாதிரியே இருக்கு'ன்னு அடிக்கடி சொல்வாங்க. அத்தையம்மா சப்போர்ட் இல்லைன்னா இப்படி உலகம் முழுக்க சுத்தி வந்திட்டு இருக்க முடியாது.

ஒரு தடவை ஹைதராபாத்ல எனக்குப் பாராட்டு விழா நடத்தினாங்க. அதுவும் மாமா பாடல்களுக்கு ஆடினதால கிடைச்ச மரியாதைதான். ஸ்டேஜ்ல ஏறினவுடனே கையில ஒரு வீணையைக் கொடுத்து, தலையில ஒரு கிரீடமும் வெச்சாங்க. மேலேயிருந்து பூக்கள் தூவ ஆரம்பிச்சது. `கண்டசாலா வீட்டு சரஸ்வதியம்மா நீ’ன்னு மேடையில என்னைப் பாராட்டினாங்க. கீழிறிங்கின என்னைக் கட்டிக்கிட்டு ‘அவரோட பேருக்கு பெருமை சேர்த்துட்டேம்மா நீ’ன்னு அன்னிக்கு அத்தை அழுததை இப்போ நினைச்சாலும் உடம்பு சிலிர்க்குது. புகுந்த வீட்ல இதுக்கு மேல என்னங்க பேர் வாங்குறது’’ என்றவரின் குரலில் மகிழ்ச்சியும் பெருமிதமும் ஒருசேர ஒலிக்க...

கண்டசாலா பாடிய `முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக'ப் பாடல் வரிகள் காற்றில் தவழ்ந்து வந்து நம் காதில் நுழைந்த உணர்வு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு