Published:Updated:

மகிழ்ச்சி எங்கே மறைந்திருக்கிறது? - சுவாமி சுகபோதானந்தா - பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் 3.0

Representational Image
News
Representational Image ( Photo: Pixabay )

பலூன் வியாபாரி சொன்ன வார்த்தைகள் அந்தச் சிறுவனுக்கு மட்டுமல்ல. நமக்கும் பொருந்தும். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க அவர் சிவப்பா, கறுப்பா, உயரமானவரா, உயரம் குறைந்தவரா, பணமும் பதவியும் இருப்பவரா இல்லாதவரா என்பதெல்லாம் முக்கியமல்ல. அவருக்குள்ளே இருக்கும் மனசுதான் காரணம்.

- சுவாமி சுகபோதானந்தா

``இன்னைக்கு என்ன ஸ்பெஷல்.. என்ன பிளான்?'' ஆங்கிலப் புத்தாண்டு அன்று பலரும் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டிருப்பார்கள். நீங்களும் பலரைப் பார்த்து கேட்டீருப்பீர்கள். புதுவருடத்தின் முதல் நாளை உற்சாகத்தோடு தொடங்குவதைப் போல, விடியும் ஒவ்வொரு நாளையும் தொடங்கினால் எப்படி இருக்கும்?

உண்மையில், விடியும் ஒவ்வொரு நாளுமே நமக்கு ஒரு வகையில் முதல்நாள்தான். எப்படி என்கிறீர்களா?

Today is the first day, for the rest of your life

`இந்த பூமியில் நாம் மேற்கொண்டு இருக்கப்போவது, எத்தனை நாள்களாக இருந்தாலும் சரி, எஞ்சியிருக்கும் நாள்களுக்கு இன்றுதானே முதல் நாள்.... எத்தனை இழப்புகள், சிரமங்கள், சவால்கள் ஆகியவற்றைச் சந்தித்திருந்தாலும், ``இன்றுதான் புதிதாய்ப் பிறந்தோம்'' என்பதைப் போல விடிகின்ற ஒவ்வொரு தினத்தையும் நாம் புத்துணர்ச்சியோடு தொடங்க, பல்லாயிரம் காரணங்கள் இருக்கின்றன.

நீங்கள் படிக்க விரும்பும் புத்தகங்கள், நீங்கள் வாசிப்பதற்காகக் காத்திருக்கின்றன. வீணை வாசிக்க வேண்டும். வயலின் வாசிக்க வேண்டும், முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும்... என்பது போல வாழ்கையில் நீங்கள் தள்ளிப்போட்டுக்கொண்டுவந்த பல நல்ல விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன.

Aval
Aval

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`காசு பணம் சேர்ப்பதும், வீடு வாசல் வாங்குவதும்தான் மகிழ்ச்சி. அது மட்டும்தான் மகிழ்ச்சி' என்று நம் மூளையை கண்டிஷனிங் செய்துகொண்டால்... அன்றாட வாழ்கையில் இருக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களை நம்மால் அனுபவிக்க முடியாது.

`நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். நல்வாய்ப்பாக நமக்கு நகர்ப்புறத்தின் மையப் பகுதியில் வீடு, ஆபீஸ் சென்று வருவதற்கு பைக், வீட்டுக்குப் பக்கத்திலேயே பள்ளிக்கூடம்... என்று அனைத்தும் இருக்கின்றன. ஆனால், நாட்டில் எத்தனை பேர் ஏழைகளாக இருக்கிறார்கள் தெரியுமா.. அதுவும் கிராமத்தில் ஏழைகளாக இருப்பவர்களின் பாடு, பெரும்பாடு' என்று உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் தன் மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார் நகர்ப்புறத்துத் தந்தை ஒருவர். அப்படியே, `கிராமப்புறத்தவர்களின் வாழ்க்கையை மகளுக்குக் காட்டினால் உலகம் புரியும்' என்ற எண்ணத்தில், ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்று காட்டினார்.

கிராமத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய பிறகு, `இன்று நீ புதிதாக என்ன தெரிந்து கொண்டாய்?’ என்று மகளிடம் கேட்டார் அந்த அப்பா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`நாம் இங்கே இந்த நகரத்தில் ஒரு சிறிய அப்பார்ட்மென்ட்டில் அடைந்து கிடக்கிறோம். விளையாடுவதற்கு இடமே இல்லை. அவர்கள் வீடு சிறியதாக இருந்தாலும் கிராமத்தில் இருக்கும் சிறார்கள் விளையாட ஏராளமான வயல் வெளிகளும், பரந்த நிலப்பரப்புகளும் இருக்கின்றன. நம் அப்பார்ட்மென்ட்டில் ஆசையாக ஒரு செல்ல நாய்க்குட்டியைக்கூட வளர்க்க முடியாது. ஆனால், அவர்கள் வீட்டில், செல்ல நாய்கள் மட்டுமல்ல, ஆடு, மாடு, கோழி, வாத்து என்று எல்லாம் இருக்கின்றன. நம் வீட்டில் ஊஞ்சல் கட்டியெல்லாம் விளையாட முடியாது. ஆனால், அவர்கள் வீட்டைச் சுற்றி ஏராளமான மரங்கள் இருப்பதால் அவர்கள் அவற்றில் உல்லாசமாக ஊஞ்சல் கட்டி விளையாடுகிறார்கள்.

நாம் பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்துதான் சாப்பிடுகிறோம். அந்த உணவுக்குப் பயன்படுத்தப்பட்ட காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு எத்தனை நாள்கள் கழித்து சமைக்கப்பட்டன, எப்படி விளைவிக்கப்பட்டன... என்பதெல்லாம் தெரியாது. ஆனால், அவர்கள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளையும் தானியங்களையும் ஃப்ரெஷ்ஷாக அவர்களே சமைத்துச் சாப்பிடுகிறார்கள். அனைத்துக்கும் மேலாக நம் தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா எல்லோரும் நம்மோடு இல்லை. ஆனால், அவர்கள் ஒன்றாக ஒரே இடத்தில் இருக்கிறார்கள்....'' மகள் சொல்லச் சொல்ல, உலகம் பற்றி மட்டுமல்ல, மகிழ்ச்சியாக இருக்க உண்மையில் என்னவெல்லாம் தேவை என்பதுபற்றி அந்த அப்பாவுக்கு ஒரு தெளிவு கிடைத்தது. `எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா?' என்ற வார்த்தைகளில் புதைந்து கிடைக்கும் பொருள் மகள் மூலம் அவருக்கு முழுமையாகப் புரிந்தது.

Swing
Swing
Photo: Pixabay

`இந்த நிமிடத்தை மகிழ்ச்சியாகச் செலவிட விடாமல் நம்மைத் தடுப்பது எது?'

`பணம் இருந்தால் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று சிலர் கருதுகிறார்கள். செய்தித்தாளைப் புரட்டிப்பாருங்கள். இது உண்மையில்லை என்பது உங்களுக்கு நிரூபணமாகும். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பணக்காரர்கள் பலர் மன அழுத்ததில் இருக்கிறார்கள் என்பது தெரியும். படித்தவர்களால் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நினைத்தால் அதுவும் தவறு. நகரத்தில் இருப்பவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கருதினால் அதுவும் உண்மையில்லை. ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க இது எதுவுமே அவசியமில்லை.

கடற்கரையில் வண்ண வண்ண பலூன்கள் விற்கும் ஒருவரை ஆச்சர்யத்தோடு ஒரு சிறுவன் அணுகினான். அவனைப் பொறுத்தவரை அந்த பலூன் விற்பனை செய்யும் நபர்தான் உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் நபர். ஆனால், அந்த நபருக்குத்தான் தெரியும். விற்பனைக்காகக் கொண்டுவந்த பலூன்கள் எல்லாம் தன் கையிலேயே இருந்தால் அவருக்கு மகிழ்ச்சி வராது. அவை எல்லாம் கையை விட்டுப் போனால்தான், அதாவது விற்பனையானால்தான்... அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த பலூன் வியாபரி சிறுவர்களைக் கவர்வதாக ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பச்சை வண்ண பலூன் ஒன்றை வானில் பறக்க விட்டார். இதைப் பார்த்து உற்சாகமடைந்த அந்தச் சிறுவன், அந்த பலூன் வியாபாரியை அணுகி, `இந்த நீல நிற பலூனும் பறக்குமா?', என்று கேட்டான். `பறக்கும்' என்று பதில் சொன்னார் அவர். சிவப்பு நிற பலூனைக் காட்டி, `இது பறக்குமா?' என்று கேட்டான். `பறக்கும்' என்றார் அந்த வியாபாரி.

சிறிது நேரத்திலேயே சிறுவனின் பிரச்னை என்னவென்று தெரிந்துகொண்டார் அந்த பலூன் வியாபாரி, `தம்பி, பலூன் உயரே செல்வதற்கு காரணம் அது கறுப்பா, சிவப்பா என்பதல்ல. அது ஹார்ட்டின் வடிவில் இருக்கிறதா. அல்லது பந்து வடிவில் இருக்கிறதா என்பதும் காரணமில்லை. பலூன் உயரே செல்வதற்கு அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதுதான் காரணம்'' என்றார்.

Baloons
Baloons
Photo by Sagar Patil on Unsplash

பலூன் வியாபாரி சொன்ன வார்த்தைகள் அந்தச் சிறுவனுக்கு மட்டுமல்ல. நமக்கும் பொருந்தும். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க அவர் சிவப்பா, கறுப்பா, உயரமானவரா, உயரம் குறைந்தவரா, பணமும் பதவியும் இருப்பவரா இல்லாதவரா என்பதெல்லாம் முக்கியமல்ல. அவருக்குள்ளே இருக்கும் மனசுதான் காரணம்.

பணம் இருந்தால்தான் மகிழ்ச்சி என்று பலரும் நினைப்பதால் அந்தப் பணத்தையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். அதற்கு, `பணக்காரர் என்றால் யார்?' என்ற கேள்விக்கு பதில் தெரிந்தாக வேண்டும். ஒரு மாதத்தை ஓட்டுவதற்கு ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வேண்டும். ஆனால் அவரின் மாத வருமானமோ வெறும் நாற்பதாயிரம் ரூபாய்தான் என்றால் அவர் ஏழை! அதுவே அவரின் நண்பருக்கு, மாதம் முப்பதாயிரம் ரூபாய்தான் தேவை. ஆனால் அவருக்கு கிடைப்பது நாற்பதாயிரம் ரூபாய் என்றால் அவர் பணக்காரர். பணத்துக்குப் பொருந்துவது, வீடு, வாகனம், பேங்க் பேலன்ஸ்... என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும்!

வீடு வாசல், நகை எல்லாம் முக்கியம்தான். ஆனால், அவற்றை எல்லாம்விட, மன அமைதி, திருப்தி, குடும்பத்தில் மகிழ்ச்சி இவற்றுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

- சிந்திப்போம்...

இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் விகடன் இணையதளத்தில் `பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் 3.0' வெளியாகும்.

கட்டுரையாளர் பற்றி

சுவாமி சுகபோதானந்தா
சுவாமி சுகபோதானந்தா

சுவாமி சுகபோதானந்தா...

இவர் அற்புதங்கள் நிகழ்த்தும் சுவாமிஜியல்ல...

வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது என்று நம்மை உணரச் செய்கிற சக மனிதர்!

இவர் துறவறத்தை போதிக்கும் ஞானி அல்ல...

வாழ்க்கை எப்படிப்பட்ட வரம் என்பதை நமக்கு எடுத்துச் சொல்லும் துறவி!

இவர் கற்றுத் தருபவை கனமான உபதேசங்கள் அல்ல... வாழ்வின் சின்னச் சின்ன சந்தோஷங்கள்!

ஆனந்த விகடன் இதழில் சுவாமி சுகபோதானந்தா எழுதிய `மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' தொடர் வாசகர்களிடையே ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. அது புத்தகமாக வெளியாகி, மூன்று லட்சம் பிரதிகளைத் தாண்டிய பிறகும், வேகம் குறையாமல் வாங்கிப் படிக்கப்பட்டு வருகிறது! அந்த நூல், இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டும் விற்பனையாகிறது!

ஆனந்த விகடனில் வெளியான மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2), மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G, அவள் விகடனில் வெளிவந்த உன் உள்ளம் துள்ளட்டும், பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ், சக்தி விகடனில் வெளிவந்த இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் என கடந்த கால் நூற்றாண்டாக சுவாமி சுகபோதானந்தா விகடன் வாசகர்களோடு தொடர்ந்து உரையாடி வருகிறார்.